நூல் விமர்சனம்புனைவு

மதுராவின் “சொல் எனும் வெண்புறா” – ஒரு பார்வை


ன்னார்குடியைப் பிறப்பிடமாகவும்  ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டதாரியுமான  எழுத்தாளர் மதுரா என்கிற தேன்மொழி ராஜகோபால் அவர்கள் மிகச்சிறந்த  கவிஞர், கதையாசிரியர், கட்டுரைகள் எழுதுவதில்  வல்லவர், அனைத்து வகை கவிதைகளையும்  மிக நேர்த்தியாக எழுதுவதில் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்றே  சொல்லலாம். மரபு, புதுக்கவிதை, தன்முனைக் கவிதை , ஹைக்கூ  என்று  அனைத்திலும்  அசத்தலாக  எழுதும் இவர், மீமொழிக்  கவிதைகளின் சங்கமமாகவே  வாழ்கின்றார்  என்றே  சொல்லலாம். 

விரல் விட்டு எண்ணக் கூடிய நிலைமையில் ஒரு சில கவிஞர்களே மீமொழிக் கவிதைகள்  புனைவதில் வல்லவராக இருக்கிறார்கள். அவ்வகையில் இவரை முன்னிறுத்திப் பார்க்கவே  நம்முள் தோன்றும். 

ஒவ்வொரு  மனிதனுக்குள்ளும் கவிதை இருக்கிறது. அது வெளிப்படும் நேரம், பொழுதுகள் வேறுபடலாம் என்று நேர்மறையான பண்போடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார் ஆசிரியர். அவரைப் பொறுத்தவரை, எழுதப்  படிக்கத் தெரிந்த அக்கணத்திலேயே கவிதைக்கான விதை  தம்முள் விழுந்துவிட்டதோ என்னவோ என்பதிலேயே அவரின்  இளம்வயது எழுத்தாற்றல் உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிகின்றது கண்கூடு. 

எனக்குள்ளே என்னை நானே தேடிக்கொண்டு இருக்கையில் அவ்வப்போது வரும் எண்ணங்களை அழகுத்  தமிழ்ச்சொற்களைத் தொடுத்துக் கட்டிவைத்திருக்கிறேன்  என்கிறார் கவிஞர் மதுரா அவர்கள்.

சொல் எனும் வெண்புறா கவிதை  நூல் மாறுபட்ட கோணத்தில் யாத்திருப்பது கவிஞரின்  கவித்துவத்திற்கு மாபெரும் சான்று. நிகழ்தகவு கவிதையில் கணிதப்பாடம் வாழ்வியலாக வரையறுக்கப்பட்டுள்ளது சிறப்பு. அதிலும் குறிப்பாக 

” நிகழ்தகவின் வரையறைக்குள் உருட்டப்பட்ட பகடையில் விழும் எண்ணிக்கையில் தொடங்குகிறது  விதியின்  விளையாட்டு “ என்று  சொல்லுமிடத்தில்  ஆயிரமாயிரம்  அர்த்தங்களை நம்மால்  காண முடிகிறது . தர்மம்  கவிதையில் “விஷச்செடியின்  வீரியத்திற்கு முன்  வலுவிழந்து கிடக்கிறது  வாய்மையின் வாசம்” என்கிறார் . 

துரோகமும் குரோதமும் நீதியின் முதுகில்  சவாரி செய்து கொண்டிருக்க தலைநசுங்கி மூலையில் முனகிக் கொண்டிருக்கிறது தர்மம் என்று சொல்லும் போது இன்றைய  காலகட்டத்தில் அநீதிகள்  பெருகி வருவதை மிக அழகாக தம்  ழுத்துப் பூக்களால்  கவிமாலை சூட்டியுள்ளார்.

கனவுக்குள்  கடல் கவிதையில்  ” கூட்டுக்குள் இருப்பதைக்  கூண்டிலேற்றும் விந்தைகளுக்குள் விசித்திரமாய் கடலையே கனவுக்குள் நிரப்பி வைக்கிறது காலம் “ என்று  முத்து முத்தாக  சிப்பிக்குள் அடைபடுகின்றன  இவரின்  எண்ணவலைகள். ஏவாளின் உலகம் கவிதையில்  “ஆலகால விடமென்று அறியாது விழுங்கிவைத்த நஞ்சு செரிக்காத நெஞ்சக் குடுவைக்குள் ஒவ்வாமை உணர்வலைகள்” எனும்  போது  உண்மையில்  நூலாசிரியரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. வரிகள் முழுவதிலும் உள்ளுறை உவமைகள் . 

யாமத்தின் மொழி  கவிதையில்  “யாமத்தின்  நிசப்த நிமிடங்களில் ஆகாயம் தேடி மலைமுகடு சுற்றிப் பனிபெய்யும் அடர்வனமொன்றின் பருத்த  மரத்தின் உச்சியில் ஒண்டிக் கொள்கிறது  ஆன்மா” எனும்  போது  இரவின்  போராட்டத்தை  இத்துனை  அழகாய்  சொல்ல  இவருக்கு நிகர் இவரே. இவர் தொட்டுப் பார்க்காத விஷயங்களே இல்லை எனலாம்.

முடிந்துவைத்த காதல் கவிதை – உண்மையில்  காவியமே. “கால் பெருவிரலில் மின்னித்  தெறிக்கும் அரை நிலவில் ஒளிந்துகிடக்கும்  நேசம் தரையெங்கும் கீறல்களாய் பதிந்துகிடக்கிறது கண்டும் காணாத பார்வை வளையத்துக்குள் புதைந்துபோயிருக்கும் மோன சமிக்கைகள் ஓராயிரம் மொட்டுகளை ஒருசேர கட்டவிழ்த்துவிடுகிறது. மேற்கு திசை நிழலொன்று முரசறிவித்துவிடுகிறது  முடிந்துவைத்தை  காதலை”  என்கிறார்  கவிஞர். இவ்வரிகள்  அனைத்தும்  காதல் காவியமாகும் ஓவியமே. 

மாயலோகம்  கவிதையில் நவீனயுகத்தில் நடமாடும்  நடிகர்களாய் மக்களைக்  காட்டுகின்றார் கவிஞர். “மாய  உலகத்தின்  மூத்த குடிமகன்  – கங்காரு குட்டியென உடன் பயணிக்கும் மடிக்கணினியிலிருந்து  கண்ணெடுக்காமலேயே  எப்போதாவது ஏதாவது வேண்டுமா என  நலம் விசாரிக்கும்  மகன்” என்று  இன்றைய  சமூகத்தைச்  சாடுகிறார் ஆசிரியர். 

குழந்தை மனசு கவிதையில் “குழந்தைமைக்குள்  கவிதைகளை ஏற்றி காகிதக்  கப்பலொன்றில் மழைநீர் வாய்க்காலில் அனுப்பியபடி வேடிக்கைப்  பார்க்கிறது  மனசு” எனும் போது  ஆசிரியர்  மதுரா  அவர்களின் குழந்தைமனசு  நம்முள்ளும்  வியாப்பிக்கின்றது.

நகரும் படிக்கட்டுகள்  கவிதையில் “சாலையெங்கும் இறைந்துகிடக்கும் மாலைகளும் உதிர்ந்துகிடக்கும் மலரிதழ்களும் ஆண்டொன்று நகர்கையில் மரணத்தை நோக்கியப்  பயணத்தில் நகரும் படிக்கட்டுகளில் நமக்கான முறைக்கு காத்துக் கிடக்கிறோம் என்பதை அறிவித்துக் கொண்டிருக்கின்றன “ என்ற மெய்ப்பாட்டை மிக  அற்புதமாக  நகரும் படிகட்டுகளோடு ஒப்புமைப் படுத்தியது  சிறப்பிற்குரியது . 

இப்படி இவரின் கவிதைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். சொற்கள் மேயும் வனமாக  தம் பனுவலை நேசக்கோட்டினால் மாற்றியிருக்கிறார் சொல் எனும் வெண்புறா பனுவலின்  ஆசிரியர் மதுரா அவர்கள்.

நிறைவாக இவையனைத்தும் அன்றாடம் தான் சந்தித்த நிகழ்வுகள், மற்றவர்களின் அனுபவங்களை உள்வாங்கி தனது  கோணத்தில் எழுதப்பட்டவையே இக்கவிதைகள்  என்கிறார். தன்  பார்வையில் கவிதைகளை சொற்களாக உலவவிட்டு இருப்பதாகவும் அவை வாசிக்கையில் உள்ளத்திற்கு நெருக்கமாக உணரப்பட்டு நேசிக்கப்ப்படுமாயின் அதைவிடப் பெரும்பேறு யாதொன்றுமில்லை  என்ற  அவரின் உருக்கமான வரிகள் மீண்டும் மீண்டும்  பனுவலை நேசிக்கத் தூண்டுகிறது.

அனைவரும்  வாசித்து  சுவாசிக்க  வேண்டிய நேசமே   ‘சொல் எனும் வெண்புறா ’.


முனைவர் சரஸ்வதி  பாஸ்கரன்

 

நூல் தகவல்:

நூல் : சொல் எனும் வெண்புறா

வகை:  கவிதைகள்

ஆசிரியர் : மதுரா (தேன்மொழி ராஜகோபால்)

வெளியீடு : படைப்பு பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2019

விலை: ₹ 80

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *