மொழிபெயர்ப்பு

வெண்ணிற இரவுகள் – ஒரு பார்வை


ஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியின் ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. நாவல் வெளியாகி 173 ஆண்டுகள் கடந்த பிறகும் வெண்ணிற இரவுகளில் மிதக்கும் காதலின் பித்தை, அதன் மென் மொழிகளை ஒரு வாசகரால் உள் வாங்கி வாசிக்கும்போது அது அவனுள் ஒரு ரகசியத்தை திறந்து விடுவதாகவே உள்ளது. அந்த ரகசியம் அவனுள் மொழியின்றி பிறர் அறியாது உறைந்து கிடக்கும் காதல்தான்.

அந்தக் கதாபாத்திரம் பீட்டர்ஸ்பர்க் நகரின் சூரியன் ஒளிரும் நள்ளிரவில் நடமாடும் 26 வயது இளைஞன். அவன் ஒரு கனவுலகவாசி. அவன் கனவில் மட்டுமே வாழக் கூடியவனாக இருக்கிறான்.அவனது நிஜம் என்பது வறுமையாலும் துயரங்களாலும் நிரம்பியது. அவனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. அவனால் ஒருவரோடு கூட நண்பனாக ஆக முடியவில்லை.  ஆனால் பீட்டர்ஸ்பர்க் நகரம் அவனது நண்பனாக இருப்பதை நம்மிடம் அறிமுகம் செய்கிறான். இதுவரை எந்தப் பெண்ணோடும் அவன் பேசியிருக்கவோ, பழகியிருக்கவோ இல்லை. பெண்களை நேரில் கண்டால் கூச்சமும், பேச்சுத் தடுமாற்றமும் அவனுக்கு ஏற்பட்டுவிடும்.

ஒரு இரவு நேரத்தில் ஒரு பாலத்தின் அருகே சிறிதும் எதிர்பாராத நிகழ்வாக ஒரு பெண்ணைச் சந்திக்க நேர்கிறது.

ஒரு நபரின் எதிர்பாராத துன்புறுத்தலிலிருந்தும் அவளை மீட்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவன் அவளிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான். அந்த அறிமுகத்தின் வழியே தன் தனிமையை அவளுக்குப் புரிய வைக்க முயல்கிறான். அவனிடம் அவள் இரண்டு வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று விரும்புகிறான்.

அந்த நல்ல சுபாவமுள்ள பெண் அவனிடம் அனுதாபம் கொண்டு அவனோடு தன் உரையாடலை நிகழ்த்துகிறாள்.ஒரு நிபந்தனையை பேச்சினிடையே விதிக்கிறாள்.அவன் அவள்மீது எப்போதும் காதல் கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தனது நேசக்கரத்தை நீட்டுகிறாள்.அவனும் சத்தியம் செய்து விட்டு,அவளின் நம்பிக்கைக்குரிய  ஒரு நண்பராக தான் இருப்பதில் பெருமகிழ்ச்சியும் நிம்மதியும் அடைகிறான்.

இரண்டாவது சந்திப்பில்,தன்னைச் சுற்றியுள்ள விசித்திரமான வாழ்க்கையையும்,அதைச் சுற்றி நிகழும் வேறொரு உலகையும், பீட்டர்ஸ்பர்க் நகரம் அவனுக்குள் நிறைக்கும் அந்த மெய்யான கனவுகளையும அவளிடம் பகிர்ந்து கொள்கிறான். பேச்சின் இடையில் அவள் பெயரைக் கேட்டு ‘நாஸ்தென்கா’ என்று அறிந்து கொள்கிறான்.

கனவுலகவாசியான அவனின் மனச்சித்திரங்கள் புதிய உலகை எப்போதும் கண்டடைவதைப்போல, எதார்த்த வாழ்க்கையிலிருந்தும் அதன் அபத்தங்களிலிருந்தும் தான் விலகி,தனது கண்ணோட்டத்தில் தனது கற்பனையில் சுழலும் ஒரு உணர்ச்சி மயமான உலகை அவளுக்கு விவரிக்கும் காட்சியில் தனது லட்சியமானது அவனின் இருதயத்தில் நுழைந்து கொண்டு தாங்கவியலாத இனிய வலியையும் மேலும் துன்பத்தையும் தருகிறது என்பதை கதாபாத்திரம் விவரிக்கிறது. உண்மையில் அவனுள் இருப்பது காதல்தான்.

கடந்தகால நிகழ்சிகளின் ஆசைகளுக்கும், கற்பனைகளுக்கும் புத்துயிர் கொடுத்து அவன் பிதற்றும் மொழிகள் நாடகப் பாணியில் இருப்பதாக அவள் கூறுகிறாள். அவன் கடந்த கால தனிமையிலிருந்து விடுபட்டு ஒரு மெய்யான இன்பத்தை அவள் அருகாமை பெற்றுத் தந்துள்ளதாக கூறி அவளை வாழ்த்துகிறான்.

பிறகு நாஸ்தென்கா தனது கதையை அவனிடம் கூற ஆரம்பிக்கிறாள்.கண் தெரியாத பாட்டி மட்டுமே அவள் கூட இருப்பதாகவும் நாஸ்தென்கா காதல் எதிலும் வயப்பட்டு விடாமல் இருப்பதற்கு பல அறிவுரைகளை கூறியும், முன்பு ஒரு முறை சிறு தவறு நேர்ந்ததற்காக பாட்டி அவளது பாவாடையை தன்னோடு ஊக்கு போட்டு குத்திக் கொள்கிறாள் என்றும் அதனால் பாட்டியை விட்டு தன்னால் வெளியில் எங்கும் போக முடியாது என்றும் கூறுகிறாள். பாட்டியின் கண்காணிப்பில் எப்போதும் தான் இருப்பதை விரும்பாததையும் இதன் மூலம் தெளிவு படுத்துகிறாள். பாட்டியின் வீட்டில் மச்சுவீடு ஒன்று காலியாக இருக்கிறது. அங்கே ஒருமுறை குடி வந்தவன் ஒரு இளைஞன்.அவன் நாஸ்தென்காவிற்கு புத்தகங்கள் படிக்க கொடுக்கிறான்.அதன் வழியாகவே அவளுக்கு அந்த இளைஞன் மீது காதல் வயப்படும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

ஒரு வருடம் கழித்து அவன் இந்த நகரத்தை விட்டு மாஸ்கோ சென்றுவிடுகிறான்.மாஸ்கோ செல்வதற்கு முன் தான் திரும்பி வந்து அவளை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தருகிறான்.

ஒரு வருடம் கழிகிறது. அவனை எதிர்பார்த்து நாஸ்தென்கா காத்திருக்கையிலதான் நம் கனவுலகவாசி அவளைப் பாலத்தின் அருகே காண நேர்ந்தது.

மேலே நடந்த இந்த நிகழ்வுகளை எல்லாம் பீட்டர்ஸ்பர்க் நகரின் வெண்ணிற இரவுகளில் ஒரு வெளியில் பெஞ்சின் மீது அமர்ந்து கொண்டு கண்வுலகவாசியும் நாஸ்தென்காவும் பேசிக் கொண்டிருகிறார்கள்.

இரண்டாம் இரவில் இந்தக் கதையை முடிக்கும்போது நாஸ்தென்கா நமது கனவுலகவாசியிடம் தான் காதலித்தவன் மீண்டும் இந்த நகருக்கு வந்து விட்டதாகவும் ஆனால் அவன் தன்னைப் பார்க்க வரவில்லை எனவும் அதுகுறித்து தான் மிகவும் கவலை கொள்வதாகவும் அவனிடம் தெரிவிக்கிறாள்.

அவன் அவளிடம் பல சமாதானங்களைக் கூறி ,அவளிடம் ஒரு கடிதம் எழுதுமாறு கூறுகிறான். அவளும் ஒரு கடிதம் எழுதி அவனிடம் கொடுத்து அதை எப்படியாவது அவனிடம் சேர்த்துவிடுமாறு கெஞ்சுகிறாள்.அவனும் அதை ஏற்றுக்கொண்டுவிடுகிறான். அப்போது அவனிடம் அவள் விடைபெற்றுக் கொள்கிறாள்.அவள் செல்லும் பாதையை நோக்கியவாறே அங்கேயே நெடுநேரம் நம் கனவுலகவாசி நின்று கொண்டிருக்கிறான். முன்பொருமுறை அவன் கனவில் மட்டுமே காதலிப்பதாக கூறியதால், அவன் அவளிடம் செய்து கொடுத்த சத்தியத்தின் படியே தன் காதலை அவளிடம் தெரிவிக்காமல் இருக்கிறான்.

மூன்றாம் இரவில் அவளை சந்திக்கும் போது, தான் அந்தக் கடிதத்தை சேர்த்து விட்டதையும் கூறுகிறான்.ஆனால் தான் நேசிக்கும் காதலனிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் மிகுந்த ஏமாற்றமும் துயரமும் அடைகிறாள்,  அவன் மீதான காதலை மறுக்கிறாள்.  இந்த நேரத்தில் அவளின் நிலையை எண்ணி வருந்தியவனாக தான் அவள் மீது கொண்டுள்ள களங்கமற்ற அன்பை வெளிப்படுத்துகிறான்.அவள் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டே ,நான் அவரை அதிகம் நேசித்து விரும்பியிருந்த போதிலும் நீங்கள் என்மீது காட்டும் அன்பு என் மனதில் உங்களைப் பற்றிய எண்ணத்தை அவருடன் ஒப்பீடு செய்கறது. நீங்கள் அவரைக் காட்டிலும் நல்லவராகவே இருக்கிறீர்கள் என்று தன் மனதில் உள்ளதை ஒளிக்காமல் கூறுகிறாள்.இருவரும் அழுவதும் சிரிப்பதுமாக ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் காதலின் அதி அற்புதத் தருணங்களை உணர்வுப் பெருக்கிலும் நெஞ்சுருகும் நெகிழ்ச்சித் தன்மையிலும் பரிமாறிக் கொள்கின்றனர்.

அப்போது இளைஞன் ஒருவன் அவர்களைக் கடந்து செல்கிறான். திடுக்கிட்டு கூச்சலிடுகிறாள். அவர்தான்! என்று முணுமுணுக்கிறாள். நாஸ்தென்கா! என்று அவள் பெயர் சொல்லி அழைக்கிறான் அந்த இளைஞன்.ஓடோடிச் சென்று அவனிடம் சேர்கிறாள். மீண்டும் மின்னல் வேகத்தில் திரும்பி வந்து கனவுலகவாசியைக் கட்டிக் கொண்டு முத்தமிடுகிறாள். பிறகு எதுவும் பேசாமல் தனது காதலனை நோக்கிப் பாய்ந்தோடி அவனை அழைத்துக் கொண்டு செல்கிறாள்.

பிறகொருநாள் நாஸ்தென்காவிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. ஒரு வாசகனை தனக்குள் நிறைத்துக் கொள்ளும் இடம்தான் இது. இந்த இடத்தில மட்டுமல்ல நாவலின் ஒட்டு மொத்த வாசிப்பனுபவத்தின் பின்னே கிடைக்கக் கூடியதாக மனித மன ஆழங்கள் நிராசைகள் கதாபத்திரங்களின் இருண்ட உலகத்திலிருந்து வெண்ணிறக் கீற்றுகளாய் வெளிப்பட்டு காதலின் மூடிய கதவுகளை திறந்து விடுகின்றன.

காதல் பற்றிய கண்ணோட்டங்கள் காலம்தோறும் மாறிவரும் சூழ்நிலையில் இந்த படைப்பு உருவான காலத்திலிருந்து பார்க்கும்போது அதன் படைப்புத் தன்மையில் காதலை அதன் தூய்மையான தன்மையில் விவரிக்கமுடியாத அலைகழிப்பிலும், வேதனையிலும் அல்லலுறும் மனங்கள் வாசிப்பவரின் மனநிலையில் காதலின் தீவிரத்தையும், அதன் வலியையும் உணரச் செய்து விடுகிறது. கதாபாத்திரங்கள் என்பவர் யாரோ அல்லர். நம்மிடையே இருப்பவர்கள்தான். நமக்குள்ளும் அந்த இருண்ட பகுதி உண்டுபண்ணும் மனக்கிலேசங்கள் வாழ்வு முழுவதும் எதோ ஒரு வகையில் எதிரொலித்துக் கொண்டேதான் இருக்கிறது. நாம் அறிந்தும் அறியாமலும் கடந்து விட்ட காதலின் அதி அற்புத தருணங்களை மீண்டும் நம்மிடையே உயிர்ப்புடன் எழுந்து நடமாடச் செய்து விடுகிறார் தஸ்தாவெஸ்கி. காதலை மனது முழுமையாக ஒரு கணம் உணர்ந்து கொண்டால  அதுவே வாழ்நாள் முழுமைக்கும்  போதுமானது என்ற வரியை இந்த நாவலில் இடம்பெறச் செய்வதன் மூலம் இந்த நாவல் எதைப் பேச வருகிறதோ அதற்கான முக்கியத்துவத்தையும் பெற்றுவிடுகிறது.


  மஞ்சுளா

 

நூல் தகவல்:

நூல் : வெண்ணிற இரவுகள்

வகை :  மொழிபெயர்ப்பு -நாவல்

ஆசிரியர் : ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

தமிழில்: ரா. கிருஷ்ணையா

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

வெளியான ஆண்டு:  டிசம்பர் 2016

பக்கங்கள் : 96

விலை:  ₹  80

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

One thought on “வெண்ணிற இரவுகள் – ஒரு பார்வை

  • அருமையான விமர்சனம்.. காதலியின் கடிதம் என்ன சொன்னது என்று சொல்லாமல் முடித்தது நூலைப் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியது..

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *