நூல் விமர்சனம்புனைவு

சென்றாயனின் ‘பனை விதைக்குள் செங்குத்து நிழல்’ என்னைக் கடந்த போது..


விஞர் சென்றாயனை முதன் முதலில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்வில் சந்தித்தேன். அவரிடமிருந்து ‘பனை விதைக்குள் செங்குத்து நிழல்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பினை பெற்றுக் கொண்ட போது, அவரைப் பற்றி வேறு ஏதும் அறியாதவளாகவே இருந்தேன். அவரது இந்த ஒரே ஒரு தொகுப்பு மட்டும் தான் அவரைப் பற்றி எனக்கு அறியக் கிடைத்தது.

மரக்கிளை நிழல்களின்

 இடைவெளியில் வெயில்

 காற்றின் விரல்கள்

 ஒரு பியானோவை இசைகின்றன” (பக்.29)

என்னைப் பற்றித் தெரிய இது போதுமா? என்று கேட்பது போல் இக்கவிதைக்குள்ளிருந்தே ஒரு குரல் மேலெழும்பி வந்தது. இப்போது, என்னருகில் இலைகள் சலசலக்கும் போதெல்லாம் பியானோ இசைப்பதும் கேட்கிறது. கவிதை என்பது இயற்கையின் கூட்டு மனம் என்பதை நாம் உணர்வதற்கான வாய்ப்பை இந்தக் கவிதை உருவாக்கி இருக்கிறது.

இதுவரை வாழ்வை தத்துவங்களுக்குள் அடைக்க முயன்று அது முடியாமல், தோல்வியுற்ற மகாதத்துவங்கள் புத்தக அடுக்குகளாக, பரண்களில் பழுப்பேறிக் கிடக்கின்றன. ஆனால், கணந்தோறும் ஓசையின்றி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் நித்திய சூரியர்கள் கவிதைக்காரர்களாகத்தான் இருக்க முடியும். அத்தகையவர்களில் ஒருவராக தன்னைத் திறம்பட நிறுவிக் கொள்வதற்கான கவிஞர் சென்றாயனின் முயற்சிகள் யாவும் இத்தொகுப்பில் காணக் கிடைக்கின்றன.

 வெள்ளையடித்த

 உத்திரத்தை

 கோடுகளாகப் பிரித்திருக்கின்றன

 வளவளப்பான வர்ணம் பூசிய

 தேக்குமரக்கட்டைகள்

 தேன்நிற மின்விசிறியிலிருந்து

 உழல்கிறது காற்று

மல்லாந்து படுத்திருக்கும்

என் வலக்கரத்தின் உள்ளங்கையில் மஞ்சள் நிறப் பந்தினை

அழுத்த அழுத்த

பாலீத்தின் பையில் உதிர்கிறது

குருதிப்பூ ஓசையின்றி

வெளிப்படாத குருதியின் வாடையைப் போல கைமாறுகிறது வாழ்வு.” (பக்.30)

 

கவிஞர் சென்றாயனுக்குள் வாழ்வென்பது துல்லியமாக வேறு நிறங்களைக்  கொண்டிருக்கவில்லை. வாழ்வு பற்றிய நமது அபிப்ராயங்கள் எத்தகையது என்பது பற்றிய கேள்விகளை சாதிய அடுக்குகளால் நிரப்பப்பட்ட சமூகத்தின் முன் வீசியெறிவதாகவே தெரிகிறது.

சுருட்டப்பட்ட வெயிலை

 மறுபக்கம் விரிக்க

 சுழலும் புவியில்

 வேறொரு சாலையில்

 சித்திரம் வரையக் கிளம்பும்

 துண்டு சாக்பீஸ்களின்

 வண்ணங்கள் தோய்ந்த 

தலை பூ என நான்கைந்து 

நாணயப்புவிகள் 

ஒரு குவளை தேனீராக மாறுகின்றன.” (பக்.40)

ஒரு குவளை தேனீருக்காக தன் வாழ்வைப் பருகியபடியே நகரும் வெயில் … துண்டு சாக்பீஸ்களின் வண்ணங்கள் தோய்த்த சித்திரம்… தலை பூ என நான்கைத்து நாணயப் புவிகள்…

வாசிப்பிலிருந்து நகர முடியாதபடி வாசகனை காட்சிக்குள் நிறுத்தும் துணிவு இதைத் தவிர வேறு எதையும் கோரவில்லை கவிதையின் வரிகள்.

அரைமுழம் மல்லிச்சரம்

 உருவிக்கிடக்கிறது 

தார்ச்சாலையில்

பேரம் பேசிய சொற்கள்

 மௌனிக்கும் இவ்விரவில்” (பக்.40)

இவ்வரிகள் வாழ்வின் மீது நாம் வீணாக அடுக்கி வைத்திருக்கும் சொற்களை மளமளவென சரியச் செய்கின்றன. இறுதியில் வாழ்வென்பது சொற்களில் இல்லவே இல்லை என்பதை உருவிக் கிடக்கும் தார்ச்சாலையிலிருந்து புரிந்து கொள்கிறோம்.

தொகுப்பில் என்னைக் கவர முடியாத கவிதைகளும் உள்ளன. ஒருவேளை, அவற்றை என்னளவில் இனம் காண முடியாத ஒன்றாக இருக்கலாம். நீண்ட வரிகளை உடைய பல கவிதைகள் என்னை வாசிப்பிலிருந்து விலக்கி விட்டன. அதே வேளை, வாழ்வின் நுண்மைகளையும், முரண்களையும், கவிதைகளின் படம் பிடிக்கும் நுட்பத்தை கவிஞன் சென்றாயனின் பல கவிதைகளில் காண முடிகிறது.

பெரும்பாலான கவிதைகளின் குறியீட்டுத் தன்மைகள் வாசிப்பின் போது அதற்கான அரசியல் தளத்தில் அர்த்தம் பெறுகின்றன.

நேற்று ஒரு பறை கிடைத்தது என்று தொடங்கும் ஒரு கவிதையில் அதற்கான விளிம்பு நிலை அரசியலை முன் வைக்கிறது.

பறவையின் நிழல்

 எழுதிச் செல்கிற

கோடையின் வெயிலில் பரவும்

 நீர்ப்பழங்களின் கொடிகளுக்கான ஈரம்

விளம்பரக் கதாநாயகன் உறிஞ்சும்

 குளிர்பானங்களில் நிரம்புகிறது

நிர்வாண நிலத்தில்

மிஞ்சும் வல்லரசின் பரிசோதனைக் கூடங்கள் உழுபவனும் வனப்பழங்குடிகளும்

புதைக்கப்பட்ட மேடுகளில்

 ஊன்றப்பட்ட

 தேசியக் கொடிகளுக்கு

 விரைப்பான தேகத்தோடு

 சல்யூட் அடியுங்கள் 

ஊழிக்காற்றில் புரண்டெழும்

 எம் கரங்களின் புழுதிகள்”

கவிஞர் தனது அரசியல் பார்வையை முழுவதும் வெளிப்படுத்தும் இக்கவிதையை வாசிக்கும் வேளையில் அரசு, அரசாங்கம் என்பதெல்லாம் விளிம்பு நிலை மக்களை அடக்கி ஒடுக்கிவிட்டு தனது மக்களின் நிலங்களை அபகரித்து பகாசுர முதலாளிகளுக்கு பரிசோதனைக் கூடங்களாக்கிக் கொடுக்கும் கூட்டு வியாபாரம் தான் அரசியலோ? என்ற மக்களின் கோபத்தையும் குமுறலையும் ஒட்டு மொத்தமான குரலாக்கி கவிதையின் குரலாக ஒளிக்கச் செய்திருப்பது கவிஞர் சென்றாயனின் நியாயமான அற உணர்ச்சியின் பாற்பட்டதே.

உப்புச் சமுத்திரத்தைச் சமைக்க

 தனித்து விடப்பட்ட துளிகளில்

 பேரலையின் நினைவும் உறைந்துதானிருக்கும்” (பக்.31)

கவிஞர் சென்றாயனின் கவிதைத் தொகுப்பை வாசிக்க வாசிக்கத்தான் தனித்துளிகளில் பேரலையின் ஓசை பெரிதாக கேட்கிறது.

சமகாலக் கவிதைகளை நவீன மொழியில் வாசிக்கும் போது ஒரு வாசகன் என்பவன் உற்று நோக்கி உள்பிரியும் திட மனதினை கொண்டவனாகி விட வேண்டும். படைப்பாளர் ஒரு வாசகனை அந்தப் பலத்திற்கு இழுத்து வரும் முயற்சியில் தனது மொழியின் மூலமாக வாசகனையும் பரிசோதனைக்குள்ளாக்குவது இன்று இயல்பாகி வருகிறது. இதை நவீனத்துவத்தின் ஒரு கூறு என்றும் கொள்ளலாம். ஆளுமை மிக்க வாசகனை விட்டு விலகி விடாத ஒரு மொழியை தனது சுயமான படைப்பருவாக்கத்தில் செயல்படுத்தும் போது ஒரு படைப்பாளர் முழு கவனத்துடன் பணியாற்ற வேண்டியிருக்கிறது.

“இளையதலைமுறைகளில் ஒரு சிலருக்கு நான் ஏன் இன்னும் பின் நவீனத்துவ பஸ்ஸில் ஓடி வரவில்லை என்ற கேள்வி இருக்கிறது. வயது ஒரு காரணம். பஸ்ஸின் வாசலும் எனக்குத் தெரியவில்லை” என்பார் சுந்தர ராமசாமி.

அவருக்குத் தெரியாத வாசலை இன்று தமிழகத்தின் முக்கால் வாசிக் கவிஞர்கள் நெருங்கி விட்டார்கள் என்பது தான் உன்மை . கவிஞர் சென்றாயனும் அதில் ஒருவராக தெரியலாம். ஆனால் சென்றாயனின் கவிதைக்குள் சென்றால்தான் கவிதைகள் என்னவாக வாசகனுக்குள் ஒரு உருவேற்றத்தை நிகழ்த்துகின்றன என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.

காலம் எப்போதும் கவிதைகளை சோதித்துக் கொண்டேயிருக்கும். கவிதைகளை நிகழ்த்திவிட்டு கவிஞன் சென்று விடலாம். நிகழ்வு என்னவாயிற்று? என்பது தான் கேள்வி. காலம் கவிதைக்குள் நிகழ்த்தும் ஒரு செயலில் அறிவாகவும் அனுபவமாகவும் தாங்கிவரக்கூடிய கலையே வெற்றி பெறும். அதற்கான முதிர்ச்சியை வாசக மனமும் அடையப் பெற்றிருக்குமானால் மிகவும் நன்றே.

  கவிஞர் மஞ்சுளா

நூலாசிரியர் குறித்து:

சென்றாயன் (1975) திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர். கட்டிடப் பொறியாளராகப் பணிபுரியும் இவர் உருவி எடுக்கப்பட்டக் கனவு, நிலமிழந்த மண்புழு எனும் கவிதை நூல்களை எழுதியிருக்கிறார். பெற்றோர் மகாலட்சுமி - ராமதாஸ், மனைவி சாந்தி, குழந்தைகள் அமுதன் மற்றும் மதிவதினி .

தொடர்பு எண் : 8489124464

மின்னஞ்சல் : [email protected]

 

நூல் தகவல்:
நூல் : பனை விதைக்குள் செங்குத்து நிழல்
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: சென்றாயன்
வெளியீடு: வெற்றிமொழி வெளியீட்டகம்

எண். 29. முதல்தளம், கிழக்குரதவீதி,

சகாய பேப்பர் ஸ்டோர்ஸ் அருகில், திண்டுக்கல் - 624001.

வெளியான ஆண்டு : 2018
பக்கங்கள் : 32
விலை : 60
தொடர்புக்கு : 9715168794, 78100 21216

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *