டைத்தவனை நொந்துக்கொள்வதும் அவனோடு சண்டையிடுவதும் அவனிலிருந்து விலகி சுயேட்சையாக உருக்கொள்வதும் நான் அறிந்தவை.பகையாகிப் படைத்தவனுக்கு எதிராகப் படைத் திரட்டி நிற்பதென்பது எனக்கு புதிது. என்றால் கைகளைத் தூக்கி சரணடைவதைத் தவிர வேறு வழியேது” இவ்வாறுதான் நாவலின் முன்னுரை அமைந்திருக்கிறது.

நெருக்கமான ஒருவரால் ஏற்கனவே நன்கு பரிட்சயமான நூல்தான் மாதொருபாகன். நூல் கையில் கிடைத்ததும் வாசிப்பில் கிடந்த மற்ற நூல்களை தூரமாக வைத்துவிட்டு மாதொருபாகனை படிக்க தூண்டும் ஆர்வம் உருவாக்கியது இந்நூலின் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளும் அதற்கு கிடைத்த நியாயமான நீதியும்தான். அப்படி என்னதான் சொல்லிட்டாரு அந்த மனுஷன்?முழுவதும் படித்தால்தானே தெரியும்.

என்னதான் இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்ந்தாலும் விண்வெளிக்கு ராக்கெட் விட்டாலும் திருமணம் முடிந்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் கழித்தும் குழந்தை இல்லையென்றால் நிச்சயம் இந்த கேள்வியை இந்தியப் பெண்கள் அனைவரும் எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. ‘என்னமா விசேஷம் இல்லையா? இன்னும் இல்லை என்ற பதிலுக்கு பிறகும் அவர்கள் முகத்தில் இருக்கும் ஏன் என்றக் கேள்விக்குறிக்கு கையாலோ சில சமயம் காலாலோ விடை அளிக்கத் தோன்றும். அதை பெருமாள் முருகன் அவர்கள் பொன்னாள் வாயிலாக அழகாக செய்துள்ளார்.

திருமணம் முடிந்து பனிரெண்டு வருடங்கள் கடந்தும் குழந்தை பேறு இல்லாத பெண் அதுவும் ஆங்கிலேயர் ஆட்சி நடந்த காலக்கட்டத்தில் குக்கிராமத்தில் வாழ்ந்தப் பெண் எதையெல்லாம் எதிர்கொள்வாள்? ஆளாளுக்கு ஏதேதோ கட்டுக் கதைகளை கூறி அதற்கு பரிகாரம் என எதையெதையோ செய்ய சொல்ல அத்தனையும் செய்கிறாள். பொன்னாள் மேல் கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யும். யார் எதைக்கூறினாலும் அதை அப்படியே நம்புவதும் பரிகாரம் என்ற பெயரில் மலையுச்சியில் இருக்கும் கோவிலின் பிடிமாணமற்ற ஒற்றை சுவற்றை சுற்றி வருவதும் என அவள் செய்யும் செயல்கள் அத்தனையும் எப்படியாவது ஒரு குழந்தையை பெற்றெடுத்துக் கொண்டுத் தான் வறடியல்ல என்று நிரூபணம் செய்வதற்காக மட்டும்தான் இருக்கும்.

அந்த அழகான கிராமம்,  காளியின் தொண்டுப்பட்டி, தேவாத்தா, பூவரசு மரம்,முத்துவின் ரகசிய பொந்துகள் என நாவலின் வரும் மனிதர்களும் இடங்களும் அத்தனை அழகானது. என்ன ஒன்று?மூன்று நான்கு பிள்ளை பெற்ற மகராசிகளின் கடுமையான பார்வைகளையும் பேச்சுகளையும் தாங்கிக்கொள்ளவே முடியாது. வீட்டிற்கு வருவோர் போவோர் எல்லாம் ஜாடையாக இரண்டாவது திருமணம் பற்றி பேசும் போதெல்லாம் பொன்னாள் மனம் கணக்கும். கோபம் உச்சிக்கு ஏறும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். அது நமக்கும் கேட்கும்.

காளிக்கும் பொன்னாளுக்கும் இடையே நடக்கும் ஊடல் சார்ந்த செயல்கள் கொச்சைப்படுத்தப்படாமல் ரசிக்கும் படி இருக்கும். அந்த கிராமத்து பாஷைக்கு வாசகன் அடிமை ஆகிவிடக்கூடும். சொற்பமாகவே  வந்தாலும் சில கதாபாத்திரங்களுக்கு ஆழமான இடமிருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் சித்தப்பா. நேர்மையான மனிதர். சுயமரியாதை கொண்டவர். மனதில் பட்டதை செய்யத் துணிந்தவர். அவர் மட்டுமே காளிக்கும் பொன்னாளுக்கும் குழந்தை விஷயத்தில் ஆறுதலான சிந்தனைகளை கொடுப்பவர். ‘மருமவளே கவலப்படாத. கன்னுக்குட்டி துள்ளி குதிக்கறத பாத்துக்க.அதுங் கொழந்ததான். தெருவுல போயி நின்னா எத்தன கொழந்தைங்க ஓடி விளையாடுது.அத கொஞ்ச நேரம் பாத்துக்க.போதும். அதுக்குமேல கொழந்தங்ககிட்ட என்ன இருக்குது? எதுவும் கொஞ்சநேரந்தான். சந்தோசம்னா என்னனு தெரியாத நாய்வ பெத்துபோட்டு சீப்படட்டும். நாம அதப்பாத்து சிரிப்போம்’ இவர் பேச்சைக்கேட்டு சிலசமயம் குழந்தையே வேண்டாம் என்றுகூட அவர்கள் முடிவு செய்திருப்பார்கள்.

அந்த கிராமத்தில் அவர்கள் சாதியின் வழக்கப்படி ஆண்கள் அனைவரும் குடுமி வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் அடிக்கடி காணாமல் போகும் சித்தப்பா குடுமியை வழித்து வந்து நிற்பார். வழக்கம் போல பஞ்சாயத்து கூட்டி கேள்வி கேட்கும் பெருசுகளுக்கு அவர் கூறும் பதிலை கேட்டால் நிச்சயம் அதிர்ச்சியாகவும் அதேசமயம் ஆனந்தமாகவும் இருக்கும். (Reference : படத்தில் இருக்கும் பக்கம்)

அதேபோன்று இன்னொரு கதாபாத்திரம் தான் சடையப்பன். காளியின் தாத்தா. ஆங்கிலேய அதிகாரி ஒருவன் எக்குத்தப்பாக வைக்கும் போட்டியில் தந்திரமாக ஜெயிப்பார்.அதை அத்தனை அழகாக காட்டியிருப்பார் ஆசிரியர். நாவல் முழுவதும் உடன் பயணிக்கும் கதாப்பாத்திரங்கள் அத்தனையும் அன்பு நிறைந்தது. எங்கும் எதிலும் எதார்த்தங்களே நிறைந்திருக்கும்.

காளியும் அவன் மச்சான் முத்துவும் சாராயம் குடிப்பதற்காக தேடிப்பிடிக்கும் இடங்கள் எல்லாம் அம்சமாக இருக்கும். கிணற்று பொந்து,மரத்தின் மேல் வீடு என்று போகும் இடங்களிலெல்லாம் முத்து சைட் டிஷ் செய்வதற்காக பண்ட பாத்திரங்களை சேர்த்து வைத்திருப்பான்.

மாதாமாதம் தீட்டு தள்ளிப்போனால் குதூகலிப்பதும் தீட்டு ஆனதும் வீட்டிற்குள் முடங்கி அழுவதும் பொன்னாளுக்கும் அவள் சார்ந்த அனைவருக்கும் பழகியதுதான்.

அந்த கிராமத்தில் வருடாவருடம் நடக்கும் திருவிழாவில் ஒரு விநோதமான பழக்கம் இருக்கும். அத்தினங்களில் யாருக்கும் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. அங்கு வரும் ஆண்கள் அனைவரும் சாமியாக கருதப்படுவார்கள்.குழந்தை பேரற்ற பெண்கள் இந்த இரவில், திருவிழாத் தெருக்களில் தனித்து விடப்பட்டால் குழந்தை பிறக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. இரண்டு வருடங்களாக பொன்னாளிடமும் காளியிடமும் இந்த திருவிழாவிற்கு பொன்னாளை தயாராக்கும் படி காளியின் தாய் உட்பட அனைவரும் வேண்டுவார்கள். காளிக்கு இதில் உடன்பாடு இருந்திருந்தால்தான் ஆச்சரியம். தன்னால் இயலாததை வேறு ஆண் மூலம் சாதித்து கொண்டால் காலம் முழுவதும் வறடனென்றப் பெயரோடு அவனால் எப்படி வாழமுடியும்?

நாகரிகம் வளர்ந்த இன்றைய காலத்திலும் இயற்கையாக கருத்தரிக்க முடியாதப் பெண்களுக்கு IVF, IUI, Artificial insemination, வாடகைத்தாய் போன்ற எண்ணற்ற மருத்துவமுறைகளுக்கு லட்சக்கணக்கில் கொடுத்துவிட்டு குழந்தைக்காக காத்திருக்கின்றனர் தம்பதியர்கள். Male infertility க்காக தனிப்பட்ட மருத்துவமும் உண்டு. இதில் எந்தவொரு புரிதலும் இல்லாத காலகட்டத்தில் குறையென்றாலே அது பெண்ணுக்கு மட்டும்தான் என்ற எண்ணங்கள் மேலோங்கி இருந்த நிலையில் இப்படி ஒரு திருவிழாவும் அங்கு முகம் தெரியாத ஆண்களோடு ஓரிரவில் கூடி பிள்ளைப்பெற்றுக் கொள்ளும் பெண்களை தாசி என்று சொல்லும் ஆண்களால் தங்கள் Impotency யை வெளிக்காட்டிக் கொள்ள நிச்சயம் முடியாது.

இறுதியாக, ஒரு நாவலையோ சிறுகதையையோ படிக்கும் போது அதை ஆசிரியரின் கண்ணோட்டத்தில் பார்க்காமல் அவரவர் கண்ணோட்டத்திலும் சில சூம்பிய கண்களின் புத்தி வழியாகவும் பார்த்தால் அப்படித்தான். கதைக்காக ஊற்றப்பட்ட கற்பனை ஊற்றுகளில் இருந்து சில்லறை பொறுக்கி சுகம் காணாமல் கதையை கதையாக மட்டுமே பார்த்தால் யாருக்கும் அபத்தம் இல்லை.  இது திருத்தப்பதிப்பு. வழக்கிற்கு முன்னால் எழுதப்பட்ட நூல் என் கைக்கு கிடைக்காதது வருத்தம்தான். ஏதோ ஒன்று கிடைத்தால் உடனே சட்டியை தூக்கி கொண்டு வரும் அந்த சிலருக்காகதான் ஆசிரியர் தன் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்.          “குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தனையும் கற்பனையே. என்ன செய்வது? கதைக்கு தேவையான சில இடக்கர் சொற்கள் இருக்கத்தான் செய்யும். ஒப்ப மனமில்லாத மென்மனத்தோர், நல்லோர், ஒழுக்கம் உடையோர் இவற்றை வாசிப்பதைத் தவிர்த்து விடுவது உத்தமம்”. ஆகவே , மாதொருபாகனை தரிசித்து அதன் இன்பங்களில் மட்டும் மூழ்கி முத்தெடுத்து செல்வோமாக..!

சாய்வைஷ்ணவி

நூல் தகவல்:

நூல் : மாதொருபாகன்

பிரிவு :  நாவல்

ஆசிரியர்: பெருமாள்முருகன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு :   முதற்பதிப்பு 2010 | திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு 2011

பக்கங்கள் : 192

விலை :  ₹190

Kindle Edition :  

English Translation 

இந்நூலின் மற்றொரு விமர்சனம். 

மாதொருபாகன் – விமர்சனம்

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *