ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய வ.உ.சி வாழ்வும் பணியும் என்ற நூலின் சுருக்கம் என்று அறிமுகம் செய்து 32 பக்கங்களுக்குள் புகைப்படங்களுடன் வ.உ சி-யை அனைவருக்கும் கடத்தியிருக்கின்றார்கள். அளப்பரிய தொண்டினை செய்திருக்கின்ற இந்த முயற்சிக்கு முதலில் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு ஒரு புத்தகத்தைச் சொல்லப் போனால் ஒரு வ.உ.சி பற்றி அறிந்து கொள்ள ஒரு ஆவணத்தை, கருவூலத்தைப் பதிப்பித்துத் தந்திருக்கின்றார்கள்

1806 ஆம் ஆண்டில் வேலூரில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சிக்குப் பின் ஒரு நூற்றாண்டு காலம் தமிழகம் அடிமைத்துயிலில் ஆழ்ந்திருந்தது. ஆனால் அந்த துயிலினை துய்த்தெழச் செய்து விடுதலை வேள்வித்தீயை மூட்டிய இருவர் வ.உ.சி-யும், பாரதியும் என்று துவங்குவதிலேயே இருவரும் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதனை நாம் உணர இயலுகிறது.

வ.உ.சியின் பிறப்பு அவருடைய படிப்பு அவர் எங்கு பணியாற்றினார்?, அவர் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே எவ்வளவு சம்பாதித்து இருக்கலாம், அனைத்தையும் விட அவர் சுதேசியத்தின் மேல் கொண்ட பற்று தொழிலாளர்களின் நலம் கப்பல் வாங்கும் போராட்டம் சிறை அனுபவம் பின்பு மரணம் இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு இங்கே அந்த நூலில் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலியில் விபின் சந்திரபால் விடுதலையை ஒட்டி திருநெல்வேலி எழுச்சி அதைத் தொடர்ந்து தைப்பூசம் மண்டபத்தில் எழுச்சிப் பேருரை பின்பு கைது, தொடர்ந்து கிளர்ச்சி வ.உ.சிக்கு இரட்டை ஆயுள்ச் சிறை, சிவாவிற்கு பத்தாண்டு சிறை, பத்மநாபன் ஐயங்காருக்குச் சிறை இப்படித் தொடர்ந்து அன்றைய சூழலை கண்முன்னே நிறுத்துகிறது இப்புத்தகம்.

தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி வ.உ.சி என்பதில் துளி கூட மாற்றுக் கருத்து இல்லை. இதனை அன்றைய கோரல் மில் தொழிற்சாலை போராட்டம் உணர்த்தியது என்று ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் எழுதியிருப்பார். “அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நிபந்தனையற்ற சரணாகதி என்ற அவமானத்திற்கு ஆங்கில முதலாளித்துவம் ஆளாயிற்று… இந்தியத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வெற்றி தேசியத்திற்குக் கிடைத்த வெற்றி…” என்று புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த ‘அரவிந்தர்’ தமது ‘வந்தேமாதரம்’ இதழில் தலையங்கம் எழுதிய ஒரு செய்தி இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முதல் பொது அரசியல் வேலை நிறுத்தப் போராட்டமும் அதன் வெற்றியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வ.உ.சி சிறைச்சாலையில் அடைபட்டிருந்த போது அவரால் கொண்டுவரப்பட்ட கப்பலும் அந்த தொழில் நலிவடைந்து கொண்டிருக்கின்றது. உணர்ந்த பாரதி,

“மேலோர் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர் செக்கடியில் நோவதுங் காண்கிலையோ?”

மனம் கசிந்து வ.உ.சி நிலை குறித்து பாட்டு எழுதிய அந்த பாடல் வரிகள் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவரே அந்த கப்பல் துறை மீள நிதி உதவி செய்யுங்கள் என்று கேட்ட செய்தி இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் பாரதியின் இந்த குரலுக்குச் செவிமடுக்க என்று யாரும் இல்லை என்ற வேதனையையும் நம்மால் உணர முடிகிறது.

ஆஷ் கொலை பற்றி செய்தி வருகிறது. அதனை வ.உ.சி-க்கு சொல்கின்ற முறை, அதை வ.உ.சி எதிர் கொண்ட முறை இவற்றை வ.உ.சி அவர்கள் தன்னுடைய சுயசரிதையில் எழுதிய அந்த பாடல் வரிகள் அப்படியே இங்கே தரப்பட்டிருக்கின்றது.

சிறை சென்ற பின் மீண்டும் வக்கீல் தொழில் புரியக் கூடாது என்று வ உ சி கருதி இருந்தார். குடும்ப வறுமை காரணமாக நண்பர்களின் தூண்டுதல் காரணமாக வழக்கறிஞர் பணியைத் தொடர வேண்டுமென நீதி மன்றத்தில் அனுமதி வேண்டுகிறார். நீதிபதி வேல்ஸ் உதலி அவருக்குரிய உரிமையைப் பெற்றுத் தந்ததற்காக அவருடைய பையனுக்கு வாலேஸ்வரன் என்று பெயர் சூட்டியதை நாம் அறிந்திருப்போம். அந்த செய்தியும் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வ.உ.சி-னுடைய உயில் பற்றி ஒரு பத்தி, அதில் அவர் பெற்ற கடன் விபரங்கள் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மிக வேதனையாக வ.உ.சி சிலையை நிறுவ மா.பொ.சி பட்ட பாட்டினை ஒரு பக்க கட்டுரையில் காணலாம். வ உ சி சிலை வைக்க மா.பொ.சி மேற்கொண்ட முயற்சிகள் அதனை அன்றைய காங்கிரசார் புறக்கணித்தது இவை அனைத்தும் வேதனைக்குரிய வருத்தம் அளிக்கின்ற செய்தி.

வ.உ.சி உடன் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பழகி ‘நாரதர்’ என்ற பத்திரிக்கை வெளியிட்ட திரு.தண்டபாணி பிள்ளை எழுதிய கட்டுரையினுடைய சுருக்கங்கள் கிட்டதட்ட ஒரு நான்கு பக்க அளவில் இடம் பெற்றிருக்கிறது.இது அனைத்துமே வ.உ.சி பற்றி நன்கு அறிந்து கொள்ள உதவும்.

ஈ.வே.ரா தனக்கு ஒரு முதல் வகுப்பு சீட்டு வாங்கித் தரும்படி பணம் கொடுத்தார். நான் அதற்கு அமிர்தசரஸிற்கு இரண்டு மூன்றாவது வகுப்புச் சீட்டை வாங்கி பாக்கி பணத்தை வ.உ.சி திரும்பி வருவதற்கும் செலவு செய்து கொடுத்துவிட்டேன். நாயக்கர் என்னைக் கேட்டதற்கு, மாணிக்கவாசகர் குதிரைக்குக் கொடுத்த பணத்தைக் கொண்டு கோயில் கட்டிய கதை சொல்லிச் சமாதானப்படுத்தினேன். ரயில் சென்னை மாகாணம் தாண்டி பூனே சென்றது. ஒரு மாபெரும் கூட்டம் மாலை மரியாதைகளுடன் ‘ஜே’ கோஷத்துடன் ரயிலை அடைந்தது. ஒவ்வொரு முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பில் உள்ள தலைவர்களும் தங்களுக்குத் தான் மாலை என்ற தலையை வெளியே நீட்டிக் கொண்டிருந்தனர். வந்தவர்கள் திலகர் சகாவான கப்பலோட்டிய தமிழன் எங்கே? என்று தேடினர். கடைசியில் மூன்றாவது வகுப்பில் உட்கார்ந்திருந்த வ.உ.சிக்கு மாலையிட்டு தின்பண்ட முதலியன தந்து வரவேற்பு கொடுத்து வாயார வாழ்த்திச் சென்றனர். ரயில் பஞ்சாப் சேரும் வரையில் இந்த உபசரிப்புகள் தொடர்ந்தன என்ற ஒரு மிகப்பெரிய வரலாற்றினை இங்கே பதிவு செய்திருக்கின்றார்.

வ.உ.சி எழுதிய நூல்கள், பதிப்பித்த நூல்கள் பற்றிய ஒரு பட்டியல் ஒரு பக்கத்தில் இடம்பெற்றிருக்கின்றது. வ.உ.சி-யும் புத்தகப் பைண்டர் இசக்கியும் கட்டுரை இருவரின் நட்பையும், வ.உ.சி விளையாட்டு இப்படி பற்பல செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டு ஒரு ஆவணமாக நம் கைகளில் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனை இளைஞர்களுக்குக் குறிப்பாகப் பள்ளி குழந்தைகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை இந்த அரிய புத்தகம் நமக்கு எடுத்து இயம்புகிறது. தியாகத்தின் திருவுருமாக தன்னுடைய சொத்து பத்துகளை எல்லாம் சுதந்திரப் போராட்டத்தில் இழந்து ஓய்ந்து மடிந்து போன ஒரு மனிதருள் மாணிக்கத்திற்கு, மகாத்மாவிற்கு நாம் செய்யக்கூடிய ஒரு நன்றிக் கடன் இதுவே தவிர வேறெதுவும் இருக்காது.

கட்டுரைத் தொகுப்பு
விலை ரூ.10
பக்கங்கள் 32


நூல் தகவல்:

நூல் :  மக்கள் தலைவர் வ.உ.சி

வகை :   கட்டுரைகள்

பக்கங்கள் :  32

விலை : ₹  10

 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *