இணைய இதழ்கள்

நாச்சியாள் சுகந்தியின் “மழை தருமோ மேகம்” சிறுகதை ஒரு பார்வை


“மழை தருமோ மேகம்” தலைப்பே கவிதையாக, தலைப்பைப் பார்த்தவுடன், “மழை தருமோ என் மேகம்.. ” என்ற பாடல் எஸ்.பி. பி. குரலில் காதில் ஒலிக்க ஆரம்பித்தது.

நெத்தலிக் கருவாட்டு வாசனையோடு ஆரம்பித்த கதை, அதே வேகத்தில் வாசகனை தரதரவென இழுத்துச் செல்லும் நடையில் முடிந்தது. காதலின் சிறப்பே காலம் கடந்தும் நீங்காத நினைவுகளாக, வாட்டும் வலிகளும் அதனை ஞாபகமூட்டும் நிகழ்வுகளும் தான்.
கதையின் நாயகனுக்கு கருமேகங்கள் அத்தகைய காலம் சென்ற காதலை ஞாபகப்படுத்துவது அருமை.

கணவனை இழந்த திலகவதி குழந்தையோடு மனைவியாக ஏற்றுக் கொள்ள விரும்பும் முருகேசன், எல்லா தகுதிகளும் இருந்தும் அவன் மீது முழு விருப்பம் இருந்தும் குழந்தைக்காக அந்த காதலை மறுக்கும் தாயாக திலகவதி, ஆகா திலகவதி எவ்வளவு நல்லவள் ஒரு நல்ல தாய் என்றெல்லாம் படிப்பவர்களுக்கு பாராட்ட தோன்றினாலும், இது நியாயமே இல்லை என்று அடித்துச் சொல்கிறது என் மனம். ஒரு பெண்ணிற்கு குழந்தை வளர்ப்பது மட்டும் தான் கடமையா கணவனை இழந்தவள் அப்படியே தன் கனவுகளையும் தொலைத்து விட வேண்டுமா?

முருகேசன் போன்ற நல்லவர்கள் கிடைக்க தானே செய்கிறார்கள் அவர்களோடு மிகுதி வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் இல்லையே, இது ஏன் என் பெண்களுக்கு புரிவதில்லை எதனால் தங்களுக்கு தாங்களே சிறை வைத்துக் கொள்கிறார்கள் என்ற ஆதங்கம் எழத்தான் செய்தது.

இருவருக்குள் இருக்கும் ஆத்மார்த்தமான அழகிய காதலை ஆசிரியர் அழகாக நுண்ணிய உணர்வுகளால் சித்தரித்துள்ளார்.

அவளது மரணம் அங்கு நிகழ்கிறது, அதே நாள், முருகேசு க்கு மீண்டும் அந்த கருவாட்டு குழம்பு ஆசை வருவது மனதை மிகவும் நெகிழ வைத்த நேரம்.

எல்லா இடங்களிலும் எல்லா வற்றையும் சாப்பிட மனம் வராது இதுதான் மனதின் சிக்கல்,
சரியான உளவியல் பார்வை.

தனிமை என்பது மிகக் கொடுமையானது, அங்கு ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை.

“எவளையோ கட்டிக்கிறதுக்கு உன்னையே கட்டிக்கிடுறேனே”

“எனக்கும் ஆசைதான். ஆனா பொம்பள பிள்ளைய வச்சிருக்கேன்…….” என்ற உரையாடல்,

சமுதாயம் பின்பற்றுகின்ற அர்த்தமற்ற கொள்கைகள், அதனை அனுபவிப்பவர்களையும், அதன்வலிகளையும், பற்றி யோசிக்க தவறுகிறது, வாழ்க்கை
அவரவருக்கான ஞாயங்களோடு வாழ வழி விட்டு ஒதுங்கி செல்வதே முருகேசன் திலகவதி போன்றோர் தமது வாழ்க்கையை வாழ செய்யும் பெரும் உதவி.

காதல் நிறைந்த, சக மனிதன் புரிந்து கொள்ள வேண்டிய உணர்வுகளின், உன்னதமான உறவு சார்ந்த, யாதார்த்தமே மழை தருமோ மேகம்.


-அர்ஷா மனோகரன்

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

One thought on “நாச்சியாள் சுகந்தியின் “மழை தருமோ மேகம்” சிறுகதை ஒரு பார்வை

  • அறிவுபூர்வமான விமர்சனம்.. வாழ்த்துக்கள்..

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *