தோழர் கோமகனின் கைங்கரியத்தால் ‘நட்டுமை’ புதினம் சமீபத்தில்தான் என் வசம் சேர்ந்தது. வயல்களில் தேங்கியிருக்கும் நீரைத்திருட்டுத்தனமாக வரப்புகளில் பிளவையோ தரையில் துளையையோ உண்டுபண்ணிப் பிறிதொருவரின் வயலுக்குள் கடத்திவிடுவதை கிழக்கின் வழக்கில் ‘நட்டுமை’ என்பார்கள். இதே வார்த்தை களவொழுக்கத்துக்கும் அங்கே பயன்படுத்தப்படுகிறது. தீரன் ஆர்.எம் நௌஷத்தின் மொழிவளம் புதினம் முழுவதும் வியக்கும்படி உள்ளது. புதினத்தில் எவ்விடத்திலும் எழுத்துப் பிழைகளோ, சந்திப்பிழைகளோ இல்லாதது சமகால நூல்களிடையே ஒரு அற்புதம்.

கிழக்கு மாகாணத்தின் ஊர்ப்பெயர்களில் ஒரு விடயத்தைக் கவனிக்கலாம், அவை அனைத்தும் இனிய தமிழ்ப்பெயராகவே அமைந்திருக்கும். ஓட்டமாவடி, கோறளைப்பற்று, நாவலடி, களுவன்கேணி, தளவாய், கிரான்குளம், செம்பியன்பற்று, பாசிக்குடா, வந்தாறுமூலை, கஞ்சிகுடிச்சாறு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, பட்டிருப்பு, பாண்டிருப்பு, புன்னைச்சோலை, தாமரைக்கேணி, அமிர்தகளி, உப்போடை, மஞ்சத்தொடுவாய், காத்தான்குடி, வாழைச்சேனை,  காங்கேயனோடை, , செட்டிப்பாளையம், களுவாஞ்சிக்குடி, சம்மாந்துறை என்று அடுக்கிச் செல்லலாம். ‘நட்டுமை’ புதினத்தின் கதையும்  ‘உம்மாந்துறை’  எனும் அழகிய விவசாயக் கிராமத்தில் எமக்கு முந்தைய ஒருதலைமுறையில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் (1930 களில்) நடைபெற்றது என்கிற குறிப்பு,  புதினம் மீதான எனது ஆர்வத்தை மிகைப்படுத்தியது. இன்னமும் கிழக்கில் இவர்கள் பேச்சுமொழியும் புழங்கும் வார்த்தைகளும் யாழில் வழங்குவதை விடவும் வித்தியாசமானவை. அவற்றில் அவர்களுக்கேயான பிரயோகங்களும்  சுவையும் இருக்கும். தீரன் அக்காலத்தின் வழக்குமொழி வார்த்தைகளை வினைப்பட்டு (கெட்டல்ல) தேடித்தேர்ந்தெடுத்துத் தன் புதினத்தைப் பன்னியிருக்கிறார்.

புதினத்துள் அடங்கியிருப்பதோ நேர்கோட்டிலான ஒருவரை நிற்கவைத்தே காதுக்குள் சொல்லிவிடக்கூடிய சின்னக் கதைதான்.


 பட்டிப்பளை ஆற்றிலோடிவரும் நீர் பனியன் அணையில் தேக்கிவைக்கப்பட்டு அணையின் இடதுபுறமாகவுள்ள மழுவன்கண்டத்து வயல்களுக்கும், வலதுபுறமாகவுள்ள பெரியவெளி வயல்களுக்கும் பாய்ச்சப்படுகிறது. ஊரின் பெரியமனிதரும் புதினத்தில் நாணயஸ்தராகச் சித்தரிக்கப்பட்டிருப்பவருமான அகமது லெவ்வை எனப்படும் பெரியபோடியாருக்கு பெரியவெளிக்கண்டத்து வயல்களின் செம்பகுதி சொந்தமானது. மழுவன்கண்டத்து வயல்கள் சிறு சிறு போடிமார்களுக்கும், விவசாயக்குடிகளுக்கும் சொந்தமானவையாக இருக்கின்றன. பருவமழை பிந்தியமையால் மழுவன்கண்டத்தில் நாற்றுகளுக்கும், இளம் பயிர்களுக்கும் தேவையான குளத்தின் பாசனநீர் பங்கிடப்படாமல் அவை வாடுகின்றன. ஆனாலும் இம்முறையும் முதலில் பெருவெளிக்கண்டத்து வயல்களுக்குத்தான் நீர் பாய்ச்சப்படும் என்கிற வதந்தியொன்று எழுந்து கிராமம் பூராகப்பரவ அங்கே இருபகுதியினருக்குமிடையே பதட்டமும் முறுகல் நிலையும் உருவாகிறது.


பெரியவெளிக்கண்டத்து வயற்காரர்களின் அணிக்கு பெரியபோடியாரின் இளவலான சின்னப்போடியாரும், மழுவன்கண்டத்து வயற்காரர்களின் அணிக்கு இளவிவசாயியான உமறுலெவ்வையும் தலைமை ஏற்கிறார்கள்.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் கிராமம் ஒன்றில் குளநீர்ப்பங்கீட்டில் இரு பகுதியாரிடையே எழும் பிரச்சனை புதினத்தின் எடுப்பாகவும் முதன்மை இழையாகவும் முன்னிற்கிறது.

புதினம் நகர்கையில் இவ்விருபகுதியினருக்கும்  குளத்துநீரைப் பங்கீடுசெய்து கொடுக்கும் வட்டவிதானையின் (புதினத்தில் வட்டவிதானை இடையிடையே மீராவட்டானை எனவும் அழைக்கப்படுகிறார்.) மீராவட்டானையின் அழகிய மகள் செய்னம்புவை அடைவதில் பெரியபோடியாரின் மகனும் சின்னப்போடியாரென அழைக்கப்படும் முகமது ஹனிஃபாவுக்கும், அவளது முறைமச்சான் உமறுலெவ்வைக்கும் உள்ளபோட்டியும் தொடுப்பில் பிறிதொரு  இழையாகச் சேர்ந்துகொள்கிறது, மேலும் பெரியபோடியார் குடும்ப அங்கத்தவர் ஒருவர் முடிப்பில் பண்ணும்  ‘நட்டுமை’ லீலையால் விளையும் விவகாரங்களை முன்னவற்றுடன் மூன்றாவது இழையாகச் சேர்த்தும் கோர்த்தும் அழகாகப்பின்ன முயன்றிருக்கிறார் தீரன்.

உமறுலெவ்வை இவ்விரு வயல்கண்டங்களுக்கும் பாசனநீரைப்பகிர்ந்தளிக்கும் மீராவட்டானையின் இறந்துபோன ஒரு சகோதரியின் நாலாம்வகுப்புப் படித்த மகனாவான். இவன் எழுத வாசிக்கத்தெரிந்ததோடு தானே சொந்தமாக ஐந்து ஏக்கர் வயல்செய்யும்  ஒரு உழைப்பாளியுமான  இவனும் ஒருவகை ‘நட்டுமை’யிலேயே பிறந்தவன் என்பது அவன் பிறப்பையிட்டான அழிக்கமுடியாதவொரு ‘மறு’வாகும்.

மீராவட்டானையின் அழகிய மகள் செய்னம்புவும் உமறுலெவ்வை மீது தீராத காதல் கொண்டுள்ளாள். கதையின் நாயகியின்  செய்னம்பு எனும் பெயரைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய சமூகத்தில் பொதுவான அரபு/ பர்ஸி/ உருது மொழியடியாகவந்து புழங்கும் அமீனா, ஆயிஷா, ஆபிதா, பரீதா, பீபி, ஜெஸீமா, கதீஜா, மும்தாஜ், மெஹ்ரூன், நூர்ஜஹான், லைலா, ஆகிய பெயர்களுக்குப் பரிச்சயப்பட்ட எமக்கு  செய்னம்பு என்பது பரிச்சயக்குறைவாயிருப்பதால்   மனதிலும் நிற்க மறுக்கிறது.

ஒழுக்கக்கேடியான சின்னப்போடியாருக்கும் செய்னம்புவின்மீது ஆசை. அவனும் எவ்விதத்திலும் அவளை அடையத்துடிக்கிறான். போதாக்குறைக்கு செய்னம்புவின் பிராண சிநேகிதி யம்னாவின் கணவனும் சின்னப்போடியாரின் அல்லக்கையுமான மம்மலி,   செய்னம்புவின் பிரபையையும் கீர்த்தியையும் எடுத்துச் சின்னப்போடியிடமும் ஓதியோதி அவனை உருவேற்றியபடி இருக்கிறான், சின்னப்போடிக்கு பெரியபோடியார் எழுதிவைத்துள்ள 92 ஏக்கர் நிலத்துடனான செல்வத்தின் மகிமையை மீராவட்டானையிடம் ஏற்றி   “இம்மாம் செல்வச்சீமான் சின்னப்போடியாரை வுட்டுடாதீங்க” செய்னம்புவுக்கு அவனைவுட்டாச் சிறப்பான துணையேது” என்று ஓதியோதித்தூபம் போட்டபடியும் இருக்கிறான்.

ஊருக்குள் இரு அணிகளுக்கிடையேயான பகை, + ஒரு பெண்ணுக்கு இருவருக்கிடையேயுள்ள தீராதபிணக்கென புதினத்துள் வைத்துப்பின்ன ஒரு கதையும் வாய்த்துவிட்டிருந்தாலும் ஆசிரியர் புதினத்தின் ஆரம்ப அத்தியாயங்களிலேயே  அவர்களுக்கிடையேயான  அடிபாடுகளை எடுத்தஎடுப்பிலேயே முன்னிறுத்தி விபரித்துக்கொண்டுவிடுவதன் மூலமும்,  சம்பவங்களை நிகழ்வுகளை அவசரமாக அடுக்கிவிடுவதிலும் ஒரு திரைச்சித்திரத்தின் வெளியீட்டுத் தேதிகுறித்துவிட்ட தமிழ்சினிமாவின் இயக்குனரைப்போல  எட்டி அவசர அடிகள்வைத்துப் பாய்ந்து  செல்கின்றார்.

மாறாக 1930 களில் பிரிடிஷாரின் ஆட்சிக்காலத்தில் நடைபெறுவதான இப்புதினத்துக்கு அதன் இறைச்சியும்,  காலவெளியும் வழங்கியிருந்த நிதானத்தையும் சாத்தியங்களையும்  பயன்படுத்தி ஆசிரியர் இன்னகாலத்தில் இன்ன நிகழ்வுகள் என்பதை அதன் கருவிலேயே திட்டமிட்டு வரையறை செய்துகொண்டு நிதானமாக விபரித்துச் சென்றிருப்பாராயின் நட்டுமையை ஆழமும்,   அபூர்வமுமானதொரு  புதினமாக உருவாகித்திரண்டிருக்கும்.

ஒரேயின மக்களுக்கான  கிராமமாயினும் அதன் அசைவியக்கங்கள் வாழும் மக்களின் வர்க்கபேதங்களை காட்சிமைப்படுத்தும் நிகழ்வுகள்,  சம்பவங்கள் எதுவும் அங்கே விபரிக்கப்படவில்லை. போடியார் வீட்டின் விருந்துகள் போகட்டும், சின்னப்போடியின் சாங்கியங்கள் இருக்கட்டும், வருடாந்த கொடியேற்றத்திருவிழாக்கள் கழியட்டும், கிராமத்தின் கடைக்குடிமக்கள், விவசாயிகள், ஏதிலிகள் இவர்களின் அன்றாட வாழ்க்கைள், பொழுதுகள் எப்படிக்கழிந்தன, அயலவர்களுக்கிடையேயான ஊடாட்டங்கள் எப்படி இருந்தன, அவர்கள் வீட்டுஅடுப்புகள் எங்ஙனம் புகைந்தன என்பதுபோன்ற சித்தரிப்புகள் விபரிப்புகள் இல்லாதிருப்பது அதிசயமாக இருப்பதுடன் ஆசிரியருக்கு புதினத்தை நிறைவு செய்துவிடுவதில் எதுக்கு இத்தனை  அவசரம்  உண்டாகியதோவென  எண்ணவைக்கின்றது.

பெரியபோடியாரின் குடும்பத்துக் கதைகளுக்குமப்பால் யம்னா,  அஞ்சலை முக்குலத்துக்கிழவி, குளநீர்ப்பங்கீட்டுக்காக பெரியபோடியாரை எதிர்த்துநின்ற எளிமையான மக்களில்  சில பாத்திரங்களையாவது வளர்த்தெடுத்து அவர்களின் வாழ்க்கை முறைகளையாவது  விபரித்துச்சொல்லியிருக்கலாம்.  நட்டுமைக்கான அணியுரையில் கவிஞர். நுஃமான்கூட  ‘உம்மாந்துறை ஒரு விவசாயக் கிராமமாக இருந்தும் அக்கிராமத்தின் உற்பத்தியுறவுகளோ, வர்க்க உறவுகளோ, விவசாயமக்களின் வாழ்வனுபவங்களோ சித்தரிக்கப்படவில்லை’ என்பதை லேசாகத் தொட்டுக்காட்டியிருக்கிறார்.

இன்னும் பிரிடிஷாரின் ஆட்சிக்காலத்தில் அரசின் நிர்வாகக்கட்டமைப்புக்கள், அவற்றின் இயக்கங்கள் எல்லாம் இருண்மையாகவுள்ளன. சமூகக் குற்றங்களைச் செய்பவர்களை பொலிஸானை என்றொரு அரச உத்தியோகத்தர் கிராமங்களில் தேடித்தேடிப்பிடிப்பதாகவும், அவர்களைப் பொதுவில் வைத்துத்தண்டிப்பதாகவும், சிலரைக்கைது செய்வதாகவும், சிறையிலடைப்பதாகவுமான நிகழ்வுகள் புதினத்தில் வருகின்றன, அக்காலத்தில்த அரசாங்க முகவர் (Govt. Agent) அல்லது இணையான ஒரு உத்தியோகத்தரின் கீழியங்கும் காவல்துறை, தீர்ப்பாயங்கள், அவற்றின் அதிகாரப்படிநிலை,  இயக்கங்களை  எல்லாம் அழகாக விபரித்திருக்க இடமுண்டு.

சின்னப்போடியார், உமறுலெவ்வை, மம்மலி, ராக்கிளிஅலி,   இவர்களிடையே வரும் அடிபாடுகள் வெட்டுக்குத்துகள், இருட்டடிகள், மிளகாய்த்தூள் விசிறல்கள், காயமடைதல், இரத்தவிளாறுகளன்ன நிகழ்வுகள் ஒரு சினிமாவுக்கான திரைக்கதையைப்போலவே சித்தரிக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களிடையேயான வல்லடிகளின் உச்சத்தில் சின்னப்போடியாரை யார் போட்டார்கள், எதுக்காகப் போட்டார்கள் என்பதிலுள்ள மர்மத்தை அவசரப் பாய்ச்சலில் அவிழ்த்துவிடாமல் அதைவைத்தே புதினத்தை மேலும் சில அத்தியாயங்கள்  நகர்த்திச்செல்லும் சாத்தியங்களும் இருந்தன.


சின்னப்போடியாரின்   ‘நட்டுமை’யோடு அவரின் மரணம் தொடர்கிறது, அதிலிருந்தும் புதினம் சற்றே தேங்கித்தேங்கிநடக்க ஆரம்பிக்கின்றது. புத்திரசோகத்திலிருந்து சுதாகரித்துக்கொண்ட பெரியபோடியார் மக்காவுக்கு கஜ்ஜுயாத்திரை புறப்படுகின்றார், அஜ்ஜாத்திரை அவர் மனதுக்கு சற்று மாறுதலையும் தென்பையுமளிக்கிறது. வயசானவர்கள் பலர் இன்னும் கிராமத்திலிருக்க  மீராவட்டானையும்  செத்துப்போகிறார்.

அந் ‘நட்டுமை’யின் சந்தர்ப்பத்தை ஆசிரியர் தன் வாசகர்களுக்கு இவ்வேளை, இப்படித்தான் நடந்தது என்பதை ஸ்படிகமாக விபரியாது சொல்லும் விதத்திலும் கொஞ்சம் பொடிவைத்தும், போக்குக் காட்டியுமுள்ளார்.

ஒரு சந்தர்ப்பத்தில் (பக்- 125 இல்) யம்னா தன் அணுக்கத்தோழியாகிய செய்னம்புவிடம் “சின்னப்போடி என்கிற வெசப்பாம்பு என்னக் கொத்திப் போட்டுதுகா………… புள்ள ”  என்கிறாள்.

“ வெசப்பாம்பு என்னக் கொத்திப்போட்டுதுகா……” எனுங்கூற்றானது அவளின் இணக்கமில்லாமல் சின்னப்போடி  யம்னாவின் உடல்மீது நடத்திய வன்முறை  என்றே கொள்ளவேண்டும்.  தெருவில் நடக்கையில் அதிலுள்ள கல்லொன்றை நாம் மோதினால்க்கூட  ‘கல்லடித்துவிட்டது’ என்று கல்லின்மேல் பழியைப்போடுவதே மனித உளவியல்

அடுத்து அவளே சற்றுத்தணிந்து “ என்னதயடி செய்யற…. நான்? ஏள! லாயக்கத்த அனாத! வக்கத்த புருசன்! என்ட புருசன்ட விசுவாசத்த  சின்னப்போடி வெச்சு என்னோட நாலஞ்சுதரம் உறவு வெச்சிக்கிட்டான்” என்று செய்னம்புவிடம்தரும் வாக்குமூலமானது அவளது முதல் விபரிப்பின் தீரத்தையும் கயமையையும் நீர்க்கச்செய்வதுடன் சின்னப்போடி “ நீ எங்கூட படுத்தாத்தான் இனி உன் வூட்ல அடுப்பெரியும் ” என்கிற பாணியில் அவளை கொள்மிரட்டல் (பிளாக்மெயில்) பண்ணியோ, அல்லது பேதைப்பெண்களை ஏமாற்றுவதான உத்தியில்  ‘உன்னைப் பட்டால் இழைக்கிறேன், தங்கத்தால் மருவுறேன்’ என்று ஆசைகாட்டிப்பசப்பி இணங்கச்செய்திருப்பான் என்று சிந்திப்பதற்கான வெளியையும் தருகின்றது.

ஆசிரியரும் (பக்- 149 இல்)   இவ்விரண்டாவது சந்தர்ப்பத்துக்குக்கே அழுத்தம் கொடுப்பதைப்போலத் தன்மொழியில்  ‘சின்னப்போடியாரில் சபலப்பட்ட யம்னா மம்மலிக்குத் தெரியாமலே (மம்மலிக்குத் தெரியவைத்து அவள் உறவுகொள்ள முடியுங்களா?)  அவனுடன் உறவுகொண்டு வந்ததாக’ச் சொல்கின்றார்.

‘நட்டுமை’ ஈமானுள்ள அறவழிநிற்கும் ஒருவன் புரியும் சாங்கியமல்ல. இங்கே யம்னா ஆசைகாட்டி மோசஞ்செய்யப்பட்டிருந்தாலும், அவளாகவே சபலத்துடன் அவன் வலையில் விழுந்திருப்பினும், சின்னப்போடி அவளை வல்லுறவுக்குட்படுத்தியிருப்பினும் அவளின் தேகம் அத்துமீறல் செய்யப்படுகிறது. அவள் வழுக்கி விழுந்தாளோ, ஓடிவிழுந்தாளோ, காலிடறி விழுந்தாளோ அசம்பாவிதமாக அவ் விபத்துக்குப் பலியாவதால் வாசகனின் பரிதாபத்துக்குள்ளாகும் ஒரு அப்பாவிப் பாத்திரமாகின்றாள். அவளுக்கு இவுலகில் மற்ற எந்தப்பெண்களைப்போலவும் வாழுவதற்குச் சகல தகுதிகளுமிருந்தும் அவள் தற்கொலை செய்துகொள்வதும் ஏற்கத்தக்க தீர்வாக இல்லை. அது யம்னாவுக்கு இழைக்கப்படும் மற்றொரு அநீதியாக மனதில் கனக்கிறது.


ற்கொலை செய்துகொள்ள முதநாள் யம்னாவே பெரியபோடியாரிடம்போய் சின்னப்போடியார் தன்னிடம் உறவுகொண்ட விடயத்தை விபரிப்பது…………………..

பெரியபோடியார்,  யம்னாவுக்குப் பிறந்த குழந்தை முகமது ஹனிஃபாவின் சின்னவிரல் மோதிரவிரல்நோக்கி வளைந்திருப்பதைக்கண்டு அது சின்னப்போடியின் நட்டுமையால் உருவான பிள்ளைதான் என்கிற தீர்மானத்துக்குவந்து, அதற்கே தன் ஆதனங்களை எழுதிவைப்பது……………………,

பெரியபோடியாருக்கு அந்தர்பாவா ‘சொல்லும் வாக்கின்’மூலமே சின்னப்போடியார் முகம்மதனீஃபாவை அவனது அல்லக்கை மம்மலிதான் குத்திக்கொன்றான் என்கிற  விடயத்தைத் தெரிந்துகொள்வது…………………,

மீராவட்டானை பெரியபோடியாரை  “என்ட அளகுசீமானே’ யென்று விளிப்பதும் அவரின் காலைப்பிடித்துக்கொண்டு போடியாருக்குப் பொலீஸானையிடமுள்ள செல்வாக்கைப் பிரயோகித்து ‘அறாமி’ப்பய உமறுலெவ்வையை புளியந்தீவுக்கு ஏற்றவிடாதுபண்ணி அவனுக்கு வாத்திவேலையையும் வாங்கிக்கொடுத்து  செய்னம்புவுக்கு ஒரு வாழ்க்கையளிக்க உதவுமாறும் கதறுகின்ற கட்டங்கள் எல்லாம் பாரதிராஜாவின் ‘முதல்மரியாதை’யில் வருவதைப்போல மிகைப்படுத்தப்பட்டும் நாடகீயமாகவும் அமைந்துள்ளன.

இன்னும் புதினத்தின் வாசிப்போட்டத்துக்குத் தடை இல்லாவிட்டாலும் அதில் கண்ட சில தகவல் பேதங்கள்.

பக் – 18 இல், கண்ணைப்பறிக்கும் மஞ்சட்கலரில் நைலோன் சேர்ட் அணிந்திருந்தான். என்று ஒருவரி வருகின்றது. எம் சுதந்திரத்தின் பின்னர்தான் இந்தியா-இலங்கையில் நைலோன், டெர்லீன் அகிறைலிக், பொலியெஸ்டரன்ன சேதன வேதிமங்களாலான (Synthetic) ஆடைகள்  பயன்பாட்டுக்கு வந்தன.

பக் – 20  அடங்கலாக பலவிடங்களில் பெரியபோடியார் தீவிர  ஜெர்மன் சுருட்டுக்களின் பிரியர் என்று  வருகின்றது.  புகையிலை மத்தியதரைக்கோட்டுக்கு மேல் கீழுள்ள உஷ்ணவலயத்தில் மாத்திரம் வளரக்கூடிய ஒரு பணப்பயிரினம். ஜெர்மனில் புகையிலை வளர்வதற்கோ சுருட்டுக்கள் தயாரிக்கப்படவோ வாய்ப்புக்கள் இல்லை.  (ஆனால் தற்பொழுது Phillip Morris போன்ற பிரித்தானிய / அமெரிக்கக் குழுமங்கள்  புகையிலையை பிறநாடுகளிலிருந்து இறக்குமதிசெய்து ஜெர்மனியில் வைத்துப் பதப்படுத்திச் சிகரெட்டுகளைத் தயாரிக்கின்றன.) பிரபல சுருட்டுப்பிரியரான வின்ஸ்டன் சேர்சில்கூட கும்பகோணப் புகையிலையை தனியாக வருவித்தும், பிறேஸில்  சுருட்டுக்களையுந்தான்  விரும்பிப்புகைத்தாரென்று   படித்திருக்கிறேன்.

பக் – 45   இல் பட்டிப்பளை ஆற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு பனியன் அணையிலிருந்து பாயும் வாய்க்கால்களில் வாளை, மணலை  கொய்மீன்கள் துள்ளுவதாகச் சொல்லப்படுகிறது.  குளத்துநீர் எப்போதும் நன்னீரையே கொண்டிருக்கும்.  அங்கே வாளை, மணலை  கொய்போன்ற கடல்மீன்கள்   குதிக்கச் சாத்தியமில்லை.

பக் – 109 இல் பிராமணன் மீசைப்புதர்களுக்குள் என்று ஒரு வாக்கியம் வருகின்றது. பிராமணனுக்கும் மீசைக்கும் சம்பந்தம் மிகக்குறைவு?  அது அநேகமாக  ‘இராவணன்மீசை’ என்றிருக்கவே சாத்தியம்.

டைப்புகளை  வெளியிடமுன்னர் பிரதிகளைச் சீரமைப்புக்குட்படுத்தல் (Editing) என்னும் ஒரு விடயமுள்ளது. சில படைப்பாளர்கள்: அவ்விஷயத்தில் உடன்படுவதில்லை, அல்லது சிரத்தை காட்டுவதில்லை. எவ் எழுத்தாளருடையதாயினும் பிரதியிலிருக்கூடிய எழுத்துப்பிழைகள், லகரழகர னகரணகர பேதங்கள், வாக்கியங்களிலுள்ள ஒற்றுக்கள், விகுதிகளன்ன வழுவமைதிகள் எத்தனைமுறை திரும்பத்திரும்ப வாசித்தாலும் ஒரே புரியில் ஓடும் சுரையைப்போல எழுதியவர்களுக்கு அநேகமும்  புலப்படுவதில்லை. பிரதியைநோக்கும் இரண்டாவது கண்ணுக்கு இவ்வழுக்களே முதலில் துலாம்பரமாகத்தென்படும். தீரனுக்கு சீரமைப்புப்பற்றி என்ன கருத்திருக்கென்று எனக்குத் தெரியவில்லை. இப்புதினத்தின் வாக்கிய அமைப்புகளில் பொருட்படுத்தக்கூடிய வழுக்கள் காணப்படவில்லை, ஆனாலும் ஆசிரியர் விபரித்திருக்க வேண்டிய பல இடங்களில் பந்தயகுதிரையாகி வேகப்பாய்ச்சலில் கடந்துவிடுகின்றார்.   ‘நட்டுமை’யைத் தகுந்த இலக்கியருடன் இணைந்து சீரமைப்புக்குட்படுத்தியிருந்தால் அதன் போதாமைகள் நிரவப்பட்டு இன்னும் செம்மையுடனும் பொலிவுடனும் வார்க்கப்பட்டிருந்திருக்கும். ஆனாலும் பரவாயில்லை, தீரனிடம் இதைவிடவும் அழகியலுடனும் கனதியானதாகவும் புதினங்களைப் படைக்கும் மொழிவளமும் ஆளுமையும் வல்லபமும் இளமையும் இருக்கின்றன. அவர் எம் காலத்திலேயே அதைச்சாதிப்பார் என்கிற நம்பிக்கையும் எம்மிடம் நிறையவே இருக்கின்றது.  தீரனுக்கு என் வாழ்த்துக்கள் !

 

தீரன் ஆர்.எம் நௌஷத்தின் பதில்:

அசந்து போய்விட்டேன் ஐயா… உங்கள் நுணுக்கமான பார்வை கண்டு… நட்டுமை எழுதிய காலத்தில் பல நபர்களிடம் தகவல் பெற்றும்- சில நூல்களில் பல தகவல்களை எடுத்தும்  எழுதினேன். இரண்டுவருடகாலம் பிடித்தது இதை செப்பனிட்டு முடிக்க……..பெரிய போடியார் பாத்திரம் என் தந்தையின் பாட்டனார்தான்….அவர் ஜெர்மன் சுருட்டுப் பிரியர் என்று என் தந்தை அடிக்கடி சொல்வதுண்டு,,,.அத்தகவலை பயன்படுத்தினேன். ஆரத்தி அடுக்கு விளக்குகள் முஸ்லிம் வீடுகளில் இருந்தது இருப்பது சரிதான்… கிழக்கு முஸ்லிம்கள் இந்துக்களை தம் மூதாதைகளாக கொண்டிருப்பதால் அந்தக் கலாசார நீட்சி இவர்களிடமும் இருந்தது…..நைலான் சட்டை என்று நான் சொல்லியிருப்பது பிழை என்று இப்போதுதான் அறிகின்றேன்…வாளை, மணலை மற்றும் கொய்போன்ற கடல்மீன்கள் நன்னீரில் வராது என்ற உங்கள் கூற்றில் வியந்து போய் விட்டேன்… நட்டுமை வெளிவந்த காலத்தில் நான் எதிர்கொண்ட பல விமர்சனங்களில் யாரும் (பேராசிரியர்கள் உட்பட) இவை பற்றி சொல்லவில்லை… உங்களிடமிருந்தே இப்பிழைகளை அறிந்தேன்… கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது…பொறுத்தருள்க.. நேரப்பளுவின் மத்தியிலும் சிரமம் கருதாது  நாவலை வாசித்தமைக்கு  என் மனமார்ந்த நன்றிகளும் மகிழ்ச்சிகளும் ……ஐயா…….ஒரு புதினம் எழுதும் போது எத்துணை நுணுக்கம்கள் பார்க்கப்பட வேண்டும் என்று அறிந்து கொண்டேன்.

நூல் தகவல்:

நூல் : நட்டுமை

பிரிவு:  நாவல்

ஆசிரியர் : ஆர். எம். நௌஸாத்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு :   2009

விலை: ₹ 120

 

 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *