Exclusiveபுனைவு

சக்தி ஜோதியின் “பறவை தினங்களை பரிசளிப்பவள்” – ஒரு பார்வை


கவிதை என்பது எனக்கு இன்னொரு நாளாக உள்ளே இருந்து இயங்குகிறது என்று நம்புவதாக தன்னுடைய உரையினில் சொல்லி இந்த கவிதைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார் சக்திஜோதி. தன்னை ஒப்புக் கொடுக்கிறவளாக எப்பொழுதுமே இருக்கிறேன். அந்த ஒப்புக்கொடுத்தலின் கணங்களையே விதையாக்கி இருக்கிறேன் என்பதனை நாம் கவிதைகளை வாசிக்கும்போது உணர இருக்கிறது. ஆரம்ப கால கவிதை மனம் இதுவரையில் அப்படியே தொடர்ந்து இயங்குவது எதனால் என சிந்தித்துப் பார்ப்பதுண்டு என்று அவர் கூறியிருப்பதில் நமக்கும் விந்தை தொற்றி விடுகிறது. ஆனால் அந்த விந்தைக்கான விடைகளே இந்தக் கவிதைத் தொகுப்பின் கவிதைகள்.

“வெறுமை வாதை
ஒரு சேர உணர்த்தும் காதல்போல இருக்கிறது என்பதால்
இரவை வணங்குகிறேன்”

என்று நிறைவு செய்திருப்பார் துவக்கக் கவிதையில். உண்மையில் அதை உணர்ந்தவர்களாலேயே உணர இயலும். வெறுமையின் வாதை என்பது அடக்க இயலா ஒரு கடும் துயரம்.

“அதிகாலையைச் சொல்லும் வெள்ளிமீன் முளைக்கக் கண்டாள்

.
.
நீர் குடத்துடன் விரைந்தாள் தண்ணீரைக் குலுதாளியில் ஊற்றுகையில் அவளின் அன்றாடம் துவங்கிற்று”

என்பது ஒரு கவிதை. நாம் வாழ்ந்த கிராமப்புற வாழ்வினை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி இப்படியெல்லாம் இருந்திருக்கிறோம் என்பதனை இன்றைய உலகத்திற்குக் கடத்துகிறார். நாம் எத்தனை வசதியாக இன்றைய வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதுவும், அதிகாலை விண்மீன் விடியலை கூட நாம் கண்டிருப்போமா எனத் தெரியாது என்பதனையும் பதிவு செய்திருக்கிறது இந்த கவிதை.

”கிழக்கு இன்னும் சிவந்திருக்கவில்லை
கருக்கல்லேயே கிளம்பினால்தான் முந்தின நாள்
ஊறல் போட்ட தென்னமட்டை முழுவதையும்
பின்னலிட்டு
கிடுகு ஆக்க முடியும் என்பதைக் கணக்கிடுகிற அவள்
தெருவில் இறங்கியவுடன் குளிர்காற்று காதுகளுக்குள் ஊசியேற்றியது”

அந்தத் தென்னந்தோப்பினூடே நடந்து சென்று அவர் கூறின தென்னஞ்சோகை வாசத்தினை சுமந்து கொண்டு அவர்களுடைய வாழ்வியலினுடைய வலியினை இந்த கவிதை மூலம் நாம் உணர இயலும். வெறும் கிடுகு ஆக்கி என்ன கிடைத்து விடும்? அவர்கள் வாழ்வாதாரத்தினைச் சொல்லும் வலி மிகுந்த வரிகள் இவை.

“முதல் வார நாட்களுக்கும்
வரும் வார நாட்களுக்கும் இணைப்பு தினமான இன்று துவைப்பதும் சுத்தம் செய்வதும் சமைப்பதும் ஒழுங்கு செய்வதும் என
நாள் முழுவதும் இயங்குகிறவள் அவள்.
ஞாயிற்றுக் கிழமைக்கு என்றே பிரத்யேகக் கனவுகள் வாய்க்கப்பட்ட தன் மகள்
உறங்குவதைக் காண்கிறாள். ஞாயிற்றுக் கிழமைக்கு என பிரத்யேக உறக்கம் வாய்க்கப்பட்ட தன் கணவன்
உறங்குவதைப் பார்க்கிறாள் ஞாயிற்றுக் கிழமைக்கு என பிரத்யேக வேலைகள் இருப்பதை நினைக்கையிலேயே
அவளின் அதிகாலை துவங்குகிறது”.

தனக்கு வாய்க்காத உறக்கம் தன் மகளுக்கு கிடைக்கிறதென்று ஆனந்தம் கொள்கிறாளா இல்லை தன் கணவன் உறங்குவதை கண் குளிரக் காண்கிறாளா அந்தக் கணவனுக்கு உறக்கம் கிட்டியிருக்கிறதேயென்று பொறாமை கொள்கிறாளா? அனைத்து கேள்விகளுக்கும் விடை நம் கையில் என்று ஒரு ஞாயிற்றுக்கிழமையை நமக்கு அறிமுகம் செய்கிறார் விடுமுறை தினங்கள் நமக்கு மட்டுமே. பெண்களுக்கு விடுமுறை தினமென்பது எப்போது?

“வளர் இளம்பருவமாக கனகாம்பரமும் மரிக்கொழுந்தும் மல்லிகையும்
என மூன்று வண்ணங்களையே சூடியிருந்தாள்
பின்னாட்களில்
அவர் எழுதும் ஓவியம் மல்லிகை மட்டுமே”

இது நம் தேசியக் கொடியினுடைய வண்ணத்தை நமக்கு நினைவூட்டி நிறைவு செய்திருக்கும் மல்லிகையில் வேறு ஏதோ ஒன்றை அவர் சுட்டியிருப்பதை நாம் காணலாம்.

“பெறுதலும் தருதலும் ஒருசேர நிகழ்த்தும் அவள்
ஒன்றைப் பெறுவதற்காக
ஒன்றைத் தருவதற்காக
மேலும் ஒன்றுமற்றுப் போவதற்காக
காற்றின் சுழற்சியில்
தன்னை ஒப்புக் கொடுத்தாள்.”

இதைவிட வேறெப்படி பெண்களுடைய தியாகத்தை கவிதை வரிகளில் வடித்து விட இயலும்?. கீதையின் சாரம்சம் மட்டுமல்ல வாழ்வியலின் அர்த்தத்தையும் பறை சாற்றுகின்றன இந்த வரிகள்.

“தன் சிறிய விழிகளின் ஆழத்தில் நினைவிலிருக்கும் கடந்த காலத்திற்கும் அப்பால்
தன்னை இருத்திக் கொள்கிறாள்.” இந்த வரிகள் பெண்களுடைய விழிகளின் ஆழத்தில் அமர்ந்திருக்கின்ற அல்லது புதைந்திருக்கின்ற எண்ணங்களை எல்லாம் நாம் உணராமல் எவ்வாறு பொசுக்கி கொண்டிருக்கின்றோம் என்பதனை வலியோடு நமக்கு உணர்த்துகிறது

“ஆழக் கடல்நடுவே
இதழ் மூடிய சிப்பியென நெடுங்காலம் தனித்திருக்கும் காதலின் காத்திருப்பில்
அவனை வந்தடையும் கடின வழிகளையும்
இரவுகளின் தனிமையில் நினைத்திருப்பாள்
இதோ
அவளின் அதிகாலையில் நிலமெல்லாம் நீராய் பரவும்
கருநீல வான இடி மழையை
இதழ் திறந்து ஏற்கிறாள்
ஆவியாகி
மீண்டும் அடைய விடாமல்
ஒற்றைத் துளியை பத்திரப்படுத்துகிறாள்
அவன் பெயர் சொல்லி.”

ஆழ்கடல் நடுவினில் நந்நீரினை உள்வாங்கி முத்தை விளைவிக்கும் சிற்பியினுடைய வாழ்வினை காதலின் மனிதர்களிடம் பொருத்தி நிலமெல்லாம் நீராய் பரவினாலும் கரு நீல வானில் இடி மழை பெய்தாலும் அது ஆவியாகி மீண்டும் மழையாகிவிடாமல் அந்த ஒற்றைத் துளியை தனக்குள் பத்திரப்படுத்துகிறாள் என்பதில் இந்தக் கவிதையின் மூலம்.நம்மை வேறு ஒரு உலகிற்கு அழைத்துச் செல்கிறார். இந்தத் தொகுப்பில் நான் மீண்டும் மீண்டும் வாசித்து வாசித்து வரிகளால் வியந்த கவிதை இது.

“அவளுள் உயிர்த்து
அவனது அதிகாலையில்
வடக்கே ஒளிரத் துவங்குகிறாள் துருவ மீனாக”

இந்த நிறைவு வரிகளில் வடக்கு நோக்கி அமர்ந்து நமக்கு அருள் புரிந்து காக்கும் கொற்றவை தெய்வத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறார்.

“என்றாலும் அறிந்திருக்கிறோம் காதலின் முன் மண்டியிடும் மனதையே அது ஆட்கொள்ளும். காதல் அப்படித் தான்
தேர்வு செய்கிறது நம்மை
நாமறியாமல் பூக்கச் செய்கிறது”

காதல் அரும்பும், காதலென பூக்கும் காதல் என உணர்த்தும் காதல் வரிகள் இவை.

“மகப்பேறு மருத்துவச்சி ஒருத்தி ஒருபோதும்
இரவினில் முழுமையாக உறங்குவதில்லை. வாழ்நாளெல்லாம்
பிள்ளைப் பிறப்பு காண்பதற்காக தன்னை அர்ப்பணித்தவள்.
.
இரவெல்லாம் விழித்திருக்க குழந்தை குரல் கேட்கையில் இவளுள்ளும் விடிந்துவிடும்.”

மகப்பேறு வாய்க்க மருத்துவமனையை நாடிச் செல்லும் இந்தக் காலத்தில் அந்த மருத்துவச்சியினுடைய தூங்கா இரவுகளையும் அந்த குழந்தை குரல் அவரைத் துயகலெழுப்பவதையும் வார்த்தைகளினால் நமக்குக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

தினக்குறிப்பு போல இரண்டு மாதங்களுக்குள் எழுதப்பட்ட கவிதைகள் இவை என்று அவர் சொல்லியிருப்பது தமிழ் அவர்களிடம் தவழ்ந்து விளையாடுவதை நமக்குக் காட்டுகிறது. எத்தனை எத்தனை புதிய சொற்கள், எத்தனை எத்தனை புதிய பரிமாணங்கள், எத்தனை எத்தனை காட்சிமைப்படுத்துதல் என பரந்து விரிந்து ஓர் பூரணத்தைத் தருகின்ற கவிதைப் புத்தகமாக இது மிளிர்கிறது. பறவை தினங்களை நமக்கு பரிசளித்து இருக்கிறார் சக்தி ஜோதி.


ப. தாணப்பன்

திருநெல்வேலி

 

நூல் தகவல்:

நூல் : பறவை தினங்களை பரிசளிப்பவள்

வகை :  கவிதைகள்

ஆசிரியர் : சக்தி ஜோதி

வெளியீடு : வம்சி புக்ஸ்

வெளியான ஆண்டு:  மார்ச் 2014

பக்கங்கள் : 88

விலை:  ₹  90

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *