நூல்களை வாசிப்பது என்பது அலாதியான இன்பம். பல புதிய அனுபவங்களையும் உணர்வுகளையும் நுட்பமான மாற்றங்களையும் எனக்குள் விதைப்பதில் நூல்கள் அதிக பங்கு வகிக்கின்றன.

ஆனால் அத்தகைய அனுபவங்களை அனைத்து நூல்களும் தந்து விடுவதில்லை. காரணம், நூலின் கருப்பொருள் எழுத்தாளரின் எழுத்து நடை அவற்றோடு வாசகனின் மனநிலையும் சேர்கிறது. நம் மனதோடு இசைந்து போகக்கூடிய படைப்புகள் தானே நம்மைக் கவர முடியும். அத்தகைய நூலே மழைக்கண்.

இன்னும் எத்தனை வருடங்களுக்கு இக்கதைகளும் கதை மாந்தர்களும் என்னுள் நிழலாடப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. எனினும் இக்கதைகள் அனைத்தும் மிக ஆழமான உணர்வுகளைக் கடத்தக் கூடியது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நூலில் 9 கதைகள்.

இன்று வயது வரம்பின்றி அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே தவழுகின்றன. அப்படி அந்த கவர்ச்சிகரமான பொருளை நாம் அந்நியப்படுத்த வேண்டுமெனில் அதை விடக் கவர்ச்சிகரமான ஒன்றை நம் கைகளுக்குத் தர வேண்டியிருக்கிறது.

தொழில்நுட்பம் இளைஞர்களை வீழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கின்றது என்ற ஒரு சாராரின் வாதம் சில நேரங்களில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், இன்றைய இளைஞர்களின் தேடல் தொன்மை இலக்கியங்கள் குறித்தும் இருக்கின்றது என்பது மகிழ்ச்சியான செய்திதானே.

நூலின் கதைத் தலைப்புகள் ஒவ்வொன்றும் எழுத்தாளனைத் தொன்மை இலக்கியங்களைத் தேடிப் படிக்கும் ஒருவர் என்பதை நமக்கு வெளிப்படுத்துகிறது.

  • எவ்வம்
  • காகளம்
  • நெருநல் உளளொருத்தி

போன்ற தலைப்புகள் என்ன சொல்ல வருகின்றது என்று ஒரு கணம் யோசிக்கவும் தேடவும் வைத்தது.

1. அன்பின் நிழல்.

ஒரு விவசாய குடும்பத்திற்கு ஒரு துண்டு நிலம் என்பது எத்தகைய உணர்வுப்பூர்வமானது. அது தன்வசமின்றி போகும்போது அந்த வலியும் வேதனையும் அவனை எத்தகைய மனநிலைக்கு இட்டுச்செல்லும் என்பதை விளக்குகிறது அன்பின் நிழல்.

தந்தைக்கும் மகனுக்குமான உறவு அந்த உறவில் கிடைக்கக்கூடிய புற இடைவெளிகளும் அக நெருக்கங்களும். ”பயமாக இருந்தாலும் தயங்கியபடியே, அப்பாவின் நெற்றியில் முத்தமிட்டேன்.. ”என்ற வரிகளில் நமக்குக் கண்ணீர் வழிகிறது.

2. நித்தியமானவன்

இது போன்ற கதைகள் காலகாலமாக வந்துகொண்டே இருக்கின்றன. தமிழ் திரைத்துறை என்ற பிரம்மாண்டத்திற்குப் பின்னால், இதுபோன்ற சங்கடங்கள் இருப்பதைப் பல எழுத்தாளர்களும் தமது எழுத்துகளில் சொல்லாமல் விட்டதில்லை.

விமான பயணத்தின் போது கீழே பார்க்கிற நம் கண்களுக்கு அடர்ந்த காடுகளும் கட்டிட நெருக்கடிகளும் அழகிய ஆச்சரியமாகக் காட்சியளிக்கிறது .

ஆனால், அவற்றின் அருகில் செல்லும் போது மட்டுமே மறைந்து கிடக்கும் கொடூரங்களின் விஸ்வரூப தரிசனத்தை நாம் உணரமுடிகிறது. அத்தகைய யதார்த்தங்களை எளிமையாகச் சொல்லும் கதை நித்தியமானவன்.

3. எவ்வம்

தொகுப்பில் தந்தை மகன் உறவு பற்றிப் பேசும் இரண்டாவது கதை. தலைப்பிற்கு ஏற்ப எந்த குறையுமின்றி கதை முழுவதும் காரசாரமான உரையாடல்களும் இழிச்சொற்களும் வெறுப்பும் கொட்டிக் கிடந்தன. பெரும்பாலும் கொடுமை. குழந்தைகள் தன் தாய் தந்தையரிடம் என்ன குறை இருந்தாலும் குறையாகப் பார்த்ததில்லை. மீண்டும் மீண்டும் அவர்களை அணைத்துக் கட்டிக் கொள்ளவும் அவர்களது அருகாமையில் கிடைக்கும் சுகத்தை விரும்பி தவிப்பதையும் பின் அதுவே வெறுப்பாகக் கோபமாக மாறுவதையும் பார்த்து இருக்கிறோம்.

அத்தகைய தந்தை மகன் உறவை விவரிக்கும் இச்சிறுகதை பல குழந்தைகளின் தந்தை பற்றிய ஏக்கங்களும் ஏமாற்றங்களும் கண் கலங்க வைக்கிறது. நல்ல தாய் தந்தையர் குழந்தைகளுக்குக் கிடைப்பதும் ஒருவகையில் வரமாகக்கூட இருக்கலாம். அத்தகைய பெற்றோரைப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று பெருமூச்சு விடுவதைத் தவிர பச்சை போன்ற சிறார்களால் வேறு என்ன செய்ய முடியும்.

4. முத்தத்துக்கு…

 “உள்ளுக்குள் விருப்பமும் தயக்கமும் மல்யுத்தம் நடத்திக் கொண்டிருக்க, வெளியே போர் நிறுத்தத்திற்கு வந்த தேவாலய பாதிரியாரைப் போல், சாந்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தேன். கண்கள் சும்மா இருந்தாலும் மனம் பல சமயங்களில் அதை சும்மா இருக்க விடுவதில்லை பிடியிலிருந்து திமிரும் கைப்பிள்ளை போல மனம் நழுவிக் கொண்டே இருந்தது சமநிலையாக அவள் பக்கம் இருந்து விலகி வேறு வேறு இடங்களில் பார்வையைச் செலுத்தினேன்.”

கதையில் நான் ரசித்த வரிகள் இவை. பருவ வயதைக் கடந்து 40 வயது வரை திருமணமாகாத ஒருவனின் தவிப்பைத் தத்ரூபமாகச் சொன்ன கதை. ஆனால் எனது எண்ண ஓட்டம் வேறாக இருந்தது. ஒரு ஆணிற்கு இந்த நிலை என்றால் பெண்கள் பாடு என்னவாகும்.

5 மழைக்கண்

எல்லாக் கதைகளும் சிறந்த கதைகளே என்றாலும் நூலுக்கு முத்தாய்ப்பு தருவது மழைக்கண். யதார்த்தத்தைப் பேசுகின்ற கதைக்களமும் தேர்ந்தெடுக்கப்பட்ட கனமான கதாபாத்திரங்களும் அடர்த்தியான உரையாடல்களும் பாத்திரப் படைப்புகளும் நம் நெஞ்சிலிருந்து நீங்காத இடம் பிடிக்கும் ஒரு கதையாக இருக்கிறது. இக்கதை வாசித்த பின் அடுத்த கதைக்குள் செல்ல இடைவெளி தேவைப்படுகிறது.

6. ஆடிஷன்

காதல் கதைகள் எப்போதும் சுவாரஸ்யம் தரவல்லவை. அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது. பிரிந்த காதல்களுக்கு எப்போதும் உணர்வுப்பூர்வமான உணர்வுகளைக் கொண்டுவருவதில் பெரும் பங்கும் இருக்கிறது.

எத்தனையோ நந்தன் அனிதாக்கள் நிறைந்த இந்த பூமியில் வேகத்தடையின்றி அதி வேகத்தில் நம் கண் முன் தோன்றி மறையும் பல காட்சிகள் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அத்தகைய காதலர்கள் சந்திப்புகளின் போது ஏற்படக்கூடிய படபடப்பையும் ஆசைகள் அற்ற பல்வேறு உணர்வலைகளை கண்முன் காட்சிப்படுத்துகிறது கதை.

ஆடிஷனுக்காக வந்த ஆதிதா அறியப்போவதில்லை. அவள் நடிக்கப்போவது நடிப்பல்ல அம்மா நடித்துக் கொண்டிருப்பது தான் நடிப்பு என்று.

 “அந்த அறையில் அதைவிடவும் தத்ரூபமான நடிப்பை நடித்துக் கொண்டிருந்தார்கள் நந்தனும் அனிதாவும்.” மிக அருமையான விவரிப்பு.

7. நெருநல் உளளொருத்தி 

பிரசவ வலியோடு ஆரம்பித்த கதை மிகப்பெரிய மனவலியை வாசகனுக்குள் தந்து சென்றுவிடுகிறது. கதைக்கு மிகப் பொருத்தமான தலைப்பு அதற்கு எழுத்தாளருக்கு ஒரு சல்யூட்.

சரி தவறு என்பதெல்லாம் அந்நேரத்திற்கான நியாயங்களே என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அதுபோல்தான் கிருஷ்ணவேணியின் முதல் மனநிலையும் பின்னாளில் மாறிப்போன மனநிலையும்.

சரியா தவறா? தர்மமா அதர்மமா? விதியா ஊழ்வினையா? என்று வரையறுக்க முடியாத தாங்க முடியாத துயரங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டி இருப்பது தானே இந்த வாழ்க்கை.

சொந்த பந்தங்களுக்கு இருக்கக்கூடிய உரிமை வெளிப்படைத்தன்மை கிராமத்து வாசனையோடு மிக அருமையான உரையாடல்கள் மூலம் கதை நகர்ந்து செல்வது அருமை.

குழந்தைப்பேறு என்பது பெண்மையின் கூறாகப் பார்க்கப்படும் சமுதாயம் மாறும் வரை கிருஷ்ணவேணிகள் இப்படித்தான் இருப்பார்கள்.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. “

குரளுக்கு ஏற்ப பூங்கொடி ராமஜெயம் இருவரும் தங்களுக்குள் ஒரு புரிதலோடு இனிய இல்லறம் நடத்தி வரும் போது எதிர்பாராத விபத்துக்கள் எப்போதும் கொடூரமான மாற்றங்களை ஏற்படுத்தி விட்டுச் செல்லும்.

பூங்கொடி போன்ற பெண்களும் அவர்களது துன்பமும் மாற வேண்டுமெனில் பெண்கள் கணவன் மீது அன்பு கொண்டவளாக இருக்க வேண்டுமே தவிர, அவனையே நிரந்தரமாக நம்பி இருப்பவளாக இருக்கக் கூடாது என்பதை உணர்த்துகிறது.

இத்தகைய சூழலிலிருந்து கிராமத்துப் பெண்ணோ நகரத்துப் பெண்ணோ வெளியேறுவதற்கு ஒரே நுழைவாயில் அவள் கற்ற கல்வியும் அவளுக்குத் தெரிந்த ஏதோ ஒரு சுய தொழில் மட்டுமே இருக்க முடியும்.

வாழ்க்கை மாற்றங்களுக்கேற்ப பெண்கள் தமது மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் இது போன்ற சிக்கல்களிலிருந்து வெளியேறி புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பது மட்டுமே என் போன்றவர்களின் தீராத ஆசை.

பூங்கொடியும் சளைத்தவள் அல்ல ஒரு நாள் திரும்பி வருவாள்

8.காகளம்

இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் கதைக்குள் நுழைந்தேன். கதையின் இறுதிப்பகுதி வாசிக்கும் போது, பறை என்கிற இசைக்கருவியைப் புலப்படுத்துவதாக இருக்கக்கூடும் என்ற முடிவிற்கு வர முடிந்தது. அதைக் குறிப்பிடுவதற்காக இந்த பெயர் இக்கதைக்கு வைக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு முதலாளிக்குக் கீழ் வேலை பார்க்கும் ஒருவனால் முதலாளியைப் பற்றிய மிக உயர்ந்த எண்ணங்கள் கொண்ட ஒருவனால் தனக்குச் சகல கலைகளையும் கற்றுக் கொடுக்கும் ஒரு முதலாளிக்கு, அதுவும் எந்த வகையிலும் குறை கண்டுபிடிக்க முடியாத ஒரு உயர்ந்த உள்ளம் படைத்த இசைப்ரியனுக்கு துரோகம் செய்த துணிந்த செல்வம் பின் குற்ற உணர்ச்சியின் மிகுதியால் குழம்பிப் போய் நிற்கும் மன நிலையை விவரிக்கும் கதை இது.

கதை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறு என்று எழுத்து செய்வதோடு இடையிடையே வந்து செல்லும் சில பாடல் வரிகளும் அவை உணர்த்தும் தத்துவங்களும் கதைக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது.

காகளம்.. துரோகத்திற்குக் குற்ற உணர்ச்சியைத் தவிர வேறு பெரிய தண்டனை இருக்க முடியாது என்பதை உணர முடிகிறது. பொட்டலம் கட்டுவது முதல் நீச்சல் தெரியாமல் குளத்தில் எப்படி நீச்சல் அடிப்பது என்ற தன்னம்பிக்கை வரை கற்றுக் கொடுத்த ஒரு தலைவனுக்குத் தான் கொடுத்த பரிசு என்ன என்பதை உணர்ச்சியினால் ஒருவன் கலங்கி நிற்கும் காட்சி பிரமாதம்.

9. நேசன்

மனிதரைத் தவிரப் பிற உயிர்கள் அனைத்தும் தமது வாழ்க்கை புரிதலோடு தான் பிறக்கின்றன. அவற்றிற்கு ஒரு போதும் எப்படி வாழவேண்டும் என்று யாரும் கற்றுக் கொடுப்பதில்லை. அவற்றுக்கு ஆரம்ப வகுப்புகளோ பட்டப்படிப்புகளோ தேவைப்படுவதில்லை.

மனிதனும் தன் வாழ்நாளில் ஒவ்வொரு படிக்கட்டுகளை ஏறுவதற்கும் படிப்பினைகளைத் தேடிக் கொண்டே இருக்கிறான். அவனால் தனித்து வாழ முடிவதில்லை. சக உறவுகளின் நட்பும் இணக்கமும் தேவைப்படுகிறது. அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் பயணிக்கின்ற ஒருவனுக்கு வாழ்க்கை மிகவும் கொடூரமாக மாறிவிடுகிறது. சிக்கல்களுக்குள் சிக்குண்டு சின்னாபின்னம் ஆகி விடுகின்றான்.

இந்த வாழ்க்கையில் நுட்பங்களும் உள் உணர்வுகளை எதிர்கொள்ளும் அசாத்திய அறிவும் மனிதனுக்குக் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.

காட்சிகள் ஒவ்வொன்றும் வண்ணப் படமாக கண்முன் தெரிகிறது. கர்ப்பிணித் தாயின் பதட்டமும் அவளின் பிடிவாத குணமும் அவற்றைச் சமாளிப்பதற்காக ஒரு உறவின் மீது கிஞ்சித்தேனும் அன்பு ஏற்படாத ஒருவனால் அந்த மனநிலையிலிருந்து படிக்கும்போது அடடா எத்தனை அற்புதமான பாத்திரப் படைப்புகள் என்ற எண்ணம் எழுகிறது. இக்கதையின் உளவியலை விவரிப்பதற்கு உண்மையில் எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை. பிடித்தவர்கள் அருகில் இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய வேதனையோ அதைவிடக் கொடுமையானது பிடிக்காதவர்கள் அருகில் நாம் இருப்பதும். கதையின் முடிவு அருமை.

பூமியின் மனித வாழ்வும் பின் வளர்ச்சிகளும் உண்மை எனில், அவை படிப்படியாக வந்த அத்தனையும் இன்றைக்குக் கதைகளாகவே பார்க்கமுடிகிறது.

ரஷ்ய உக்ரைன் போரும் நாளைய சம்பவங்கள் குழந்தைகளுக்கான கதைகள் அவை. நிகழ்கால நிகழ்வுகளைச் சிறுகதைகளில் யதார்த்தத்தின் நுண்ணிய உணர்வுகளைக் காத்திரமான படைப்புகளாகக் கொண்டு வருவதே எதிர்காலத்தில் இன்றைய எழுத்துக்கள் காலத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியமாக மாறி பயனளிக்க முடியும். அத்தகைய பொறுப்போடு மிகச் சில படைப்பாளர்கள் சிறப்பாக தமது எழுத்தில் வெளிப்படுத்துகிறார்கள்.

பல புதிர்கள் நிறைந்த விடை தெரியாத வினாக்களுடன் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது, சிலர் வாழ்க்கையில் ஏற்படும் சில சம்பவங்களுக்குக் காரணம் புரிவதில்லை. பொருளாதார பிரச்சினைகளும் பல சிரமங்களையும் நெருக்கடிகளையும் கொண்டு பின்னிக் கிடக்கிறது காலம். அவற்றைப் புலப்படுத்தும் அக்காலத்தின் கண்ணாடியாக மனித மனதைப் படித்து பின் அதனைக் காட்சி பிழையின்றி சித்திரமாகச் சிறந்த மொழிநடையில் மொழிபெயர்த்த செந்தில் ஜெகன்நாதன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள் !.

மேலும், பல படைப்புகள் பல பரப்புகளிலும் வரவேண்டும் பல உயரங்களை எட்ட வேண்டும்.


நூல் தகவல்:

நூல் :  மழைக்கண்

வகை :  சிறுகதைகள்

ஆசிரியர் :  செந்தில் ஜெகன்நாதன்

வெளியீடு :  வம்சி புக்ஸ்

 ஆண்டு:  2022

பக்கங்கள் :  -

விலை:  ₹  150

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *