இது சிந்தனையதிகாரம் கொண்ட புனையுலகத்தைக் காட்டுகிறது. உள் சூழலுக்கான நியம உறுதிக்கு வெளி சூழலின் காலக்கிரமத்தில் பல செயல்பாடுகள் கட்டமைக்கப்படுகிறது.
நவீனத்தின் புற உலக மனிதன் தனது மிதமிஞ்சிய புனைகளை நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் இனைத்து புராண இதிகாச கலாச்சார யுக்திகளை தூவி நவீன சொல்லாடலை இழைத்து கவரும் பொருந்தா முகமூடியை உருவாக்கியுள்ளார்.
கொள்கைகளின் நீட்சி காலப்போக்கில் ஒரு குழுவாகவும், கட்சியாகவும், மதமாகவும் உரு கொண்டு அதிகார பசி மற்றும் ஆளுமையின் முழு ருசியை பிரதிபலித்து அதன் பயிற்சியை வாழ்க்கை முறையாகவே திணித்துவிடுகிறது.
கல்வித் தளத்தின் கடமையை முடிக்காவிட்டால் நீங்கள் எப்படி செயல் தளத்துக்கு புறப்பட முடியும்?
நிறைய பேருடைய கல்வி, தொழில் , வாழ்கை அனுபவங்கள் (தற்காலச் சூழலில் ) கல்வி தளத்திலே நின்று / நிறுத்தி விடுகிறது. அதை செயல் தளத்திற்கு யாரும் முனைந்து எடுத்துச் செல்வதில்லை .
அதனால், உள் நோக்கி செல்வதென்பது ஒரு எட்டாக்கனியாக ஒரு மாய லோகமாகவோ எதார்த்த வாதத்திற்கு அப்பாற்பட்டதாகவே நிறைய பேர் நினைத்துக் கொள்கிறார்கள்.
சத்தியம் கொள்கையின் சாத்தியத்திற்குள் சாத்வதமாகும் போது சாதனை எனும் அழகு முகமூடியை அது அணிந்துக் கொள்கிறது. உண்மையான உயிர்ப்பையும் அதன் துடிப்பையும் மறைத்து விடுகிறது.
வஃபாதார் சத்தியத்தின் பாதுகாவலர்கள். அப்படியாக நினைவில் இருத்தி பயிற்சி அளிக்கப்படுபவர்கள். ஆனால் அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் உடல் எல்லையைக் கடந்து விரிவடைந்தாலும் மன ரீதியான செயல்முறைகள் குறுக்கப்பட்டுள்ளன.
உடல் வேட்கை வடிகாலுக்கு பெண்களுடனான வரம்பற்ற புணர்வும், ஒரு பால் வன்புணர்வும் ஒரு செயல்முறையாக பயிற்சியின் அங்கமாக கூறுவது புனைவாக கூட கடந்து போக முடியாது. இது எழுத்தாளனின் இருள் மன பிசாசுகள் வெளிப்படும் நேரம் என்றே கருதுகிறேன்.
எழுத்தாளனின் புனைவுலகம் விரிவடையும் போது அவனுடைய இருள் உலகமும் எழுத்தாகிறது. எழுத்தின் மூலம் அவனது கர்மாவை கரைத்துக் கொள்கிறான். மேலும் மலையளவு கர்மாவையும் தன் மீது குவித்துக் கொள்கிறான்.
அதிகாரத்தின் பள்ளத்தாக்குகள் எப்போதுமே ஆணாதிக்க கரும்பாறைககள் கொண்டே நிரப்படுகின்றன. அதற்கு கீழே நசுக்கப்படுவது பெண்கள்.
பெண்கள் உடல் ரீதியான இச்சைகளை கழிக்கும் கழிவறையாகவும் சந்ததியை உருவாக்கும் ஒரு மனித இயந்திரமாக மட்டுமே கையாளப்படுகிறாள். கசப்பான உண்மை நிஜ உலகின் ஆணாதிக்க நிழல் வெளிச்சமாக உள்ளது என்பதே.
கன்னி நிலத்தில் கருகிய வித்தற்ற உள்ளீடற்ற விதைகள் விதைக்க இடைவிடாத விசுவாசம் கால் விரித்து பிடிக்கிறது. பெண்களை வெறும் விதை நிலங்களாக்கும் சிந்தனை இந்நாவலின் காலத் தடுமாற்றம்
பெண்களின் சக்தி உடல் அல்ல உள்ளிருக்கும் தெய்வீகம் அவள் உடலால் வரையறுக்கப் படவில்லை என்ற பள்ளத்தாக்கின் ஆதி கர்த்தர் *ஓம் *(ன்) சிந்தனை/தத்துவத்திற்கு சிற்றின்ப விடுதிகள் மாறுபட்ட பதிலை தருகின்றன.
பள்ளதாக்குகள் தங்கள் நிழலை நிஜ உலகத்தின் மீது போர்த்தும் திறம் வாய்ந்தது. யோதாக்கள் இருமையின் விளிம்புகளை ருசிப் பார்க்கிறார்கள்.
பள்ளத்தாக்கு மனிதர்களின் அடையாளமாக உறுதி, ஒற்றுமை, பொதுநலம் மேலும் சிரிப்பு ,அழுகை, காதல் அர்த்தமற்றவையாகவும் கற்பிக்கப்படுகின்றன.. புற உலக மனிதர்கள் இதற்கு நேர்மாறானாவர்கள் தான்தோன்றித்தனம் , பிரிவினை, சுயநலம், மதம், பணம், பதவி , சொந்தம் என்பதை கொண்டவர்களாகவும் காட்டப்படுகிறார்கள்.
அழகான பறவைகளின் பெயர்களை சூட்டிக் கொள்ளும் செலுத்துநர்கள். இசைக்கும் பாடலுக்கும் மிகப் பெரும் தண்டனையைத் தருகிறார்கள்.
தங்கள் பேத்திகளை புணர தங்கள் பிள்ளைகளின் ஒத்துழைப்புக்கு இடைவிடாத கொள்கை – தத்துவ- சிந்தனையை போதையாக தருகிறார்கள்.
அவர்களுக்கு பந்தம் என்பது கீழ்மையான தோல்வி என்பதால் உறவுகள் எப்போதும் இனங்காணப்படாத வகையில் சமத்துவ உலகத்தை ஒன்றுபடுத்த புறமுகமூடிகளை ஏற்படுத்துகிறார்கள்.
முயலை வேட்டையாடும் ஓநாய்களை போன்று வீரர்களின் அலகு பயிற்சி அப்பாவி மனிதர்களை விரட்டிக் கொல்லும் போது திறக்காத மனம் தங்கள் விதைத்தல் பிறழ்வைக் கண்டடைத்த போது அது விலகி ஒடுகிறது. அப்படி விலகியோடி வந்த மனிதனின் ஒப்புதல் கதையாக அவன் வாய்மொழியில் விவரிக்கிறது இந்த மரணத்தின் பள்ளத்தாக்கு.
கொள்கைகளின் அதிகாரம் ஒரு மனிதனின் அகத்தை கூசச் செய்யும் வெளிச்சமாகவோ புலன் ஆகாத நிழலாகவோ பின் தொடர்தல் பேராபத்து.
நாவலின் சரிபாதி நடுவிலிருந்து நூறு பக்கங்கள் தடுமாற்ற எழுத்தின் பிரதிபலிப்பு. இது வாசிப்பை சலிப்படையச் செய்தாலும் மொழிப்பெயப்பாளர்களின் அசாத்திய திறமை அதை கடந்து போகச் செய்கிறது.
சர்சையான செய்தி நிறுவனத்தின் நிறுவனர் சர்ச்சைக்குள்ளான மனிதர் தருண் ஜே தேஜ் பால் இந்நாவலை மிகுந்த அதிர்வலைகளால் நிரப்பியுள்ளார்.
மேலும் அசாத்தியமான கற்பனைத் திறனுக்கும் இதுவரை அறியாத புதிய களத்திற்காகவும் இந்த நாவலை வாசகனாக வரவேற்கிறேன். பரிந்துரைக்கிறேன்.
The Valley of Masks வெளிவந்த( 2011) பத்தாண்டுகளுக்கு பிறகு (2021) சாரு நிவேதிதா மற்றும் தாமரைச்செல்வி மூலம் தற்போது தமிழில்.
நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் மிகுந்த கவனத்துடனான மொழியாக்க திறமை வெகுவான சாதனையாக மிளிர்கிறது.
வாழ்த்துகள்.
– மஞ்சுநாத்.
நூல் : முகமூடிகளின் பள்ளத்தாக்கு
பிரிவு : நாவல் | மொழிபெயர்ப்பு
ஆசிரியர்: தருண் ஜே தேஜ்பால்
தமிழில் : சாரு நிவேதிதா , தாமரைச்செல்வி
பதிப்பகம் : எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வெளியான ஆண்டு : 2021
விலை : ₹ 600
மூலநூல்:
புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட மஞ்சுநாத்[1983] . தற்போது புதுச்சேரி பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குதிரைக்காரனின் புத்தகம் [சிறுகதைத் தொகுப்பு], டால்ஸ்டாயின் மூன்று கண்கள் [கட்டுரை தொகுப்பு] – அகநாழிகை பதிப்பகம் புத்தகமாக வெளியீட்டுள்ளது.