நூல் விமர்சனம்புனைவு

குமிழி


“;என் இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவை பதிவுசெய்திருக்கிறேன். எனது ஆழ்மனதுள் இறங்கிப்போய் முகாமிட்டிருக்கும் இவை, அவ்வப்போது எழுந்து எனது நினைவை பிராண்டிக் கொண்டிருப்பவை. கனவுகளை சிதைப்பவை. இதைப் பதிவு செய்யவேண்டும் என நினைத்து சுமார் கால் நூற்றாண்டுகள் எழுதுவதும். கிடப்பில் போடுவதுமாக கழிந்துபோயிருக்கிறது. உலகை சிலகாலம் மறு ஒழுங்குக்குள் வைத்திருந்த இந்த கொரோனா காலத்தின் (2020 ஏப்ரல், மே) டுடிஉம னுடிறn  இந் நூலை எழுதிமுடிக்க வைத்தது. எனது கதை இது. நான் நாட்டை விட்டு விலகியபோது எழுதி வைத்திருந்த இயக்க விசயங்களை, அனுபவங்களை நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்திருந்தேன். அவர் அதை புதைத்து பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்திய இராணுவம் ஈழத்துக்கு வந்தபோது அவர் பாதுகாப்புக் கருதி அவற்றை வெளியே எடுத்து எரிக்க நேர்ந்தது. அவர் ஓர் ஆவணமாக எழுதப்பட்டது. 35 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போதும் பல சம்பவங்கள் நினைவில் இருக்கிறபோதும் அவை ஆவண வடிவில் என் மூளைக்குள் இல்லை. எனவே இதை ஒரு நாவல் வடிவில் எழுத தீர்மானித்தேன். எழுதியிருக்கிறேன்” [ பிற்குறிப்பு : பக்கம் 223]-

-நூலாசிரியர் ரவி

கதைக்களம் : ஈழம், தமிழகம்

காலம் 1984-1985

சாத்தியமாவதற்கு வாய்ப்பில்லை! ஒரு புதினத்தை வாசித்தபிறகும் அந்த நூல் குறித்து ரெண்டு வரியாவது எழுதாமல் இருக்க முடியுமா? ஆனால் ‘குமிழி’ எனும் புதினத்தை வாசிப்பதற்கே பெருமளவு காலம் தேவைப்படுகிறது காரணம்  நூலைத் தொடர்ந்து வாசிக்கையில் துளிர்க்கும் விழிநீரை  துடைத்தெறியாமல் அடுத்த பக்கத்துக்கு தாவுவது சாத்யமல்ல…

பால்யங்களில் பிரமிப்புடன் தூரத்தியிருந்து பார்த்த விடுதலைப் போராட்டமொன்றினையும், அமைப்புகளையும் பற்றிய பிரமைகள் தகர்ந்து நொறுங்குவதை, அலட்சியப்படுத்தப் இயலாது.

இந்த பின்னணியோடு ‘குமிழி’க்குள் எந்தவொரு வாசகனும் நுழைய வேண்டியிருக்கிறது அதற்கும் காரணமிருக்கிறதே! புதினத்தின் முதல் பக்கத்தில் ரவி குறிப்பிட்டுள்ள ஒரு சங்கதிதான் அது!

 

மேலும் இப்புதினத்தின் நாயகனும், படைப்பாளியும் வேறு வேறு நபர்கள் அல்ல! வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் நம்பிக்கையோடு அமைப்பொன்றினுள் நுழைந்த இளைஞன் ஒருவனுக்கேற்பட்ட/கண்ணுற்ற அனுபவங்களின் தொகுப்பாக ‘குமிழி’ எனும் புதினம்.

“போர்கள் என்பன அவை நடக்கும் களங்களில் உள்ள மக்களை சொல்லொணாத் துயர்களுக்குள் தள்ளிவிடுவது என்பது இயல்பானது. இப்படியான துயர்கள் உலக வரலாற்றில் போதிய அளவு பதியப்பட்டுள்ளது. இந்தப் பாடுகளுக்கு முகம் கொடுத்த மக்களின் வாழ்க்கையானது சிறுகதை, புதினம், கவிதை, கட்டுரை, ஓவியம் போன்ற பல வடிவங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இன்று உலகில் புகழ்பெற்ற புராண, இதிகாச, காவியங்கள், கவிதைகள் எல்லாம் இப்படி எழுந்தவைகளே தமிழுள்ளும் 3000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட புற நானூற்று பாடல்களில் இருந்தே இந்த வரலாறு தொடங்குகிறது.     போர் இலக்கியங்கள் மக்களின் அடிப்படை உரிமைகள், அவர்களுக்குள் நிலவும் ஏற்ற தாழ்வுகள், பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகள், அந்நியச் சதிகள், பொருளாதாரத் தடைகள், அதன்வழி மக்களின் வாழ்வாதாரங்களை இழக்கச் செய்தல், போதிய அரசியல் பார்வை இல்லாததால் எந்த மக்களின் நலத்திற்கு என்று அமைப்புகள் அமைக்கப்பட்டனவோ அவை அந்த மக்களையே அழித்தல், சகபோராளிகளை ஈவிரக்கமின்றி வதைத்தல், கொல்லுதல், பண்பாடுகளை, பண்பாட்டுச் சின்னங்களை திட்டமிட்டு அழித்தல், பழிவாங்கல்கள் போன்ற பலதையும் பேசுபவை.” [பக்-5-6]

ஈழவிடுதலைப் போராட்டத்தின் இன்னொரு முகத்துக்கான ரத்த சாட்சியாக; நல்லவேளையாக கதை நாயகன் உயிரோடு கிடைத்ததால் இந்நூல் முக்கியமானதோர் வரலாற்று ஆவணமாகிறது.

சின்னதாயொரு பின் திரும்பல் [FLASH BACK]

1980 களில் தமிழகத்தின் பெரும்பாலான முக்கிய ஊர்களுக்கு ஈழத்தந்தை அமிர்தலிங்கம் அவர்களும் அம்மா மங்கையர்க்கரசி அவர்களும் வந்திருந்து மக்களை சந்திப்பார்கள்; ‘எதற்காக ஈழவிடுதலைப் போராட்டம்?’ என அய்யா உரையாற்ற ,அம்மா, விடுதலைப் போராட்ட பாடல்களையும் பாடுவார்.

படைப்பாளியும், களப்போராளியுமான ஈழவேந்தன் தமிழகத்தின் அறிவுசார் அமைப்புகளை சந்தித்தார்; விடுதலைப் போராட்டத்துக்கான பின்பலம் சொல்லி, பேராதரவு திரட்டுவார்.

தமிழகத்தின் அரசியல் கட்சிகள் ஈழவிடுதலைக்கான ஆதரவுக்குரல் எழுப்பி கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தி மக்களிக்குறிப்பாக மாணவர்களின் கவனம் ஈர்த்தன!                கல்லூரி மாணவர்கள் தன்னிச்சையாக தமிழ் உணர்வோடு எழுச்சி ஊர்வலங்களை நடத்தினர்!   “தமிழனுக்கு மதிப்பு ; சிங்களனுக்கு செருப்பு ”என்றெல்லாம் ஒற்றைச் செருப்புடன் கரம் உயர்த்தி; குரலுயர்த்தி, கோஷமிட்டு ஊர்வலத்தில் நடந்த நாட்கள் நினைப்பில் வருகின்றன.

ஜுனியர் விகடன் இதழில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை எனும் போராளிளைப் பற்றியத் தொடர் ‘கரிகாலன்’ என்பவரால் தொடராக எழுதப்பட்டது. தமிழகம் முழுவதும் அத்தொடர் பரவலாகப் பேசப்பட்டது. (தொகுத்து வைத்தது தொலைந்து போனதே!)

”ஒரு நாவல் என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்துகொண்டு வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக்கோவை தான் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. நாவல் புனைகதைதான். ஆனால்  மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளிலும் நிலைகளிலும் ’பிரத்தியட்சங்கள்’ எனப்படும் உண்மை வடிவங்களை தரிசித்த பின்னர் அந்த அனுபவங்கள் எனது இதய  வீணையில் மீட்டிவிட்ட சுரங்களைக் கொண்டு, நான்  இசைக்கப் புகும் புதிய வடிவையே நாவல் என்று கருதுகிறேன்” என்னும் படைப்பாளி இராஜம் கிருஷ்ணன் அவர்களின் மேற்கோளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது ரவியின் குமிழி எனில் எவரும் மறுக்க வியலாது

“1970 களின் மத்தியில் உருவான ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதம் முடிந்து போனது. 9.11.2001 இல் அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பின்னால் உலக அரசியல் வெகுவாக மாறியதையோ, புவிசார் அரசியலையோ, பெரும்பாலான ஈழ அமைப்புகளும் அவர்களின் ஆதரவாளர்களும் கண்டுகொள்ள வில்லை. மாறாக தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் கட்சியான தி.மு.க வையும் அதன் தலைவரையும் ஈழ பின்னடைவுக்கு காரணமாக காட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்தினர். போராளிகள் அறிவித்தபடி அவர்களின் துவக்குகள் மௌனித்துப் போயின நீண்ட காலம் நீடித்து வந்த போர் இது.”என  ரவி முக்கியமான காலப்பதிவுகளை முன்னுரையில் குறிப்பிடுகிறார்[ பக்கம் 8]

மலைக்கிராமங்களில், நகரங்களின் சாயல்படாத உள்கிராமங்களில் விடுதலை போராட்ட அமைப்புகளின் முகாம்கள் கட்டப்பட்டன/உள்ளூர் அரசியல்வாதிகள்/கட்சிகள் உதவியோடு (அப்படியொரு முகாம் பின்னணி தான் ‘குமிழி’ முளைத்த கதை).தேவைக்கருதியே புதினத்தின்  வரிகள் இங்கு அப்படியே எடுத்து கையாளப்படிகின்றன.

முகாம் முகம் 01:

பசுமையற்றிருந்த புழுதித் தரையை நிலவு குளிர்மையால் நனைத்தது. ஒளிபுகமுடியாத சவுக்கம் தோப்புகளின் கருமை இந்த நிலாத் துண்டு வெளியை சிறைப்படுத்தியிருந்தது பார்வை எல்லையை அந்த தோப்பு அறுத்துப் போட்டிருந்தது என்றபோதும் நிலாவின் வியாபிப்பு உடலுள் எல்லையற்று புகுந்துகொண்டதை ரகு அனுபவித்தான்.

முகாமினுள் ரகுவும் ஆனந்தனும் கூட்டம் பற்றி கதைத்துக் கொண்டிருந்தார்கள். இந்திரனும் சந்திரனும் வந்தார்கள் அவர்களுடன் தனியாக பேசும் விருப்பத்தை சைகையால் காட்டிச் சென்றார்கள். “நீங்கள் இந்தத் தோழர் பிரச்சினையை எழுப்பாதையுங்கோ அதைக் கேட்ட தோழர்களுக்கு ஏற்கனவே சில பிரச்சினையள் நடந்திருக்கு அதாலை எல்லாரும் பயம் கொஞ்சம் கவனமாயிருங்கோ…” இதற்குமேல் அவர்கள் பேசவில்லை. ரகுவிடம் புதிர்கள் முளைக்கத் தொடங்கின கரனின் பெருவிழிகளுள்ளும் அவை தெரிந்தன அவர்களைக் காணும் போதெல்லாம் பாண்டி ‘தோழர்’ என்று சொல்லி நக்கலாகச் சிரித்தான் சுவறிய அந்தச் சிரிப்பில் புதிர்கள் மேலும் வளரத்தொடங்கின ஆனாலும் அவர்கள் மூவருக்கும் ‘அண்ணை’ என்று அழைப்பது முடியாமலிருந்தது இறுதிவரை அவர்கள் தவிர்த்துக்கொண்டனர் சக பயிற்சித் தோழர்களை மட்டும் தோழர் என விழித்தார்கள் அங்கு அதுவே வழமையாகவும் இருந்தது.[ பக் – 52]

முகாம் முகம் 02:

“அப்ப நேற்று இரவு இவங்கள் திடுதிடுப்பெண்டு எங்கடை வாகனத்தை மறிச்சது ஒடித்திரிஞ்சது எல்லாம் இந்தக் கொட்டனை வைச்சுக்கொண்டுதானா?. இதுதான் எங்கடை ஆயுதமோ? ஆனந்தன் குறும்பாகப் பேசினான். அதேநேரம் பயிற்சி பற்றிய பிரமையில் அவர்களுக்கு விழுந்த முதல் அடியாகவும் அது இருந்தது. பின்னர் ஆயுதம் குறித்து அவர்கள் வகுப்பெடுத்ததையும் அந்த ஆயுதங்களை கொப்பியில் பிஸ்ரல், ஏகே-47, எஸ்எல்ஆர். எல்எம்ஜி ஆர்பிஜி-7 என படம்கீறி வைத்திருந்ததையும் சிலர் காலையில் விழித்தவுடன் அந்தப் படங்களை பார்வையால் ‘வணங்கிவிட்டு’ எழுந்து அந்த நாளை தொடங்குவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் இந்த ஆரம்ப முகாம் பயிற்சியை முடித்து வெளியேறுவது வரையான காலத்தில் எந்த ஆயுதத்தையும் பயிற்சித் தோழர்கள் எவரும் கண்ணால் கண்டதே கிடையாது என்பதையும் தெரிந்து கொள்வீர்கள்”[ பக் – 46]

முகாம் முகம் 03:

”காலையிலை கடலை அல்லது பயறுதான் மாறிமாறி வரும் மத்தியானம் சோத்தோடை இறைச்சி அல்லது முட்டை இரவு புக்கை அல்லது கஞ்சி வரும். சிலவேளைகளிலை றொட்டி அல்லது புட்டு எப்பவாவது அபூர்வமாய்க் கிடைக்கும். எல்லாமே அளவுச் சாப்பாடுதான் இரண்டாம் முறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றான் சந்திரன்.

சுமார் 320 பேர்வரை அந்த முகாமில் அப்போது இருந்தார்கள் எல்லோரும் 40 பேர் கொண்ட பிளட்டுன்களாக பிரிக்கப்பட்டு ஒரு சார்ஜன் தலைமை கொள்வார். 10 மணிக்கு விசில் சத்தம் வீரிட்டது. பிளட்டூன்கள் அணிபிரிந்து நின்றுகொண்டன. ‘பிளட்டூன் சார்ஜன்கள்’ எல்லோரும் எல்லா பிளட்டூன்களுக்கும் பொறுப்பான சார்ஜனுக்கு நேர்த்தியாக சல்யூட் அடித்து தத்தமது”[ பக் – 47]

முகாம் முகம் 04:

”அன்று சனிக்கிழமை நாளை ஓய்வுநாள். எல்லோரும் இடைஞ்சலற்று தூங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென எழும்பி லைற்றைப் போட்டு உடன் நிற்பாட்டினான் சிங்கப்பூர் ரகு விழித்துக்கொண்டான். “மஞ்சளையும் மீறி வேலைசெய்யுது பார்” என்றான். அருகருகில் இரு தோழர்கள் கைபோட்டு இச்சைப் பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் இரகசிய மூச்சொலி சிங்கப்பூருக்குக் கேட்டுவிட்டது. முஸ்பாத்தி பண்ணுவதிலுள்ள ஆபத்து அவர்கள் எல்லோரினதும் பம்பலையும் சிரிப்பையும் கட்டிப்போட்டது. தெரிந்தால் அவர்களைத் ‘தூக்கியிடுவாங்கள்’.

பாலியல் வேட்கையை மஞ்சள் குறைத்துவிடுமாம். எந்த கிரகத்தைக் கடைந்து இந்த அறிவியல் உண்மையைக் கண்டு பிடித்தார்களோ தெரியாது. அதனடிப்படையில் இந்த ஏற்பாடு தொடர்ந்தது. மஞ்சள் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவல்லது என்றளவில். இப்படி பெருந்தொகையானோர் கூடிவாழும் நிலையில் அதை சாப்பாட்டுக்குள் சேர்த்தார்களோ தெரியாது.  ஆனால் கதை ‘உள்ளாலை’ இப்படித்தான் உலாவியது. மஞ்சள் பாலியல் வேட்கையைத் தூண்டும் சுரப்பியினை (கூநளவடிளவநசடிநே) ஊக்குவித்து அதன் மட்டத்தை அதிகரிக்கக்கூடியது என மருத்துவம் சொல்கிறது”[ பக்கம் 81]

முகாம் முகம் 05:

“சிம்பிளாக இருக்கிறார் தோழர்” என்றான் ரகு அருகில் வந்த இந்திரன் “தோழர் என்று சொல்லாதையுங்கோ, பெரிசு அல்லது பெரியவர் எண்டு சொல்லுங்கோ” என்று ரகுவின் காதோரம் சொன்னான். “பனங்காணிக்குள், சுடலைக்குள், தோட்ட சொன்னோம்” என்று சொல்ல ரவுக்கு எந்த உந்துதலும் இல்லாமலிருந்தது ஆடுகாலுக்குக் கீழ், ஒதுக்கமா கோயில் மண்டபத்துள் என்றெல்லாம் வகுப்பெடுக்கும் தருணங்களில் தளத்தில் தோழர் உமா மகேஸ்வரன் என்றுதானே.[ பக்கம் 55]

திம்பு பேச்சுவார்த்தையும்,

பிரபாகரன் – LTTE

உமாமகேஸ்வரன் – PLOTE

பத்பநாபா – EPRLF

பாலகுமார் – EROS  என முக்கிய அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து செய்தியாளர்களை சந்தித்ததும்

  • வெளிப்படையாக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஈழ ஆதரவும் அன்னை இந்திராவின் முக்கிய முடிவுகளும் பெரும் நம்பிக்கையை வளர்த்தன.
  • வை கோ, நெடுமாறன் போன்றவர்களின் ஈழவிஜயம் வெகுவாக கவனிக்கப்பட்டது.
  • எம்.ஜி.ஆர் மறைவும், அன்னை இந்திராவின் படுகொலையும் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு பின்னடைவைக்கொடுத்தன.
  • ராஜீவ் காந்திக்கு, வெளியுறவுத்துறையில் வேண்டுமென்றே சொல்லப்பட்ட தவறானத் தகவல்கள் போராட்டத்தை திசைமாற்றின
  • ‘அமைதிப்படை’ எனும் பெயரில் இந்திய தேசிய ராணுவம் ஈழத்தில் நடத்திய நிகழ்வுகள் கடும் விமர்சனத்துக்குள்ளான
  • இதற்கிடையில், அமைப்புகளுக்கிடையேயான ‘சகோதர யுத்தங்கள்’ மற்றும் ராஜீவ்காந்தியின் மரணம் இரண்டும் தமிழ் மக்களிடமிருந்து ஈழவிடுதலைப் போராட்டத்தை அந்நியப்படுத்தின

மேற்கண்ட யாவும் ஒரு சராசரி மாணவனாக, இளைஞனாக பொதுமக்களில் ஒருவனாக அவதானித்தது.

ஈழவிடுலைப் போராட்டத்துக்காக அமைப்புகளிடம் பணம் பெற்று கொண்டு ஊர் ஊராக மைக் பிடித்த ‘வாயாடர்’ களையும் வரலாறியும்!

மேற்கண்ட பின்னணியில் குமிழி புதினத்தை வாசிக்க தொடங்குகையில் எழுந்தன பல வினாக்கள்.

இப்படியுமா விடுதலை அமைப்புகள் நடந்து கொள்ளும் இப்படிப்பட்ட அமைப்புகளையா நம்பினோம்; ஆதரவளித்தோம்!

”இன்னும் 18 பேரையும் காவிச்சென்று கொண்டிருந்தது. எனது தாய், சகோதரங்கள் எல்லோரையும் அந்தரத்தில் விட்டுச் செல்வதால் எழும் உணர்வை இந்த மண்ணுக்காய் உழைக்கச் செல்வது பற்றிய நினைப்பு தட்டிக்கழித்துக் கொண்டது என நீங்கள் நினைக்கக் கூடும். சொல்லத் தெரியவில்லை.

நான் ஒரு கட்டடக் கலைஞனாகி பின் எனது உழைப்பில் இந்தக் குடும்பத்தைத் தாங்குவது, எனது சகோதரிகளுக்கான சீதனத்தால் அவர்களை ‘மீட்பது’ போன்றவற்றுக்கான சாத்தியத்தை விட ஒரு சுதந்திர சோசலிச தமிழீழம் உருவாகினால் எம்போன்ற எல்லோருக்கும் மீட்சி கிடைக்கும் என நம்பியதும் பொய்யில்லை. எனது “என்ஜினியர்” கனவை பழிவாங்கிய அரசுக்கு எதிராக கோபம் கொண்டதும் பொய்யில்லை. கொலை யுண்ட சக மாணவர்களில் என்னைக் கண்டதும் பொய்யில்லை, மண்ணுக்காய் மரித்தவர்களின் சாம்பலிருந்து தமிழன் என்ற அடையாளத்துடன் நான் எழுந்ததும் பொய்யில்லை. வண்ணை ஆனந்தனின் ‘வெளவால்கள்’ எனக்கு திசைகாட்டியதும் பொய்யில்லை. எல்லா பொய்களையும் நம்பியதும்கூட பொய்யில்லை.

வாழ்க்கையில் ‘றிஸ்க்’ எடுப்பது ஒரு மாற்றத்தின் பாய்ச்சல் அல்லது முறிவு என நினைக்கிறேன். அது ஆச்சரியங்களை தர வல்லது வேறு உலகத்தை அதன் மாந்தர்களை அறிமுகப்படுத்தவும் கூடியது. இவை ஒன்று மேயில்லாமல் வாழ்க்கையை சப்பி துப்பிடவும் வல்லது. முன்னுமானிக்க முடியாத இந்த பாதை எனக்கு மர்மமாகவே இருந்தது. அங்கு போய்வந்து யாரும் அனுபவங்களைச் சொன்னாரில்லை. அவர்கள் சொல்லியிருந்ததாலும் நான் கேட்டிருப்பேனா என்றும் தெரியாது.”[ பக்கம் 26]

”நேரம் இரவு பன்னிரண்டு மணியை தாண்டிக் கொண்டிருந்தது. எல்லையற்றுத் தெரிந்தது வானம். நட்சத்திரங்கள் எல்லாம் ஏதோ அர்த்தங்களை எழுதிக்கொண்டிருக்க எமது வண்டியின் இரகசிய இரைச்சலைத் தவிர வேறெந்த இரைச்சலையும் அந்த நீர்வெளியில் அவதானிக்க முடிவில்லை. வண்டி 20 பேரையும் தூக்கிக் கொண்டு அலைகளற்ற நீர்ப்பரப்பை மெல்ல நீவிச் சென்றது வேகமில்லை.          திடீரென ஓட்டி கத்தினான். “டேய் அந்தா ஒரு கரும்புள்ளியடா, அடியடா எஞ்சினை” ஓட்டி சொன்னதால் எல்லோருமே அதை நம்பினோம். நரம்புகளில் விறுவிறுப்பு புகுந்து கொண்டது. இப்போ எல்லோருக்கும் கரும்புள்ளி ஒரு பிசாசுபோல் துரத்துவதாய் பிரமை ஊட்டியது. பிரமை உண்மையாய் உரு வெடுத்தது. நெருப்புப் பந்துளாய் வண்டியை அண்மித்து செல்கள் விழுந்தன. இரண்டு மீற்றர் தூரம் தள்ளி ஒன்று விழுந்த போது நாம் மரணத்தை நெருங்கியிருப்பதாக உணர்ந்தோம். எல்லாம் முடிந்துவிட்டது என நான் நினைத்தேன். மூன்று எஞ்சின்களம் தமது முழு வலுவையும் காட்டத் தொடங்கின. வண்டி வெறிபிடித்த குழுமாடுபோல் ஒடியது. நீர்ப்பரப்பை பிளந்து கொண்டு விரைந்தது. இடையிடையே நீர்ப் பரப்பை விட்டு மேலெழுவதும் பொத்தென வழுவதுமாய் அது துள்ளிக் குதித்தது. அதன் கீழ்ச் சட்டங்களை கொம்பில் பிடிப்பது போல் நாம் பிடித்திருந்தோம். இடறுப்படாமல் குந்தியிருந்து பற்றினோம். எமை எத்தி எத்தி போட்டு அடித்து வலியூட்டியது . சிலர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்கள் எதையும் சட்டை செய்யும் நிலையில் நாம் இல்லை. வண்டி பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. தீப்பந்துகள் இப்போ எமது வண்டிக்கு சற்றுத் தொலைவில் விழுந்தன. பிறகு அவை தூரத்தில் விழுந்தன. பின்னர் மறைந்து கொண்டிருந்தன. நாம் நடுக்கடலை இப்போ  தாண்டிவிட்டிருந்ததை ஊகிக்க முடிந்தது வண்டி இப்போ தனது கலகத்தை நிறுத்தியது. எஞ்சின்களின் வேகம் குறைக்கப்பட்டது. சிறைப்பட்டிருந்த மூச்சுக்காற்று வெளியே வந்து எட்டிப் பார்த்தது.”{ பக்கம் 32]

‘கடல் விழுங்கிய இளைஞர்களின் கதியென்ன..? அந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு அமைப்புகளின் நியாயமான பதிலென்ன?

”திடீரென சவுக்கம் காட்டுக்குள்ளிருந்து ஒரு அலறல் கேட்டது. மனதில் ஆழ இறங்குகிற அலறல், அது நரம்புகளை கைப்பிடியாய்ப் பிடித்து இழுத்து உலுக்கியது மரணஒலி என்று கதைகளில் படித்ததை இப்போ ரகு அனுபவித்துக்கொண்டிருந்தான் மனிதர்களின் ஒலி இப்படி குரூரமாகவும் ஒலிக்க முடியும் என்பதை அன்றுதான் அவன் உணர்ந்திருத்தல் கூடும். ஒரே உரப்பல் ஒலியும் கேட்டது. “உங்களுக்கு அண்ணா இல்லையா… தம்பி இல்லையா…” என்றெல்லாம் குரல் நடுங்கி எழுவதும், அதைச் சிதைக்கும் அதட்டல்களுமாக சவுக்கம் தோப்பின் அமைதி உடைந்து நொருங்கியது ஈனக் குரல் இருளில் கசிந்து வழிந்தது பதட்டமாக இருந்தது என்ன நடக்கிறது”[ பக் – 53]

‘காணாமல்போன’ இளைஞர்களின் கதியென்ன..?

தான் உருவாக்கியோ அல்லது புறநிலையால் நிர்ப்பந்திக்கப் பட்டோ ஒருவர் பல பாத்திரங்களை ஆற்றுகிறார். பொதுவில் நாம் ஒருபடித்தானதாகக் காண்கிற “ ஒருவரின் பாத்திரமானது, பன்மைகளின் சிக்கல் நிறைந்த தொகுப்பு என நான் காண்கிறேன்” அதாவது ஒத்திசைவானதும் முரண்கள் கொண்டதுமான வெவ்வேறான பாத்திரங்களின் ஒரு சேர்க்கை.

”பின்னை நவீனத்துவம்  மையப்படுத்தப்பட்ட,முழுமைப்படுத்தப்பட்ட வரிசை முறைக்கும் இறுதிநிலைக்கும் உட்பட்ட அமைப்புகளை/ஒழுங்கமைவுகளை எதிர்த்து கேள்வி கேட்கிறது.ஆனால் அவ்வாறு அழிக்க நினைப்பதில்லை.பண்பாட்டில் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட விழுமியங்களை அல்லது மதிப்புகளை இது இடைமறித்துக் கேள்வி கேட்கிறது.ஆனால் இந்தக்  கேள்விகளோ ,குறிப்பிட்ட ஒரு முறைமைக்குட்பட்டன அல்ல;மாறாக அந்தந்த விஷயங்களையும் சந்தர்ப்பங்கஆலியும் ஒட்டியனவேயாகும்”எனும் லிண்டா ஹூட்சியோ வின் மேற்கோளை [தி சு நடராசன்,திறனாய்வுக்கலை,பக்237] அடிப்படையாகக் கொண்டு இப்புதினத்துக்குள் நுழைவோமேயானால் மிக எளிதாக வாசகன் கதைக்குள் பயணப் பட இயலும்.

 

அமைப்பின் முகம் 01:

“சித்திரவதையின்போது உடலில் சதையைக் கீறி அதற்குள் மிளகாய்த் தூள் தடவி விசாரிக்கும் முறை பற்றி இதையே ஒரு சிறிய விசயம் ஆக்குவதுபோல் ரதன் சொன்ன தகவல் ரகுவுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. உடம்பின் மேல் நெருப்புக்குச்சியின் மருந்தை உதிர்த்துப் போட்டு கொழுத்தி விசாரிக்கும் முறை பற்றி அவன் சொன்னான். செத்தல் மிளகாய்ச் சாக்கால் தலையை மூடி விசாரிக்கும் முறை பற்றியும் சொன்னான். நம்பிக்கையின் அடிப்படையில் அவன் அவவ்ப்போது ரகுவிடம் சொல்லும் இப்படியான தகவல்கள் ரகுவிடம்  படிப்படியாக உள்காயங்களை ஏற்படுத்தத் தொடங்கியது. பயத்தை உருவாக்கத் தலைப்பட்டது.[ பக்கம் 82]

அமைப்பின் முகம் 02:

 

”இப்போ தளத்தில் காட்டுத் தீயாக செய்தி பரவிக்கொண்டிருந்தது. பெரிசு தளத்தில் நின்ற காலத்தில் சுழிபுரத்தில் ஆறு இளைஞர்கள் கொல்லப்பட்ட அந்தச் செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அந்த இளைஞர்கள் அறுவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார எழுத்தப் பிரதிகளை மதில்களில் ஒட்டிக் கொண்டிருந்தபோது, கழகத்தின் உளவுப்படையால் கைதுசெய்யப்பட்டார்கள் எனவும், அவர்களது கோரமான படுகொலைக்கு கழகம்தான் பொறுப்பு எனவும் விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்டார்கள். ஆனால் அதை பின்தளத்தில் மட்டுமன்றி தளத்திலும் அரசியல் பிரிவு மறுப்பறிக்கை விட்டு ‘ஞாயம்’ பேசியது. கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட அந்த இளைஞர்களின் உடலை புதைகுழியிலிருந்து தாம் கண்டுபிடித்தபோது அவர்களின் ஆண்குறிப் பகுதி வெட்டப்பட்டு வாயில் திணிக்கப்பட்டிருந்ததாகவும் விடுதலைப் புலிகள் பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.”

அமைப்பின் முகம் 03:

”பரம் தோழரை ரகு தனியாகச் சந்தித்தான் “ஏன் உன்னை கூட்டிக் கொண்டு போனவங்கள் அங்கை என்ன நடந்தது? யார் அங்கை நிக்கிறாங்கள்?”  என்றெல்லாம் அவதி அவதியாய் விசாரித்தான் ரகு. அவன் அழுதான். “தோழர்! என்னிட்டை ஒரு கொட்டனைத் தந்து மதனை அடிக்கச் சொன்னான் மொட்டை மூர்த்தி. என்னாலை முடியாமலிருந்ததடா. கை நடுங்கிச்சு.  உனக்கு போராளியாகிறதுக்கு துணிவு காணாது. அதாலைதான் சென்றியிலை மயங்கி விழுந்தனி. அடியடா.. எண்டு கத்தினான். அவன் காலாலை என்ரை குண்டியிலை அடிச்சான். அடியடா… என்றான் பயத்தில நடுங்கி நடுங்கி அடிச்சன். அடிச்சனா தொட்டனா தெரியாது. என்னாலை முடியாமலிருந்ததடா….”  என்றவாறு கண்ணீர்விட்டு அழுதான்.. “இங்கை என்ன நடக்குது எண்டு ஒண்டும் புரியவில்லை” என்றான். “மதனை தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டிருக்கிறாங்கள். செத்துக் கொண்டிருக்கிறான் பார்க்க முடியவில்லையடா” என்று விம்மி அழத் தொடங்கினான். மனங்குலைந்து போயிருந்தான் அவன்.”[ பக்கம் 63

70களின் பிற்பகுதியில் ஈழ விடுதலை இயக்கங்களின் தோற்றங்கள் நிகழ்ந்தாலும், 80களின் முற்பகுதியிலேயே அவற்றின் வீச்சமும் வீக்கமும் நிகழ்ந்தன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற அமைப்பும் ஊதிப்பெருத்து ஒரு குமிழியாக அழகு காட்டியது. அதற்குள் அகப்பட்ட ஓர் இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவை இந் நாவல் பதிவு செய்கிறது

தப்பி பிழைத்த ஒரு இளைஞன் கொடுத்ததே ‘குமிழி’ எனில், பிற இளைஞர்களும் பேசத் தொடங்கினால் பெருவெள்ளமல்லவா எழும்!

தனிமனிதர்களுக்கான இந்தப் பண்புகள் போற்றுதற்குரியவை. ஆனால் இயக்கத்தின் போக்கு, எதிரியின் அணுகுமுறை, தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையிலான முரண்கள், புறநிலை மாற்றங்கள் அல்லது நெருக்கடிகள், நடைமுறைப் பிரச்சினைகள், தனிமனித பலம் பலவீனங்கள், தன் முனைப்பு, அதிகாரம், புகழ், பிம்ப உருவாக்கம் என பல காரணிகள் இந்த தனிமனிதர்களை இப்படியே தொடர்ந்து காப்பாற்றி வைத்திருக்கும் என நாம் அப்பாவித்தனமாக நம்பத் தேவையில்லை. லெனின் இப்போ இருந்திருந்தால்…. சேகுவேரா இப்ப இருந்திருந்தால்… மாவோ இப்ப இருந்திருந்தால்… என்றெல்லாம் அவர்கள் நடந்த அதே தடத்தில் வைத்து சமன்பாட்டு ரீதியில் கணிப்புகள் செய்ய முடியாது அத் தடத்திலிருந்து முறித்துக்கொண்டு அவர்கள் வீரியமான அல்லது வீழ்ச்சியான பாதையில் பயணித்திருத்தல் கூடும்

“சொந்தத் தோழர்களையும் சக இயக்கப் போராளியளையும் கொலை செய்துகொண்டு எந்த மக்களுக்காகப் போராடப் போறம். குறைந்தபட்சம் அதை ஏற்றுக்கொள்ளிறதுக்கோ, அதற்கான காரணத்தை பகிரங்கமா முன்வைக்கிறதுக்கோ, சுயவிமர்சனம் செய்யிறதுக்கோ, திருந்திக்கொள்ளிற முனைப்பை காட்டுறதுக்கோ வக்கில்லாத இயக்கம் தனக்காக போராடுதா அல்லது மக்களுக்காக போராடுதா” என்று கடுப்பாக பேசினான் எர்னஸ்ரோ[பக்கம் – 159]..இது தான் குமிழி எழுப்பும் பெருவினா

ஒரு வேளை உமாமகேசுவர்னிடம் வினவினால் ‘குமிழி’ குறித்த வேறு மாதிரி விளக்கமல்ல கிடைக்கலாம் ; ஆனால் பாவம் அவரும் ‘சகோதர யுத்தத்தில்’ கொல்லப்பட்டது சரித்திரம்.

சாதியும் பெண்கள் மீதான வன்மமும் விடுதலை அமைப்பொன்றினுள் எப்படி இருந்தது என்பதற்கு கீழ்க்கண்ட வரிகளே சாட்சி:

.               01:“அந்த பறை வேசைமக்கள் தப்பி ஓடியிட்டாங்கள்….. ஆஸ்பத்திரியிலை ஒருத்தி இருக்கிறாள் அவளை கண்காணிக்க வேணும். இரண்டு பேர் அவளோடை நிற்க வாங்கோ”[ பக்கம் 190]

02:அதென்ன பெண்களை கையாள்வது” என்று கேட்டான் யோகன் தேவன் அதை எதிர்பாத்திருக்கவில்லை.

“பெண்கள் என்ன ஆண்களால் கையாளப்பட வேண்டியவர்களா, அவர்களையும் ஆயுதத்தையும் ஒப்பிடுகிறீர்கள். அவர்களென்ன பண்டமா?.” என்று கேட்டான் ஜோன்.                “பெண்விடுதலை பற்றி கதைக்கிறம், சோசலிசம் பற்றி சமத்துவம் பற்றி கதைக்கிறம்… நாங்கள் இப்பிடி ஒப்பிடலாமா..” என கேட்டான் எர்னெஸ்ரோ.[ பக்கம் 145]

புதினத்தின் சிறப்பம்சங்களாக வேம்பு, (வேப்பமரம்) பேசவது நாவலவ விரவியிருக்கும் தமிழீழ பேச்சுமொழி (சில இடங்களில் சொற்களைப் புரிந்து கொள்ள சற்று அவகாசம் தேவைப்பட்டது)

“சுய அனுபவத்தின் அடிப்படையில் ஒருவர் நாவல் எழுதத் தொடங்கும்போது, சில கடந்த கால நிகழ்வுகளை எழுதும் அவசியம் ஏற்படலாம். நாவல் நிகழும் காலத்திற்கும், நாவல் எழுதும் காலத்திற்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்படுவது இயல்பு. இதை இட்டுநிரப்ப கள ஆய்வும், நூலறிவும் அவருக்குத் தேவைப்படுகின்றன. சுய அனுபவத்தின் அடிப்படையில் நாவல் எழுதுவோருக்கு இத்தகைய இடர்பாடு இல்லை. ஏனெனில் அவர்கள் தேர்ந்தெடுத்த களத்துடனும், அங்கு வாழும் மனிதர்களுடனும் நிகழும் நிகழ்வுகளுடனும இணைந்த ஒன்றாக அவர்களது வாழ்க்கை அனுபவம் அமைந்திருக்கும்”எனக் குறிப்பிடும் ஆய்வர்.ஆ.சிவசுப்ரமணியணின் கருத்தும் இங்கு முக்கியமானதே

குமிழி… நிஜமா… புனைவா…அமைப்பொன்றிலிருந்து இணைந்து ,உறவி,விலகி அந்த அனுபவங்களில் இருந்து அமைப்பின்   மீது வைக்கப்படும் விமர்சனமா…அதிகார மமதையின் மீதான சவுக்கடியா…வரட்டு சித்தாந்த வாதிகளின் கருணையின்மையின் பதிவா… எல்லாம் தான் குமிழி  வரலாற்று பெருந்துயரொன்றின் ஆவணம்.ஆம் குமிழி சமகால சரித்திரத்தின் கோப்பு என வகைப்படுத்தலாம்.

 

நூல் தகவல்:

நூல் : குமிழி

பிரிவு:  நாவல்

ஆசிரியர் : ரவி

வெளியீடு : விடியல் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  அக்டோபர் 2020

விலை: ₹ 190

 

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *