• கோ.லீலாவின்  “ஹைக்கூ தூண்டிலில் ஜென்” நூலுக்கு ஈரோடு தமிழன்பன் எழுதிய அணிந்துரை. 

ம் தமிழ் மொழியில் ஹைக்கூக் கவிதைகளை நிலை நிறுத்தியவர்களில் பெண்களின் இடம் குறிப்பிடத்தக்கதென்றே நான் சொல்வேன்.

சென்னை இராணி மேரி கல்லூரிப் பேராசிரியர் தி.லீலாவதியின் ‘இதுதான் ஹைக்கூ’, கவிஞர் நிர்மலா சுரேஷின்  ஹைகூ குறித்த முதல் முனைவர் பட்ட ஆய்வேடு,  அண்ணாமலைப் பல்கலைப் பேராசிரியர் மித்ராவின் ‘தமிழ் ஹைக்கூ: நேற்றும் இன்றும்’ ஆகிய நூல்கள்  இவ்வகையில் முன்னோடிகள் என்று சொல்லலாம்.

பிருந்தாசாரதியின் “மீன்கள் உறங்கும் குளம்” என்னும் ஹைக்கூ நூலை முன்வைத்து  “ஹைக்கூத் தூண்டிலில் ஜென்னைப் பிடிக்கும் பிருந்தா சாரதி” என்னும் தலைப்பில் ஒரு நூலையே தந்திருக்கும் திருக்குவளை கோ.லீலா மேற்குறித்த பட்டியலில் தகுதியோடு வந்து சேர்கிறார்.

பிருந்தா சாரதி, தமிழ் ஹைக்கூக் கவிஞர்களில் இரண்டாவது காலக்கட்டத்தின் முதல்வரிசைக் கவிஞர் என்று மதிக்கத்தக்க இடத்தில் இருப்பவர்.

அமுத பாரதி, அறிவுமதி, மு. முருகேஷ், மீனாசந்தர், உதயக்கண்ணன், புதுவைத் தமிழ்மணி போன்றோர் முதல் காலகட்டத்தில் இருந்து இன்னும் இயங்கி வருபவர்கள்.

இந்நிலையில் கோ.லீலா அவர்கள் குற்ற நற்ற ஆய்வுகளில் இறங்காமல் கவனத்தோடு ஒரு பாராட்டுமுறைத் திறனாய்வை நிகழ்த்தியுள்ளார்.

இதன் பொருட்டு ஹைக்கூவையும் ஜென்னையும் நூலின் தேவைக்கேற்ற அளவு கற்றிருப்பதை வரவேற்றுப் பாராட்ட வேண்டும்.

பொதுவாகவே ஹைக்கூவை , பெயர்ச்சொல் கவிதை என்று சொல்வதுண்டு. அச்சொல்லும் நேர்பொருளை உணர்த்தாமல் குறிப்புப் பொருள் உணர்த்தவே கவிதையில் வந்து நிற்கும்.

உய்த்தறியத் தூண்டுவதே கவிதையின் அலுவல். வடமொழியிலும் நேர்பொருளை அபிதா என்றும் ஆகுபெயரை லக்ஷணா என்றும் சொல்வர். ஆனந்தவர்மர் முற்றிலும் விலகிய மூன்றாவது ஆற்றலை வியந்து பேசினார்.

மொழியின் குறியீடு சாரந்த அந்த ஆற்றலே தொனிப் பொருள் என்று போற்றப்படுகிறது. தமிழ் இலக்கணம் உள்ளுறை, இறைச்சி என்றெல்லாம் பேசுவதை வியக்காமல் இருக்கமுடியாது.

கவிதைகளுக்குள் இப்படிப் பயணிக்கும்போதுதான் அவை நிகழ்த்தும் அதிசயங்களில் நாம் அகமிழந்து போகிறோம்.

கலீல் ஜிப்ரான் சொல்கிறான்-

“ஒருபனித்துளியைத்

தியானித்துக் கடலின்

மறைபொருள்களை எல்லாம்

கண்டறிந்தேன்”.

 

“I meditated upon

A dew drop and discovered the

secrets of the oceans”.

கோ. லீலாவுள்ளும் இப்படிச் செயற்படும் சித்தம் இருக்கிறது.

“உறங்குகிறான் வண்டியோட்டி

விழித்திருந்து வழிநடத்துகிறது

லாந்தர் விளக்கு”

பிருந்தாவின் இக்கவிதைக்கு முப்பரிமாணப் பார்வை கொண்டு லீலா தரும் நுட்பத் தெறிப்புகள் மிக அருமையானவை.

இக்கவிதையில் பிருந்தா நீள நீளமான வினைவடிவங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

உறங்குகிறான்

விழித்திருந்து

வழிநடத்துகிறது….

உறங்கும்  என்பதே போதாதா? விழித்து என்பதே போதாதா? அவ்வாறே வழிநடத்தும் போதுமே என்று சொல்லத் தோன்றலாம்.

நீளும் பயணம் நெடுகிலும் வினைகள் உறங்கிவிட்டால் என்ன ஆவது என்கிற கவலையும் வழிநெடுகத் தொடர்கிறது.

ஒரு கவிதை காட்சிப்படிமமாக வார்த்தைகள் களைந்தும் கடந்தும் நமக்குள் வந்து இயங்குவதை கோ. லீலா அவரகள்  பதஞ்சலி மற்றும் ஸாஸென் தன்மைகளோடு எடுத்துக்காட்டியுள்ளார்.

இரவுநேரம் வண்டியோட்டி உறங்குகிறான். உறக்கம் இங்கு சூக்குமத்தின் விழிப்பு என்கிறார் லீலா. இங்கு லாந்தர் விளக்கு ஒரு குறியீடுதான். அல்லது உருவமுள்ள உண்மை (physical  truth). இது அரூப உண்மையாக மாறும்போது கவிதை இயங்குதளம் மாறிவிடும்.

ஆயின் இத்தகைய விரிவாக்கவுரைகள் கவிதையைத் தாண்டி இப்படியெல்லாம் எங்கெங்கோ வாசகனை இட்டுச்செல்வது எந்த வகையில் கவிதை நியாயம் என்னும் வினாவை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.

எளிமையாய், அழகாய், இதமாய்  ஒரு அரும்பு மலர்வது போன்றும், ஒரு குழந்தை சிரிப்பது போன்றும் ஏதோ கவனத்தில் நாம் இருக்கும்போது நம்மை‌ மெல்ல‌ வருடிச் செல்லும் காற்றுப்போலவும் கவிதைகள் இல்லையா என்ன?

எனினும் நேர்ப் பொருளாய்க் கவிதை தட்டைப் பரிமாணத்தில் இயங்குவதைக் கடக்கும்போதுதான் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தின் அருகில் செல்லும் வாய்ப்பை வாசகன் பெறமுடியும் என்பது பாரதி கருத்து.

கவிதை எழுதுவதைவிட அதைப் புரிந்துகொள்வதுதான் கடினமானது என்பான் உருதுக் கவிஞன் மிர்சா காலிப். காலிப் வாசகனின் செயற்பாங்கை ஒளி மிகுந்த பார்வையோடு வெளிப்படுத்தி வைத்துள்ளான் என்று ஆய்வாளர்கள் சொல்வதுண்டு.

கோ.லீலாவும் பிருந்தாசாரதி கவிதைகளில் இப்படி ஒரு வாசகராய்ப் பயணித்துத் தாம் கண்டதையும் கொண்டதையும் நமக்குப் பகிர்ந்தளித்துள்ளார்.

இன்னும் இத்தகைய பயணங்கள் தொடரவும் பயன்கள் விளையவும் கோ.லீலா இடமாக இருக்க நாம் வாழ்த்துவோம்.

எது கவிதை என்ற வினாவால் பலவற்றை விலக்கியுள்ளோம். அதே வினாவால் நாம் பலவற்றைச் சேர்த்தும் உள்ளோம்.

காலமும் கவிதைகளை வைத்து அஞ்சாங்கல் ஆடுகிறது.‌ ஆடட்டுமே !

–  ஈரோடு தமிழன்பன்.

நூல் தகவல்:

நூல் : ஹைக்கூ தூண்டிலில் ஜென்

பிரிவு:  கட்டுரைகள்,  ஆய்வு நூல்

ஆசிரியர் : கோ.லீலா

வெளியீடு : படைப்பு  பதிப்பகம்

வெளியான ஆண்டு : 2020

விலை: ₹ 150