மாறனின் ”இல்லாள்” ஒரு கண்ணியமான தொடுதல், ஒவ்வொரு இடத்திலும் கண்ணியமாக கதாபாத்திரங்களை கையாள வேண்டும் என்ற அக்கறை. குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு மிக நேர்த்தியாக மனித உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற மெனக்கெடல், இன்றைய  கால கட்டத்தில் இளையவர்களின் காதல் உணர்வுகள், வீட்டு பெரியவர்களின் புரிதல் இல்லாத பொறுப்புணர்வுகள் போன்றவைகளை எளிமையாகவும், யதார்த்தமாகவும் எடுத்துக் கொண்டு போகும் விதம், கதையை நாகரீகமாக நகர்த்த வேண்டும் என்ற நோக்கம் மாறனின் எழுத்துக்களின் வெளிப்பாடு.

” நதீமாவை விட துப்பட்டா ஒரு நூல் அதிகமாகவே வளர்ந்திருக்கிறது ” என்று சொல்கின்ற இடத்திலும் ” கண்ணீரை பரிசாகக் கொடுப்பார் தனது வார்த்தைகள் மூலம் ” என்று சொல்லும் இடத்திலும் கண்டிப்பான தகப்பனார் என்பதை விட கடுமையான தகப்பனார் என்ற நிலையில், அந்த நாயகி மனதில் ஏற்படும் ரணமும்; பெரியவர்கள் கண்டிப்பு என்ற பெயரில் இளையவர்களிடம் கண்ணிய குறைவாக நடந்து கொள்ளும் முறை வெளிப்படுகிறது. ” அதிகாலையில் வீட்டின் முன் மாடியிலும், வீட்டு உட்சுவர்களோடு மட்டும் தான் ஆடை சுதந்திரம் இருந்தது என்று சொல்லும் இடத்தில் நாயகியின் அடிமைப்பட்ட உணர்வு வெளிப்படுகிறது.

நாயகியின் விழிகளை ” கவிதையின் விழிகள் ” என்று சொல்வது நயமான உருவகம். ஒரு படைப்பாளியின் கூர்மை, புலமை என்பது அவர் கையாளும் உவமைதான். அந்த கற்பனை ஒரு எழுத்தாளனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். நாயகி நாயகனை கண்டவுடன் ” நிசப்தமாய் இருக்கும் பூந்தோட்டத்தில் நிம்மதியாய்  பார்ப்பவர் சட்டையில் ஒரு வண்ணத்துப் பூச்சி அமர்ந்தால் ஏற்படும் அகமகிழ்வு போல உணர்த்து அவளது மனம் ” என்று சொல்லும் போதும், ” வட்ட இட்லிக்கு வசையை தொட்டு சாப்பிட்டாள் நதீமா ” என்று சொல்லும் இடத்திலும், பின்னியிருந்த கருநாகம் தோலை உரித்து போல் என்று சொல்லும் இடங்களிலும், எழுத்தாளர் மாறன் பயன்படுத்திய உவமை அவரின் கற்பனையையும் புலமையையும் வெளிப்படுத்துகிறது.

நாயகன் மதியை மதசார்பின்மை தத்துவத்தில் ஈர்ப்புடையவராக காட்டுவதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பு  சட்டத்தின் மீது மதிப்பு கொண்ட இளைஞனாகவும், திராவிட சிந்தனைகள் மேலோங்கி உள்ளவராகவும் காட்டுகிறார் ஆசிரியர்.

” உணர்வுகள் மறுக்கப்படும் தனக்குள் ஏன் இவ்வளவு உப்பு ” என்று நதீமா அவளது தாயை பொய்யாக கோபிக்கிறாள் என்று சொல்லி உணர்வுக்கும் உள்ள தொடர்பை அறிமுகம் செய்வது அருமை.

” வாளி நிறைய துணிகளை வாய் நிறைய புன்னகையோடு நதீமா கொண்டு வந்தாள் ”

” தார் சாலைகளை அதிகம் கண்டிடாத தாரையின் கால்கள், சிறிது தடுமாற்றத்துடன் நடந்து வந்தது ” போன்ற சொல்லாட்சிகள் மிகவும் நயம். “உள்ளதால் ஒருவரை எங்கும் காணும் காதல் என்றுமே தோற்காது ”

“இறைவன் உங்கள் உள்ளத்தையும் செயல்களையுமே பார்க்கிறான் என்ற நபிகளின் மொழியோடு முடித்திருப்பது எழுத்தாளரின் முதிர்ச்சி.


– முகமது நாசர்.

விமர்சனம் இணையதளத்தில் இந்நூலைப் பெற
நூல் தகவல்:

நூல் :  இல்லாள்

வகை :  நாவல்

ஆசிரியர் : மாறன்

வெளியீடு :  கூ(ட்)டு பதிப்பகம்

ஆண்டு:  2022

பக்கங்கள் :  120

விலை:  ₹  120

1 thought on “மாறனின் “இல்லாள்” நாவல் – மதிப்புரை

Comments are closed.