” மனித மனங்கள் எப்போதும் கருணையின் வழியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது.”

கதையின் முதல் பகுதி ரேவதியின் பிடிவாதத்தாலும் , குடும்பத்தாரின் கண்டிப்புகளுக்கு இடையில் நகர்ந்து சென்றாலும் ஒரு காதலின் கதை என்னும் நோக்கோடு அடியெடுத்து வைத்த என் இரு கால்களை கட்டையால் அடித்து பின்னுக்குத் தள்ளி இது காதல் கதையல்ல,ஒரு பாமரனின் மன உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாத அப்பாவித்தனம் நிறைந்த மனங்களின் கதை என்பதில் இவ்வாசிப்பின் பயணம் முடிகிறது.

கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஏக்கத்துடனேயே படிக்க முடிந்தது.ஒரு இடத்திலாவது ரவியை நல்லவன்னு சொல்லீறமாட்டாங்களா! அந்த ஒரு இடத்திற்காக மனம் அலைந்து திரிந்தது.ரேவதியின் குடும்பத்தினருக்கெல்லாம் ரவி என்றால் ஆட்டோக்காரன் , குடிகாரன் , ரேவதியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டவன். ரேவதியை தினமும் அடித்து, சித்ரவதை செய்பவன் , அதையும் தாண்டி படிக்காதவன்.

ஆனால் ரேவதிக்கோ காதலன் , குடிக்காத நேரத்தில் தான் என்ன சொன்னாலும்  செய்யும் நல்ல கணவன் அவ்வளவுதான்.

ஒரு வாசிப்பாளருக்கு  ரவியின் மீது எந்த அளவிற்கு கோபம் வருகிறதோ , அதே அளவிற்கு ரவியின் மீது கருணைப்படவும் செய்கிறது. “அவனும் மனுசன் தான , அவனுக்கும்  பாசம் இருக்குமில்ல ஏன்? அவன யாருமே புரிஞ்சுக்கல ! என்னும் கோபம் எல்லோர் மீதும் பாய்கிறது. அவனோ கடைசி வரை எதிர்பார்த்தது ரேவதியின் குடும்பத்தார் தன்னை மதிக்கக் கூட வேண்டாம் , அன்பாகக் கூட பேசவேண்டாம், ஒரு பார்வையும் எதார்த்த பேச்சும் மட்டும் இருந்தால் போதும்‌. ஆனால் வைராக்யம் பிடித்த மனமோ கடைசி வரைக்கும்  ரவியின் பிஞ்சுக் குழந்தைகளின் கண்களை பார்ப்பதைக் கூட அருவருப்பாக நினைக்க வைக்கிறது.

ஒருபுறம் தான் செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்ட மனம் அல்லல்பட்டுச் சாகிறது . ஆனால் தவறு செய்தும் தவறே செய்யவில்லை என்று தவறை நியாயப்படுத்தும் மனமோ அழுதே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தனக்கு ஒரு இன்னல்  ஏற்படும் போது நம் முன்காலத்தில் ஏதாவது தவறு செய்தோமா என்று யோசிக்க யார் சொல்லிக் கொடுத்து இருப்பார்கள் இந்த பாழாய்ப் போன மனதிற்கு .

நினைவுகள் சிலரை வாழ்த்தியும் சிலரை துன்பப்படுத்தி சாகடிக்கவும் செய்கிறது. இங்கு நடேசனுக்கோ இரண்டாவது நிலைமைதான் .

கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரேவதி சாகக்கூடாது பிழச்சுக்கனும் என்று வேண்டிக்கொண்ட , ஏக்கப்பட்ட என் மனம் , கடைசியில் ஏமாற்றத்துடன் இரண்டு சொட்டு கண்ணீருடன் புத்தகத்திலிருந்து கையை எடுக்கிறது.

பத்துலட்சம் பணம் பத்துநாளா வெச்சு இருந்தும் ஒரு உயிர காப்பாத்த முடிமலையேன்னு நினைக்கும்  மனங்களுக்கு தெரிவதில்லை ஒரு மனிதனிடம் பணம் செல்லாது மனம் தான் செல்லும் என்று.

ஒரு ஊசியையும் , மாத்திரையையும் பார்த்து பயந்த என்னை அவசர பிரிவிற்குள் அதுவும் தீயில் வெந்தவர்கள் படும் இன்னல்களை இரண்டு நாட்களாக பார்க்க வைத்ததோடு மட்டுமில்லாமல், பாமர மக்களின் வாழ்க்கையை கண்முன் எடுத்துக்காட்டிய  இமையம் ஐயா அவர்களுக்கு அன்பின் நன்றிகள்..!


செ.ஆதிரை

நூல் தகவல்:
நூல்: செல்லாத பணம்
பிரிவு : நாவல்
ஆசிரியர்: இமையம்
வெளியீடு: க்ரியா வெளியீடு
வெளியான ஆண்டு  2017
பக்கங்கள்: 222
விலை:  ₹ 325
Buy on Amazon