‘கவிதை என்பது ஒரு மோகனமான கனவு’ என்பார் புதுமைப்பித்தன். கவிஞர் மூராவிற்கோ ‘ஒரு சொட்டு இதயம்’ ஆக கனவு துளிர் விட்டிருக்கிறது. கவிஞர் மூராவிற்கு இது முதல் தொகுப்பு. அரும்பிய மீசையுடன் விரும்பிய காதல்கள், இளம்பருவத்து நினைவுகள் என தொடங்கும் காதல்கள் தொகுப்பெங்கும் தொடர்கின்றன. ஒரு கவிஞன் என்பவனுக்கு மாபெரும் கனவு என்பது அவன் கற்பனையில் உதிக்கும் கவிதைகள்தாம். ஆறறிவு படைத்த மனிதகுலத்தின் சிந்தனை வளர்ச்சிக்கு வித்திடுவதே அவன் காணும் கனவுகளும் கற்பனைகளுமே ஆகும். வானக் கூரையிலிருந்து தொடங்கி பூமியின் தரை தொட்டு மனிதன் அறியக் கிடைக்கும் எல்லா வகையான அனுபவங்களும், உணர்வுகளும், இன்ப, துன்ப நிகழ்வுகளும் கவிஞனுக்குரிய பாடு பொருளாகின்றன. முன்னெப்போதையும் விட இன்றைய காலகட்டத்தில் தான் கவிஞனுக்குப் பெருமளவில் சுதந்திரம் கிடைத்துள்ளது. மரபு மீறிய நவீனகால கவிதைப் பரப்பில் கவிதையின் பாடுபொருள், வடிவம், அமைப்புத்தொடங்கி, வெளிப்பாடுகளில் பல்வேறுபட்ட போக்குகளையும், உத்திகளையும் இன்று காண முடிகிறது.
கவிஞர் மூராவின் ‘ஒரு சொட்டு இதயம்’ என்ற இந்தக் கவிதைத் தொகுப்பை பிரித்த போது ஒவ்வொரு பக்கமுமே காதலைச் சுமந்து கூட்டுப்புழுவாக இருந்த அந்த எளிய இதயம் காதலியின் ஸ்பரிசம் பட்ட அந்த நிமிடங்களில் இருந்து உணர்வுகளின் வலிமையில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறக்கிறார்.
“புதிதாய்ப் பார்வை கிடைத்தது போல்
இந்த பூமியை இரசிக்கிறேன்
………………………
………………………
சிவப்புத் துளியாய்ப்
பச்சைப் புல்வெளியில் நடமாடும்
வெல்வெட்டுப் பூச்சியின்
மெத்தையுடல்
எல்லாமே யழகுதான்
உன் உஷ்ணப் பெருமூச்சு
என் நாசியில் உரசுவதும்... (பக்.20)
காதல் என்பது முட்டி முட்டிப் பாலருந்தும் குட்டி ஆட்டின் பிஞ்சு வாயிலும், குண்டு பல்புக் கழட்டக் குவிந்த விரல் போல பால் நிறைந்து நிற்கும் கேழ்வரகுக் கதிரிலும், சிவப்புத் துளியாய் பச்சைப் புல்வெளியில் நடமாடும் வெல்வெட்டுப் பூச்சியின் மெத்தையுடலுமாக, காதலியின் உஷ்ணப் பெருமூச்சு நாசியில் உரசும் போது கவிஞருக்கு காட்சிப்படுகிறது.
காதல் என்பது காதலியோடு மட்டுமல்ல, பூமியிலுள்ள அத்தனை உயிரினங்களிலும், அதன் மகிழ்ச்சியிலும், அந்தக் காதல் ததும்பி நிற்பதைக் கவிஞர் நமக்கு காட்சிப்படுத்துகிறார். காதலால் பூமியை உயிர்ப்புடன் காணும் கவிமனதின் நுட்பங்கள் கவிஞரின் கவி ஆளுமைக்குச் சான்றாக விளங்குகின்றன. ஒரு கவிஞனுக்கு காத-ே லாடு தொடர்புடைய காட்சிப் புலங்கள் இயற்கையை மீறாத கிராமத்து அழகியலுடன் வெகு நுட்பமாக இணைந்திருப்பதை, இக்கவிதையை பழக்கும் வாசக மனங்கள் உணரக் கூடும். காதலின் அழகையும் உயிர்ப்பையும் மேன்மையையும் இதைவிட அழகாக வேறு எப்படிச் சொல்லிவிட முடியும்? ‘அழகு’ என்ற தலைப்பில் மேற்குறிப்பிட்ட கவி-ை தயில் இவரது கற்பனையைவிட யதார்த்தங்களுக்குள் நம்மை இழுத்துச் சென்று இதுதானடா காதல் என்று வாழ்வின் மையமான காதலின் சாரத்தை ஒரு கேப்சூலாக அடைத்துத் தருகிறார்.
இயற்கை எப்போதும் அழகுதான். ஆனால், கவிஞரோ, ஒவ்வொரு அழகையும் அதனதன் இயல்பில் எடுத்து தீராத தன் காதலை அதில் நிறைவு செய்யப் பார்க்கிறார். பார்க்க… பார்க்க… கண் கொள்ளாதது இயற்கை. சுவைக்க… சுவைக்க… தீராதது காதல். இந்த உண்மையை இவரது பல கவிதைகள் எடுத்துக் கூறிக் கொண்டே இருக்கின்றன.
‘சுற்றி மகிழ்’, ‘தான்தானே’, ‘அதனதன் அழகு’ போன்ற கவிதைகள் இவரது தீராத காதலுக்கு பொருள் சேர்க்கின்றன. கார்மேகம், மின்னல், மழை, நிலா, பூமி, சூரியன், நெருப்பு, காற்று, நதிக்கரை, தவளைகள், பறவைகள், வேப்பம்பழத் தோல்கள், குயில், காக்கை, ஓணான் ஒவ்வொன்றும் அதனதன் இயல்பில் இருந்து கொண்டே இவரது காதலையும் ஆராதனை செய்கின்றன.
இயற்கையின் அழகில் காதலைக் கண்டாலும் கவிஞரின் மனம் அவருக்கேயுரிய, அவருடைய இயல்பில் வற்றாத இசை வெள்ளத்துடன் காதல் சந்தங்களை துள்ளும் ஜதியோடு அழகை அள்ளித் தருகிறார்.
சிறு வயதுச் சேட்டையும்
முதுமையின் ஞானமும்
என்று சொல்லிச் செல்லும் போது தம் தும் என்ற ஒலிக்குறிப்புக்கள் நம் காதுகளில் வந்து விழவே செய்கின்றன.
பாட்டுக்கொரு புலவன் பாரதி என்ற போதிலும், அந்த பார்தியின் புதல்வர்களாக வாழும் ஒரு பாரதியாய் இந்த அறுபது வயது மூதிளங்கவியிடமும் சந்தங்கள் சொந்தங்களாகி இருப்பதில் வியப்பேதும் இல்லை .
கவிஞன் எப்போதுமே வார்த்தைகளுக்காக தவமிருக்கக் கூடாது. வார்த்தைகளே கவிஞனுக்காக தவமியற்ற வேண்டும்.
அப்படிப்பட்ட வார்த்தைகள் கவிஞனுக்குள் இறங்கத் துடிக்கும் நிமிடங்களில் அவன் கைப்பற்றிய காதல் வரிகள்தான் ‘விழி விளிம்பு’ என்ற கவிதை.
“இலைகளில்
பனி மகுடங்களைக்
களவாடிச் செல்ல
கதிரவன் கிளம்பி விட்டான்”
என்று தொடங்குகிறார் (பக்.44)
சாதாரணமாக, இலைகளில், பூக்களில் பனித்துளிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், கவிஞரின் காதல் பார்வையில் அவை பனி மகுடங்களாக அழகு பெறுகின்றன. துளிகளைக் களவாடுவதில் கதிரவனுக்கு என்ன பெருமை? மகுடத்தை அல்லவா அவன் களவாடிச் செல்ல வேண்டும். அந்தப் பெருமையையும் உரிமையையும் பெற வேண்டுமானால், கதிரவனே ஆனாலும் காத்திருக்கத்தானே வேண்டும். காத்து காத்து அவன் பெற்ற மகுடம்தான் இந்த வரிகளில் மின்னுகிறது. எனக்குத் தெரிந்து இதுவரை எந்தக் கவிஞனுக்கும் இந்த வார்த்தையழகு கைவரவே இல்லை. காலம் காத்திருந்து கைப்பற்றிக் கொண்டது இவர் விரல்களை!
அதே கவிதையில்
"தூக்கிய பஞ்சாரத்திலிருந்து விடுதலை பெற்றுச்
சோம்பல் முறித்து
வானம் பார்த்துக்
குஞ்சுகளோடு
நிலம் கீறத் தயாரானது
நாட்டுக் கோழி”
அநேகமாக இன்றைய நவநாகரீக நகர வாழக்கைக்கு பழகிப் போன (முடங்கிப் போன) எத்தனையோ குழந்தைகளுக்கு பஞ்சாரமும் தெரியாது. நாட்டுக் கோழியும் தெரியாது. நமது நகர நாகரீகங்களின் மேட்டிமைத்தனம் நாட்டுக் கோழிகளை அழித்துவிட்டு பிராய்லர் கோழிகளுக்கு அடிமையாகிவிட்டது.
தான் வாழ்ந்த கிராமத்து மண்ணை முத்தமிட்டு எழுதும் இவரது கவிதை வரிகள் இயற்கை எழிலையும், பள்ளி செல்லும் குழந்தைகளையும், பஞ்சாரத்தை விட்டு நிலம் கீறும் நாட்டுக் கோழிகளையும் கிராமத்தின் எழிலையே அடையாளப்படுத்துகிறது.
“அரைகுறையாய்த்
துவட்டிய துண்டை
கூந்தலோடு சுற்றிச் சுற்றி
கிரீடம் சூட்டி
கோலப்பொடி டப்பாவோடு நீ
தெருவிறங்கும் அந்த நிமிடத்திற்காகத்
தவமிருக்கிறது
செய்தித்தாளின்
மேல் விளிம்பில் என் விழி”
என்று முடிக்கிறார். விழி விளம்பில் இருந்தாலும், காதல் கிராமத்தின் மையம் நோக்கியே செல்கிறது.
காதல் என்ற வார்த்தை இன்று சமூகத்தில் ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சாதி, மதம், கடவுள், புனிதம், தீட்டு போன்ற கட்டுமானங்களை தகர்த்து எறிவதற்கு ‘காதல்’ ஒரு வலிமையான ஆயுதமாக இருக்கிறது. இதை உணர்ந்த பழமைவாதிகளும், சாதியவாதிகளும், மத அடிப்படைவாதிகளும் பெண்ணை ஒடுக்குவதன் மூலம் இதற்கான தீர்வை எட்டிவிடலாம் என கருதுவதால், பெண்ணின் உடலை தீட்டாக்கி கடவுளின் பெயரிலும், சமயங்களின் பெயரிலும், மதத்தின் பெயரிலும் கட்டுப்படுத்தி உள்ளனர். இதை உடைத்து எறியும் பெண் சமூகத்தை அடக்கி ஒடுக்குவதற்கான தந்திரங்களாக அவர்கள் புனிதங்களை கட்டமைக்கின்றனர்.
இந்த 21ஆம் நூற்றாண்டில் மனிதன் தன் அறிவினாலும், ஆற்றலினாலும் மண்ணிலிருந்து விண்ணுக்கு ஏவுகணைகளை செலுத்திக் கொண்டிருக்கும் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்த போதிலும்கூட, மனித இனத்தின் சரிபாதியாய் இருக்கும் பெண் இனத்தின் மீது புனிதம், தீட்டு என்ற பதங்களை பழமைவாதிகள் வலிந்து கற்பிக்கிறார்கள். இந்த இழிநிலையிலிருந்து இந்த மானுட சமூகத்தை மீட்டெடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
"உடைந்தும் உருண்டும்
உருகியும் வடிந்தும்
தொடர்ந்து களவாடப்படும்
நமக்கான நிஜங்கள்
......................................
......................................
தீட்டையே உட்கொண்டு
உயிர் பெற்ற உருவங்கள்
தீட்டிலேயே பயணித்து வெளியேறி தீட்டென்று மறுதலிக்கின்றன
பொய்களைப் பிம்பமாக்கி
கதைகளை மெய்யாக்கி
புரியாத சுலோகங்களால்
பஞ்சாரக் குஞ்சுகளாய்ப்
பூமியெங்கும் மனிதம்
உயர்சாதிச் சாமிகளுக்கு
கீழ்ச்சாதிச் சாமியே தீட்டு
தீட்ட வேண்டிய எல்லாம்
முனை மழுங்கி மௌனித்தன
மானுடத்தின் மேனியெங்கும்
காதலின் சமாதிகள்”
ஆம், தொகுப்பின் துவக்கத்தில் காதல் என்ற பெயரில் ‘அடம்’ செய்ய விரும்பாத கவிஞர் தொகுப்பின் இறுதியில் இதயம் விரும்பிய மகத்தான காதல் வழி ‘மானுடநேய மென்னும் காதல் ‘அறம்’ செய்யவே விரும்புகிறார். அரும்பிய காதலும் விரும்பிய அறமுமாக தொகுப்பு நிறைவாக இருக்கிறது.
இருபது வயதில் ‘காதலே’ அறம்
அறுபது வயதில் ‘அறமே’ காதல்.
– கவிஞர் மஞ்சுளா.
நூல் பதிப்புரை :
கவியுணர்வு என்பது மனிதர்க்கு மட்டுமே வாய்த்த பெரு வரம். கவியுணர்வு ததும்பி வழிபவர்களே தங்கள் வார்த்தைக ளில் அவற்றை வழிய விடுகின்றனர். கவியுணர்வும் காதலுணர் வும் எப்போதும் ஒரு நேரத்தில் ஒரு வயிற்றில் ஒட்டிப் பிறந்த குழந்தைகள் போல, அவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந் தவை.
"யாயும் ஞாயும் யாராகியரோ?" என்ற சங்கத்துக் கவிதை மனமாகட்டும், லெபனான் தேசத்து மகாகவி கலில் கிப்ரானா கட்டும், கிப்ரானிலிருந்து சுடர் பெற்ற மீராவாகட்டும், அத்தனை பேரிடமிருந்தும் அது மூராவிற்குள்ளும் காதலோடு கலந்த கவிதையாக முட்டித் ததும்புகிறது.
காதல் எல்லாக்காலத்துக்கும் மனிதர்களுக்குக் கவிதை தருகிறது. மூராவிற்கும் அது அதனையே தந்துள்ளது.
தமிழ்கூறு நல்லுலகிற்கு மற்றுமொரு காதல் கவிதைக ளின் தொகுப்பைக் காலம் வெளியீட்டின் சார்பாக வெளியிடு வதில் காதலோடு மகிழ்கிறேன்.
காலம் வெளியீட்டிற்காக
ஸ்ரீரசா
நூல் : |
ஒரு சொட்டு இதயம் |
பிரிவு : | கவிதைகள் |
ஆசிரியர்: | கவிஞர் மூரா |
வெளியீடு: | காலம் வெளியீடு
25, மருது பாண்டியர் 4வது தெரு (சுல்தான் நகர்); கருமாரியம்மன் கோவில் எதிர் வீதி; மதுரை - 625 002 |
வெளியான ஆண்டு : | டிசம்பர் 2018 |
பக்கங்கள் : | 96 |
விலை : | ₹ 100 |
கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.
“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி)
வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.
காதல் குறித்த விரசமில்லாத சொட்டு சொட்டு வார்த்தைகளால் இதயம் குளிர்ந்து போகிறது..