நூல் விமர்சனம்புனைவு

தலைமுறைகள்


ஒரே நாளில் ஒரு நாவல்…  நீண்ட நாட்களுக்குப்  பிறகு….  350க்கும் மேற்பட்ட பக்கங்கள்.

 

முன்னுரையில் வண்ணநிலவன் அவர்கள் மோகமுள்ளுக்கு அடுத்தபடியாக பெரிய நாவல் என்று குறிப்பிட்டிருந்தார். அறுபதுகளில் வெளிவந்த நாவல்.

 

குமரி மாவட்டத்தில் வாழும் குடிபெயர் சமூகமான இரணியல் செட்டியார் அவர்களின் வாழ்க்கைமுறை சடங்கு சம்பிரதாயங்களை திரவி என்ற ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றியே நகர்த்தியிருக்கிறார் ஆசிரியர். லேசான மலையாள வாசத்தோடு அந்த பேச்சு வழக்குதான் என்ன அழகு..!

 

நாவல், கட்டுரை இவைகளுக்கு விதிக்கப்பட்ட மொழி நடையை மாற்றி வட்டார வழக்கில் அளித்திருப்பது கதைக்குத் தூண்கள்.

 

திரவி என்ற பதின்ம வயது பையன் 20 வயதிற்குள்ளாக அவனுக்கு ஏற்படும் அனுபவங்களே இந்நாவல். சிறுவயது முதல் அக்கம்பக்க கதைகளை எல்லாம் உண்ணாமலை ஆச்சியிடம் கதையாய் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கும் திரவி..

இருபது வயதில் இவ்வளவு மெச்சூர்ட்டி க்கு காரணம் அனுபவ பாடத்தைக் கேட்டதே என நினைக்கிறேன்.

 

ஒரு சமூகத்தின் கல்யாணம் முதல் இழவு வரையில் அனைத்து சீர்வரிசைகள் சம்பிரதாயங்கள்  முறைகள் அனைத்தும் விளக்கப்பட்டிருக்கிறது. சிறிதே மலையாள வாசத்துடன் கூடிய பேச்சு வழக்கை நேரில் கண்முன் விரியும் கீழத்தெருவும் புத்தன் தெருவும்..எதிரில் கூனாங்கணி பட்டா வீடும் நாகரம்மன் சாமியின் ஒடும்புறை விழாவும் பெரிய கொழுக்கட்டை சுடுவதும்.. தங்கம்மை தாயம்மை குலம் காத்த கதையும்..கதையின் போக்கில் நிறையச் செய்திகள்.. சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் கண் முன்னே விரிகின்றன.. வாழ்ந்து விட்ட வந்தது போன்ற உணர்வு.

 

மறுமணம் என்பதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அந்த காலத்தில் ஒரு பெண் கணவனால் திரும்ப அனுப்பப்பட்டால் வாழாவெட்டி என்று முத்திரை குத்தப்படுவதும்..குழந்தையில்லை என்ற காரணம் எப்படி ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோசத்தைக் கெடுக்கிறதென்றும் அந்த செட்டியார் சமூக பழக்கவழக்கங்கள் அந்தனை எளிதான காரியமாக இல்லை..படிக்கும் நமக்கே மூச்சு முட்டுகிறது..

கடைசியில் உண்ணாமலை ஆச்சியின் மரணம் அதன் சடங்குகள் பார்த்து திரவி அயர்ந்து போய் காசு செலவில்லாமல் செத்துவிடுவது கூட அந்த சமூகத்தில் எளிதல்ல என்று நினைப்பது…இறப்பின் பிறகான சடங்குகளும் கூட அத்தனை அதிகம்..சடங்குகளின் போக்கையே 10 பக்கங்கள் வரை கொண்டு செல்லும் அளவு.

பார்த்திடாத,  கேட்டிராத இந்த சடங்குகளும் பேச்சுகளும் கதையின் போக்கில் சுவாரஸ்யத்தை அதிகமாக்குகிறது என்றால் மிகையாகாது.

கதையின் ஆரம்பத்தில் தெரண்டு விட்ட பொட்டச்சிகள் இருக்கும் அறை, அதன் கதவு பற்றிய வர்ணனையிலேயே ’அப்பா பயங்கரம்’ என்று மூச்சுமுட்டிப்போனது..

சாதாரணமாக வெளியே வராமல் ஒரு இருட்டு அறைக்குள் இருக்கும் அக்காள் விடுதலை அடைவாள் திருமணத்தில் என்னுமளவிற்கு சிறையாக அந்த அறை.

ஊர் தள்ளி வைத்தாலும் அக்காளுக்கு மறுமணம் செய்து வைக்கத் துடிக்கும் திரவியின் பாசம்.. சின்ன தங்கைக்குத் திருமணம் செய்யும் வரை அக்காள் விசயத்தை மூச்செடுக்காத அவன் சாதுர்யம்.. மறுமணத்தில் உடன்பாடில்லாமல் மனது துவண்டு உயிரைவிட்ட உண்ணாமலை ஆச்சி.

கௌரவம் என்று வாழ்வு போவதைப் பற்றி கவலைப்படாத அளவில் வளர்க்கப்பட்ட சமுதாயம் என்பதற்கு அடையாளம்.

குற்றாலம் என்ற கதாபாத்திரத்தின் முடிவைத்தான் ஏற்க மறுக்கிறது மனது. ஒருவேளை அந்த காலகட்டத்தில் குற்றாலம் நாகுவின் திருமணத்தைச் சமுதாயம் வரவேற்காது என்ற காரணமோ என தோன்றாமலில்லை.

கிறுக்காய் அலைந்து கதையின் முடிவையே மாற்றிவிடும் செவந்தபெருமாள் மாதிரி ஆட்கள் சமுதாயத்தின் சாபக்கேடுகள்.

திரவி நினைத்த வண்ணம் அக்காளின் வாழ்வைச் சீரமைக்கமுடியாமல் ஊரை விட்டு வெளியேறும் காட்சி கண்ணை விட்டு அகல மறுக்கிறது.

நிறைய வார்த்தைகள் புரியாமல் போவது பேச்சுவழக்கில் இருக்கும் குமரி தமிழ் பரவாமல் இருப்பதற்குச் சான்று. சென்ற ஆண்டு வாரியல் என்ற வார்த்தையை நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தது ஞாபகம் வந்தது.

மூதேவி வந்துடுச்சு என்று கோபத்துக்கு மூதேவி என்று பெயரைச் சொல்வதும்.. பாம்பை கயிறு என்று கூறுவதும்..  இன்னும் எக்கச்சக்கமான வார்த்தைகள்.

சில இங்கே…நான் புரிந்து கொண்ட விதத்தில் …

தேடி வந்தவன் சப்படையாக இருந்து..

இந்த திருத்தூளியில சோறும் வைக்கல

வெப்பிராளத்தில் விபரமாகச் சொல்லமுடியாது

 

பளஞ்சி

மந்து – யானைக்கால்

சாணாங்கி- சாணம்

வாரியல்- துடைப்பம்

உடுப்பையும் முண்டையும் – சட்டை வேட்டி

எதுப்பு- சகுனம்

ஜம்பர்- ரவிக்கை

அச்சி – ஆசைநாயகி

ஆக்குபுரை- விசேஷங்களுக்குச் சமையல் செய்ய அமைக்கப்படும் இடம்

அதிகாரம்- மாவிடித்து செய்வது என்றிருந்தது.. அதிரசமா இருக்கும் னு நான் நினைத்துக் கொண்டேன்.

தாலியும் தாலியும் பாக்க கூடாதென்ற ஒரு வரி..மகன் திருமணத்தின் போது தன் தாலியை பின்னால் மறைத்துக் கொள்ளும் பாப்பாத்தி.

தொட்டாரை ஒட்டி தீனம்.- பரவும் நோய். 

இப்படி நிறைய.

நாவல் முழுக்கவே புதிய வார்த்தைகளும் நடைமுறைகளும் வியாபித்திருக்க அந்த ஆர்வமே என்னை பிடித்துவைத்திருந்தது போல.

கடைசியில் மறுமணம் என்ற அந்த புரட்சியை எதிர்பார்த்து ஏமாற்றமாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் இந்த முடிவே நல்லது என ஆசிரியர் நினைத்திருக்கலாம்.

எப்படியாகினும் நீண்ட ஆண்டுகளுக்கு  பின்னர் ஒரே நாளில் நான் படித்து முடித்த நாவல் இதுதான்.

குமரிமாவட்ட இசைத்தமிழில், அந்த ரிதத்தில், வழமையில்.. (ஐ வழமை என்ற வார்த்தை எனக்கு தொத்தி கொண்டதே..) மயங்கித்தான் போனேன்..

நூல் தகவல்:

நூல் : தலைமுறைகள்

பிரிவு:  நாவல்

ஆசிரியர் : நீல. பத்மநாபன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு :    முதற்பதிப்பு 2013

விலை: ₹ 395

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *