- சுகன்யா ஞானசூரியின் “நாடிலி” கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் யவனிகா ஸ்ரீராம் எழுதிய முன்னுரை.
பழங்கால மன்னர்களின் சுயாதீன வரலாறுகள் போக பலகாலமாக ஈழத்தமிழர்களின் இலக்கியங்களும் தாய்த்தமிழகத்தின் இலக்கியங்களும் தங்களுக்குள் கொண்டும் கொடுத்தும் நாளடைவில் வளர்ந்தும் வந்திருக்கின்றன. ஆறுமுகநாவலர் தொடங்கி கைலாசபதி நுமான் சேரன் சிவரமணி வசஐஜெயபாலன் கனகரட்னம் புஷ்பராசா சோலைக்கிளி, ரியாஸ் குரானா தமிழ்நதி குணாகவியழகன் தீபச்செல்வன் எஸ் போ ஈழவாணி ஷோபாசக்தி சயந்தன் எனக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக இலங்கையிலிருந்து எழுதிவரும் பல்வேறு இலக்கியங்களை நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, தமிழ்இன அழித்தொழிப்பு என்கிறவகையில் சிங்களக் கடும் படைகளால் மேலும் சர்வதேச கார்ப்ரேட் சதிகளால் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு யுத்த அவலங்கள், அதற்கான சாட்சியங்கள் என பல்வேறு நிலைப்பாடுகளிலிருந்து ஈழ எழுத்தாளர்களின் நாவல், சிறுகதை, கவிதைகள் மேலும் கட்டுரைகள் எனப் பலவும் நமக்கு வாசிக்கக் கிடைத்தபடி இருக்கின்றன.இதற்கிடையே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியங்கள் பலவும் தொடர்ந்து நமது மனதிலும் எழுத்திலும் ஒருவித ஊடுருவலை நிகழ்த்தி தாய்த் தமிழகத்தின் இலக்கிய வகைமைகளுக்குள்ளே ஒரு வரலாற்று நிகழ்வாய் அவை தனக்கான தனி இடத்தையும் பிடித்துக் கொண்டுள்ளன.
தலித், பெண்ணிய, சூழலிய இலக்கியங்களுக்கு இடையே ஈழத் தமிழ் இலக்கியத்தையும் அரசியல்கள்வழியே அவை எதிர்கொண்ட நெருக்கடிகள் மரணங்கள் யுத்தம் அதன் பாரிய விளைவுகள் யாவற்றையும் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். ஈழ இலக்கியத்தில் பொதுவாகத் தென்படும் உரிமை இழப்பு, மரணங்கள், காணி இழப்பு என ஒரு இருபத்தைந்து வருட வாழ்க்கை அவர்களை உருக்குலைத்து உலகெங்கும் விசிறிப் போட்டுவிட்டிருக்கிறது. முக்கியமாக, நிறையக் கவிஞர்கள் தங்களுடைய மன அழுத்தத்தையும், ஆற்றொணா துயரங்களையும், உறவுகள் இழப்பையும், ஈழத்தில் தாம் வாழ்ந்த கனவுகளின் முடிவையும் பலவாறாக எழுதவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, தாங்களே அதற்கு சாட்சியங்களாகவும் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் அகதிகளாக வந்து குடியேறியதைப் போல அவ்விலக்கியங்களும் அகதிகளைப் போலவே இன்றளவில் இங்கு வந்து இலக்கியத் தளத்தில் தனித்த வகைமை என்கிற அளவில் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. தொடக்க கால ஈழ இலக்கியத்திற்கும் இன்றைய அதன் இலக்கியத்திற்கும் இடையே அகதிவாழ்வை ஒட்டி எத்தனை மாற்றங்கள்?
அந்தவகையில், யாழ்ப்பாணம் மாகாணத்தில் உள்ள அச்சுவேலி வடக்குப் பகுதியிலிருந்து தமிழகத்துக்கு அகதியாக வந்து சேர்ந்து, திருச்சியில் வசித்துவரும் சுகன்யா ஞானசூரியின் இரண்டாவது தொகுப்பான, நாடிலி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தக் கவிதைத் தொகுப்பு நினைவிலும் வாழ்விலும் தனித்து விடப்பட்டு, தன் வாழ்வை செப்பம் செய்தபடி புலம்பெயர்ந்த இடத்தில் தன் பிறப்பிட அகப்புற கனவுகளை அல்லது புகலிடப் பதற்றத்தை இன்னும் நிலைத்தன்மை அற்ற அச்சத்துடன் கவிதைகளாக பதிவு செய்திருக்கிறது..
கடும் யுத்த காலங்களுக்கு முன்போ, பின்போ இந்திய-இலங்கை ஒப்பந்தங்களிலிருந்து தாய்த் தமிழகத்துக்குத் தருவிக்கப்பட்டவர்கள் அல்லது அந்த நெருக்கடியிலிருந்து தப்பி உயிர்வாழ உலகமெங்கும் பரந்து சென்றவர்கள் என இந்த அகதி வாழ்வில் இரட்டைத்த்தன்மை தென்படுகிறது. மனிதன், தன் இருத்தலுக்காக ஒருகட்டத்தில் பிறந்த இடம், நாடு, தேசியம் போன்ற எல்லைகளைக் கடக்கவேண்டியிருக்கிறது என்பது பொதுவாக, உலக நாடுகள் அனைத்துக்கும் பொருந்துகிறது. என்றாலும் ஒரு பனையடி நிலத்தில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்த இக் கவிஞர், இரு தேசியத்திலும் இல்லாமல் எப்போதும் கண்காணிப்புக்குள் உள்ளவராகவும், குடியுரிமை, வேலைவாய்ப்பு போன்றவற்றில் தன் அக ஒழுங்கை புலம்பெயர்ந்த இடத்தில் தீர்மானித்துக்கொள்ள வேண்டியவராகவும் வாழ நேர்ந்திருப்பது துயரமானதுதான். இந்நிலையில் இருந்துதான் சுகன்யா ஞானசூரியின் கவிதைகள் தன்னிருப்பை பேசத் தொடங்குகின்றன. எதன்மீதும் குற்றச்சாட்டுகள் இன்றியே இக் கவிதைகளை தன் மன அழுத்தங்களுக்கு அப்பால் கவிஞர் இடப்படுத்துகிறார். முழுக் கவிதைகளும் இருப்பின் நிகழ்கால விதியைச் சுற்றியே இயங்குகின்றன.
“அந்த
ஒற்றை மரத்தின்
உச்சக் கொப்பில்தான்
காதல் மொழி கதைத்தபடி
களித்திருந்தன
அத்தேசத்தின் பறவைகள்
காலைக் கதிரவன்
பின்காலைக்குள் செல்லும் வேளை
ஓய்ந்திருந்தது சுடுகுழல் சத்தம்
கனத்த மௌனத்தின்
பெரு வெளியில்
பதுங்குகுழி தாண்டியும்
பரவிக் கிடந்தன பறவையின் இறகுகள்
பறக்க மறுத்து
சிதறிக் கிடந்த
ஒவ்வொரு இறகையும் எடுத்து
எத்தனை கதைகள் நானெழுத”
என்ற கவிதையின் உள்ளடக்கம், ஈழத் தமிழர் வாழ்வின் முப்பது ஆண்டு காலத் தடங்களை உள்ளடக்கியிருக்கிறது. மறுதலையில் புலம்பெயர்ந்து வந்த இடத்தில் தகவமைந்துகொள்வதற்காக ஏற்றுக்கொள்ளும் இன்னல்கள். குறிப்பாக, அகதிகள் குடியிருப்பிலிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்துச் சுரண்டும் ஒரு கூட்டத்தையும் ஒரு கவிதையில் அறிமுகப்படுத்துகிறார். அகதி முகாம்களில் குடிமைப்பொருள் அட்டைக்காகவும் நிரந்தர குடிமகன் அட்டைக்காகவும் அவர்கள் படும்பாடு ஒருபுறமிருக்க வயிற்றுப்பாட்டிற்கென, எளிய வேலைகளைச் செய்து கூலிபெற்று மீண்டும் முகாம்களுக்குத் திரும்பும் அகதிகளின் நிலைமையையும் இக் கவிதைகள் கேள்விக்குட்படுத்துகின்றன. ஓரிடத்தில் ‘யாதும் ஊருமில்லை யாவரும் கேளிருமில்லை’ என்று எழுதுகிறார்.
கைவிடப்பட்ட துயரம் என்பதும் இடம்பெயர்ந்து வாழ்வதற்கு உள்ளான மனிதர்களின் வலி எத்தகையது, எவ்வளவு நிர்கதியானது என்பதை அரசியல்பூர்வமாக நம் தாய்த்தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கும் இங்குள்ள எளிய உழைக்கும் மக்களுக்குமிடையே வாழ்வை சமன் செய்துகொள்ளும் பார்வையில் தாய்த் தமிழகத்திலும் கைவிடப்படும் ஏதிலிகளை இவர் கவிதைகள் அடையாளம் காட்டுகின்றன. சார்பு வாழ்வு என்பது கவிஞர்களைப் பொறுத்தவரையில் எவ்வளவு தனித்து இருந்தாலும் தன் குரலால், மொழியால், சிந்தனையால் பொதுத்தளத்தின்மீதே அக்கறைகொண்டிருக்கும் என்பதற்கு சுகன்யா ஞானசூரியின் கவிதைகளும் பொருந்துகின்றன.
நவீனத்துவம், பின்நவீனத்துவம், அபத்தம், பகடி, ஊர்க்கதைகள் என இன்றைய கவிதைகள் அமைப்பு சார்ந்தும் சாராமலும் இன்றைய சமூக ஊடகங்களுக்குள் கொண்டுகொடுத்து கொள்வினையாகின்றன. வளர்ந்துவரும் மாற்றங்கள் ஒரு தனிமனிதனின் கவிதைக்கு என்னவிதமான கச்சாப்பொருளைத் தருகிறது என்பது ஒருபுறமிருக்க, நிலைத்த பண்பைப் பெறுவதற்கே மனிதன் போராடவேண்டியிருக்கிறது என்பதுதான் நவீன கவிதையின் உளவியலாகவும் இருக்கிறது. இத்தகைய நிலைப்பாட்டிற்கு இடையில் ஒரு கவிதை என்னவிதமான கலகத்தை முன்வைக்க முடியும் என்று பார்க்கும்போது, அதிகாரத்துக்கு எதிரான குரலாய் மட்டும் அவை தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்கின்றன என்பதோடு நிறுவனமயமாதல் என்கிறமுறையில் அதை எதிர்கொள்ளமுடியாத தனிமனிதர்கள் பெருகிவிட்ட ஒரு அவலமான இருப்பு நடைமுறைக்கு வந்துவிட்டது. சுகன்யா ஞானசூரியும் இதைத்தான் நம்மிடம் சொல்லுகிறார். பேசுகிறார். அவருடைய கவிதைகளும் இத்தகைய மனிதப்பாடுகளை முன்வைத்தே இவ்வுலகத்தின்மீது நேசம் கொள்கிறது, தன் அநாதைத்தனத்தையும் போக்கிக்கொள்கிறது, மேலும் நிராதரவான தன் பற்றுக்கம்பிகளை மானுட நம்பிக்கை வெளியில் நீட்டுகிறது. உலகமெலாம் பரவி இருக்கும் ஈழத்தமிழரின் புலப்பாடுகளை அவர்களின் வீடுதிரும்புதல் குறித்த எதிர்காலத்திற்கான கேள்விகளாக்கி வரும் அனேக பிரதிகளுக்கு மத்தியில் இத்தகைய நவீனக் கவிதைகளுக்குள் அகதி வாழ்வின் இன்னொரு கைப்பிடியளவு பரிமாணத்தையும் இத் தொகுப்பின்மூலம் நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம்.
கவிஞருக்கு வாழ்த்துகள்.!
யவனிகா ஸ்ரீராம்
நூல் : நாடிலி
வகை : கவிதைகள்
ஆசிரியர் : சுகன்யா ஞானசூரி
வெளியீடு : கடற்காகம்
வெளியான ஆண்டு: ஜூன் 2021
பக்கங்கள் : 96
விலை: ₹ 110