மனிதன் என்றாலே உலகில் மற்ற உயிரினங்களுக்கு இல்லாத பல சிறப்பு அம்சங்கள் உண்டு. அந்த சிறப்பு அம்சங்களில் மிக முக்கியமானது அவன் கண்டடைந்த உலகியல் அறிவும், நாகரீக வளர்ச்சியும்தான். இவைதான் மனிதப் பரிணாம வளர்ச்சியில் பல முன்னெடுப்புக்களை கண்டடைந்துள்ளன.
அதில் மிகவும் முக்கியமானது அவன் உடுத்தும் ஆடை. மனித வரலாறுகளை பேசும் போது ஆடை வரலாறுகளையும் நாம் பேசித்தான் ஆக வேண்டும். அதுவும் தமிழில் குறிப்பாக பெண்களின் ஆடை வரலாறுகள் குறித்தும் அதற்குப் பின் உள்ள அரசியல் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அளவுக்கு புத்தகங்கள் வந்துள்ளதா என்பது தெரியவில்லை. நான் அறிந்த வரையில் என் பார்வைக்கு வந்து நான் விரும்பி வாசித்த புத்தகம் இது ஒன்றுதான்.
வரலாறு என்றாலே அரசர்களின் வீர வரலாறும், போர்களும், நாடுகளின் மீது படையெடுப்பும் என நமது பார்வைகளில் மூளைகளில் தேக்கிவைத்திருக்கும் அறிவை அப்புறப்படுத்திவிட்டு வாசிக்க ஆரம்பித்தால் இந்த புத்தகம் மிக கவனம் கொள்ள வேண்டிய ஒரு ஆவணம் போலவே உள்ளது.
குறிப்பாக பெண்களின் ஆடை என்பது நமது பண்பாட்டில் அரசியலில் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களையும் மக்கள் மனங்களில் ஆடைகள் தோற்றுவித்த மறுமலர்ச்சியையும், பாலினபாகுபாடு போன்ற உடல் அரசியலையும், பண்டைக் காலம் முதல் காலனிய ஆட்சி வரையிலான அதன் தாக்கங்களையும், அது கடந்து வந்த பாதைகள், போராட்டங்கள் என விரிவான கண்ணோட்டத்தில் இந்த நூல் பேசுகிறது.
வரலாறு முழுவதும் பெண்கள தங்கள் வாழ்க்கையை பல போராட்டங்களுடனேயே கடந்து வந்திருக்கிறார்கள். பெண்கள் கல்வி பெறுவதிலிருந்து அவர்கள் அரசியல் உரிமை பெறும் வரை பல போராட்டங்களை கடந்து வரும் ஒரு சூழலில் அவர்களிடம் ஆடை என்பது அவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலேயே அல்லது அவர்களை ஒடுக்கும் வகையிலேயே அமைந்திருந்தது என்பதை சாதி, மதம, இனம், வர்க்கம், பாலினம் என்று எல்லாக் கூறுகளுடனும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வரலாற்று நிகழ்சிகளின் ஆதாரங்களோடும் ,பல ஆய்வுகள் கட்டுரைகள் மூலமாகவும் எளிமையான மொழியில் எடுத்துச் சொல்கிறது இந்த நூல்.
இதில் முக்கியமாக குமரி மண்ணில் நிகழ்ந்த தோள்சீலைப் போராட்டம் பற்றிய வரலாறு அன்றைய ஆடை அரசியலை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பிறப்பால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களுக்கு மேலாடை அணிய உரிமை இல்லை.மேலாடை அணிந்து கொண்ட பெண்கள் மீது வரி வசூலிக்கும் நடைமுறையும் இருந்து வந்துள்ளது. மேலும் கொடுமையாக முலை வரிச் சட்டமும் அமுலில் இருந்து வந்துள்ளது.இதை எதிர்த்த நங்கேலி- சிறுகண்டனின் போராட்டமும் இந்த நூலில் சொல்லப் பட்டிருக்கிறது.
வரலாற்றின் வழியே பயணப்படும் போது இன்று பெண்களின் உடையாக இருந்து வருகிற புடவை , ரவிக்கை, பிரா போன்ற உள்ளாடைகள் மதம், கலாச்சாரம் போன்ற ஒடுக்குமுறைகள் சார்ந்து அவளின் தனித்துவத்தை இழக்கும் ஒன்றாகவே இருப்பதை அறிய முடிகிறது.
ஒரு பெண் தான் விரும்பும் ஆடையை அணிய சமூகம் ஒரு போதும் சம்மதிப்பதில்லை. பெண்கள் தங்களது உடலுக்கு ஏற்ற வசதியான உடைகளை அணிவதில் இன்றும் நமது சமூக வெளியில் சில தயக்கங்களை காண்கிறோம். அதற்கு காரணங்கள் பல சொல்லப் பட்டாலும் காலம் பல தடைகளை உடைத்துப் போடுகிறது.
இதில் பெண்கள் ஆணாதிக்க அரசியலை எதிர்த்து தொடர்ந்து போராடிய பல அரசியல் நிகழ்வுகள் இந்த நூலில் மிக முக்கியமானதாக சொல்லப் பட்டிருக்கிறது.
பெண்களை அவர்கள் உடுத்தும்ஆடைகளை வைத்து தாழ்த்தியும், அவமானப்படுத்தியும் வந்துள்ளதை அறிய முடிகிறது. இன்றைய சமூக ஊடகங்களாக மாறியுள்ள நம் கைப்பேசியிலும் இதற்கான அச்சுறுத்தல்கள் இருப்பதை நாம் மறுக்க முடியாது. பெண்கள் எப்படி உடை அணியவேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது ? அதை பெண்களின் மீது யார் திணிப்பது? என்பது வரையில் நமது ஊடக,சமூக பங்களிப்புகள் தாராளமாகவே உள்ளன.
முதலாளித்துவத்தின் பங்கும் தனது அதிகாரத்தின் கரங்களை விரிவுபடுத்தியுள்ளது. பெண்களின் மீதான பாலியல் அச்சுறுத்தல்கள் யாவும் அவளின் ஆடையை குறி வைத்தே நடப்பதான போலியான கருத்தியல்களை மக்களிடையே உருவாகி வந்திருப்பதையும் அறிய முடிகிறது. பெண்களின் ஆடைகள் அவர்களது நடத்தைகளுடன் சம்பத்தப்பட்டதாக மாறுவதும் பேசப் படவேண்டிய ஒரு விஷயமாகவும் இருக்கிறது.
காலம் காலமாக பெண்கள் ஆடை அரசியலால் ஒடுக்கப்பட்டு வந்துள்ளதை ஒரு வரலாற்றுப் பார்வையோடும் வலி மிகுந்த உணர்வுகளோடும் வாசிக்க வேண்டியுள்ளது.
பெண்கள் தங்கள் மனப் போராட்டங்களையும், உடல் போராட்டங்களையும் தாங்கள் அணியும் ஆடைகள் வழியேதான் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.
அதை எந்த மனத் தடையுமின்றி வரலாற்றின் பார்வையோடு அறிவியலின் பார்வையையும் முன் வைத்தே எழுதியிருக்கிறார் நூலாசிரியர் சிந்துஜா. மணிப்பூர் பெண்களின் நிர்வாணப் போராட்டம் வரை பல காத்திரமான நிகழ்வுகளை முன் வைத்துப் பேசும்போது பெண்களை ஒடுக்கும் எதுவும் நம் சமூகத்தில் கேள்விகளாக எழும்பி நமது சமூகத்தை மாற்றி அமைக்க கூடியதாகவே வரலாறுகள் கற்றுக் கொடுக்கின்றன.
இன்றைய பெண்கள் நவநாகரீகமாக உடுத்திக்கொண்டுள்ள ஆடையின் பின்னே நமது பண்டைய நாகரீகங்களோடு படிப்படியாக உலக நாகரீகம் கொண்டு வந்து சேர்த்த பெண்களின் ஆடை வரலாற்றையும் அரசியலையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த நூல் உணர்த்துகிறது.
நூலை வாசிப்போம்; விவாதிப்போம்
- மஞ்சுளா
நூல் : பெண்களின் ஆடை: வரலாறும் அரசியலும்
வகை : கட்டுரைகள் | பெண்ணியம்
ஆசிரியர் : சிந்துஜா
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு: டிசம்பர் 2021 (முதல் பதிப்பு)
பக்கங்கள் : -
விலை: ₹ 100
கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.
“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி)
வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.