•  “கருங்குருதிப் பிறைகள்” நூலுக்கு அபிரா எழுதிய அணிந்துரை.

லசைப் போக தங்களை ஆழமாக, ஆழமாக தயார்படுத்திக் கொண்ட கவிப் பறவைகளின் மனம் கவரும் அணிவகுப்பே இந்த தொகுப்பு.வலசைப் போகும் பறவைகள் வெகுதூரம் பறக்க அதிகம் உண்டு ஓர் அடுக்கு கொழுப்பைச் சேர்த்துக் கொள்ளுமாம் பசி தாங்க.இந்தக் கவிதைப் பறவைகள் தாங்கள் உண்டு செரித்ததை உண்டு கொழுத்ததை அடைய வேண்டிய தூரம் பற்றிய கவலையின்றி அள்ளி அள்ளி இரைத்துச் சென்றுள்ளனர். ஆனாலும் அடைய வேண்டிய தூரம் கடந்தும் செல்கிறார்கள். இந்த தொகுப்பை வாசித்து முடிக்கையில் உங்களுக்கும் ஓர் அடுக்கு கொழுப்பு சேரலாம். நல்ல கொழுப்பு மனதிற்கும் உடலிற்கும் உகந்ததே.

ஓர் கெந்திக்கிழவியின் யோகமும், அவளின் எள்ளலும் சரியா?தவறா?என்பதெல்லாம் கவியின் கவலையுமல்ல. கேள்வியுமல்ல. இந்த நிலையிலேயே வைத்திருக்கும் சமூகத்தைச் சூழ வேண்டிய கவலையது.

“தோழ நாடு என்பது பேச்சு_மனிதம்

மறந்து பிடித்தது மூச்சு”

_இந்த நீலக்கடலின் நீளும் கதை.மனிதம் எல்லையும் கடந்தது என்றே முழங்கிக் கொண்டிருக்கும்.

சோதிடம் சொல்லுமா ஆயுளை? உருட்டப்படும் சோழிகள் தான் சொல்லுமா ஆயுளின் நீளத்தை? இதிலெல்லாம் நம்பிக்கை தன் காதலியின் பார்வையில் கிடைக்கிறது இந்த கவிஞனுக்கு இப்படி.

“நீ என்னை எதேச்சையாக காணும் தருணங்களில் சிறிது பிறந்தும் சிறிது இறந்தும் ஆயுளை சமன்செய்துக் கொள்கிறேன்”

“உனக்கு பின்னே திரளும்

ஒன்றிரண்டு மேகங்களுக்கு

உன் இமையின் கீழ் விழும்

இருளைக் கொடுத்துவிடு

பெண்ணே

மழைபெய்து

மனங்களும் குளிரட்டும்”

காதல் இருக்கும் வரை வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனிக்கட்டிகளின் தேவையும் குறைவாகவே இருக்கும் போல.

சாணம், மாடுகள், நாவல்பழக் கூடையுடன் ஒரு கிழவி, பண்டங்கள் பரிமாறப்படும் பாத்திரங்கள் என பல பாத்திரங்களுடன் அழகாய் விரியும் ஓர் கிராமத்தின் கவிதை எப்போதும் ஈரமாகவே இருக்கும்.

“கனவொன்றும்

காமமோ

காதலோ

அல்லவே

உடனே

விற்றுப்போக!”

_ விற்றுப்போகாதக் கனவுகளால் கனம் கூடிய விரக்தியின் வெளிபாடே இது.ஏழுகடல் தாண்டி, ஏழு மலை தாண்டி போனா அங்க ஒரு மரம் இருக்கும்.அந்த மரத்துலத்தான் அந்த உயிர் இருக்கும்னு சின்ன வயசுல கதை கேட்டிருப்போம் . அப்போதெல்லாம் சிக்காத இந்த உயிர் இந்தக் கவிதையில் சிக்குகிறது. உடலோடு உயிரையும் நனைக்கிறது.

“ஏழு கண்டங்களுக்கப்பால்

பனிச்சிகரத்தின் ஓர் துளி

ஆவியாதலில் மழையாகி

யாக்கை நனைக்கும்

தருணத்தை ஒத்ததா

பந்தம்?”

‘கிச்சுக் கிச்சுத் தாம்பலம்

கிய்யாக் கிய்யாத் தாம்பலம்’ விளையாட்டு சின்ன வயசுல விளையாண்டிருப்போம். ஒரு பொருளை ஒருவர் மணலில் மறைக்க மற்றொருவர் கண்டறியும் விளையாட்டு. அழிந்து போன விளையாட்டுகளில் ஒன்று இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஒரு பொருளை மறைத்து வைத்து உங்களோடு மச்சு மச்சு தாம்பலம், மாயா மாயா தாம்பலம் என்று விளையாட்டு காட்டும். கொஞ்ச நேரம் விளையாடுங்கள். விளையாடியப் பின் மனதாடியக் கருத்துகளை அடுத்தடுத்து கொண்டு செல்வதும் நம் பொறுப்பே. வலசைப் போகும் பறவைகள் செல்லுமிடமெல்லாம் வாழட்டும்! வளரட்டும்!

அணிந்துரை :  அபிரா திருச்சி.

நூல் தகவல்:

நூல் : கருங்குருதிப் பிறைகள்

பிரிவு :  கவிதைத் தொகுப்பு

தொகுப்பாசிரியர்:  வே.மு.ஜெயந்தன்

பதிப்பகம் : நீராம்பல் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  பிப்ரவரி 2021

பக்கங்கள் : 66

விலை :  ₹ 80