Let's Chat

மலர்வதியின் “தூப்புக்காரி” – நாவல் விமர்சனம்


   ஒரு படைப்பு வெளியாகி வாசகர்களோடு தொடர்பு கொள்ளும் காலம் என்பது மிக முக்கியமானது. தூப்புக்காரி என்ற புதினம் 2012 ஆம் ஆண்டு வெளிவந்தது. வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவிட்டாலும் என் போன்றவர்களை மிகத் தாமதமாகவே எட்டியிருக்கிறது.

மனித மாண்புகளைப் பற்றியும் அறம் பற்றியும்  எவ்வளவோ பேசித் திரிந்தாலும், கலை இலக்கியங்கள் வாயிலாக மனிதனின் பல்வேறு உணர்வு நிலைகளை வர்க்க,சாதிய , பொருளாதார அடிப்படைகளில் பிரித்துணரும் கூறுகளையும், தொழில் சார்ந்த பிரிவினைகளையும் கண்டுணரும் வாய்ப்பாக பல்வேறு படைப்பிலக்கியங்கள் தோன்றி வருகின்றன.

மனித சமுதாயத்தில் சமூக நீதிகளும், அறமும் ,மாண்புகளும் எந்த இடத்தில தோற்றுப்போயும், பொருளற்றுப் போயும்  மனிதனை மனிதனே இழிவாக நடத்துகிறானோ அந்த சூழலில் கருக்கொண்டு உதித்த ஒரு புதினம்தான் தூப்புக்காரி.

நாம் அன்றாடம் தெருவில் பார்க்கும் துப்புரவுத் தொழிலாளிகளின் வாழ்க்கையை கூர்ந்து பார்த்து அவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும், அவர்களின் வலி மிகுந்த வேதனைகளையும், அவர்களை அந்த நிலைக்குத் தாழ்த்தி வைத்து அவர்களை  நாயிலும் கேவலமாக நடத்திக் கொண்டு போகும் ஒரு சமூகத்தின் அவலநிலையை மக்கள் மொழியில் பேசிச் செல்கிறது நாவல்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள கல்லுவிளை என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து  தனது கதைக்களத்தை தொடங்குகிறார்  நாவலாசிரியர்.  மனோ, பூவரசி, கனகம், மாரி, ரோச்சிலினி போன்ற எளிய கதாபாத்திரங்களுக்குள் அமைத்து அவர்களது வாழ்க்கையை சுற்றியுள்ள அனுபவங்களால் பின்னப்பட்டதாக நாவல் விரிந்து செல்கிறது.

இக்கதையின் சூழலுக்குள் வாசக மனம் சுழலத் தொடங்கும்போதே நாம் அருவெறுத்து முகம் சுழிக்கும் மருத்துவமனைக் கழிப்பறைகளும், பிரசவ வார்டுகளில் கொட்டிக்கிடக்கும் ரத்தத் துளிகளும் , கழிப்பறைக்குள் பெண்கள் கழற்றி எறியும் மாதவிடாய் துணிகளும் ,மலங்களும் ,அவற்றை சுற்றி மொய்க்கும் ஈக்களும் ….. என நாம் மூக்கைப் பொத்திக் கொள்ளும் மனநிலைக்கு நாவல் நகர்ந்து வருகிறது..

நமக்கு நாற்றம் என்றால் விலகி ஓடுகிறோம். அதே மலக்குழியில் வேலை செய்யும் ஒவ்வொரு துப்புரவுத் தொழிலாளிக்கு மட்டும் மணக்கவா செய்யும்? நாவல் வழியாக உரைக்கும் உண்மைகள்தான் அதன் உண்மைத் தன்மைக்கும் சான்று.

நாவலின் இடையிடையே அவ்வபோது எழும் கவிதை வரிகள் நெஞ்சில் தைத்துப் போகின்றன.

 வாழ்க்கையெனும் பயணத்தில்

 சரிந்து விழும்போது: தனியே தடுக்கி விழும்போது …

 சாய்ந்துகொள்ள …

 ஒரு துளி காதல் தேவை.

நாவலுக்குள் கூர்மையான உரைநடை மொழியில் வட்டார வழக்குச் சொற்கள் வந்து விழும்போது வாசகர்களுக்கு அதனால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க சில சொற்கள் விளக்கப்பட்டுள்ளன.

‘உலகை சுத்தப்படுத்தும் ஒவ்வொரு தொழிலாளியும் பீ, மோளை தின்னுதான் வாழுறான். அலங்கார ஆடை உடுத்தி, மணக்கும் வாசனையை உடலில் பூசினாலும் ,நாற்றமுள்ள மலத்தைத்தான் வெளியேற்றுறான் மனுசன். ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் நாற்றமும்,அருவெருப்பும் உள்ள மலமூட்டம் கிடக்கவே செய்யுது.எல்லாத்தையும் வெளியில் மறைச்சிட்டு  நான் ரொம்ப சுத்தமுன்னு மனுசங்க வெளியில காட்டிகிறாங்க. தின்னுறப்ப ருசியும்,பேரானந்தமும், மணமும், மகிழ்ச்சியும் கொடுத்த உணவுகள்தான் பீக்களாக வெளிவருது. பீயைக் கண்டா பத்துநாளு தின்னாதவன் தூறாம இருக்கியானா? அட, தூறலும், தும்மலும், பீயும், குசுவும்,மோளும்,சளியும், ஒவ்வொரு மனுசனின் இயற்கை.இதெல்லாம் இல்லாம போனா அவன் பிணமேதான்….!   இதெல்லாம் பாக்காம சுத்தப்படுத்துற என்னைப்போல உள்ளவங்கள நாத்தமுன்னும், குறஞ்சவங்கன்னும் ஒதுக்கி வைக்கிறதுதான் கொடியவலி….’

மாரியின் வலி மிகுந்த இந்த உணர்வுகளை வாசக மனங்களில் ஊடுருவும் விதமான வார்த்தைகளில்…. உணரத்தக்க விதத்தில் நாவலாசிரியர் எழுதியிருப்பது இந்த நாவலின் நோக்கத்தை நிறைவேற்றியிருகிறது.

இதுல என்ன அருவெருப்பு இருக்கு; அசிங்கமிருக்கு குற்றமும் பாவமும் இருக்கு. இந்த உலகத்துல வந்த அம்புட்டு மனுசங்களும் இந்த இரத்தத்தில்தானே ஒன்பது, பத்து மாசம் தங்கிட்டு வாறான்….. எல்லா மதங்களும் ஓங்கி ஓறச்சு இந்த இரத்தத்தை தீட்டுன்னு சொல்லுதே……. தீட்டுன்னு சொல்லி அங்குன இங்குண சண்டை போடுறவங்களுக்கு ,இந்த இரத்தத்தில் ஆண்டவனுகளும் உறைஞ்சி போய் பிறந்தது தெரியாதோ,அதனால இந்த இரத்தம் அருவெருப்பு இல்ல,குற்றமில்ல,தன்னை உறுதிப்படுத்தினாள் பூவரசி.

பூவரசி தன் மனதை சமன்  செய்து கொள்வது போல் இந்த உரையாடல்கள் வாசகனின் நெஞ்சத்தில் நிலையான ஒரு சமனை உறுதி செய்து கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது.

நமது சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்களாகிய துப்புரவுத் தொழிலாளிகளின் வாழ்க்கைச்சூழல்களையும், வலிகளையும்,, கனவுகளையும், இயலாமைகளையும் அனுபவத் தெறிப்புக்களோடும், நெஞ்சதிரும் உணர்வுகளோடும் ஒரு புதினத்தை நமது தமிழ்ச் சமூகத்துக்கு அளித்திருகிறார் மலர்வதி.

இந்த சமுதாயத்தில் துப்புரவுத் தொழிலாளிகளையும் மனிதர்களாக நடத்த வேண்டும் என்ற புரிதலை  நாவலை வாசிக்கும் அனைவரிடமும் ஏற்படுத்தும் . அதுவே இந்த நாவலுக்கான வெற்றியாகவும் அமையும்.

இந்த நாவலுக்கு நாவலாசிரியர் பொன்னீலன் அவர்களும், மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அளித்திருக்கிறார்கள்.

சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்கார் விருதையும் இந்த நாவல் பெற்றுள்ளது. ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வந்துள்ளது.

நாவலாசிரியர் மலர்வதிக்கு என் அன்பும் வாழ்த்தும்.


நூலாசிரியர் குறித்து

குமரி மாவட்டம், தக்கலையை அடுத்த வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மலர்வதி. 2008-ஆம் ஆண்டு வெளியான  ‘காத்திருந்த கருப்பாயி’ என்ற தனது முதல் நாவலுக்காக தனது இயற்பெயர்  ப்ளோராவை தமிழாக்கம் செய்து மல‌ர்வதி எனும் பெயரில் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர். முதல் நாவலிலேயே கவனம் ஈர்த்த இவரின் இரண்டாவது நாவல் ’தூப்புக்காரி’  2011- ஆம் ஆண்டு வெளியானது.  இந்த நாவலுக்காக 2012- ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி யுவபுரஸ்கார் விருதைப் பெற்றவர். எழுத்துக்களின் மூலம் விளிம்புநிலை மக்களின் மொழிபேசும் மலர்வதியின் இலக்கியப் பயணம் உள்ளூரில் தேவாலய விழா மேடைகளில் பேசி, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் தொடங்கியது . இலக்கியம், எழுத்து, பேச்சு இவரின் இயங்குதளம்.

நூல் தகவல்:

நூல் : தூப்புக்காரி

வகை :   நாவல்

ஆசிரியர் : மலர்வதி

வெளியீடு :   அனல் வெளியீடு (December 2011 )

மறுவெளியீடு :  மதி வெளியீடு (November 2013)

பக்கங்கள் :  136

விலை:  ₹  120

நூலைப் பெற :  +91 8778787659

close
www.vimarsanam.in
பதிவுகள் குறித்து அறிய

We don’t spam! Read our privacy policy for more info.

Share >

2 thoughts on “மலர்வதியின் “தூப்புக்காரி” – நாவல் விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published.

மேலே செல்ல
%d bloggers like this: