மிக அருமையான கிராமத்துப் பின்னணியில் உருவான சிறுகதை மழைக்கண். தலைப்பே வாசகனைச் சிந்திக்க வைக்கிறது.

பாம்பு கடித்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் படகில் பயணம் செய்தவன் இடியும் மின்னலும் காற்றும் துடுப்பும் நீரும் தனித்தனியாகவும் பின் ஒன்று சேர்ந்தும் துன்பம் தந்து இறுதியில் பரிசல் கவிழ்ந்து உயிர் போனதைப் போல விவசாயக் குடும்பம் அனுபவிக்கும் தொடர் அடிகள்.

குடும்ப பொருளாதாரத்தில் நகர்ப்புற பெண்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள் என்ற பிம்பம் இருக்கும் சூழ்நிலையில் கிராமப்புற பெண்களின் உத்வேகமும் உன்னதமான உழைப்பும் ஆணைவிட அவளுக்கு இருக்கும் ஆர்வமும் அத்துறையின் அறிவும் மிகச் சிறப்பாக, ” ஒங்க அம்மாளுக்கு நெலத்தோட ரேகை எல்லாமே அத்துப்புடிடா தம்பி” என்ற ஒரே வாக்கியத்தில் புரியவைத்ததில் ஆசிரியருக்கு சல்யூட்.

கதாபாத்திரங்களும் காட்சிகளும் கண்முன் விரிய, ஒரு நோயின் தீவிரமும் அதன் உபாதைகளும் படிக்கும்போது நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

தாயின் எரிச்சல், கோபம், குழப்பம் நிறைந்த மனநிலை சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதோடு ஒரு தாய் நோயுற்ற போது தந்தையின் சிறப்பான பங்களிப்பும் குழந்தைகளின் புரிந்துணர்வும் மிக அழகிய நெஞ்சம் கனத்த காட்சிகள்.

அப்பா அம்மாவிடம் ஆலோசனை கேட்பதும், அம்மா ஆலோசனைகள் வழங்குவதும்; பின்பு குறிப்பறிந்து உணவு பரிமாறும் நேரங்களில் பேச்சைக் குறைப்பதும் வேலையாட்களிடம் வேலையைச் செய்ய வைப்பதும் தானே முன்மாதிரியாகச் செய்து முடிப்பதும் எனப் பல இடங்களில் அந்தத் தாயின் தனித்துவமும் தலைமைத்துவமும் வெளிப்படுகிறது.

பருத்திப்பூ வெடித்து மலர் பிரசவம் ஆவதற்கு இடையில் எத்தனை கவனம் எடுக்க வேண்டியிருக்கிறது? இறுதியில் தன்னையே இழக்க வேண்டி வருவதும் ஒவ்வொரு பூவிற்கும் விவசாயி தாயாக மாறுவதும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அவசியமான உண்மை.

“செடியில வெடிப்பு காயி ஒன்னு உடாம எடுங்கடி அம்மாளுவோளா…… ஒங்களுக்கு புண்ணியமா போவும்” கதையின் இடையில் இவ்வாறான பேச்சு வழக்கு மொழிகள் நம்மைப் பூரிப்பில் ஆழ்த்துகிறது.

தொழு நோயாளர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள், வறுமை, பசி, கோபம், பரிதவிப்பு மருத்துவரையும் கடவுளையும் மாறிமாறி கெஞ்சுகின்ற தூற்றுகின்ற இயல்பான இயலாமை என் பல நூறு மனித உணர்வுகளை கூறுபோட்டு நம் மனதைக் குத்தி செல்லும் அழகிய எழுத்து நடையும் மிகச் சிறந்த முடிவும் கதைக்கு பலம்.

ஆரம்பம் முதல் இறுதிவரை வாசகனை இழுத்துச் செல்லும் தொடர் ஓட்டம். சிறுகதை என்று படிக்கத் தொடங்கினாலும் யாரோ ஒருவரின் சுய கதை படித்தது போன்ற ஓர் உள்ளுணர்வு. எங்கோ யாரோ ஒருவருக்கு இவ்வாறான துன்பங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன அவற்றை மிகச்சிறந்த படைப்பாக வெளிக்கொணர்ந்த எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.! மேலும் பல சிறந்த படைப்புகள் வெளிவர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.


அர்ஷா மனோகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *