ஒரு கவிதைத் தொகுப்பிற்காக தனித்துவமான எழுத்துருவை உருவாக்கி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் கவிஞர் தேவசீமா.  “நீயேதான் நிதானன்” எனும் அவரின் புதிய கவிதைத் தொகுப்பிற்காக ‘தேவசீமா’ யுனிகோட் தமிழ் எழுத்துருவை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.  இந்த எழுத்துருவை ஓவியர்  என்.எஸ். நானா உருவாக்கி இருக்கிறார்.  இந்த எழுத்துரு அறிமுக விழா வேளச்சேரியிலுள்ள Be4Books புத்தகக் கடையில் கடந்த டிசம்பர் 23- 2021 அன்று நடந்தது. 

இதுகுறித்து கவிஞர் தேவசீமாவிடம் விமர்சனம் இணையதளத்தின் சார்பில் உரையாடினோம். 

வணக்கம் !

‘தேவசீமா’ எழுத்துரு  ஏன் உருவாக்க நினைத்தீர்கள்?

இதுவரை தமிழில் இதுபோன்ற டைப் ரைட்டிங்  எழுத்துரு இல்லை . முதலில் நான் என்னுடைய ”நீயேதான் நிதானன்” தொகுப்புக்கு பயன்படுத்துகிறேன். இதை நான் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். மற்றவர்களும் பயன்படுத்தும்போது இந்த எழுத்துரு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். யாருக்கெல்லாம் தமிழ் டைப்ரைட்டிங் எழுத்துரு கணினியில்  உபயோகப்படுத்த  வேண்டுமென விரும்புகிறார்களோ அவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

இந்த எழுத்துரு  user friendly -யா இருக்கும் என சொல்கிறீர்களா….?

ஆம்.  இது இப்போது பீட்டா பதிப்பாக இருக்கிறது . திரு.நானாதான் இதை உருவாக்கினார். ஆல்பா  பதிப்பிலும் உருவாக்கி வருகிறார்.

 

எழுத்துருவை கவிஞர் வெய்யில் வெளியிட கவிஞர் அமிர்தம் சூர்யா பெற்றுக்கொண்டார். உடன் கவிஞர் தேவசீமா. எழுத்துருவை உருவாக்கிய என்.எஸ்.நானா.

ஏற்கனவே கணினியில் தட்டச்சு செய்ய NHM Writer போன்ற செயலிகள் இருக்கிறது. அதிலிருந்து இந்த எழுத்துரு எந்த அளவுக்கு உபயோகமானதாக இருக்குமென கருதுகிறீர்கள்.?

இந்தத் தமிழ் டைப் ரைட்டிங் எழுத்துரு தமிழில் தட்டச்சு  செய்தாலும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தாலும் ஒரே மாதிரியான வடிவத்திலயே இருக்கும். அதாவது தமிழ் , ஆங்கிலம் இரண்டும் டைப் ரைட்டிங் எழுத்துருவிலயே இருக்கும். மற்றொன்று எண்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த எழுத்துருவிலயே இருக்கும்.

அலைபேசிகளிலும் பயன்படுத்த முடியுமா ?

நிச்சயமாக ! தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். மற்ற எழுத்துரு போலதான் இதுவும்.

இப்படியான எழுத்துரு உருவாக்கும் எண்ணம் எப்படி உருவாகியது ?

இதற்கான சிந்தனையை உருவாக்கி கொடுத்தது சீனிவாசன் நடராஜன் அவர்கள் தான்.  நிதானன் என்பது  தனித்துவமான கவிதை வகையாக இருக்குமென்பதாலும் என்னுடைய  கவிதை நடையிலிருந்தே வித்தியாசப்படும் என்பதாலும் அதற்கென  ஒரு எழுத்துரு பிரத்யேகமாக உருவாக்க வேண்டுமென நினைத்தோம்.

இந்த எழுத்துருவை எங்கிருந்து தரவிறக்கம் செய்ய முடியும்?

இப்போதைக்கு கொஞ்சம் காலம் ஆகும். இந்த சோதனை பதிப்பை நாங்கள் முதலில் நீயேதான் நிதானன் தொகுப்புக்கு பயன்படுத்திக் கொள்கிறோம் . அதற்குள் இந்த எழுத்துரு ஒரு இறுதியான வடிவத்திற்கு வந்துவிடும். பயன்பாட்டிற்கு வந்தபிறகு இணையதளத்திலிருந்தே தரவிறக்கம் செய்துக்கலாம்.

வழக்கமாக ஒரு எழுத்துரு என்றால் பல வடிவமாதிரிகளில் இருக்கும். அதுபோல இதில் எத்தனை  இருக்கிறது ?

கார்பன் காபி வடிவம் ஒன்று இருக்கிறது. அது இல்லாமல் இந்த பதிப்பிலயே  Bold, Italic போன்றவையும் இருக்கிறது.

ஓர் இலக்கியப் படைப்பிற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுமையாக முயற்சித்து உள்ளீர்கள் ? இதற்கு பிறகு என்னென்ன செய்யலாம் என எண்ணங்கள் இருக்கிறது ?

இல்லை. நான் பெரும்பாலும் நீண்ட காலத்திற்கான திட்டத்திற்கு யோசிக்கிற நபர் இல்லை.  அடுத்தடுத்த தொகுப்புக்காக  என்ன என்ன செய்யத் தேவையோ அதைத்தான் செய்வேன். நிதானன் தொகுப்பே அனைவருக்கும் ஒரு ஆச்சரியம் தரும் வகையில் தான் இருக்கும். இந்த எழுத்துரு மட்டுமில்லாமல்  இந்த தொகுப்பே ஒரு ஆச்சர்யம் தான்.  .

நிதானன் என்பதன் அர்த்தம் ?

எப்படியும் வெளியீட்டு விழாவில் தெரிந்துவிடப் போகிறது.  தனித்துவமாக எந்த ஒரு விஷயமும் கிடையாது. Idealistic form of a man அவ்ளோதான். நிதானன் எனும் மனிதன் ஒரு பெண்ணை கிளி குட்டி என்று அழைப்பான். நிதானுக்கும் கிளி குட்டிக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள்தான் இந்த கவிதைகள். கேள்விகளை முன் வைத்துக்கொண்டே இருப்பாள் கிளிக்குட்டி. அதற்கு பதில் சொல்வான் நிதானன். நிதானன் என்பவன் காதலில் பைத்தியக்காரமான ஆள் கிடையாது. மிகவும் முதிர்ச்சி அடைந்த மனநிலையோடு அமைதியான அணுகுமுறையில் தான் இருப்பான். சொல்லப்போனால் நிதானன் என்னுடைய ஆண் வடிவமென்று கூடசொல்லலாம்.  நான் எப்போதும், யாருடன் பேசும் போதும், அமைதியான அணுகுமுறைக் கொண்டவள் . அதே மாதிரி ஒரு ஆணும் நிதானமாய் இருந்தால் எப்படி இருக்குமென உருவாக்கிய பாத்திரம் தான் நிதானன்.  டக்குடக்குனு உணர்ச்சிவசப்படாமல்,  நிதானமாய் இருந்தா எப்படி இருக்கும் … அந்த மாதிரியான ஒரு  பாத்திரம் தான் அந்த நிதானன். அது ஒரு ஐடியலிஸ்டிக் கேரக்டர் .

நிதானன் இந்த கேரக்டர் எந்த அளவுக்கு தனித்துவமோ அதே போல தனித்துவமாக இருக்க வேண்டுமென  இந்த எழுத்துரு இருக்கவேண்டுமென நினைத்தோம்.

ஒரு எழுத்துரு உருவாக்க வேண்டிய அவசியமென்பது பொதுவா ஒரு இணையதள வடிவமைப்புக்கோ அல்லது ஒரு மென்பொருள் உபயோகத்திற்கோ சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். தமிழ் இலக்கியத்தில் இருக்கிற ஒரு கவிஞர் ஒரு எழுத்துருக்கு ஏன் மெனக்கெட்டு செய்கிறார் என்பதும் ஆச்சரியமான விஷயம்தான்.

இதற்கு முக்கியமான விஷயம் என்னவெனில் என்னுடைய கவிதைகளை நான் ரொம்பவும் நேசிக்கிறேன். நான் என்னுடைய கவிதைகளை நேசிக்கவில்லை எனில் அடுத்தவர் என் கவிதைகளை நேசிக்க வேண்டுமென நான் எப்படி எதிர்பார்க்க முடியும்.?

என் முதல் புத்தகத்தினை நீங்கள் பாத்திருப்பீர்கள். அதனுடைய வடிவம் ரொம்ப ரசித்து ரசித்து உடன் இருந்து கிட்டத்தட்ட எட்டு அட்டைப்படத்தை நிராகரித்து பிறகுதான் இறுதி செய்யப்பட்டது. வைனோட க்ளாஸ் எப்படி இருக்க வேண்டுமென்பதை கூட அத்தனை ஓவியங்களை நிராகரித்துதான் இறுதியாக ஒன்றை தேர்வுச் செய்தேன்.

என் வாழ்க்கையிலேயே நான் ஒரு பத்து புத்தகங்கள் மட்டும் வெளியிடலாம் . ஆனால் அந்தப் பத்து புத்தகங்களும் அதனதன் தனித்தன்மையோடு இருக்க வேண்டுமென நினைக்கிறேன். நான் என்னுடைய எழுத்தை நேசிக்கிறேன் அதை வெளிப்படுத்தும் போது அந்த நேசிப்பின் தன்மை கடத்தப்பட வேண்டுமென நினைக்கிறேன்.

நன்றி ! உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றிப்பெற  ‘விமர்சனம்’  இணையதளத்தின் வாழ்த்துகள் !

நன்றி :

புகைப்படங்கள் - பாலமுரளி.

நேர்காணல் தட்டச்சு உதவி : ராகினி முருகேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *