“திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்” என்கிறது ஐங்குறுநூறு. நெய்தல் நிலத்தின் உணர்வுகள் கவிதையாகத் துவங்கி சிலநூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என திணையின் தன்மைகளை சொற்களுக்குள்  வடித்த காலம் ஒன்று இருந்தது. அருங்காட்சியக சான்றுகளைப் போல் அக்கவிதைகள் கண்ணாடித் தடுப்புக்குள் உறைந்து விட்டன. பெரும் இடைவெளிக்குப் பின்  வாசிக்க வாசிக்க உவர்ப்புக் காற்று நம்மை சூழத் துவங்கும் கவிதைகளை ச.துரை தனது மத்தி தொகுப்பின் வழியாகத் தந்திருக்கிறார். அவருடைய முதல் தொகுப்பு இது. முன்னுரை எதுவும் இல்லாததால்  ஆர்வமும், தேடலும் கொண்டு வாசகரே கதவைத் திறந்து உள்ளே பயணிக்க வேண்டியிருக்கிறது.

வளர்ப்பு விலங்கென கடலை சிநேகிக்கும் கவிஞர் தன் தேடலை, கேள்விகளை, அலைக்கழிப்புகள் உருவாக்கும் தழும்புகளை பகிர்ந்து கொள்ள வேறு யார் இருக்கிறார்கள் கடலைத் தவிர? யுத்தங்களில் சகலமும் இழந்து அடைக்கலம் தேடியலைந்தவர்களின் கண்ணீர் கடலினுள் நிறைந்திருக்கிறது. எல்லையற்று விரிந்திருக்கும் நீலப்பெருங்கடலின் பிரம்மாண்டத்துக்குள் தன்னை ஒப்புக்கொடுக்கும் சின்னஞ்சிறு உயிரின் சரணடையும் குரலாக இக்கவிதைகள் நெய்தல் நிலத்தின் கூறுகளை குறுக்குவெட்டாக வாசகருக்கு திறக்கின்றன. இந்நிலத்திற்கு மட்டுமே உரிய வெளிப்பாடுகளை நேர்த்தியாக சமைத்திருக்கிறார் துரை

விடிவெள்ளிகளில் கடல்மீது விழும்

வானை என்ன செய்யப்போகிறாய்?

தூண்டில் போடுவேன்

பெருத்த நிலச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுபோவேன்

வாங்குவோர்க்கு நிலவை இனாம் கொடுப்பேன்

ஈன்ற தொகையில்

முப்பொழுதும் மூன்று பக்கங்களென

அசைவாடி புணர்ந்து திளைப்பேன்

பின்பொரு நாள் இறப்பேன்

சவுக்கைக் காட்டின்

வயிறுமாதிரியான

திடலின்மேல் வியாபித்த வானம் பார்த்தபடியே..

என்பதில் நெய்தல் நிலத்துப் பூர்வகுடியின் தவிப்பும், தேடலும் நிறைந்திருக்கிறது.

நெய்தல் நிலத்துக்காரனின் கவிதையில், பனிப்பிரதேசக் கனியின் சுவை விரிவாக இடம்பெற்றிருப்பது விநோதமானது.

உன் செம்பற்களில் சாறுகளை ஈக்கள் அருந்தாது

நீ உரக்கச் சப்தமிடு

நான் இனிக்க மாட்டேன்

நான் காஷ்மீர் இல்லை

நான் இந்த தேசம் இல்லை.

ஒரு ஆப்பிளின் டைரியிலிருந்து கவிதை அழகையும், சுவையையும் மட்டுமல்லாமல், வலியையும் வேதனையையும் சேர்த்து சொல்லியிருக்கிறது.

வினோதமீனவனின் செயல் துணுக்குறச் செய்கிறது. ஹென்றியின் பியானோ, சார்லசின் இரவுப் பயணம், டைலர் வில்பர்ட்டின் செயல்பாடுகள் என நம் மனதில் வெகுநாட்கள் தங்கப் போகும் நபர்களை துரை உருவாக்கி இருக்கிறார்.

ஒரு தொகுப்பாக, இக்கவிதைகள் புதியதொரு உலகத்தைக் காட்டுகின்றன. சொற்சிக்கனத்தை துரை மேலும் கைகொள்ள வேண்டும்.

சப்தங்கள் மெல்லிய

நரம்புகளால் முடிச்சிடப்பட்டவை

நரம்புகள் அறுந்து உடையும் போதுதான்

சப்தம் உருவாகிறது.

போன்ற ஆழ்ந்த தெறிப்புள்ள கவிதைகள் துரையின் முத்திரையாக இத்தொகுப்பில் இருக்கிறது.

“ஒரு பூவை தொடுவதுபோலத்தான்

எனது பைத்தியக்காரத்தனத்தையும் தொடுவேன்”

என்பது தான் துரையின் தற்படம். முதல் தொகுதியில் தனித்துவ இடத்தைப் பிடித்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

 

ரஞ்சனி பாசு

 

நூல் தகவல்:

நூல் : மத்தி

பிரிவு :  கவிதைத்தொகுப்பு

ஆசிரியர்: ச.துரை

வெளியீடு : சால்ட் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2018

பக்கங்கள் :  72

விலை :  ₹ 150

விற்பனை உரிமை :  தமிழ்வெளி

தொடர்புக்கு : 90940 05600

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *