முன்னுரையிலேயே பிரபஞ்சன் அவர்கள் “நான் எழுதிய கட்டுரை நூல்களில் இந்தப் ‘பெண்[ என் இதயத்துக்கு மிக அருகில் இருக்கும் புத்தகம்” என்று குறிப்பிடுகிறார். மேலும் நம் இதிகாசங்கள், புராணங்கள், இலக்கியங்கள் பெண்ணை என்ன, எப்படி நினைத்தன, எங்கு வைத்தன என்பதை ஆராயும் முயற்சியே இப்படி ஒரு புத்தகமாக உருவாயிற்று என்றும் கூறுகிறார். நக்கீரன் இதழில் வெளிவந்த 28 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
வேட்டைச் சமுதாயத்தில் தலைமையேற்று செயல்பட்ட பெண், விவசாய சமுதாயத்தில் தாசியாக, அடிமையாக மாறியது எப்படி? என்ற கேள்விக்கு விடை தேடினால், மனித குல வரலாற்றை முழுவதுமாய் படிக்க வேண்டி வரும். அவ்வாறான ஒரு தேடலில், வேட்டைச்சமுதாய வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறது முதல் கட்டுரையான ‘அதிதி’. ஆணுடன் போரிட்டு, காயங்களுடன் களத்தில் வெற்றி பெறும் பெண்ணான ‘அதிதி’ அக்காலத்தில் வாழ்ந்த பெண்களின் பிரதிநிதியாக, நம்முன் தோற்றம் கொள்கிறார்.
இதிகாசக் கதாபாத்திரங்களைப் பொறுத்தவரையில், பொதுவாக் பெண்களை நோக்கி அறிவுரை சொல்பவர்கள் எடுத்துக்காட்டாக சீதையைப் போல் பொறுமையாய் இருக்க வேண்டும் என்பர். பிரபஞ்சன் சீதையின் மனதில் தோன்றும் கேள்விகளை, வார்த்தைகளில் வடிக்கிறார். அக்கினிப்பிரவேசம் செய்ய வேண்டும் என்ற கட்டளையை எதிர்த்துக் கேள்வி எழுப்புகிறாள் சீதை. தாடகை, அகல்யா என்ற மற்ற இராமாயணக் கதாபாத்திரங்களையும் அவர்கள் மனதை வெளிப்படுத்தி கட்டுரைகளை அமைத்திருக்கிறார் பிரபஞ்சன். இதுவரை நாம் படித்த இதிகாசம் சார்ந்தவற்றில் ஆண்களின் பார்வையில் சொல்லப்பட்ட விஷயங்கள், வர்ணனைகள் இடம்பெறும். ஆனால், பிரபஞ்சன் பெண் பாத்திரங்களின் மனதை அவர்களின் மொழியில் வெளிப்படுத்துகிறார். இதிகாசங்கள் மட்டுமல்லாமல், காப்பிய பாத்திரங்களான மாதவி, மணிமேகலை ஆகியோரின் மனதையும் நம்முன் திறக்கிறார்.
இக்கட்டுரைத் தொகுப்புகளில் என்னைக் கவர்ந்த ஒரு கட்டுரை “தோழி”. நாம் சங்க இலக்கியங்களைப் படிக்கையில், தலைவியுடன் தோழி இருந்தாள் என்று சொல்லப்பட்டிருக்கும். தலைவியின் சிறு வயது முதல் விளையாட்டுத் தோழியாகவும், வளர வளர எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்பவளாகவும், காதலுக்கு தூது செல்பவளாகவும், பிரிவின் துயருக்கு ஆறுதல் அளிப்பவளாகவும் தோழியை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், தோழிக்கென்று ஒரு மனமுண்டு, அவளுக்கு வாழ்க்கையில் சில தனிப்பட்ட விருப்பங்கள் உண்டு என்பதைக்கூட நாம் உணர்ந்ததில்லை. இலக்கியங்களில் உணர்த்தப்படவும் இல்லை. பிரபஞ்சன் அவர்கள் தோழியின் கூற்றாக, அடையாளம் அற்றுப் போன அவளின் வலியை வெளிப்படுத்துகிறார். முகவரி இல்லாத, முகம் இல்லாத தோழி, தலைவனின் தோழனிடம் அன்பு செலுத்துகிறாள். ஆனாலும் அவர்கள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. “நாங்கள் மனிதர்கள் அல்லர். மனிதர்கள் போல் இருப்பவர்கள்” என்ற வரி நமக்கு ஆயிரம் ஆயிரம் விஷயங்களை உணர்த்துகிறது.
இன்னொரு முக்கியமான கட்டுரை, நம் அன்பிற்குரிய கே.பி.ஜானகி அம்மாள் பற்றியது. அவருடைய வாழ்க்கை நாம் அறிந்தது தான் என்றாலும், பிரபஞ்சன் அவர்களின் விவரிப்பில் மிக அழகாக அம்மாவின் வாழ்க்கை நம் கண்ணில் விரிகிறது. நாடகக்கலைஞராக தன் வாழ்க்கையைத் துவக்கிய அம்மா, தேசபக்த இயக்கத்தில் ஈடுபட்டு தன் நாடகங்களின் வழி தேசபக்த கருத்துக்களை வெளியிட்டார். அதனால், காவல்துறையின் அடக்குமுறைக்கும் ஆளானார். நேதாஜி அவர்கள் மதுரைக்கு வந்த போது அவரை வரவேற்று, மதுரையின் பல இடங்களில் காங்கிரஸ் கொடி ஏற்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார். இரண்டாம் உலகப் போர் காலத்தில், யுத்த எதிர்ப்பு பிரச்சாரம் செய்த குற்றத்துக்காக, தென்னிந்தியாவிலேயே முதன்முதலில் தண்டனைக்குள்ளான பெண் தலைவர் ஜானகி அம்மாள் அவர்களே ஆவார்.
தோள்சீலைப் போராட்டதை முன் வைத்து எழுதப்பட்ட “எலிசபெத் அம்மாள் என்னும் இசக்கியம்மாள்” கட்டுரையைப் படிக்கும் போது கண்கள் கலங்குகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்களின் மானம் காக்கும் போராட்டத்தில் எத்தனை வன்முறையை சந்தித்திருக்கிறார்கள். எத்தனை உயிர்ப்பலி நிகழ்ந்திருக்கிறது. இவையெல்லாம் நாம் என்றும் மறக்கக்கூடாத நிகழ்வுகள் ஆகும். அதை பிரபஞ்சன் அவர்கள் மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.
கட்டுரைகள் அத்தனையும் சீரான நடையில், சுவாரசியத்துடன் புதிய கோணத்தில் எழுதப்பட்டவை. நாம் அனைவரும் சரியான வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கும், புனைவுகளை விலக்கி உண்மையைப் பார்க்கப் பழகிக் கொள்வதற்கும் இந்நூல் மிகவும் உதவும்.
– ரஞ்சனி பாசு
பெண் விடுதலை குறித்து, நான் ஏன் கவலைப்படுகிறேன். என் விடுதலை பற்றி கவலைப்படுவதால், பெண் விடுதலை பற்றியும் கவலைப்படுகிறேன். பெண் விடுதலை இன்றி, ஆண் விடுதலை இல்லை – பிரபஞ்சன்
நூல் : பெண்
பிரிவு : கட்டுரைத் தொகுப்பு
ஆசிரியர் : பிரபஞ்சன்
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
வெளியான ஆண்டு : 2016
பக்கங்கள் : 200
விலை : ₹ 180