மேடை ஒரு நிகழ் கலைஞனின் நிதர்சனங்கள்எழுத்தாளர் திரு. பாண்டியக் கண்ணன் எழுதிய இந்நாவலை, தடாகம் பதிப்பகத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

மனிதர்களுக்கு உரிய ஒரு அற்புதமான விஷயம் என்னவென்றால், தான் பார்த்த சம்பவங்களை, தான் கேட்ட கதைகளை, தான் அனுபவித்த வாழ்க்கையை என்றுமே அடையாளப்படுத்த வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவான். அப்படி அடையாளப்படுத்தப்படும் போது மட்டுமே அது பலதரப்பட்ட மக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதனால் தான் கலைஞர்கள் மீதும், எழுத்தாளர்கள் மீதும் மிகப்பெரிய மரியாதையை மக்கள் கொடுப்பதை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

படைப்பாளிகளுக்கு என்று ஒரு சலிப்பைத் தருகிறதோ அதை அடையாளப்படுத்தி ஒரு வரலாற்று சான்றாக மாற்றி விடுவார்கள். புதுக்களத்தை அப்ப தான் கொண்டு வர முடியும் என்பதை படைப்பாளிகள் தீர்க்கமாக நம்புகிறார்கள். அப்படித் தான் இந்த நாவலின் எழுத்தாளரும் அவரின் மொத்த சலிப்பையும் மேடை நாவலாக மாற்றி விடுகிறார்.

விளிம்பு நிலை நாடகக் கலைஞர்கள் பற்றியும், விளிம்பு நிலை அரசு ஊழியர்களின் அடிமைத் தனத்தையும், விளிம்பு நிலை அரசியல் கட்சித் தொண்டனின் இயலாமையையும் ஒட்டு மொத்தமாக  இந்த நாவலில் உரைத்து சொல்கிறார்.

நாவலின் நாயகன் பாகண் ஒரு சிறந்த சிந்தனை உடையவராக இருக்கிறார். ஆனால் அந்தச் சிந்தனை தான் அவரை களத்தில் என்ன மாதிரியான சிக்கலை உருவாக்கும் என்ற முன்முடிவுகள் தெரியாத ஒரு மனிதராக நம்மிடம் காண்பிக்கிறார். தனி மனிதன் அவனுடைய வாழ்க்கையை வைத்து அத்தனை அனுபவத்தையும் உருவாக்க முடியாது. அப்படி உருவாக்கினால், தவறுகளை திருத்தவே வாழ்நாள் போதாது. அதை ஒரு நாடக இயக்குநராக எத்தனை உரக்க சிந்தனையை வெளிப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தனி நபராக அவரது களத்தவறுகளை மட்டுமே ஒவ்வொரு நாடகத்திலும் காண்பிக்கிறார். 

அடுத்து ஒரு மிக முக்கியமான கதாபாத்திரமாக நம்மிடம் கலைச்செல்வி என்ற ஒரு நாடக நடிகையை நம்மிடம் கொண்டு வருகிறார். வலி மிகுந்த பெண்ணிடம் கரிசனமும், அந்தச் சமூகத்தின் உணர்வும் இருக்கும் போது, அதை அவள் தன்னிடம் இருக்கும் அத்தனை மனிதரையும், ஒரு ஆளுமையான நபராக மாற்றி விடுவாள். அப்படித் தான் ஒரு நாடக நடிகையாக, தன் சக நாடகர்களிடம் அந்த ஆளுமையின் குரலை நடிப்பில் எப்படி கொண்டு வர முடியும் என்பதை தெளிவாக எழுத்தாளர் நம்மிடம் சொல்கிறார்.

கதையின் நாயகன் அரசு ஊழியனாக இருந்து, நாடகம் போடும் போது, அதனால் வரும் டிரான்ஸ்பர் ஒரு கடைநிலை ஊழியனை எந்த அளவுக்கு மனதளவில் செயல்பட முடியாமல், ஒரு வெற்றிடத்தை தருகிறது என்பதை சொல்கிறார்

கடைநிலை அரசு ஊழியன் அரசுக்கு எதிராகவும், அதிகாரிக்கு எதிராகவும் ஒரு வார்த்தை பேச முடியாமல் இருக்கும் கையாலாகாத் தனத்தை ஒவ்வொரு வரியிலும் வலிக்க வலிக்க சொல்கிறார். செய்யாத குற்றத்துக்கு தண்டனையை அனுபவிப்பதும், ஒரு தெளிந்த, சிந்தனை மிகுந்த நபராக இருந்தாலும் அந்தக் குற்றத்தை, ஆமாம், நான் தான் செய்தேன் என்று சொல்லும் இடங்களில் எல்லாம், உன் மூளையை இத்தனை வேகமாக சிந்திக்க வைக்காதே என்று அதிகாரம் சொல்லும் இடமாக வாசகர்களுக்கு கடத்துகிறார்.

அதுவே அரசியல் தொண்டனாக இருந்து, அடித்தட்டு எல்லா வேலைகளும் செய்யும் போது, மற்ற ஜாதியினருக்கு பதவியும், விளிம்பு நிலை கட்சித் தொண்டனுக்கு அரசு வேலை என்று கொடுக்கும் போது, எந்த ஒரு மாற்றத்தை பற்றி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் இடத்தில், விளிம்பு நிலை மனிதரின் வார்த்தைகளாக வந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக நம் ஜனநாயக அமைப்பு இன்றும் இருக்கிறது என்று நேரடியாக உரக்க சொல்கிறார்.

நாடகத் துறையில் இருக்கும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலை ஒரு மிகமுக்கியமான புத்தகமாக சமூகத்தில் நிலை நிறுத்தி விட்டார். வரும் காலத்தில் அடுத்த தலைமுறைக்கு நாடகத் துறை சார்ந்த களநிர்வாகம் பற்றிய தெளிவான புத்தகம் தேடும் போது மேடை நாவல் நம்மிடம் இருக்கிறது. மேடை நாவல் ஒரு முக்கியமான ஆய்வு நாவலாக திரு. பாண்டியக் கண்ணன் மிகப் பெரிய சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றி மக்களிடம் கொண்டு வந்து விட்டார். அதற்கு எழுத்தாளருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை ஒரு வாசகனாக தெரிவித்துக் கொள்கிறேன்.


நூலாசிரியர் குறித்து

பாண்டியக் கண்ணன் :   இயற்பெயர் ஆர்.பி கண்ணன், மதுரை மாவட்டம்  இ.கட்ராம்பட்டியைச் சார்ந்தவர், தற்போது விருதுநகரில் வசித்து வருகிறார். தமிழ்நாடு சுகதாரப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றுகிறார்.  இவரின் முந்தைய நாவல்கள் சலவான் (2008),  மழைப்பாறை (2014),  நுகத்தடி( 2018). 

நூல் தகவல்:

நூல் :   மேடை  ஒரு நிகழ் கலைஞனின் நிதர்சனங்கள்

ஆசிரியர் : பாண்டியக் கண்ணன்

வகை :    நாவல் 

வெளியீடு :  தடாகம் வெளியீடு

வெளியான ஆண்டு :  2022

பக்கங்கள் :  277

விலை : ₹  300

நூலைப் பெற

தொடர்புக்கு :  +91 98 403 77 171 

Kindle Edition : 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *