அபுனைவுநூல் விமர்சனம்

ஒரேதரம் (தஞ்சை ப்ரகாஷ் வாழ்க்கைக் குறிப்புகள்) – விமர்சனம்


 

“ஒலித்துக் கொண்டிருக்கும் இசையைக்

காதால் கேட்க இயலாதவர்கள் அங்கே

நடனமாடுபவர்களைப் பைத்தியக்காரர்களென்று

நினைத்தார்கள்”

–    ஃபிரட்ரிக் நீட்ச்

இந்த மேற்கோளுடன் ஒத்துப்போன வாழ்க்கையை வாழ்க்கை என்று சொல்வதைக் காட்டிலும் வாழ்வை வாழ்ந்தவர்தான் தஞ்சை ப்ரகாஷ் அவர்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவருடைய மேபல் என்ற சிறுகதைத் தொகுப்பினை தஞ்சாவூரில் வெங்கட்சாமிநாதன் அவர்கள் தலைமையில் அனன்யா பதிப்பகம் சார்பாக நடத்தினோம். விழாவை எப்படி நடத்தலாம் எனத் திட்டமிட ப்ரகாஷ் அவர்களது வீட்டிற்குப் போனோம். அப்போது தனக்குப் புத்தகம் வெளிவருவது, தனக்கு நண்பர்கள் விழா எடுப்பது இந்த விஷயங்களையெல்லாம் ஓரம்தள்ளிவிட்டு தஞ்சாவூர் மராட்டியர்கள் பற்றி ப்ரகாஷ் ஒரு சாயுங்கால நேரத்தில் பேசத் தொடங்கிவிட்டார். லேசாகத் துவங்கிய அந்தப் பேச்சு இரவு முழுவதும் நீண்டது. ப்ரகாஷ் பேசிக்கொண்டே இருந்தார். சம்பாஷனைகளில் தேர்ந்த இலக்கியவாதிகளைப் பார்ப்பது அரிது. ப்ரகாஷ் அப்படியொரு கலைஞன். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தன்னை முன்வைக்காத கலைஞன்.

எத்தனையோ எழுத்துக் கலைஞர்களின் படைப்பு மனோநிலைக்கு பக்கபலமாகவும் தூண்டுதலாகவும் இருந்த அற்புதமான மனிதர்.

சிலரோடு வாய்க்கும் பொழுதுகளில் ஒரு படைப்பாளிக்குத் தனது படைப்பின் படிம உத்திகளையும் கற்பனா உத்திகளையும் அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் மனநிலையைப் பெறமுடியும். ப்ரகாஷ் அவர்களோடு இருக்கும் பொழுதுகள் அப்படிப்பட்டவை.

பொழுதைத் தூக்கி சிறகில் வைத்துப் பறந்த ப்ரகாஷ் என்ற பறவையோடு வாழ்ந்த அற்புதமான வாழ்வை, அவரது இணைப் பறவை திருமதி மங்கையர்க்கரசி ப்ரகாஷ் அவர்கள் “ஒரேதரம்” என்ற அவரது நூலில் தஞ்சை ப்ரகாஷின் வாழ்க்கைக் குறிப்புகளைச் சித்திரமாகத் தீட்டியுள்ளார்.

அந்த சித்திரக் கேன்வாஸிலிருந்து எத்தனையோ எழுத்துக் கலைஞர்கள், ஒரு பாசஞ்சர் புகைவண்டியிலிருந்து பயணிகள் இறங்குவது மாதிரி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வரவேற்க தஞ்சை புகைவண்டி நிலையத்தில் ப்ரகாஷ் அமர்ந்திருந்த அந்த இருக்கை இன்று வெறுமையாய் இருக்கிறது. அந்த இருக்கையை நிரப்ப இனி யாராலும் இயலாது. அப்படி இலங்கையிலிருந்தும் அண்டை மாநிலங்களிலுமிருந்தும் வந்த எழுத்தாளர்கள் ப்ரகாஷின் விருந்தோம்பலைப் பெற்று ஊர்திரும்ப மனமில்லாது திரும்பியிருக்கிறார்கள்.

ஒரு எழுத்தாளனுடைய கலை வாழ்வினை உடனிருந்து வாழ்ந்தனுபவித்த அவரது துணைவியார் எழுதிய இந்த நூல் காலம் முன்னிறுத்தியப் படைப்பாளியாகிய தஞ்சை ப்ரகாஷ் அவர்களை நம் கண்முன் நிறுத்துகிறது. காவிரி, கரமுண்டார் கோட்டை, கார்டன் அம்மா, நூலகம், சமையல், இசை, யுவர் மெஸ், கடிதங்கள், வைத்தியம், ஜோதிடம், என்ற முடிவுறாத அன்போடு நம்மைக் கட்டமைத்துக் கட்டவிழ்க்கிறது ப்ரகாஷ் என்ற அந்தக் கலைஞனைப் போலவே.

ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஞானவித்து ஒவ்வொரு விதமாகக் கிடைக்கும். ப்ரகாஷ் தனக்கான ஞானவித்தைத் தனது மூதாதையர்களிடம்தான் கண்டடைந்திருக்கிறார்.

தனது தாய்வழித் தாத்தாவான ஞானப்பிரகாசம் பிள்ளை தோடி ராகத்திற்கான ஸ்வர வரிசைகளையும் எழுதி வைத்திருக்கிறார். சீட்டு விளையாட்டைக் கண்டிக்கும் பாடலையும் எழுதி இருக்கிறார். ஏராளமான மருத்துவக் குறிப்புகளையும் இசைக்குறிப்புகளையும் பாடல்களையும் எழுதி பல்துறை வித்தகராக இருந்திருக்கிறார். 1800களின் தொடக்கத்தில் இவர் எழுதியவைகள் இன்றளவும் நூலாக்கம் பெறவில்லை என்பது “ஒரேதரம்” என்ற இந்நூல் முன்வைக்கும் முக்கியமான செய்தி.

தஞ்சை ப்ரகாஷ் அவர்களுடைய தந்தையான எட்வர்ட் கார்டன் அவர்களின் ஆளுமை மிக்க வாழ்வையும் மங்கையர்க்கரசி ப்ரகாஷ் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். எழுத்தாளர்கள் தங்களின் சுயத்தைத் தானே எழுதியுள்ள புத்தகங்கள் நிறையவே வந்துள்ள நம் இலக்கியச் சூழலில் தஞ்சை ப்ரகாஷ் என்ற ஆளுமையோடு தான் வாழ்ந்த வாழ்க்கையை உணர்வுப் பூர்வமாக பதிவு செய்துள்ளார் திருமதி மங்கையர்க்கரசி ப்ரகாஷ் அவர்கள். அனேகமாக ஒரு எழுத்தாளரைப் பற்றி அவருடன் வாழ்ந்த அனுபவங்களைப் பற்றி அவரது மனைவியே எழுதியுள்ள முக்கியமான நூல் என்று இதனைச் சொல்லலாம்.

இலக்கியத்தையும் தத்துவத்தையும் தனது கதை சொல்லல் முறையாகக் கண்டுணர்ந்த ப்ரகாஷ், தனது வாழ்க்கைத் தத்துவமும் இலக்கிய வாழ்வும் ஒருசேர கலைகளுக்காகவே என்று தீர்மாணித்தவர். அந்த அர்ப்பண வாழ்வை ஒரு சாகசம் போலவே வாழ்ந்திருக்கிறார். அதனாலேயே நாவல் என்ற வடிவம் பெரு வளர்ச்சியடைந்துள்ள இந்த காலக்கட்டத்திலும் அவரது படைப்புகளான கள்ளம், கரமுண்டார் ஆடு, மீனின் சிறகுகள் என்ற புதினங்கள் இன்று வாசகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் படைப்புகளாக உள்ளன.

1980களின் பிற்பகுதியில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் அறிமுகத்திற்குப் பிற்பாடு தமிழ் இலக்கியப் போக்குகளில் ஏற்பட்ட மாறுபாடுகளை அறிந்து கொள்ள அன்றைக்குத் தஞ்சை மாவட்டத்தின் இளைஞர்களுக்கு ப்ரகாஷ் ஒரு ஆவணமாக இருந்தார்.

தஞ்சாவூர் பெரியகோவில் புல்வெளியின் மங்கிய விளக்கொளியிலமர்ந்து, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தொட்டு ஹீலியோ கொர்த்தாசார், ஜார்ஜ் லூயிஸ் போர்ஹே, இசபெல் அய்யந்தே என்ற லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் இலக்கிய முகங்களை பேராவலோடு ப்ரகாஷ் பேசும் பொழுதுகள் இனி எப்போது கிடைக்கும்.

எந்தப்படைப்பையும் புறந்தள்ளாமல் அதன் நிறை குறைகளை உள்வாங்கி படைப்பாளிகளை உற்சாகப்படுத்தியும் அவர்களது எழுதும் திறனை மேன்மையுறச் செய்யவும் கூடிய ஒரு விமர்சன ஆளுமையெனப் ப்ரகாஷைச் சொல்ல வேண்டும்.

ஒரு புத்தகத்தை எழுதும் தூண்டுதல் என்னவாக இருக்கும். ஒரு கவிதையின் முதல்வரி போலதான் அது அமைந்துவிடுகிறது. ஏதோ ஒரு பரிதவிப்பின் மூலமோ, இழப்பின் மூலமோ, நேசத்தின் மூலமோதான் அது அமைகிறது. ப்ரகாஷோடு வாழ்ந்த அந்த அடர்த்தியான அன்பில், நினைவுகளின் தனிமையில்தான் இந்த புத்தகத்தின் சொற்கள் மீன் குஞ்சுகளாக நீந்துகின்றன. இந்த எழுத்தின் நிதானத்தைப் பார்க்கும்போது தனது தனிமையை தானே அழகரிக்கும் வித்தையையும் ப்ரகாஷ் தனது துணைவியாருக்குக் கற்றுக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது. அனாந்தரங்களுள் உலவும் அன்பைப் போதித்த படைப்புகளை தனது மூச்சுள்ளவரை சிலாகித்துக் கொண்டிருந்தவர்தானே ப்ரகாஷ்.

ப்ரகாஷ் ஒரு முன்னணி எழுத்தாளராக உருவாகியிருக்க முடியும். ஏனோ, படைப்பதை இரண்டாம்பட்சமாக வைத்துக்கொண்டு இலக்கிய ஆசிரியர்களைப் போற்றிப் பேணுவதில் நேரம், செல்வம் அனைத்தையும் செலவழித்தார். இருபதாம் நூற்றாண்டின் தகவல் களஞ்சியமாக விளங்கினார் என்று அசோகமித்ரன் குறிப்பிடுகிறார். படைப்புரீதியான ப்ரகாஷின் இயக்கம் சற்றுக் குறைவுபடவேத் தோன்றினாலும் காலம் முன்னிறுத்தியக் கலைஞனாக, காலத்தால் கனிந்த கலைஞனாகவே இன்றைய வாசகர்களுக்கு ப்ரகாஷ் தெரிகிறார்.

இந்த “ஒரேதரம்” என்ற புத்தகத்தில் அவரது படைப்புகளைப் பற்றி முன்னணிப் படைப்பாளிகள் பலர் குறிப்பிட்டுள்ளார்கள். தனது இலக்கியத்தைப் பற்றித் தனது படைப்புகளைப் பற்றிய வல்லிகண்ணன் எழுதிய விமர்சனத்துக்கு ப்ரகாஷ் இவ்வாறாகப் பதிலளிக்கிறார்.

“எனது நாவல்களைப் படித்தபோது உங்களுக்கு ஏற்பட்டுள்ள கவலை, அருவெறுப்பு, சகிக்க முடியாதவை ஆகிய உணர்வுகள் எனக்கு இந்த சமூகத்தைப் பார்க்கும்போது அறிய வருகிறது. தெரிவு எல்லாம் நாவலுக்கு ஆளாக உங்கள் கதியேதான் எனக்கும். இந்த அவலம் நிறைந்த கள்ளர்கள் இனப்படுகொலைகளையும் சமுதாயச் சழக்குகளையும் ஒரு ஆயுள்முழுவதும் அனுபவித்து அதன் கோர நாற்றங்களையும் வரவுக்கு கொண்டு வரமுடியாத பிறழ்வுகளையும் முன்னேற்றம் அற்ற பிற்போக்குகளையும் உயர்வாக சித்தரித்து நாவல் எழுதி உலக உத்தமர் சரிதம் படைக்க, சத்தியத்தை நடக்கவிட, போலித்துவம் கொண்டுவர நான் முயலவில்லை. செய்யவும் மாட்டேன். உலகத்தைத் திருத்த எனக்கு சுத்தம் போதாது தெளிவும் இல்லை. சக்தியும் இல்லை. நீங்கள் குறைவாக கருதும் காம விகார லோகங்கள் வெளிமிகும் கீழ்தள வாலிபம் கோரும் மதன தாண்டவங்களை நான் நடைமுறை உலகில் அறிந்த அளவு சித்தரிக்கவேயில்லை. கள்ளர் பள்ளர் இனத்தின் எல்லாக் காமலீலைகளையும் சொல்லவும் முடியவில்லை. பத்து விழுக்காடு எழுத முயன்றுள்ளேன். இவைகளை எழுதக் கூச வேண்டும் என்கிற பண்பு உயர்வானதல்ல புண்ணுக்குப் புணுகு”. இவ்வாறாகத் தனது படைப்புகளைப் பற்றிய எண்ணங் கொண்டிருந்தார்.

உலகின் கலாச்சார மேதைகளுக்கெல்லாம் சவால் விட்டுக் கொண்டிருந்த ஜெனெவின் (JEAN GENET) இலக்கியக் கொள்கைகளை ஒத்திருந்தவை தஞ்சை ப்ரகாஷுடைய படைப்புகள்.

ஜி.நாகராஜனைப் பற்றி கி.ராஜநாராயணன் குறிப்பிடும் போது அவர் ஒரு ‘தனி’ப்பிறவி என்று சொல்வார். அதுபோலத்தான் ப்ரகாஷ் அவர்களும். அப்படிப் பிறப்புகளையெல்லாம் இனிக்காணமுடியாது.

இந்த நூலில் வீடு, குடும்பம், மனைவி இவைகளைக் காட்டிலும் ப்ரகாஷுக்கு இலக்கியம் உன்னதமாயிருந்தது. இலக்கிய நண்பர்கள் உன்னதமாயிருந்தார்கள். இலக்கியமே வாழ்க்கையாகக் கொண்டிருப்பது உன்னதமாயிருந்தது. இப்பேர்ப்பட்ட உன்னதங்களைச் சுமந்திருந்த கலைஞனோடு வாழ்ந்த பேருன்னதம் திருமதி மங்கையர்க்கரசி ப்ரகாஷ் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. அதனால்தான் இந்த மனிதனிடமிருந்த நேர்த்தியான கலைஞனை எடுத்து விவிலியச் சொற்களில் ஒரு காதல் கடிதம் போல இந்த “ஓரேதரம்” என்ற புத்தகத்தை நெசவு செய்ய முடிந்திருக்கிறது.

சுகுமாறனின் ஒரு கவிதையொன்றும் நினைவுக்கு வருகிறது.

                சரணாலயத்துக்கு வரும் பறவைபோல

இந்த மலை நகரத்துக்குத் திரும்பத் திரும்ப வருகிறேன்

தைல வாசனையுள்ள காற்றுகளில்

கரைந்திருக்கிறது என் இளமை நினைவுகள்

 

வலுவற்றது

ஆயிரம் வருடக் களிம்பேறிய என் கைமொழி

உன் பிரியத்தைச் சொல்ல

 

எளிமையானது உன் அன்பு

நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர் போல

 

அந்த நதி தனது நீரை எல்லோருக்குமாகப் பருகக் கொடுத்தது. இந்தப் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தின் கடைசி பத்தி இவ்வாறாக முடிக்கிறார் மங்கையர்க்கரசி ப்ரகாஷ்.

நான் கபிஸ் தலத்தில் வேலை செய்யும்போது உமையாள் புரம் என்ற ஊர். அவ்வூர் ஜோசியாரிடம் அந்த ஊர் தாய்சேய் நல விடுதி செவிலியர் ரெக்ஸ் மேரி என்னைக் கூப்பிட்டுக் கொண்டு சென்று “இவர்களுக்கு ஜோசியம் சொல்லுங்கள் என்றார்கள். அவர் கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகும். பல தொழில் கற்றவராகவும் பார்க்கவும் நல்லா இருப்பார். ஒரு குழந்தை என்றார். பின்பு அவர் கணவர் தூங்குவது போல் இறந்து விடுவார்” என்றார்.

ஆகையால் வாழ்நாள் பூரா தூங்கும்போது இவருக்கு மூச்சு வருகிறதா என்று பார்த்து புரட்டிப் போட்டுக் கொண்டுதான் இடுப்பேன். நான் கவனிக்காத ஒரு நொடியில் காத்திருந்ததைப் பொல் அது பறந்து விட்டது.

ப்ரகாஷுடைய அந்த மூச்சுக் காற்று எங்கே பறந்து போயிருக்கப் போகிறது பஜாஜ் சேதக் ஸ்கூட்டரில் அவர் ஆசை ஆசையாய் சுற்றித் திரிந்த தஞ்சாவூர் வீதிகளில்… மிஷன் தெருவில், கரமுண்டார் கோட்டையில், பயண வழிகளில்… இன்னும் ஆசை ஆசையாய் அவர் எழுத நினைத்த கடிதங்களில்… யாரோ ஒரு இலக்கியவாதியை வரவேற்றுக் காத்திருந்த தஞ்சாவூர் புகைவண்டி நிலையத்தின் சிமெண்ட் இருக்கையில்… இன்னமும் இன்னமும் புதிதாக எழுத வரப் போகிற புதிய இலக்கியப் படைப்பாளியின் சொற்களில்…


வியாகுலன்

 

நூல் தகவல்:
நூல் :

ஒரேதரம்

(தஞ்சை ப்ரகாஷ் வாழ்க்கைக் குறிப்புகள்)

பிரிவு : நினைவுக் குறிப்புகள்
ஆசிரியர்:

மங்கையர்க்கரசி ப்ரகாஷ்

வெளியீடு: நந்தி பதிப்பகம். தஞ்சாவூர்.
வெளியான ஆண்டு : 2021
பக்கங்கள் : 128
விலை : 200
தொடர்புக்கு : 9894781461,9443999550

 

 

3 thoughts on “ஒரேதரம் (தஞ்சை ப்ரகாஷ் வாழ்க்கைக் குறிப்புகள்) – விமர்சனம்

  • தஞ்சை பெரியகோவில் புல் வெளிகாற்றை தன் இலக்கிய உரையாடல் வழி நிறைத்தவர். பல இலக்கிய ஆளுமைகளை தஞ்சை நோக்கி ஈர்த்தவர் பிரகாஷ். மாக்ஸிம் கார்க்யின் “தாய்” நாவலில் வரும் தாய் புரட்சியை அங்கீகரிக்கும் போது ஏற்படும் பரவசத்தை கொடுக்கிறது பிரகாஷின் மனைவி அவரை எழுத்தாழுமையாக அங்கீகரிக்கும் தருணம். தஞ்சை பிரகாஷின் கலையும் வாழ்வும் குறித்த சிறப்பான பதிவு.

    Reply
  • கவிஞர் வியாகுலன் தன் உள்ளார்ந்த நல் மனம் கொண்டு ஒரே தரம் கட்டுரைத்👍தொகுப்பினை வெளிச்சப் பொழிவில் விரித்து அழகேற்றியிருப்பது புலனாகிறது மேலும் கவிஞர் வியாகுலன் எங்களது ஆசான் படைப்பான மேபலை அந்தச் சிறு கதைத் தொகுப்பை அவர் வாழும் காலத்திலேயே வெளியிட்டு சிறப்பு செய்தவர். நெடுவெளி மிதக்கும் தனிச்சுக ராகமாளிகை எங்களது ஆசான் தஞ்சை பிரகாஷ் அவரை பற்றிப் பேசாப்பொருளில்லை பொழுதில்லை எனக்கும் என் சஹ்ருதயர்களுக்கும். சற்றே அசந்தாலும் சாய்ந்து விழுகுற சாய்த்து விடுகுற எவரும் தொட்டுவிடத் தயங்கும் சுட்டிக்காட்டவே அஞ்சுகிற ப்ரச்சனைகளினை தீவிரத்தை வெகுஅநாயஸமாக தனித்து நின்று தன்னுடைய ஆளுமைத் திறனால் படைப்பு வெளியில் ஆயுளுக்கும் நின்று இப்பொழுதும் கூட நின்று விளையாடி வெற்றி கண்டு நிலை பேறடைந்தவர் ஆசான் பிரகாஷ். கட்புலனுக்கப்பால் விரிந்தேகுகிற திசைகளடைத்தப் புறங்களில் எல்லாம் அழைத்துச் சென்று நின்றேகும் ஒளிக்கரம் அவருடையது அம் மகா கலகக் கலைனின் உற்ற துணையாக உள்ளுறைத் தோழியாகவே இருந்தவர் இருப்பவர் திருமதி மங்கையற்கரசி பிரகாஷ் அம்மா அவர்கள். தன் மனதில் பட்டதை துளியும் மறைக்காது பேசும் தூய மன வெளிப்பாட்டுச் சித்திரமே ஒரேதரம் என்பதை வியாகுலனின் மதிப்புக் கட்டுரையும் நிறுவுகிறது
    கவிஜீவன்

    Reply
    • சிறப்பான பதிவு பிரகாஷ் பற்றி ஒரு விரிவான யதிவு. படிக்கும்போதே நூலை நூலை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனன்யா பதிப்பகம் மற்றும் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள் .
      சித்தன். கேசி
      @ கார்த்திகேயன்

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *