தமிழிலக்கியத்தில் மிக முக்கியமான பங்கு அளிக்கும்  பதிப்பகங்களின் சேவைகளும் செயல்பாடுகளையும் அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுமெனும் நோக்கத்தில்  ‘விமர்சனம்’ – இணையதளம் சார்பாக பதிப்பாளர்களுடன் உரையாடும் நேர்காணல்களை வெளியிடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.  கடல் பதிப்பகம் – விஜய் மகேந்திரன் உடனான முதல் நேர்காணலுக்கு  பிறகு இரண்டாவது நேர்காணலாக  நற்றிணை பதிப்பகத்தின் உரிமையாளரும் எழுத்தாளருமான யுகன் உடனான நேர்காணல் இது.  300-க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்தும், தமிழ் இலக்கியத்தின் மிக பிரபலமான படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிட்டதோடு ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி உள்ளிட்ட அயல் தேசத்து இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளை தமிழில் வெளியிட்டும்  வாசகர்களின் கவனத்தையும் நன்மதிப்பையும்  பெற்றிருக்கிறது நற்றிணை பதிப்பகம். 

இனி நேர்காணல்,


வணக்கம்! விமர்சனம் இணையதளத்தின் “நேர்காணல்” பகுதிக்காக உங்களுடன் உரையாடுவதில் மகிழ்கிறோம்.

 1. நற்றிணை பதிப்பகம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. வாழ்த்துகள்! பதிப்பகம் யாரால் தொடங்கப்பட்டது? பதிப்பகத் தொழிலில் ஈடுபட வேண்டுமென ஏன் தோன்றியது?

மிக்க நன்றி தோழர் சந்தோஷ். எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக பிரபஞ்சன் எடுத்த நேர்காணல், நண்பர் பிரசாத் எடுத்த  நேர்காணல், பொதிகை தொலைக்காட்சி நேரலையில்  வெளிவந்த நண்பர் நெல்லை ஜெயந்தா எடுத்த நேர்காணல்   எனச் சில நேர்காணல்கள் கொடுத்துள்ளேன். பதிப்பாளராக இதுதான் என் முதல் நேர்காணல். மிகவும் மகிழ்ச்சி.

நான் 2006 இல் “சினிமா பாரடைசோ” என்னும் இத்தாலியத் திரைப்படத்தின் திரைக்கதையைத் தமிழில் மொழிபெயர்த்திருந்தேன். அந்நூலை வெளியிட காலச்சுவடு பதிப்பகத்திடம் கொடுத்தேன். அவர்களால் அச்சமயத்தில் வெளியிட முடியாத சூழ்நிலையால் நான் “நற்றிணை பதிப்பகம்” தொடங்கி அந்நூலைப் பதிப்பித்தேன். அந்நூலின் தட்டச்சு வடிவமைப்பு அனைத்தும் ‘சுவடி’ (காலச்சுவடு) தான் செய்து கொடுத்தது. அந்நூலை மிகச் சிறப்பாக ராமநாதன் வடிவமைத்திருந்தார். அந்த நூலின் விற்பனை உரிமை கூட காலச்சுவடுதான்.  அந்தப் புத்தகம் நன்றாக விற்றது. ‘‘சினிமா பாரடைசோ” யுகன் என்ற அடைமொழி கூட அப்போது உண்டானது. உண்மையில் அது மிகவும் மகிழ்ச்சியான காலம்.

 1. சங்க இலக்கிய நூலான நற்றிணை எனும் பெயரைப் பதிப்பகத்திற்குச் சூட்டி இருக்கிறீர்கள். சிறப்புக் காரணம் ஏதுமிருக்கிறதா?

பைந்தமிழ் இலக்கியங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம். குறிப்பாகச் சங்க இலக்கியம். அதிலும் குறுந்தொகை, நற்றிணை பாடல்கள் என் மனதுக்கு மிகவும் அணுக்கமானது. அப்போது என் மூத்த அண்ணனுக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்திருந்தது. அக்குழந்தைக்குப் பெயர் வைக்க இருந்தபோது நான் “நற்றிணை” என்று சொன்னேன். என் அண்ணனுக்கு அப்பெயர் பிடித்திருந்தது. பிறர் யாருக்கும் அப்பெயர் பிடிக்கவில்லை. பின்னர் அதை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். பதிப்பகம் தொடங்கிய பொழுது என் அண்ணன் மகள் பெயரையே பதிப்பகத்திற்கு வைத்துவிட்டேன்.

 

 1. பதிப்பகத்தின் இலச்சினை (logo) தனித்த அடையாளமாக இருக்கிறது! இது குறித்து

உலக அளவில் புத்தரால் தாக்கம் பெறாதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்ன? குறிப்பாகக் கலைத் தொழிலில். அடிப்படையில் நான் அமைதி விரும்பி. யாருக்கும் தெரியாமல் ஒரு வாழ்க்கையை  வாழ்ந்துவிட்டு, ஒருநாள் வந்த சுவடு தெரியாமல் எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்திற்குத் திரும்பிவிட வேண்டும் என்பதே என் எண்ணம். பிறவாமையைப் போதித்த புத்தரின்பால் எனக்குப் பக்தி ஏற்பட்டதில் என்ன வியப்பு. புத்தரைப் போன்ற மெய்ஞானியை உலகம் இதுவரை கண்டதில்லை. சமீபத்தில் கூட நண்பர் காளிப்ரஸாத் மொழிபெயர்ப்பில் மராத்திய எழுத்தாளரான விலாஸ் சாரங்கின் “The Dhamma Man”  என்ற நூலின் மொழிபெயர்ப்பை “தம்மம் தந்தவன்” என்ற பெயரில் கொண்டு வந்துள்ளோம். மொழிபெயர்ப்பாளர் “தம்மன்” என்று பெயர் வைத்திருந்தார். நான்  “தம்மம் தந்தவன்” என்று மாற்றி வைத்தேன்.

 

 1. ஒரு பதிப்பகம் என்பது புத்தகங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் இலக்கியத்திற்கான முதன்மையான பங்களிப்புகளாக என்னவாக இருக்க வேண்டும்?

ஒரு பதிப்பகத்தின் முதன்மையான கடமை என்று நான் நினைப்பது, சிறந்த புத்தகங்களைத் தேடிக் கண்டடைந்து பிழைகள் இல்லாமல் அழகுறப் பதிப்பிப்பதுதான். இரண்டாவது முடிந்த அளவு விலையைக் குறைவாக வைக்க வேண்டும். மூன்றாவது பதிப்பித்த நூல்களுக்குச் சரியான கணக்கு வைத்து எழுத்தாளர்களுக்குக் காப்புரிமை தொகை வழங்கிவிட வேண்டும். இதைத் தவிர பதிப்பகத்தின் கடமை என்று எதுவும் இல்லை. எழுதுவது மட்டும் எழுத்தாளருடைய வேலை என்பது போல பதிப்பிப்பது மட்டும்தான் பதிப்பாளரின் வேலை. புத்தகம் விற்பனை எல்லாம் விற்பனையாளர்களுடைய வேலை. புத்தக விற்பனை பற்றி நான் ஒருபோதும் சிந்திப்பதில்லை.

 

 1. நற்றிணை பதிப்பகம் ஏதேனும் தத்துவம், அரசியல், ஆன்மீகம் சார்ந்த கொள்கை அல்லது சித்தாந்தங்களைப் பின்பற்றுகிறதா? அப்படியேதும் பின்பற்ற வேண்டிய அவசியம் ஒரு பதிப்பகத்திற்கு உண்டா?

எங்களுடைய அரசியல் ஒன்றுதான். சிறந்த புத்தகங்களைப் பதிப்பிப்பது மட்டும்தான். புத்தகங்கள் இலக்கியம், அரசியல், சினிமா, வரலாறு, தத்துவம் என எந்த வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். தரம் ஒன்றே எங்களது நோக்கம். அவ்வளவுதான் பதிப்பகம் பற்றி என்னால் சொல்ல முடியும். பதிப்பகம் பின்பற்ற வேண்டிய கொள்கைகள் பற்றிச் சொல்லும் அளவுக்கு எனக்குத் தகுதி இல்லை. ஆனால் புதிதாக வருபவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசையுண்டு; முன்னோடிகளைப் பாருங்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான்.

 

 1. பதிப்பகம் தொடங்கப்பட்ட போது இருந்த இலக்கிலிருந்து இப்போது எந்த அளவுக்கு அடைந்து இருக்கிறீர்கள்? பதினைந்து வருடப் பயணத்தில் சாதனைகளாகக் கருதுவது என்ன? சோதனைகளாகச் சந்தித்த சவால்கள் என்ன என்ன?

பதிப்பகம் தொடங்கும் போது எனக்கு எந்த இலக்கும் இல்லை. நான் தமிழ்ப் பதிப்புலகைக் காப்பாற்ற பதிப்பகம் தொடங்கவில்லை. என்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் தொடங்கினேன்.

இந்தப் பதினைந்து வருட காலத்தில் எத்தனையோ மகிழ்ச்சிகள், துயரங்கள், துரோகங்கள், ஆனால் எதையும் வெளியில் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. நாம் விரும்பியதெல்லாம் நடக்க உலகம் என்பது நம் வீடு அல்ல. எதையும் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டுமென்று என் தந்தை அடிக்கடிச் சொல்லுவார். அதையே நான் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளேன்.

பதிப்புலகில் இந்த 15 வருடங்களை நினைத்துப் பார்க்கும் போது நான் எழுத்தாளர்களுடனும் சக பதிப்பாளர்களுடனும் மிகக் குறைவாகவே முரண்பட்டுள்ளேன் என்பதும் சில எழுத்தாளர்களுக்கு என்னால் இயன்ற உதவி செய்திருக்கிறேன் என்பதும் நானே மகிழ்ச்சி அடைந்துகொள்வதற்கான காரணம். முக்கியமாகப் புதிய பதிப்பாளர் வரும்போது அவரைக் கூப்பிட்டு  பதிப்பகம்   நடத்தாதே என்றும் இன்னாருடைய புத்தகத்தை விற்காதே என்று விற்பனையாளர்களிடமும் நான் என்றும் கூறியதில்லை இதுவே எனக்குப் பெருமிதம் தரும் விசயம்தான்.

 

 1. உங்கள் பதிப்பகம் மூலமாக அறிமுகமான படைப்பாளிகள் யார் யார் எனக் கூற முடியுமா?

நிறைய பேரை அறிமுகம் செய்ததில்லை என்பது நற்றிணை பதிப்பகத்திற்குக் குறைதான். வெங்கட சுப்புராய நாயகருக்கு, நற்றிணை பதிப்பித்த “கலகம் செய்யும் இடது கை” தான் முதல் நூல், காளி ப்ரஸாத்திற்கு “தம்மம் தந்தவன்”தான் முதல் நூல், சீனிவாசன் சாருக்கு “கூண்டுக்குள் பெண்கள்” தான்  முதல் நூல். கூண்டுக்குள் பெண்கள் மொழிபெயர்ப்பு தமிழ் மொழிபெயர்ப்புகளில் சாதனை என்றே சொல்லத் துணிவேன்.

கூண்டுக்குள் பெண்கள் நூலுக்காக ஒரு மகளிர் தினத்தில் நண்பர் அஜயன் பாலா நடத்திய கூட்டத்தில், தோழர் தமயந்தி அவர்கள், கூண்டுக்குள் பெண்கள் நூல் பதிப்பைப் பற்றி, பெருமையுடன் பேசியது இப்போது நினைவுக்கு வருகிறது.

 

 1. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், ஜெயமோகன், .முத்துலிங்கம் உள்ளிட்டவர்கள் எழுதிய நூல்கள் பெரும்பாலும் நற்றிணை பதிப்பகத்தில் வெளியாகி உள்ளன. இவர்களுடனான நற்றிணை பதிப்பகத்தின் இலக்கியத் தொடர்பு எத்தகைய முக்கியத்துவமானது என்பதை வாசகர்களுக்குக் கூறுங்களேன்.

நான் அடிப்படையில் அனைவரிடமும் பிரியம் கொண்டவன். அது நான் வளர்த்துக்கொண்ட குணம் அல்ல. அது என் இயல்பு. நான் பதிப்பித்த எழுத்தாளர்கள்  ஒவ்வொருவரிடமும் பல நூறு மணி நேரங்கள் பேசியிருப்பேன்.

குறிப்பாக பிரபஞ்சன், சி.மோகன், ஜெயமோகன், அ.முத்துலிங்கம், எம்.ஏ.சுசீலா, அழகிய பெரியவன் இவர்களுடன் ஏறக்குறைய தினமும் பேசி இருக்கிறேன்.

ஆனாலும் பிரபஞ்சனும், சி.மோகனும், எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இருவருடன் அமர்ந்து புகைத்திருக்கிறேன், குடித்திருக்கிறேன். பிரபஞ்சனைப் பெரியப்பா என்றும், சி.மோகனைச் சித்தப்பா என்றும் அழைக்கவும் நினைத்திருந்து இருக்கிறேன். இதை எழுதும் இந்தத் தருணத்திலும் மனம் பிரபஞ்சனின் மறைவை நினைத்து துக்கம் கொள்கிறது. அதே போன்று மோகன் சாரைப் போய்ப் பார்ப்பதில்லையே என்ற குற்ற உணர்வும் எழுகிறது.

இந்த இடத்தில் ஜெயமோகன் சார் பற்றிச் சொல்லியாக வேண்டும். தீவிரமாகப் பதிப்பகம் நடத்தும் நிலைக்கு வந்தபின் கேட்க கேட்க மறுக்காமல் புத்தகங்கள் கொடுத்துக்கொண்டே இருந்தார். அவருக்கு நன்றி சொல்வது என் பெரும் கடமையாகும்.

அடுத்து அ. முத்துலிங்கம் அவரை நான் பார்த்ததில்லை.  அவரிடம் தொடர்பு என்பது மின்னஞ்சல் மற்றும் தொலைபேசித் தொடர்பு மட்டும் தான்.  ஆனாலும் ஏறக்குறைய அனைத்து நூல்களையும் எனக்குப் பதிப்பிக்கத் தந்துவிட்டார். அவர் என் மீது கொண்ட நம்பிக்கைக்கு நான் என் செய்வேன். சமீபத்தில் பதிப்பாளருக்கு நீங்கள் விருது கொடுப்பதில்லை என்று கோபித்துக்கொண்டேன். நிச்சயமாக எதாவது செய்கிறேன் என்று சொன்னார்.  அவர் அபூர்வமான எழுத்தாளர் மட்டுமல்ல.. எளிதில் பார்க்க முடியாத அபூர்வமான மனிதர்.

அதே போன்று நான் பதிப்பகம் தொடங்கியதிலிருந்து என்னுடன் பயணிக்கும் என் அன்புச் சகோதரர் அழகிய பெரியவன். இனிமையான உரையாடல் அவருடன் எப்பொழுதும் வாய்த்திருக்கிறது. பெருந்தொற்று தொடங்கிய  காலத்தில் அவருடன் தான் அதிக நேரம் பேசியிருப்பேன்.

என் அம்மாவின் பெயர் சுசீலா என்பதால் பார்த்த முதல் நாளிலிருந்தே எம்.ஏ. சுசீலா அவர்களை அம்மா என்றுதான் வாஞ்சையுடன் அழைப்பேன். அவர்தான் நற்றிணையை சமீபத்தில் தாங்கிக்கொண்டிருப்பவர்.

இன்னும் சிலரைப் பற்றி நான் குறிப்பிட்டாக வேண்டும். என் சகோதரர் ஸ்தானத்தில் இருக்கும் எழுத்தாளர் பாரதிபாலன். இவரது நூல்களைக் குறைவாகப் பதிப்பித்திருந்தாலும் எனக்கு மிகுந்த வாஞ்சைக்குரியவர். பதிப்பகம் பற்றிய பல ரகசியங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தவர். ஒரே ஒரு நூலைப் பதிப்பித்த எஸ். ராமகிருஷ்ணனும் ஒரு நூலைக் கூட பதிப்பிக்காவிட்டாலும் திலீப் குமாரும், சாரு நிவேதிதாவும் என் மிகுந்த பிரியத்துக்கு உரியவர்கள்.

 1. வாசகர்களின் வரவேற்பையும் கவனத்தையும் பெற்ற மொழிபெயர்ப்பாளர் எம்..சுசீலா அவர்கள் மொழிபெயர்த்தபியோதர் தஸ்தயெவ்ஸ்கி நூல்களை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் பல மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு படைப்புகள் மீது அதிக கவனத்தைச் செலுத்துவதற்கான பிரத்தியேக காரணங்கள் என்னவாக இருக்கிறது?

எம்.ஏ.சுசீலா அவர்களுடைய நட்பு நற்றிணைக்கு மட்டுமல்ல எனக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எம்.ஏ.சுசீலா மொழிபெயர்த்த தஸ்தயெவ்ஸ்கியின்  ‘குற்றமும் தண்டனையும்’,  ‘அசடன்’ , ’நிலவறைக் குறிப்புகள்’ ,  ‘இரட்டையர்’ போன்ற நூல்கள் உண்மையில் மகத்தான மொழிபெயர்ப்பு ஆக்கங்கள். தமிழில் இன்று உள்ள மொழிபெயர்ப்பாளர்களில் தலைசிறந்தவர் எம்.ஏ.சுசீலா என்று துணிந்து சொல்வேன். பேராசிரியர் என்ற நிலைக்கு ஏற்ப எப்பொழுதும் அன்புக்குரியவராக நடந்துகொள்பவர். அதே சமயம் மிகுந்த மன உறுதி உடையவர். அவர்களுடைய கூட்டுறவு நற்றிணைக்கு வாய்த்த பேறு.

மொழியாக்கங்களைப் பொறுத்தவரையில் நற்றிணையின் முதல் நூலே சினிமா பாரடைசோ என்னும் மொழியாக்க நூல்தான். மொழிபெயர்ப்புகள் நம் படைப்புச் சூழலுக்கு வலுவூட்டுபவை. க.நா.சு. உலக இலக்கிய அளவுக்குத் தமிழ் இலக்கியமும் வளர வேண்டுமென்ற பெருங்கனவில் நிலவளம், மதகுரு, 1984, விலங்குப் பண்ணை என்று பல நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

மொழியாக்கங்களைப் பொறுத்தவரை நற்றிணை தான் கொண்டுவரும் நூல் நம் வாழ்க்கை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அத்துடன் மொழிபெயர்ப்புகள் உலகின் வாசலை நமக்குத் திறந்துவிடுகிறது என்பதும் மொழிபெயர்ப்புகளின் மீது நாம் கொள்ளும் கவனத்திற்குக் காரணம்.

 

 1. நவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராகக் கருதப்பட்ட கோபிகிருஷ்ணனின் படைப்புகள் தமிழினி, வம்சி போன்ற பதிப்பகங்கள் சில வெளியிட்டிருந்தாலும் வாசகர்களுக்குப் பெரிதும் அறிமுகமான நூலாக இருப்பது நற்றிணை பதிப்பித்தகோபிகிருஷ்ணன் படைப்புகள்நூலாக இருக்குமெனக் கருதுகிறோம். கோபிகிருஷ்ணனின் கதைகளை நற்றிணை பதிப்பித்ததின் பின்னணியைக் கூற முடியுமா?

நற்றிணை பதிப்பகத்தின் தொடக்க கால வளர்ச்சியில் சி.மோகனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. நானும் அவரும் கோபிகிருஷ்ணன் வீட்டிற்குப் போய் அவர் துணைவியார் மற்றும் அவர் புதல்வியிடம் கோபிகிருஷ்ணன் படைப்புகளைப் பதிப்பிக்க அனுமதி வாங்கிவந்த போது மோகன் சாரிடம் “ஒரு ஆஃப் அடித்தது மாதிரி போதையா இருக்கிறது” என்றேன். அன்று மோகன் மெல்லிய சந்தன நிற ஜிப்பா அணிந்து வந்திருந்தார் என்பது கூட நினைவுக்கு வருகிறது.

சி. மோகன் கோபிகிருஷ்ணன் நூலை மிக அழகாகத் தொகுத்திருப்பார். ஒரு எழுத்தாளருடனான உறவை வாழ்நாள் முழுதும் நீடிக்கும் மந்திரம் ஏதாவது என்னிடம் இருந்தால் அந்த மந்திரத்தைப் போட்டு எழுத்தாளர்களுடன் என் உறவில் என்றும் பசுமையை ஏற்படுத்திவிடுவேன். உண்மையைச் சொல்லப் போனால் நான் மருத்துவர்களிடமும், எழுத்தாளர்களிடமும் பெரும் மதிப்பு கொண்டவன். இவர்கள் கையில் அடிவாங்கிச் செத்தால் மோட்சம் என்று நினைப்பவன்.

இந்த நேரத்தில் நற்றிணையின் பெருமைகளில் ஒன்றான ‘கோபிகிருஷ்ணன் படைப்புகளைச் சாத்தியப்படுத்திய மோகனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 1. லா..ரா., நகுலன், .நா.சு., அசோகமித்திரன், மா. அரங்கநாதன் போன்ற இலக்கிய முன்னோடிகளின் எழுத்துகளை இன்றைய காலகட்டத்தில் நற்றிணை பதிப்பகத்தின் வாயிலாகவே அநேகமாக வாசகர்கள் வாசித்திருப்பார்கள். இந்த நூல்கள் பதிப்பித்த அனுபவங்களைப் பகிர இயலுமா?

க.நா.சு. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவருடைய 16 நூல்களை வெளியிட்டுள்ளோம். அவரது அனைத்து நூல்களும் நற்றிணையில் இருக்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட கனவு. அவர் பெயரில் க.நா.சு. விருது என்று தொடங்கி இரண்டு வருடங்கள் அளித்தோம். முதல் ஆண்டு அசோகமித்திரனுக்கும், இரண்டாம் ஆண்டு பிரபஞ்சனுக்கும் அளித்தோம். அதன் பிறகு அந்த விருது தடைபட்டுவிட்டது. மீண்டும் க.நா.சு. விருது தொடங்கலாம் என்று எண்ணி இருக்கிறோம்.

மா. அரங்கநாதன் படைப்புகள் நற்றிணை பதிப்பித்த நூல்களில் தலை சிறந்தது.  அந்தப் புத்தகத்தைப் பதிப்பித்த நேரத்தில் மா. அரங்கநாதன் அவர்களைச் சந்தித்து உரையாடியது நேரத்தைப் பொன் செய்த தருணங்கள் ஆகும்..

புதுமைப்பித்தனுக்கு ஈடு சொல்ல தமிழில் ஆள் இல்லை என்பார்கள். நேற்றுக்கூட ஒரு நண்பர் அதே கருத்தைத்தான் சொன்னார். நான் அதற்கு  ‘மா. அரங்கநாதனைப் படித்திருக்கிறீர்களா?’ என்றேன்.  ‘ஓரளவு படித்திருக்கிறேன்’ என்றார்.  ‘முழுமையாகப் படியுங்கள் உங்கள் கருத்து மாறும்’ என்றேன்.

அசோகமித்திரனைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்வதுண்டு. நான் என் அண்ணன் தம்பிகளுக்குக் கூட அடிமையாக இருக்கமாட்டேன், அசோகமித்திரனுக்கு அடிமையாக இருப்பேன் என்று சொல்வது என் அணுக்கத் தோழர்களுக்கு மத்தியில் பிரபலமான வாசகம். அவர் எழுதியதில் ஒரு வரிகூட விடாமல் வாசித்திருப்பேன்.

பதிப்பிக்க சந்தர்ப்பம் வாய்க்காது என்ற போதும் சு.ரா. பற்றி இங்கு சொல்லியாக வேண்டும். அசோகமித்திரனும் சுந்தர ராமசாமியும்  என் இரண்டு கண்கள். சு.ரா.வின் எழுத்துக்களையும் அ.மி. எழுத்துகள் போன்றே ஒரு வரி விடாமல் வாசித்திருக்கிறேன். படைப்பாளியாக சு.ரா. என் மனதுக்கு நெருக்கமானவர். சு.ரா.வை நான் ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன். அசோகமித்திரனைச் சில நூறு முறையாவது பார்த்திருப்பேன். அவர் ஒருமுறை எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது என் பையனிடம் நூறு ரூபாய் கொடுத்து வாழ்த்தினார். அப்போது நான்  உங்களை 35 வயதில் தான் முதன்முறையாகப் பார்த்தேன். என் மகன் 2 வயதிலேயே உங்களைப் பார்த்துவிட்டான். அவன் அதிர்ஷ்டசாலி என்றேன். உங்கள் எழுத்துகளை அவன் வளர்ந்ததும் படிப்பான் என்றேன். அவரும் சிரித்தபடி தலையாட்டினார்.

நகுலன் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு மேதை மட்டுமல்ல… ஒரு ஞானி… அவர் புத்தகங்களின் மேல் எப்பொழுதும் எனக்குப் பெருங்காதல்தான்..

 

 1. நற்றிணை பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் எந்த எந்தப் பதிப்பகங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டீர்கள்?

என் கல்லூரிக் காலத்திலிருந்தே பதிப்பகங்களுடனும் சில பதிப்பாளர்களுடனும் எனக்குத் தொடர்பு இருந்தது. ஆனால் அப்பொழுதெல்லாம் பதிப்பகம் தொடங்கும் எண்ணம் இல்லை.  என் நினைவு தெரிந்த காலத்தில் இருந்து அம்புலிமாமாவில் தொடங்கி வாசித்து வருகிறேன். இன்று தமிழில் எழுதப்பட்ட 90 சதவிகித எழுத்துக்களையாவது (நல்ல படைப்புகள்) வாசித்திருக்கிறேன். உலக இலக்கியத்திலும் கணிசமான பகுதி வாசித்திருக்கிறேன். உலக இலக்கிய அளவில் தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், காஃப்கா, காம்யு எனக்கு மிகவும் பிரியத்துக்குரிய எழுத்தாளர்கள். பதிப்பகம் தொடங்கியதற்கான முக்கியமான காரணம் வாசிப்புதான்.

நான் பதிப்பகம் தொடங்கும் போது எந்தப் பதிப்பகத்தையும் முன்மாதிரியாகக் கொள்ளவில்லை. ஏனென்றால் நான் தொடங்கும் பதிப்பகம் எந்த அளவுக்கு வளரும், எந்த அளவுக்குச் சாதிக்கும் என்ற எண்ணம், தெளிவு எதுவும் எனக்கு அப்போது இல்லை. கடும் வெயிலில் அலைந்து வந்தவன் நிழலுக்கு மரத்தடியில் ஒதுங்குவது போலத்தான் நான் பதிப்பகம் தொடங்கியது.

ஆனாலும் நான் பதிப்பகம் தொடங்கிய சில காலத்திற்குள்ளேயே யாரை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் தெளிவு கொண்டுவிட்டேன்.

சக்தி வை. கோவிந்தனின் சக்தி காரியாலயம், லஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம், ராமகிருஷ்ணனின் க்ரியா போன்றுதான் வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

க்ரியா ராமகிருஷ்ணனுடன் உரையாடும் சந்தர்ப்பம் பலமுறை கிடைத்துள்ளது. நான் பல நூறு கேள்விகளை அவரிடம் கேட்டுள்ளேன். அவர் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் உண்மையுடன் பதிலளித்தது என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ராமகிருஷ்ணன் மிகச் சிறந்த எழுத்தாளர். அவர் பதிப்பகம் தொடங்கியதால் நாம் ஒரு மகத்தான எழுத்தாளரை இழந்துவிட்டோம் என்றே எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

இவர்களைத் தவிர, கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி ஐயாவும், நர்மதா பதிப்பகம் இராமலிங்கம் அவர்களையும் பல காரணங்களுக்காக நான் பின்பற்ற வேண்டிய முன்னோடியாக நினைத்துள்ளேன்.

 

 1. நீங்கள் பதிப்பித்த நூல்களில் மிகப் பெரும் சாதனையாகக் கருதும் நூல்கள் ஏதும் உண்டா? எனில் அது குறித்துக் கொஞ்சம் கூறுங்களேன்.

நான் பதிப்புத்துறையில் சாதனை எதுவும் செய்துவிட்டதாகக் கருதிக் கொள்ளுவது இல்லை. ஆனாலும் சில புத்தகங்கள் வந்தபோது பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

குறிப்பாக மா. அரங்கநாதன் படைப்புகள் நற்றிணையின் மிகச் சிறந்த பதிப்பு என்று சொல்வேன். அது போன்று கோபிகிருஷ்ணன் படைப்புகள், சி.மோகன் கட்டுரைகள், விஷ்ணுபுரம், அழகிய பெரியவன் கதைகள், பூமணி சிறுகதைகள், குற்றமும் தண்டனையும், அசடன், சார்வாகன் கதைகள், ஜெயமோகன் சிறுகதைகள், பார்த்தீனியம், தம்மம் தந்தவன், கூண்டுக்குள் பெண்கள், உடல்நலமின்றி அப்பல்லோ  மருத்துவமனையில் இருந்த பிரபஞ்சனுக்காக ஆறு நாளில் உருவாக்கி அளித்த ‘மகாபாரதம்’ மற்றும் ஜெயமோகனின் ‘புறப்பாடு’.

‘புறப்பாடு’ நூலைப் பொறுத்தவரை ஒரு நள்ளிரவில் ஜெயமோகன் சார் வெப்சைட்டைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, புறப்பாடு வெளியாகிவிட்டது என்று அறிவித்து விட்டிருந்தார். ஓர் எழுத்தாளனின் சொல் பொய்த்துவிடக் கூடாதென்று, உடனே முகம் கழுவிவிட்டு புரூப்பைப் படிக்க அமர்ந்துவிட்டேன். மூன்றே நாளில் அந்தப் புத்தகம் வந்துவிட்டது. அதனாலும் புறப்பாடு நூலின் மீது ஒரு தனிப் பிரியம் இருக்கும்.

‘வெண்முரசு’ நூல்களை நற்றிணைதான் தொடங்கி வைத்தது. பத்து மாதங்களில் 8 புத்தகங்கள். 4 கெட்டி அட்டை செம்பதிப்பு. 4 பேப்பர் பேக். அசுர உழைப்பு. முதற்கனல் நூலுக்கு நண்பர் கேசவமணி கனவுப் புத்தகம் என்று பாராட்டி எழுதியிருந்ததும், அ.முத்துலிங்கம் தமிழில் காணாத பதிப்புத் தரம் என்று பாராட்டியிருந்ததும் உண்மையில் மகிழ்ச்சிக்குரிய தருணங்கள்தான். அதே போன்று மழைப்பாடல் நூலைப் பெற்றுக் கொண்ட பின், அ.முத்துலிங்கம் யுகன் எல்லாப் புகழும் உங்களுக்கே என்று எழுதியிருந்தார்.  அதைப் படித்ததும் எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது.

என் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய  என் ஆசானும் மூத்த நண்பருமான ப.திருமாவேலனைப் பற்றிச் சொல்லாமல் இப்பட்டியல் நிறைவுறாது. அவர் எழுதிய ‘‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்” உண்மையில் நற்றிணையின் பதிப்பில் மைல்கல்தான். அந்த உச்சமான புத்தகத்துடன் நற்றிணையின் பதிப்புச் செயல்பாட்டை நிறுத்திவிடலாம் என்றுகூட தோன்றியதுண்டு. இது சத்தியமான வார்த்தை. எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கிவிடலாம். முடிப்பது சிகரமாக இருக்கவேண்டும். இது போன்று இன்னொரு நூல் நற்றிணைக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின்  அவர்களைச்  சந்தித்து இந்நூலைக் கொடுக்க திருமா சார் என்னை அழைத்துச் சென்றார். முதலமைச்சர் அவர்கள் அந்த நூலை வெகுவாகப் பாராட்டியதுடன், எத்தனை காலமாக பதிப்பகம் நடத்துகிறீர்கள், எத்தனை நூல்கள் வெளியிட்டு இருக்கிறீர்கள் என்று விசாரித்தது உண்மையில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

 1. உங்கள் பதிப்பகத்தில் வேறெங்கும் அறிமுகமாக இயலாத புதிய படைப்பாளிகளுக்கு எத்தகைய முன்னுரிமையை அளிப்பீர்கள்? பதிப்பகத்தில் நூல் வெளியாக வேண்டுமெனில் ஒரு படைப்பு எத்தகைய தரத்தை எட்டியிருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

படைப்பின் தரம் ஒன்றுதான் அளவுகோல். சிபாரிசு என்ற ஒன்றே தேவையில்லை. எங்கள் பதிப்பக மின் அஞ்சலுக்கு உங்கள் படைப்புகளை அனுப்பினால், உடனடியாகப் படித்துப் பார்த்துப் பிற விவரங்களைச் சொல்லிவிடுவோம். அதனால் இளம் படைப்பாளிகள் எங்கள் பதிப்பகத்திற்குப் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம் சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி புத்தகம் கொண்டு வந்து உடனே பதிப்பிக்கச் சொல்லக்கூடாது. எப்படிக் கேட்டவுடன் ஒரு எழுத்தாளரால் எழுதித் தர முடியாதோ அது போன்றுதான் கொடுத்தவுடன் பதிப்பாளரால் பதிப்பிக்க முடியாது. எழுதியதற்கும் அதைச் சிறந்த பதிப்பு கொண்ட நூலாக மாற்றுவதற்கும் இடையில்  பல நூறு நுட்பங்கள் இருக்கிறது. அதனால் பொறுமையுடன் சில காலம் காத்திருக்க வேண்டும். சாவகாசம் தான் பதிப்பின் உயிரம்சம்.

இன்னொன்றும் நான் சொல்ல வேண்டும் நாங்கள் ஒருமுறை ப. சிங்காரம் நாவல் போட்டி ஒன்றை நடத்தினோம் அதில் முதல் பரிசு முன் அறிமுகம் அற்ற டென்மார்க்கைச் சேர்ந்த ஜீவகுமாரனின் கடவுச் சீட்டு நாவலுக்குத்தான் தந்தோம். படைப்புதான் பிரதானம். நற்றிணை அனைவருக்குமான பதிப்பகம். ஒரு தனிப்பட்ட குழுவிற்கு ஆனதல்ல.

 

 1. படைப்புகளைத் தேர்வு செய்யும், பிழைதிருத்தம் செய்யும் நடைமுறைகளுக்கு என பிரத்தியேக குழுக்கள் ஏதும் நற்றிணை பதிப்பகத்தில் உண்டா?

நற்றிணை தனது முக்கியமான செயல்பாடாகக் கருதுவது சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுப்பதைத் தான். குறைந்தபட்சம் 5 முறையாவது பிழைதிருத்தம் செய்வோம். லே அவுட் சார்ந்தும் அதிக அக்கறை எடுத்துக்கொள்வோம். பதிப்பாளராக நான் ஓரிரு முறை வாசிக்காமல் எந்தப் புத்தகமும் இதுவரை வெளிவந்ததில்லை. எங்கள் பதிப்புக் குழுவில் 10 பேர் மெய்ப்புப் பார்க்க இருந்தாலும் பதிப்பாளராக நானும் பார்ப்பதை ஒரு கடமையாகவே கருதுகிறேன். நான் பதிப்பிக்கும் புத்தகங்களை நானே படிக்காத போது யார் படிக்கப் போகிறார்கள். பதிப்பாளர் படிக்காமல் மண்டபத்தில் யாரோ தயார் செய்து தரும் புத்தகத்தைப் பதிப்பிப்பது யாரோ எழுதியதைத் தன் பெயரில் போட்டுக்கொள்ளும் எழுத்தாளரின் செயலுக்கு  இணையானதுதான்.  நம்மிடம் பண வசதி இருந்து நூறு ஆயாக்களைப் போட்டு  குழந்தையைப் பார்க்கச் சொன்னாலும் .. அந்த ஆயாக்கள் அக் குழந்தையைக் கொஞ்சினாலும்.. பெற்ற தாயின் முத்தத்திற்கு அது ஈடாகுமா.

 

 1. நற்றிணை வெளியிடும் நூல்களில் அட்டைப்பட ஓவியங்கள் மிகவும் கவனத்திற்குரியவை, ரசனைக்குரியவையும் கூட. உங்கள் பதிப்பகத்தின் ஓவியர்கள் மற்றும் அட்டைப்பட வடிவமைப்பாளர்கள் குறித்து சில வரிகள்…!

அட்டைப் படங்களைப் பொறுத்தவரை ஓவியத்தை வைப்பதையே முதன்மையான தேர்வாகக் கொள்வோம். அந்த வகையில் பிக்காசோ, டாலி, ஜான் மிரோ, பால்கின் போன்ற பல ஓவியர்களின் ஓவியங்களைப் பயன்படுத்தி இருக்கிறோம். தமிழில் சி. டக்ளஸ், மணிவண்ணன் என் மனம் கவர்ந்த ஓவியர்கள். மணிவண்ணன் என் நெருங்கிய நண்பர். நாங்கள் ஒன்றாகத் தாய்லாந்து சென்ற போது  ஓவியங்கள் பற்றி ஓவியர்களின் கலை மனதைப் பற்றி சாவகாசமாகப் அமர்ந்து மணிக்கணக்காகப் பேசியது மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள். விஷ்ணுபுரம் நாவலுக்கு மணிவண்ணன் வரைந்து வடிவமைத்த அட்டை ஓவியம்தான் தமிழின் தலைசிறந்த புத்தக ரேப்பர் என்பேன்.

 1. தரமான நூல்கள், சிறந்த படைப்பாளிகளின் படைப்புகள் என நிறைய சிறந்த அம்சங்கள் இருந்தாலும் விற்பனையும் லாபமும்தான் பதிப்பகம் தொடர்ந்து இயங்க ஊட்டச்சத்து, வருமானம் திருப்திகரமாக இருக்கிறதா?

பதிப்பகத்தின் வருவாய் இன்றைய காலகட்டத்தில் திருப்தியாக இல்லை என்பது உண்மைதான். முன்பு இருந்தது போல மீண்டும் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

 

 1. படைப்பாளிகளே சொந்தமாகப் பதிப்பகங்கள் ஆரம்பித்து தங்கள் நூல்களை வெளியிட்டுக் கொள்கிறார்கள். இத்தகைய போக்கு பதிப்பகங்கள் மீதான படைப்பாளிகளின் நம்பிக்கை இழப்பாகக் கருதலாமா?

எழுத்தாளர்கள் சொந்தமாகப் பதிப்பகம் நடத்துவது என்பது மிகவும் வரவேற்கத்தக்க விசயம்தான். இதை அவர்கள் பதிப்பகத்தின் மீது கொண்ட நம்பிக்கை இழப்பாகக் கொள்ள முடியாது. ‘தேசாந்திரி’ தொடங்கியபோது எஸ்.ராவுக்கு போன் செய்து வாழ்த்துகள் சொன்னேன். எனக்கு எழுத்தாளர்கள் தாங்களே சொந்தமாகப் பதிப்பகம் நடத்துவது தொடர்பாக எந்தப் புகாரும் இல்லை.

 

 1. சட்ட விரோதமாக உரிமை பெறாமல் வெளியிடும் PDF பிரதிகளால் பதிப்பகங்களும் படைப்பாளிகளும் பாதிக்கப்படுகிறார்கள். சட்ட விரோதமானது எனத் தெரிந்தும் PDF வடிவத்தில் வெளியாகும் நூல்களை இலவசமாக வாசிப்போர் குறித்து உங்கள் கருத்து என்ன?

PDF இல் வாசிப்பது பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது. என் கேள்வி உண்மையில் வாசிக்கிறார்களா… வெறுமனே கணினியில் சேகரித்து வைக்கிறார்களா என்பதுதான். ஒருவேளை PDFஇல் வாசித்தாலும் வாசிக்கட்டுமே… அப்படியாவது வாசிக்கட்டுமே என்பதுதான் என் எண்ணம்.

 

 1. ஒரு பதிப்பாளராகச் சொல்லுங்கள், வாசிப்பு பழக்கம் இன்றைய தலைமுறையினரிடம் எந்த அளவுக்கு இருக்கிறது? ஆர்வம் மிகுந்து இருக்கிறதா? ஆர்வமின்மையாக இருக்கிறதா?

வாசிப்புப் பழக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்றால் எப்போதும் போலத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் எப்போது இலக்கியங்களைக் கோடிக் கணக்கான  பேர் வாசித்தார்கள் இன்று குறைந்து போவதற்கு. பொதுவாகப் பள்ளி, கல்லூரியுடன் புத்தகத்துக்கு விடை கொடுப்பதுதான் தமிழர்களின் வழக்கம்.

 

 1. டிஜிட்டலைஸ் ஆகிக்கொண்டிருக்கும் நவீன காலத்தில் அமேசான் கிண்டில் பதிப்பு போன்ற மின்னூல்களுக்கு வாசகர்களிடையே பெருத்த வரவேற்பு இருக்கவே செய்கிறது. எதிர்காலத்தில் அச்சுப் பிரதி நூல்கள் வெளியாவது மிகுதியாகக் குறைய வாய்ப்பு உள்ளதாகக் கருதலாமா?

என்னைப் பொறுத்தவரை அச்சு நூல்கள் எப்பொழுதும் போல் இருக்கத்தான் செய்யும் என்றுதான் நினைக்கிறேன். அப்படியே இல்லாமல் போனாலும் ஒன்றும் நட்டமில்லை. ஏதாவது லாபகரமாகத் தொழிலைப் பார்க்கப் போய்விடலாம். நான் ஒரு பார்மசிஸ்ட் என்பதால் மெடிக்கல் ஷாப் தொடங்கிக் கொள்ளலாம். என் நோக்கம் அச்சுப் புத்தகங்கள் மட்டும்தான்… கிண்டில், மின் புத்தகம் பற்றி எனக்கு அக்கறை இல்லை. பதிப்பகம் என்பது என் தவப் பயன் அல்லது விதிப் பயன்.

 

 1. ஒரு சில பதிப்பகங்கள் ஆதிக்கம் செலுத்துவது பற்றி?

ஆதிக்கம் செலுத்துவது என்பது மனித குலம் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வருகிறது. கடலில் உள்ள சிறு மீன்கள் கூடி திமிங்கலத்தைப் பற்றிப் புகார் கூறினால் யார் விசாரித்து நியாயம் சொல்லப் போகிறார்கள்.

நாம் இது போன்று பிற பதிப்பகங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது என்று புகார் கூறுவதை நிறுத்த வேண்டும். அதற்கு எதிராக நாம்தான் போராட வேண்டும். பதிப்புத் தொழிலே பலவீனமான தொழில் என்னும் போது ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் பலவீனம் இருக்கத்தான் செய்யும்.  அதை நாம் பயன்படுத்திக் கொண்டால், தொல்லை கொடுத்தவன் விலகி ஓடிவிடுவான். வல்லாதிக்கம் செலுத்துபவனிடத்தில் கேட்பதற்குக் காதுகளும் இருக்காது. இரங்குவதற்கு இதயமும் இருக்காது. அதனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஊக்கமாக நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.

 

 1. நீங்கள் பதிப்பித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் உங்களை விட்டுப் பிரிந்து செல்லும் போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

பிரிவது அனைத்தும் நமக்கு விடுதலை தருவதுதான் என்று தெரிந்திருந்தாலும், பிரிவு நமக்கு வருத்தமாகத்தான் இருக்கும். நெடுநாளைக்கு முன் நான் எழுதிய ஒரு கவிதை வரி ஒன்று நினைவுக்கு வருகிறது,

“வீட்டுக்கு வந்த உறவினர்கள் போன பின்

            ஏற்படும் வெறுமையை

            எதனைக் கொண்டு நிரப்புவது”

அடிப்படையில் நான் பிரிவை வெறுப்பவன். ஆனால் எழுத்தாளர் – பதிப்பாளர் உறவில் அது வெகு இயற்கையானது. பெரும்பாலான எழுத்தாளர்கள் ஒரு வகையில் அரசியல்வாதிகள்தான். இதை நல்ல அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டணிகள் மாறுவதும் சொந்தக் கட்சி தொடங்குவதும் இயல்பானது என்றே நாம் உணரவேண்டும்.

 

 1. ஆன்மீக நாட்டம் கொண்டவராக இருக்கிறீர்கள்? பின் எவ்வாறு பெரியாரின் நூல்களைப் பதிப்பிக்கிறீர்கள்?

பெரியாரின் தலையாய கொள்கை ஜாதி ஒழிப்பு. அடிப்படையில் நான் ஜாதி மறுப்பாளன். மதம்  போன்ற மற்ற விசயங்களிலும் எனக்கு நாட்டம் இல்லை. நான் பயந்த சுபாவம் உள்ளவன். அதனால்தான் சாமி கும்பிடுகிறேனோ என்னவோ என்று கூட எனக்குத் தோன்றும்.

தந்தை பெரியார் இல்லையென்றால் நாம் இந்த நிலைக்கு வந்திருப்போமோ? அவரின் தொண்டைப் போற்ற நாம் அவருக்கு என்ன செய்தோம். அவரின் ஒரு செயலிலாவது நாம் சுயநலத்தைக் கண்டது உண்டா?

பொது வாழ்க்கையில் அவரைப் போல ஒருவரை இன்று அல்ல இனி என்றாவது காணமுடியுமா? என்னைப் பொறுத்தவரை பெரியார் மகாத்மா காந்திக்கு இணையானவர்.

நற்றிணை பதிப்பிக்கும் பெரியாரின் நூல்கள் எல்லாம் தம்  பாட்டனாருக்கு பேரன்  தன் அன்பை நன்றியை வெளிப்படுத்தும் ஒரு செயல்தான்.

 1. நீங்கள் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்?

நான் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர் என்றால் அது வண்ணதாசன்தான். வண்ணதாசனைப் போல ஒரு அன்பான மனிதரை அபாரமான எழுத்தாளரைக் காண்பது கடினம். என் எழுதும் திறமையைப் போல என் நற்பண்புகளும் என்னிடம் அதிகம் என்று சொன்ன சாமர்செட்மாம் போன்றவர் வண்ணதாசன். தமிழிற்கு அடுத்த ஞானபீடம் வண்ணதாசன் மூலம் கிடைத்தால் ஞானபீடம் பெருமை பெறும்.

 

 1. பதிப்பகம் தொடங்கியதால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன?

பதிப்பகம் தொடங்கியதால் அடைந்தது, 200 புத்தகங்களுக்கு மேல் மிக நேர்த்தியாகப் பதிப்பித்தது. நான் விரும்பிய எழுத்தாளர்களிடம் உரையாட முடிந்தது. நட்பு கொள்ள முடிந்தது. என்னுடைய அடையாளமாக நற்றிணை இருக்கிறது. இழந்தது என்றால் நிறைய… என்னுள் இருந்த தீராத வாசிப்பு வெறி கொண்ட வாசகன் காணாமலே போய்விட்டான். எந்த உருப்படியான காரணம் எதுவும் இல்லாமல் நிலையற்ற, அன்பற்ற மனம் கொண்ட பலரிடம் திட்டு வாங்கி அவமானப்பட்டது, அதனால் கூனிக் குறுகிப் போனது. எவ்வளவு நன்மை செய்தாலும் நல்ல பேர் வாங்க முடியாதது என நிறையச் சொல்லலாம். ஆனாலும் என் நம்பிக்கை எப்போதும் உறுதியானது. எந்தத் தாழ்விலும் நான் சோர்ந்து போவதில்லை.

எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் ஒரு வகையில் மனநிறைவு என்றுதான் சொல்லவேண்டும்.

 

 1. நிறைவாக, வாசகர்களுக்கு நற்றிணை சொல்ல விரும்பும் கோரிக்கை அல்லது செய்தி என்ன?

நற்றிணை பதிப்பகத்தின் வெற்றிக்கு வாசகர்கள்தான் முதன்மையான காரணம். உங்கள் ஆதரவு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


நேர்கண்டவர் :
இரா.சந்தோஷ் குமார்

நற்றிணை பதிப்பகம் - தொடர்புக்கு
நற்றிணை பதிப்பகம் (பி) லிமிடெட்.,

எண். 82, மல்லன் பொன்னப்பன் தெரு,

திருவல்லிக்கேணி,

சென்னை -600 005.

செல்: 94861 77208

மின்னஞ்சல்: [email protected]


 •  நற்றிணை பதிப்பகம் – புத்தகப் பட்டியல் – 2021காண  Click Here

எழுதியவர்:

5 thoughts on “பெரும்பாலான எழுத்தாளர்கள் ஒரு வகையில் அரசியல்வாதிகள்தான்

 1. மிகவும் அருமையான ,வெளிப்படையான , நேர்மையான நேர்காணல். யுகனுக்கு வாழ்த்துகள்

 2. மிகவும் அருமையான நேர்காணல், வாழ்த்துகள் யுகன்

 3. மிக நுட்பமான கேள்விகளை யதார்த்தமாக கேட்ட பாவனைத் தெரிகிறது. அதற்கான பதில்கள் யாவும் தரமிக்கதாயுள்ளது. சமகால இலக்கியச் சூழலில் பதிப்புச் சூழலில் கட்டவிழ்த்து விடப்பட்டவர்களுக்கு ஓர் கடிவாளமாய் இருக்கின்றன பதில்கள்.

 4. சிறப்பானதொரு பதிவு. யார் மனதையும் புண்படுத்தாத வார்த்தைகள். வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *