ஊடுருவிப் பார்க்கும் அறிவு இல்லாதவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் உயிரில்லாத மண் பொம்மையை போன்றவர் தான் என்பதை வள்ளுவர்,

” நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை யற்று ” .

ஒரு சமூகம் சிந்திக்கும் திறனை இழந்து எழிற்சிற்பமாய் மாறிப் போன கதை தான் புனை பாவை.

பதினோராம் நூற்றாண்டில் இருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை கொங்கு பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றம்,  பொருளாதார மாற்றங்கள்,  பழங்குடி மக்களிடையே ஏற்பட்ட ஜாதிய கட்டமைப்புகள்,  வேளாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு இடையே ஏற்பட்ட பூசல்கள்,  தமிழர்களின் மிக அற்புதமாக உருக்கு செய்யும் தொழில்நுட்பம் , மாலிக்காபூர் படையெடுப்பு ,பாண்டிய அரசின் வீழ்ச்சி என்று பல்வேறு விஷயங்களைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. இந்த நூல் ஆசிரியரிடம் வியந்து பார்க்கும் விஷயம் இத்தனை தரவுகளை எப்படி அழகாக கதாபாத்திரங்களின் வாயிலாக ஒரு புனைவு நாவலாக சொல்ல முடிந்தது என்பதுதான். பொதுவாக வரலாற்று நாவல்கள் எல்லாம் மன்னர்களின் பார்வையிலேயே சொல்லப்பட்டிருக்கும். ஆனால் பொதுமக்களின் பார்வையில் வரக்கூடிய வரலாற்று நாவல்கள் மிகக் குறைவு. இடக்கை நாவலில் தான் அவுரங்கசீப்பின் அந்திம காலத்தில் தொடங்கி, அதற்குப் பிறகு  ஏற்படும் அரசியல் மாற்றங்களை சாதாரண குடிகளின் வாயிலாக எஸ்ரா அவர்கள் கொண்டு சென்றிருப்பார். விடங்கச்செட்டி, மல்லி, கோவன் என்ற கதாபாத்திரங்களின் வாயிலாக இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கும்.

மிகச்சிறந்த நீதி நூல்களைப் படைத்து தமிழுக்கு தொண்டாற்றிய சமணம் என்று சொன்னால் மிகையில்லை. அன்புடைமை, அகிம்சை, வாய்மை, சமத்துவம், சகோதரத்துவம், வாய்மை போன்ற நீதிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சமண மதம் தமிழகத்தில் வேரூன்றி இருந்ததையும்,  மீண்டும் சைவ மதம் தழைத்து வளர்ந்த வரலாறும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொற்றவைதான் ஆடவல்லான் சிலைக்கு ஆதாரம் என்பது வியப்பான செய்தியாக இருந்தது.

இந்த நாவல் இரண்டு பகுதிகளாக எழுதப்பட்டிருக்கிறது.

பாகம்-1 ஆடவல்லான்,  இருளர் கதை

பாகம் 2 – மாலிக் காபூர்.

முதல் பகுதியில் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும்,  கொங்கு சோழனுக்கும் நடைபெற்ற போர்கள்,  ஐநூற்றுவர் என்ற வணிகக் குழுவின் ஆதிக்கம்,  வேளாளர்களுக்கும் வணிகக் குழுக்களுக்கும் இடையேயான பூசல் ஆகியவற்றை எடுத்தியம்புகிறது.

விடங்கச் செட்டி என்ற வணிகக் குழுவின் தலைவன் வாயிலாக இந்தக் கதை நகர்கிறது. ஐந்நூற்றுவர்கள் தயாரித்து விற்கும் பொருள்களில் ஒன்றான உருக்கினால் செய்யப்பட்ட வாள்களைக் கண்டு பிரமித்து ஒரு அரபு வியாபாரி அதை’  மஜ்தாரியா’  என்கிறார்.உலகத்திலேயே சிறந்த வாள் என்பதுதான் அவரது கூற்று.தங்களின் பொருள்களின் அருமை, அவற்றை உருவாக்குபவர்களுக்குத்  தெரியாது என்பதைப் போல வணிகர்களுக்கும் அவர்கள் உருவாக்கும் வாளின் தரம் தெரியவில்லை. அதை அறிந்தவுடன் விடங்கச் செட்டியின் வணிக மூளை துரிதமாய் வேலைசெய்கிறது. அவர்கள் பகுதிக்கு அருகே  இருளர்கள் வசித்து வரும் பதி என்ற பகுதியில் உருக்குக்கு தேவையான மூல மணல் இருப்பதைக் கண்டறிந்து, மெல்ல மெல்ல அவர்களை சூழ்ச்சி வலையில் வீழ்த்தி,   அடிமைகளாக மாற்றுகிறான்.இதில் ரோசன் மல்லி என்ற இருளர்களின் காதல் பலியாகிறது. மல்லியை தனது மனைவியரில் ஒருவராக மாற்றிக் கொள்கிறான் விடங்கச் செட்டி. எப்படி அந்த மல்லியால் பழி வாங்கப்படுகிறான் என்பது முதல் பகுதி.

இந்தப் பகுதியில் எப்படி அந்தப் பழங்குடியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டிற்குள் வந்து அவர்களுக்குள்ளும் அந்த ஜாதி அமைப்பு எப்படி வந்தது என்பது அழகாக விளக்கப்பட்டிருக்கும்.  மேலும் பெண்கள் வாழ்க்கை காடுகளிலும், அரண்மனை போன்ற பகுதிகளிலும் இருக்கிறது என்பதை அழகாக எடுத்துக் காட்டி இருப்பார். திருமணம் என்ற உறவு இல்லாமல், ஆனால் ஒருவரோடு மட்டும் காதல் வாழ்க்கை வாழும் பழங்குடியின பெண்களின் காதல் கலந்த காம வாழ்க்கையும், பல மனைவியருள் ஒருவராக அரண்மனையில் வாழும் பெண்கள் தங்கள் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் வாழ்க்கை முறைகளும் ஆசிரியர் எடுத்தியம்பிய விதம் மிக சிறப்பானதாக இருக்கிறது.

விஜயமங்கலம் கரூர் போன்ற இடங்களில் சமண மதம் எவ்வாறு தழைத்திருந்தது, மெல்ல மெல்ல சைவமதம் எப்படி அதை ஆக்கிரமிப்பு செய்தது, பல்வேறு நடராஜர்  கோலங்களின் மூலம் எல்லாம் சிறப்பான தரவுகளால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

இரண்டாம் பாகத்தில் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாண்டிய அரசர்கள் வலுவாக இருக்கிறார்கள். பாண்டிய பேரரசர் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவிற்கு பிறகு வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் இவர்களுக்கிடையே   ஏற்பட்ட வாரிசு உரிமைப் போரில் கதை தொடங்குகிறது. அதேசமயத்தில் வடக்கே டெல்லியில் கில்ஜி அரசர்களின் ஆதிக்கம் ஆரம்பிக்கிறது.அதில் அலாவுதீன் கில்ஜி எப்படி அரியணை ஏறினார் என்பது மிக சுவையான பகுதி. அவரின் தளபதியான மாலிக் காபூர் தெற்கு நோக்கி படையெடுத்து வந்து, யாதவ அரசை வென்று, ஹொய்சால  மன்னன் வீர வல்லாளனை வென்று,  அவர்களின் துணையோடு பாண்டிய மன்னனை நோக்கி திரும்புகிறான்.

இரண்டு பகுதிகளுக்குமான இணைப்பு இங்கே தான் வருகிறது. தமிழ்நாட்டுக் கொல்லர்களால் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட உருக்கு வாட்கள், மெல்ல இங்கு மறைந்து, அரபு தேசத்தின் வழியாக மீண்டும் நமக்கு அறிமுகப்படுத்தப்படும் பகுதி.

போரோடு கதை முடியாமல், வேறு ஒரு பாங்கில் கதை பயணிக்கும். கோவில்களில் இருக்கும் அடிமைகள்( தமிழ்நாட்டில் பஞ்ச காலத்தில் மனிதர்களை தானமாக கோவிலுக்கு அளித்தார்கள்) தேவரடியார்  வாழ்க்கை முறை, அறுவை சிகிச்சை மருத்துவம் என்று பயணித்து மீண்டும் அந்த உருக்கு வாள், அதனை உருவாக்கியவர்களின் சந்ததியினரிடம் மீண்டும் கிடைப்பது போல் கதை முடிவு பெற்றிருக்கும்.

நிறைய நிறைய தரவுகள், ஆனால் தொய்வின்றி சுவாரசியமாக, கதாபாத்திரங்களின் வாயிலாக நகர்த்தி கதை சொல்லும் பாங்கு ஆசிரியருக்கு கைவரப்பெற்ற கலையாக இருக்கிறது. மிகச் சிறந்த வாசிப்பு அனுபவத்தையும் தேடலையும் தரும் நூல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

நூல் தகவல்:

நூல் : புனைபாவை

பிரிவு:  நாவல்

ஆசிரியர் : இரா.முருகவேள்

வெளியீடு : ஐம்பொழில் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  நவம்பர் 2020

விலை: ₹ 250

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *