• சிவ நித்யஸ்ரீ எழுதிய “ நீ ததும்பும் பெருவனம்” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அணிந்துரை.

காதலின் முழுமையை அபூர்வ கணங்களால் கண்டெடுக்கும் கண்களும் இதயமும் வாய்க்கப்பெற்று தமிழ்க் கவிதை உலகில் இதுவரை யாரும் வந்தடையாத கவிதை மனத்தின் புதிய திறப்பில் எளிமையும் ஆழமும் மிகுந்த நவீன அம்சத்தில் ஒளிரும் புத்தம்புது சொற்கள் நித்தியாவுடையவை.

மெனக்கெட்டு புதுமையைத் தேடும் எண்ணற்றவர்களின் நெடும் பயணத்தில் தென்படாத புத்துணர்வு, அகப்படாத அருஞ்சொற்கள், பழக வாய்க்காத பண் ஒழுங்கு, ஏற்பாடற்ற மொழி நேர்மை, எவரும் பின் ஒதுக்க வழியற்ற அசல் தன்மை, எப்படி இது சாத்தியம் என வியக்கும் ஒளித்தருணம் மட்டுமன்றி பூரண இருட் தருணமும் என நிறைந்த பிரவாகம் இக்கவிதைகள்.

வெகு தொலைவிலிருந்து பயணிக்கும் ஒருவனின் நெடுந் தாகத்திற்கு நீர் மிடறு இக்கவிதைகள் என்றும் சொல்லத் தோன்றுகிறது.

உயிர்க் கூட்டின் உள் நடனத்திற்கு யாரோ இசை அமைத்து அதற்கென எழுதப்பட்ட வரிகள் இவை என்றும் புளகாங்கிதம் அடையலாம்.

மடைதிறந்த வெள்ளம் போல மனத்திறப்பின் வெள்ளமாக பாய்கின்றன இக்கவிதைகள். இது எதிர் வரும் எவரையும் அடித்துச் செல்லும் அசாத்திய அன்புடைய வெளிப்பாட்டின் அதீத உண்மை. வாசிக்கும் எவருக்கும் விரும்பித் தொலையும் விருப்பத்தையே கையளிக்கும் நேசத்துடன் கூடிய வரிகள் தொகுப்பின் ஒவ்வொரு பக்கத்திலும்.

இப்படியெல்லாம் எழுத முடியுமா நவீனத்தின் உச்சத்தில் தமை நிறுத்தித் திமிரும் ஒருவருக்குமே வாய்க்காத ஒன்று, எழுத முடியாத, சொல்ல முடியாத ஒன்று, எந்த இலக்கியமும் சந்தித்திராத புதுவெளி, இதுவரை எழுதப்பட்ட காதல் வரிகளுக்கெல்லாம் நரைமுடி, ஆதி விதையில் உயிர்த்தெழுந்த அதிநவீனச் சுவைமிகு சொல் அலங்காரம்,
எந்தக் கவிச் சாளரத்திலும் பரவாத உள் ஒளி, எத்தனைக் கதவுகளைத் திறந்தாலும் அடைய முடியாத மெய் ஞானம், சூசகமற்ற, பூடகம் இல்லாத அர்த்த மலர்வு, ஒவ்வொரு சொல்லும் காதல் நங்கூரம், காமம் வேறு காதல் வேறு என்று பாடும் மூடத்தனத்தின் முதுகில் விழும் சவுக்கடி.

அகமும் புறமும் சொல்லமறந்த அற்புதம், வெளி கண்களால் அறிந்து கொள்ள முடியாத உ ட் கண்களின் நுட்ப பார்வை, சின்னஞ்சிறு சொற்களின் முயங்குதலில் ஒழுகும் பேரருவி ,பாய்ந்து நிறையும் பெருங்கடல், கைப்பிடியில் அடங்கும் காம வானம், பின்னும் யாரும் தீட்ட முடியாத மாயச் சித்திரம்.

கூச்சமோ, வெட்கமோ மறைந்து ஒதுங்கும் நிர்ப்பந்தமோ, திரைச்சீலையோ, உடையோ, போர்வையோ, ஒளிந்து நிற்கும் மர்மமோ, ஒளிந்து கொள்ள வேண்டிய நிர்வாண மோ அல்ல இக்கவிதைகள், தமிழின் புத்திளைமை யாக இவ்வரிகளை பறை சாற்றலாம். அகத்திறப்பில் நிரம்பிய பக்கங்கள் நீரோட்டம் போல பாய்ந்து ஈரம் நிறைக்கிறது. உலகமும் உலகின் எல்லா உயிர்களும் தேடி அலையும் ஈரம், மழை யும் பெருங்கடலும் தர முடியாத ஈரம்
நித்யாவின் கவிதைகளில் நிரம்பி வழிகிறது.

உயிர்கள் அன்புக்கும் அமைதிக்குமே அலைகின்றன, அவை இரண்டையும் கவிதைகளின் வழியாக கொண்டு சேர்க்கும் உயிராக உள்ளமாக நித்யாவை பார்க்கிறேன். கருணையற்ற ஒரு மனத்தால் எழுதவே முடியாத வரிகள் இவை. இருளும் சுடரும் போல இக்கவிதைகள் அர்த்தம் மிகுந்து அசைகின்றன

இதுவரை வாசித்திராத அற்புதம் ,இதுவரை போய்ச் சேராத அகநிலை, வாசித்து வாசித்து மோட்சம் கொள்ளும் இதயப்பித்து, மிகச் சாதாரண துடிப்பில் இருந்து பிரகாசிக்கும் அசாதாரணம், எங்கிருந்தோ முகம் தெரியாத ஒருத்தியிடம் இருந்து என்னை வந்தடைந்த, அல்லது நான் போய்ச்சேர வாய்த்த கவிதை கிரகம், நல்லதோர் இசைக்கருவியின் காற்று ஒழுகல் , காதலின், காமத்தின் நன் சூத்திரம். கனவி லா தெளிவின் தலையாய கவி ப் பூரணம், உடல்கள் இயைந்து நிகழ்த்தும் கூத்தின் ஆதி அந்தத் தாளம் கடவுள்கள் எதிர்ப்படாத ஆனந்தத்தில் கடந்துசெல்லும் உள், ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும் அதையும் கடந்து திமிரும் அற்புதத்தின் திமிர், ஆம் அற்புத திமிரே இக்கவிதைகள் என்பேன் திமிர் அப்படியே தி மிரட்டும் நித்யாவின் கவி மனத்திலும் இனியும் எழுதும் கவி வரிகளிலும்.

நான் அத்திமிரை அகத்திமிரை போற்றி பாதுகாக்க மன்றாடுகிறேன். தொடர்ந்து செல்க நல்லுயிரே… வெற்றிக்கும் தோல்விக்கும் மேலானவள் நீ ,மேலானது உன் எழுத்தும் . இன்னும் நிமிர்ந்து இப்படியே எழுதிச் செல்க நின் விரல்கள்.

வாழ்த்துகள்!

பிரியமுடன்
குகை மா.புகழேந்தி


நூல் தகவல்:

நூல் :  நீ ததும்பும் பெருவனம்

பிரிவு:  கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் : சிவ நித்யஸ்ரீ

வெளியீடு :  தேநீர் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  பிப்ரவரி 2021

விலை: ₹ 140

நூலை வாங்க : 📱 9080909600

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *