லாக் டவுன் சமயத்தில் நவீன சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாசிக்க நேர்ந்தது. எவ்வளவு முட்டி மோதினாலும் ஒரு சில கதைகளுக்கு மேல் என்னால் வாசிக்க இயலவில்லை. படித்தவரையில் தலைவலி தான் மிச்சம். புரியவில்லை என்று சொன்னால் இந்த இலக்கிய உலகம் என்னைத் தள்ளி வைத்துவிடும் என்ற அச்சத்தில் வாயையும் புத்தகத்தையும் அத்தோடு மூடி வைத்துவிட்டேன். தற்போது அந்த புத்தகம் என் வீட்டில் இல்லை. அதன் பெயர் கூட இப்போது என் மனதில் இல்லை.
எளிய மனிதர்களின் வாழ்வில் எடுக்கப்படும் கலையானது எளிய மனிதர்களைச் சென்றடைய வேண்டும் என்பது என் எப்போதைக்குமான விருப்பமாக இருந்திருக்கிறது. இருக்கிறது.
சமீபத்தில் படிக்க நேர்ந்த எதிர் வெளியீடு பதிப்பித்திருக்கும் ஐ. கிருத்திகா அவர்களின் “நாய்சார்” என்ற இப்புத்தகம் அத்தகையதொரு திருப்தியை வழங்கியதில் மகிழ்ச்சியடைந்தேன். படித்த உடனே பாமர மக்களின் தோளில் சென்று ஏறிக் கொள்ளும் எளிமை வாய்ந்தவை அந்த புத்தகத்தின் கதைகளின் வார்த்தைகளும் வரிகளும்.
எத்தகைய நுட்பத்துடன் கிருத்திகா மனிதர்களைப் படித்து வைத்திருக்கிறாரோ அதே நுட்பத்துடன் அவர்களை தன் கதை மூலம் நம்மை வாசிக்க வைத்து விடுகிறார்.
சிறுகதைகளுக்கே உரிய உத்திகளோடு சுவாரஸ்யத்தோடு கதைகளைக் கொண்டு செல்லும் கிருத்திகாவின் திறமை பாராட்டிற்குரியது. சிறந்த கதைசொல்லி இவர் என்பதை இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இவரின் கதைகளில் வரும் ரங்கமுத்து ஆச்சாரி, குடும்பத்தலைவி காஞ்சனா, சவரத்தொழில் செய்யும் நாராயணன் போன்ற பல கதாபாத்திரங்கள் எல்லாம் வேறுவேறு பெயர்களில் நம் வாழ்வில் கலந்த மனிதர்கள் என்பது நிச்சயம்.
எப்படி சினிமாவில் காதலைத் தாண்டி இன்னமும் உலகில் சொல்வதற்கான விஷயங்கள் பல உள்ளன என்பதை உணர்த்திய வெகுசில படங்கள் போல், கள்ள உறவைத்தாண்டிப் படைப்பவை இலக்கியங்களே இல்லை எனும் அளவு தற்கால சிறுகதைகளிலும் நாவல்களிலும் ஊறிப் போய் இருக்கும் அந்த கருவை இவர் தொடவில்லை என்பதே பெரும் ஆறுதலான விஷயம். அதைத் தாண்டியும் கதை எழுத முடியும் மக்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
மனிதர்களின் வாழ்வு மொத்தமும் கசப்பினால் மட்டுமே நிரம்பியதில்லை. மகிழ்ச்சி, கோபம் என பலபல உணர்வுகளால் ஆனது நம் வாழ்க்கை. அது போல இவரது கதைகளும் எதோ ஒரு புள்ளியை மட்டுமே மையமாகக் கொள்ளாமல் வாழ்வை மையமாகக் கொண்டு பல தரப்பட்ட மனிதர்களின் பலதரப்பட்ட மெல்லிய உணர்வுகளைப் பின்னியதாக உள்ளன.
நம்மோடு இருக்கும் இயல்பான மனிதர்களின் ஏக்கங்களையும், தேவைகளையும், இன்பத்தையும் துன்பத்தையும் கிருத்திகா இலகுவாகச் சொல்லி விடுகிறார். நம்மால் தான் அவ்வளவு எளிதில் அவற்றைக் கடந்துவர இயலவில்லை.
கிருத்திகாவின் “நாய்சார்” நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதே அளவு எளிமையையும் நுட்பத்தையும் தேநீர் பதிப்பகம் வெளியிட்ட இவரது முதல் புத்தகமான “உப்புச்சுமை” சிறுகதைத் தொகுப்பிலும் உணரலாம். உண்மையில் அப்புத்தகமே அவரது இரண்டாம் புத்தகமான “நாய்சார்” புத்தகத்தை என்னைப் படிக்கத் தூண்டியது.
– ஸ்ரீதேவி மோகன்
நூல் : நாய்சார்
பிரிவு: சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் : ஐ.கிருத்திகா
வெளியீடு : எதிர் வெளியீடு
வெளியான ஆண்டு : 2021
விலை: ₹ 140
என் சிறுகதைத் தொகுப்பை வாசித்து மிகவும் அழகாக விமர்சனம் செய்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏