ரு சிறிய கல் பட்டால் நொறுங்கிப் போகும் பதின்பருவ வயது. நொறுங்கிப் போவது நீண்ட வாழ்விற்கான அடித்தளம் மட்டுமல்ல. உணர்வுகள். உணர்வுகளின் ஒழுங்கு முறையைக் காட்டுவதற்குப் பதிலாக ஒழுங்கற்ற மறுபக்கத்தைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. கதைக்கான சுவாரஸ்யம் எப்போதும் மறுபக்கத்தில் தான் அமைந்துள்ளது.

1960-ல் ஜப்பான் பதின்பருவ இளைய சமூகத்தின் புறவாழ்வு செயல்கள் அவர்களது உளவியலை எவ்வாறு ஊடறுத்துப் போகிறது. இது நமக்கு முற்றிலும் மாறுபட்ட பொருந்தாத கலாச்சாரம். அப்படியிருப்பதால் தான் என்னவோ அதன் மீது நமக்கு ஆர்வம் பீறிடுகிறது.

முடிவற்ற இசை பிரவாகத்தினூடே காமமும் மதுவும் கைக்கு எட்டும் தூரத்திலேயே இருக்கிறது.

ஒளிவு மறைவற்ற பாலியல் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் இளைய சமூகம் இயல்பான வாழ்வில் பொருந்திக்கொள்ள முயற்சித்தாலும் மனச்சிக்கல் என்பது அதன் பிரதிபலிப்பாகவே இருக்கிறது.

அதன் நிழலுருவங்களுக்கு அவர்கள் தரும் பதில் தற்கொலை. உலகில் தீவிர மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்பவர்கள் ஜப்பானில் அதிகம் என்பதை நாம் இங்கு நினைவு கூர வேண்டும்.

இந்நாவலின் ஒட்டு மொத்த கூறுகளின் விளைவுகளை யோக கலாச்சாரத்தில் சொல்லப்படும் ஒரே வார்த்தையில் அடக்கி விடலாம். ஆம் அது “ருணானு பந்தா”. உறவுகளின் கர்ம பந்தம். கட்டுப்பாடு என்பதை சுய ஒழுக்கத்திலோ சமூக நியதியிலோ பொருத்திக் கொள்வது வீண். இது பொறுப்பெடுத்துக் கொள்வது பற்றிய பிரச்சினை. ஒருவருக்கு ஒருவர் மட்டுமல்லாது தனக்கு தானே கூட.

தனது பால்யத்தில் இருந்தே உடனிருந்த காதலன் பதின்பருவத்தில் திடீரென தற்கொலை செய்து கொள்கிறான். அவன் இறப்பிலிருந்தும் நினைவுகளில் இருந்தும் மீள முடியாமல் தனது கல்வியை பாழ் படுத்தி குடும்பத்தாரைச் சோர்வாக்கி மன நோயாளியாக மாறிப் போகிறாள் நவோகோ. வாட்டனபி ஆறுதலுக்கான நண்பன் என்றாலும் அவள் மீது அவனுக்குக் காதலும் இருக்கிறது. அது அவளுக்குத் தெரியும். அவள் அதை நிராகரிக்கவில்லை. அதே சமயம் முழுமையாக ஏற்கவுமில்லை. பழைய நினைவுகள் அவள் மீது ஏறி அமர்ந்து பெரும் பாறையைப் போல் அழுத்துகின்றன. வாழ்வில் ஒரு ஆழ்ந்த சிரமமில்லாத சுவாசத்திற்கு அது தடையாக இருக்கிறது. அதிலிருந்து அவள் குணம் பெற சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மருத்துவ புத்துணர்ச்சி மையத்திற்குச் செல்கிறாள்.

முறையான ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைகள், உடற்பயிற்சி, வெளியுலகத்தில் இருந்து தனித்திருப்பது, சுத்தமான காற்று, அமைதி இது மட்டுமல்லாது அங்குள்ள விவசாய நிலம் நடைமுறையில் அவர்களைத் தன்னிறைவு உடையவர்கள் ஆக்குகிறது. அவர்கள் ஒன்றிப்போயிருக்கும் உளச்சிக்கலின் இடைவெளியை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக அந்த மையத்தில் வானொலி தொலைக்காட்சி ஏதுவுமில்லை. அங்குப் பல நேரங்களில் நோயாளிகள் ஊழியர்களாக இருக்கிறார்கள். சில நேரங்களில் மருத்துவ ஊழியர்கள் நோயாளிகள் போலவே நடந்து கொள்கிறார்கள்.

நோயாளியை நோயாளியாக பார்ப்பதென்பது சரியானது அல்ல. இது குணமாக்குதலின் பெரும் தடை. என்னைப் பொறுத்தவரை உற்சாகத்தை மட்டுமே அவர்கள் மீது பிரதிப்பலிக்க வேண்டும். அவர்கள் உற்சாகத்தால் மட்டுமே நிரம்ப வேண்டும். மாறாக பரிதாபங்களால் அவர்களது நோய்த்தன்மையை நீட்டித்தல் கூடாது.

வாட்டனபி தன் மீள் நினைவாகவே கதையைச் சொல்கிறான். அவன் மற்றவரை திருப்திப்படுத்தவோ கவனத்தை ஈர்க்கவோ செய்வதில்லை எனினும் அவனது இயல்பு மற்றவர்களை அவனிடம் நெருங்கச் செய்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு வகையில் தனது சொல் அல்லது செயல் மூலம் மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கிறான்.

மிடோரி அவனை விரும்புகிறாள். அவனுக்கு அவளைப் பிடித்தாலும் நாவோகோ மீதான நினைவுகளிலே உழல்கிறான். அவளோ தற்கொலை செய்து கொண்ட பால்ய காதலனின் நினைவு சுமந்து கொண்டு திரிகிறாள். இதில் உள்ள பொதுத்தன்மை காதலும் சுயநலமும். ஒரு கட்டத்தில் முடிவெடுத்து விட வேண்டிய உணர்ச்சி கொந்தளிப்பின் நிர்ப்பந்தத்தை நோக்கிக் கதை அருமையான காட்டாற்று வெள்ளம் போல் பாய்கிறது.

நீங்கள் ஒரு விஷயத்தால் பாதிப்படைவது என்பது அவ்விஷயத்தில் நீங்கள் மூழ்கியுள்ளீர்கள் அவ்வளவே. அதிலிருந்து வரும் வழி இயல்பானதாகவே இருப்பினும் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ பைத்தியமாக்கிக் கொள்கிறீர்கள். தற்போது அதை சமூகத்தின் கலாச்சாரம், பண்பாடு, அரசியல், மதம் , கொள்கைகள் , நுகர்வுகள் எனப் பல உபக்காரணிகளும் இதைத் தீர்மானிக்கின்றன.

தாமஸ் மானின் “தி மேஜிக் மவுண்டன்” வாசகனான 19 வயது வாட்டனபிக்கு அந்த தலைப்பிற்குப் பொருத்தமான 39 வயது ரெய்கோ என்கிற பெண்மணியால் வாழ்வின் கீதம் புலப்படுகிறது. அசாத்தியமான அதேசமயம் துரதிர்ஷ்டமான பியனோ இசைக் கலைஞரும் கிட்டார் வாசிப்பாளருமான அவள் அவளுக்காகவே இசைத்துத் திளைக்கும் நுட்பத்தைக்கொண்டவள். Norwegian wood, Yesterday, Michelle, Here comes sun, And I love Here, Wedding blue bells .., என 51 கோர்வைகளை இடைவிடாமல் இசைக்கும் போது நாமும் அவளோடு பொருந்திப் போகிறோம். இதன் தொடர்ச்சியாக எதோவொரு விதத்தில் தி.ஜா வின் அம்மா வந்தாள் நாவல் நமது நினைவோடையில் பிணைந்து வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

மனிதனின் கடந்தகால நினைவுகள் நிகழ்கால உயிர்ப்பை மறித்துப் போகச் செய்கின்றன. நினைவு சேகரிப்புகளில் சிக்கிப்போகும் வாழ்வு ஒரு சூதாட்டம் போன்றது.

காலத்தின் போக்கில் வாழ்பவனாக இருந்தாலும் அலை போல் தொடும் நினைவுகளால் வாழ்வை இலகுவாக்கிக் கொள்வதும் சிக்கலாக்கிக் கொள்வதும் அவனது ஆளுமையைப் பொறுத்தே அமைகிறது. இதுவே சுயநிர்வாகத்திறன். நிர்வகிக்காமல் விடுவது கூட பிரச்சனை இல்லை. தவறாகக் கையாள்வது தான் மோசமானதை நோக்கிய அதிவிரைவு பாதை.

1987-ல் நோர்வீஜியன் வுட் வெளியான பிறகு இந்நாவலின் தூக்கலான பீட் போலவே ஹாருகி முரகாமியின் வாசகர்கள் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் எகிறியது.மேற்கத்திய இலக்கிய ஆர்வமும் இசையின் மீதான தீராத வெறியும் கொண்ட ஹாருகி முரகாமியின் மிகவும் எளிமையான வாசகம் எழுத்து ஜாம்பவான்கள் என்று கருதிக் கொள்பவர்களுக்காகக் குறிப்பிடுகிறேன்.

“ஒரு நல்ல படைப்பாளிக்குப் படைப்பு மனநிலையை நிர்வகிப்பதற்கும் அதற்குத் தேவையான உறுதியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் நல்ல உடல்நலம் அவசியம்”

அதனால் தான் அவரது நான்கு அல்லது ஐந்து மணி வரையிலான தொடர் எழுத்தாக்கத்திற்குப் பின்பு அதே அளவு நேரத்தை நீச்சல் , நடை, ஓட்டம் என உடற்பயிற்சிகளில் செலவிடுகிறார்.

இந்நாவலின் தமிழாக்கத்தை ஒரு மொழியாக்கம் போல் அல்லாது மூலநூலின் வாசிப்பு அனுபவத்தைச் சிதையாமல் தந்த க.சுப்பிரமணியன் அவர்களுக்கு வாழ்த்துகள்! . நன்றிகள்.!


மஞ்சுநாத்

நூல் தகவல்:
நூல்:
நோர்வீஜியன் வுட்
பிரிவு : மொழிபெயர்ப்பு நாவல்
ஆசிரியர்: ஹாருகி முரகாமி
தமிழில்: க.சுப்பிரமணியன்
வெளியீடு: எதிர் வெளியீடு
வெளியான ஆண்டு  2014
பக்கங்கள்: 494
விலை : ₹ 350

1 thought on “நோர்வீஜியன் வுட் – விமர்சனம்

  1. ஹாருகி முரகாமியின் அருமையான வரிகளை மெருகேற்றிய உங்களுக்கு வாழ்த்துக்கள் சார் .

Comments are closed.