குழந்தை இலக்கியம் சார்பில் ‘மரப்பாச்சி சொன்ன இரகசியம்’ யெஸ்.பாலபாரதி புதினம். குழந்தை இலக்கியம் கடந்து வந்த தடம் என்றால் தமிழ் இலக்கியத்தில் பூவண்ணன் அவர்களின் சிறுவர் புதினமான காவிரியின் அன்பு ,அன்பின் அலைகள்  ஆகியவற்றைக் கூறலாம். காவிரியின் அன்பு என்ற புத்தகம் அன்பின் அலைகள் என்ற பெயரில் திரைப்படமாக மாற்றம் பெற்றது. மேலும் அவரின் மற்றும் ஒரு தொகுப்பான ’ஆலம் விழுது’  என்ற சிறுகதை(குழந்தை இலக்கியம்) திரைப்படமாக உருவானது . தூரன் அவர்களின் குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியம் . இது சிறார் இலக்கியத்தின் முக்கியமான ஒரு பங்கு வகிக்கக்கூடிய இலக்கியமாக திகழ்கிறது.. சிறார் இலக்கிய ஆய்வு எனும் நூலில் பூவண்ணன் அவர்கள் இவ்வாறாக தனது நூலில் பதிவு செய்கிறார்.

அகநானுறு பாடல்களிலிருந்தே, சங்க இலக்கிய காலம் தொட்டு, குழந்தைகளுக்கான இலக்கியம் பயின்று வந்ததாக அதிலே குறிப்பிட்டிருக்கிறார் . தனது குழந்தைக்கு நிலாவைக் காட்டி உணவு ஊட்டுவதாக அமைந்த பாடல் குழந்தை இலக்கிய வகைமையில் அடங்கும் என்பது அவரின் கருத்து.  மேலும் தொல்காப்பியத்தில் ‘பிசி’ என்ற ஒருவகை பாடல், அந்த பிசி வகை இலக்கியம் குழந்தை இலக்கியமே என்போரும் உண்டு.  அந்த ‘பிசி’ என்பது விடுகதை அமைப்பினாலான ஒரு வகை இலக்கியம். விடுகதை என்பது குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு செய்தி . எனவே அவற்றையும் சிறார் இலக்கியத்தில் கொள்ள லாம். சங்க காலம் தொட்டே சிறார் இலக்கியம் பயின்று வந்ததைக் காணலாம் உண்மையில் சொல்லப்போனால் இருபதாம் நூற்றாண்டில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களில் இருந்தே குழந்தை இலக்கியத்திற்கான ஒரு தொடக்கம் அமைகிறது எனலாம். குழந்தை இலக்கியம் உருவாக முக்கியமான ஒரு காரணம் எனும்பொழுது குடும்ப சூழல், குடும்ப சூழலில் ஏற்பட்ட மாற்றம், அச்சுகளின் தோற்றம் இவைதான் சிறுவர்களுக்கான இலக்கிய தோன்றலுக்கு உந்து சக்தியாக இருந்தது. பாரதியார், பாரதிதாசன், சுத்தானந்த பாரதி போன்ற பல்வேறு ஆளுமைகளும் குழந்தைகளுக்கான படைப்புகளை வாரி வழங்கியுள்ளனர்.

 

பாரதியின் பாப்பா பாட்டு:

1915 ம் ஆண்டு எழுதி வெளியிடப்பட்ட பாரதியின் பாப்பா பாடல் இன்றுவரை சிறார் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. குழந்தை இலக்கியம் எவ்வாறான காலகட்டங்களில்  தன்னை ஊக்கப்படுத்தும் ஒன்றாக மாறியிருக்கிறது என்று பார்த்தோமானால் 2000 க்கு பிறகே குழந்தை இலக்கியத்திற்கென்று நிறைய ஊக்கப் பரிசுகளும் வெகுமதிகளும் கவனிப்புகளும் புலப்படத் துவங்கின. கலை இலக்கிய பெரு மன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கவிதை உறவு, மாத இதழ், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை போன்ற துறைகள் சிறந்த சிறுவர் நூல்களுக்கு பரிசளித்தல் போன்ற ஊக்கப்படுத்தும் செயல்களை எழுத்தாளர்களுக்கும் புத்தகங்களுக்குமாக வழங்கின. சாகித்ய அகாதமி விருதும் 2010 ம் ஆண்டில் இருந்து பால புரஸ்கார் எனும் விருது  சிறார் இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும்  ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது, சிறார் இலக்கியத்தின் தேவையையும் ஒரு வழிகாட்டுதலையும் இங்கு உணர்த்துகிறது. சாகித்ய அகாதமி வெளியிட்ட முக்கியமான தொகுப்புகள்  முனைவர். பூவண்ணன் 2012ல் தொகுத்த குழந்தை பாடல்கள், 2017 ல் காமராஜ் அவர்கள் தொகுத்த குழந்தைகளுக்காக சிறுகதைகள் குழந்தை இலக்கியத்தின் தடத்தை, அதன் பங்களிப்பை உணர்த்துவன.

‘மரபாச்சி சொன்ன இரகசியம்’ என்ற புதினம் யெஸ். பாலபாரதி எழுதிய இந்த புதினம் குழந்தைகளுக்கான மிகச்சிறந்த ஆரோக்கியமான ஒரு முன்னெடுப்பை வழங்குவதாகும். வானம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கக்கூடிய இந்த நூலானது 2018 ம் ஆண்டு  முதல் வெளியீடாகவும் 2019 ம் ஆண்டு இரண்டாம்  வெளியீடாகவும் வந்துள்ளது எழுத்தாளர் ஞானி அவர்களுக்கு சமர்ப்பித்த இந்நூல் யெஸ்.பாலபாரதி  எழுதியது. யெஸ்.பால பாரதி  சிறார் நாவல்கள், பல்வேறு சிறுகதைகள் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார் . இதில் முக்கியமானது இவரின் சிறார் இலக்கியத்தின் பங்களிப்பு என பார்த்தோமானால் ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’ எனும் சிறார் நாவல், ‘சுண்டைக்காய் இளவரசன்’, ‘தலைகீழ் புஸ்வானம்’ சிறார் நாவல் . மூன்று நாவல்கள் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். அதில் ‘மரப்பாச்சி சொன்ன இரகசியம்’ என்பது மிக முக்கியமான, கதை வெளி என இதனை முன்வைக்கலாம். எழுத்தாளர் யெஸ். பாலபாரதியின் முன்னுரையில் அவர் கூறியிருப்பதாக இது ஏதோ ஒரு பூஜாவின் பிரச்சனை மட்டுமல்ல

நம்மிடையே வெளியே தெரியாமல் போன  பல பூஜா — களின் பிரச்சனை. (‘பூஜா’- நாவலில் உள்ள ஒரு சிறுமியின் பெயர்). அவர்களுக்கு உதவுவதும் தைரியம் கொடுப்பதும் கூட ஒரு பணிதான் இதை ஒரு கதையாக கடந்து போய்விட வேண்டாம் என குறிப்பிட்டிருப்பது மிக முக்கியமானது. இது ‘வானம் பதிப்பகம்’ வெளியீடாக வந்துள்ளது. மேலும் 2018 ம் ஆண்டிற்கான ‘சிறார் இலக்கியத்தின் விகடன் விருது’ பெற்ற புதினமாக சிறப்பு பெற்றுள்ளது. ஆசிரியர் யெஸ். பாலபாரதி   இராமேஸ்வரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது சென்னையில் ஊடகவியல் துறையில் பணியாற்றி வருபவர்.

‘மரப்பாச்சி சொன்ன இரகசியம்’ த்தின் கதைச் சுருக்கம் எனப் பார்த்தால், துவக்கப் பள்ளியில் பயிலக்கூடிய இரண்டு சிறுமிகள் ‘பூஜா’, ‘ஷாலினி ‘. அந்த இரண்டு சிறுமிகளும் தங்களது பள்ளியில் பயின்று வருகிறார்கள் . ஷாலினிக்கு அவளது பாட்டியின் வழியாக ஒரு மரப்பாச்சி பொம்மை பரிசாகக் கிடைக்கிறது. அதை அவள் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வதும், அந்த பொம்மைக்கு உடைகள் தைத்து போடுவது, தன்கூடவே வைத்து தன்னை போலவே அதை கவனித்துக் கொள்வது முதலான பணிகளை செய்து வருகிறாள். ஒரு நாள் அந்த மரப்பாச்சி அவளுடன் பேசத் தொடங்குகிறது, நடக்கத் தொடங்குகிறது, மனிதனைப் போலவே சகலமும் செய்யத் தொடங்குகிறது. அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் களிப்பும் ஏற்படுகிறது. ஒரு பொம்மை இவ்வாறு மனிதனைப் போல குழந்தையுடன் உறவாடும் என்றால் அச் சிறு பெண்ணுக்கு அவ்வளவு மகிழ்ச்சி . இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் போது, அவள் பள்ளியில் படிக்கக்கூடிய ஒரு தோழி எப்பொழுதுமே பள்ளிமுடிந்ததும்  தோழியர் இருவருக்கும்  நடன வகுப்பு நடைப்பெறும் . தினமும் மாலை நடன வகுப்பிற்கு செல்வது பூஜாவுக்கும் ஷாலினிக்கும் வழக்கம். இருவரும் நடன வகுப்பிற்குச் செல்லக்கூடிய  சூழ்நிலையில்  பூஜா மிகவும் சோர்வாக  காணப்படுகிறாள் என்னவென்று கேட்டால். அங்கு இருக்கக்கூடிய மற்ற சிறுமிகளும் ஏன் நடன வகுப்பில் கலந்து கொள்ளாமல் தனியே அமர்திருக்கிறாய்? என்று விசாரிக்கிறார்கள் பதிலில்லை. ஷாலு கேட்கிறாள் ஏன் என்னவெனச் சொல். உண்மைய சொல்லு என்ன? ஏன் இவ்வளவு அமைதியா இருக்க? எப்பவும் இப்படி இருக்க மாட்டியே என்று கேட்கிறாள் ஷாலினி.அப்படி தனியாக அழைத்து கேட்கும் போது பதிலே சொல்லவில்லை பூஜா. ஏன் என்ன காரணம் என அழுத்தி அழுத்தி  கேட்கத்  தயங்கி தயங்கி எதையோ மென்று விழுங்குவது மட்டும் தெரிந்தது. பூஜா சொல்ல மறுக்க அப்போது ஷாலினி மரப்பாச்சியை அறிமுகம் செய்து வைக்கிறாள் பூஜாவிற்கு.

மரப்பாச்சியை பூஜா ஆர்வமுடன்  பார்க்கிறாள். அது அவளிடம்  பேச ஆரம்பிக்கிறது. பூஜா என்ன? ஏன் இவ்வளவு சோர்வா இருக்க? என மரப்பாச்சி அவளிடம் கேட்கிறது.

எப்படி பொம்மை பேசுகிறது! என குதூகலித்து பார்த்தாலும் அவளிடம் உள்ள சோர்வு ,என்ன காரணம் அதற்கு அந்த தயக்கம் எதுக்காக ஏற்பட்டது என ரொம்பவே நுழைந்து அந்த மரப்பாச்சி பொம்மை பூஜாவிடம் கேட்கிறது.

இங்கு மரப்பாச்சி என சொல்லும்பொழுது இப்போதைய தலைமுறையினருக்கு நெகிழி பொம்மைகள் பிளாஸ்டிக்காலான பொம்மைகள், ரப்பரால் ஆன பொம்மைகள் மட்டுமே அறிமுகமாகி இருக்கின்றன. .இந்த மரப்பாச்சி என்பது செம்மரக்கட்டை அல்லது கருங்காலி மரக்கட்டை கொண்டு முந்தைய காலத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு  என்றே வடிவமைக்கப்பட்ட பொம்மைகள். இந்த பொம்மைகள் குழந்தைகள் சிறு வயதில் வாயில் வைத்து விளையாடக்கூடிய சூழல் ஏற்படும். அப்படி வாயில் வைத்து கடித்தால் கூட  ஒன்றும் நேராது . அவை நல்ல மருந்தை போலவே அந்த பொம்மைகள் செயல்பட்டிருக்கின்றன. ஆனால் தற்போதைய காலங்களில் இவ்வாறான பொம்மைகள் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் வழிவழியாக கடந்து வந்த சில பாட்டிமார்கள் தங்கள் பேத்திகளுக்கு இவ்வாறாக இந்த பொம்மையை பரிசளிக்கிறார்கள். அப்படியாக ஷாலினி க்கு கை வந்ததுதான் இந்த பொம்மை. அப்போதும் இந்த பொம்மையை பார்த்தவுடன் பூஜா தயக்கத்தை விட்டாளில்லை. திரும்பவும் அழுத்தி என்ன உங்களுக்கு என அந்த மரப்பாச்சியே வந்து  கேட்கும்பொழுது அவளுக்கு நான் இருக்கிறேன் தைரியமாக இரு என்று தைரியம் சொல்கிறது அந்த மரப்பாச்சி பொம்மை. இவ்வாறு பூஜா தனது மௌனத்தை கலைக்கிறாள்.

அம்மா அப்பா இருவரும் வேலைக்கு செல்ல கூடிய சூழல்.பூஜா வீட்டிற்கு வந்தபிறகுதான் அவர்களும் வீட்டிற்கு வருவார்கள்.தான் எப்பொழுதுமே பள்ளி விட்டு வீட்டிற்கு வந்ததும் பூஜா தயாராகி கீழ் வீட்டில் குடியிருக்க கூடிய இரண்டு முதியவர்கள் (ஒரு தாத்தா பாட்டி) வீட்டிற்கு பூஜா சென்றுவிட வேண்டும். பிறகு புத்துணர்ச்சி  செய்து பின் நடன வகுப்பிற்குச் செல்ல வேண்டும். இதுதான் வாடிக்கை. அப்படி செல்லக்கூடிய சமயங்களில் கீழ் வீட்டில் உள்ள முதியவர் உடலியல் ரீதியாக பூஜாவைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குகிறார். அதனாலேயே நான் வீட்டிற்கு செல்ல மாட்டேன் . வீட்டிற்கு போகமாட்டேன்  என்று கூறி மௌனமாகவும் சோர்வாகவும்  அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் மிகுந்த ஒரு மனக் கலக்கத்தில் தன் தோழியிடம் கூட கூற முடியாமல் ஒரு அவஸ்தையில் இருக்கிறாள். அந்தப்பெண்ணை இந்த மரப்பாச்சி தைரியம் கொடுத்து ஒவ்வொரு வார்த்தைகளாகச் சொல்லி ”ஏன் இத உங்க அப்பா அம்மா கிட்ட கூட சொல்லலாமே என்று  கேட்கும்பொழுது  “நீ  இத உங்க அம்மா அப்பா கிட்ட சொன்னேனா உன்ன ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க. இருட்டு அறையில் வைத்து பூட்டி விடுவாங்க. உனக்கு வெளி உலகமே தெரியாமல் போய்விடும். உன்ன தான் அடிப்பாங்க துன்புறுத்துவாங்க. நீ இத சொன்னா உனக்கு தான் பிரச்சனை” எனச் சொல்லி பூஜாவை மிரட்டியதை பூஜா மரப்பாச்சியிடம் சொல்கிறாள்.

பூஜா கூறியதைக் கேட்டு மரப்பாச்சி உனக்கு நான் உதவுகிறேன் என்று கூறி தைரியம் கொடுத்து அவள் வீட்டிற்கு செல்லும்போது மரப்பாச்சியையும் கொடுத்து விடுகிறாள். வீட்டிற்குப் போன பிறகு அது எவ்வழியிலெல்லாம் பூஜாவை அவள்  பிரச்சனையிலிருந்து வெளிக்கொணர்கிறது என்பது இந்த  நாவலின் வழியாக சொல்லும் கதை. இந்த கதையென்பது வெறும் கதையென்று கடந்துவிடவே முடியாது.

அடுத்ததாக சில சாகசங்கள் வழியாக அந்த மரப்பாச்சி பொம்மை  எவ்வாறு பூஜாவிற்கு உதவுகிறது . அந்த பிரச்சனையிலிருந்து அவள் எவ்வாறு விடுபட்டாள் என்பதே நாவலின் மையம்.

அதற்கடுத்து சாகசப் பயணமாக ஷாலினியும் ஷாலினி குடும்பத்தாரும் செல்கிறார்கள். அவர்கள் அப்படிச் செல்லும் பொழுது அங்கே எப்படிப்பட்ட சூழ்நிலைகளை எல்லாம் சந்தித்தாள் அவள் எங்கே எல்லாம் சென்றாள், அவளுக்கு சாகச பேரா கிளைடிங் செல்லும் போது அவள் மனநிலை எப்படி இருந்தது, அந்த மரப்பாச்சி அவளுக்கு எவ்வாறு உதவியது, கடைசியில் சூரியா எனும் சிறுவன்  இந்தப் புதினத்தில் வருகிறான். சூரியா எனும் சிறுவன் சுண்டைக்காய் நாவலில் உள்ள ஒரு கதாபாத்திரம். அந்த கதாபாத்திரம் சிறுமி ஷாலினிக்கு எவ்வாறு உதவுகிறது எவ்வாறு வழிநடத்துகிறது என்பதாக இந்த நாவல் பின்னப்பட்டுள்ளது.

இந்த நாவல் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான ஒரு  சமூக உணர்வையும் சமூகத்தில் சிறார் இலக்கியத்திற்கான ஒரு முன்னோடியாகவும் ஒரு புதிய வாசலையும்  திறந்து வைத்திருக்கிறது. பல்வேறு தளங்களில் பிரச்சனைகள் சிக்கல்கள்  ஆரம்பித்து விட்ட காலகட்டத்தில் பாலியல் ரீதியாக, உளவியல் ரீதியாக உடலளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகின்றது. சமூகத்தில் குழந்தைகளுடைய இந்த பிரச்சினை மிக அதிகமாக விரிவான தளத்தில் பேசப்பட வேண்டும். ஆனால் பேசப்படுகிறதா இல்லை மௌனமாக கடந்து விடுகிறதா என்பது ஒரு கேள்வி. இந்த கேள்வியை தாங்கியே இந்த  ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ நாவலை படைத்துள்ளார் யெஸ்.பாலபாரதி.

இந்திய அளவில் ஒரு நாளைக்கு சிறார்களில் ஏறக்குறைய சுமார் 293 பேர் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். அதில் 154 பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடிய சிறுவர்கள் சிறுமியர்கள் என 2018 ல் எடுக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய ஒரு ஆய்வு கூறுகிறது. இதையெல்லாம் நாம் கண்ணோக்குவோமானால் சிறார்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.  இந்த உளவியல் பிரச்சனையை நாம் கண்டிப்பாக பேச வேண்டும் இதில் ஏன் நாம் தயக்கம் கொள்கிறோம் என்றால் இதில் சிறார்களுக்கு இவ்வாறான துன் புறுத்தல் தருபவர்கள் வயது முதிர்ந்தோர்  அல்லது உறவினர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்க உண்மை.

இப்படிப்பட்ட காலங்களில் இந்த பிரச்சனை பற்றி எப்படி பேசுவது இந்த விழிப்புணர்வை  குழந்தைகளிடத்தில் எவ்வாறு வழங்குவது என்பது மிக முக்கியமான ஒரு தேவை. எப்படி பேசலாம்? ஒரு கதை வழியாகவும் பேசலாம் . அவ்வாறே இந்த கதை ‘மரப்பாச்சி சொன்ன இரகசியம்’ குழந்தைகளின் காதிற்குள் ஒரு இரகசியமாகவே தன்னை வேளிப்படுத்துகிறது ஒரு விழிப்புணர்வு வழங்குகிறது. யெஸ். பாலபாரதியின் நாவல் தகவல் தொகுப்பாக இல்லாமல் கதையம்சத்துடன் ஒரு பிரச்சனையை ப் பேசுகிறது. ஆசிரியர், குழந்தைகளுக்கான பாலியல் தொடர்பானது என்று சுற்றி வளைக்காமல் நல்ல கண்ணோட்டத்துடன் நாவலை அழகாக நகர்த்தியிருக்கிறார். இதைச் சிறுவர் சிறுமியர்கள்  அனைவரும் கண்டிப்பாகப்  படிக்க வேண்டும். அப்பொழுதே இப்படிப்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கும் அதை அறிந்து கொள்வதற்கும் நாம் தயங்கி இருக்ககூடிய சூழ்நிலையில் இந்த புதினம் ஒரு சரியான வழியாக அமையும் . பூஜா என்ற மாணவியை அவள் வீட்டின் தரைத்தளத்தில் உள்ள அந்த முதியவர் துன்புறுத்துகிறார்.  உளவியல் ரீதியாக அந்த குழந்தை பாதிக்கப்படுகிறது என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக் கதையில் வழக்கம் போல் அந்த முதியவரின் மிரட்டல், அதன் காரணமாக குழப்பமான மனநிலைக்கு உள்ளாகிறாள். இவ்வாறான மனநிலையிலான  குழந்தைகள் எத்தனையோ பேர் நம்மைச் சுற்றி காணப்படுகிறார்கள். இங்கு இதுபற்றி பேசக்கூடிய நேரத்தில் கூட எத்தனையோ சிறார்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். இவர்களை எப்படி விடுவிப்பது இவ்வாறான பிரச்சினைகளுக்கு உள்ளாகாமல் தடுப்பது எப்படி என குழந்தைகள் மீது பெற்றோர் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் குழந்தைகளுடன் கலந்துரையாட வேண்டும் என்பதன் அவசியத்தையும் துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் பேசவண்டும் என்ற அவசியத்தையும் தேவையையும் முன்வைக்கிறது இந்த ‘மரப்பாச்சி சொன்ன இரகசியம் ‘ நாவல்.

மேலும் இந்த கதையின் மையம் என்பது குழந்தைகளின் இவ்வாறான பிரச்சனைகளை முன்வைத்ததே. ஆங்காங்கே இருக்கக்கூடிய சில முக்கியமான கருத்துக்கள், ராஜ் அவர்கள் வரைந்த வரைபடங்களுடன் விளக்கி க் கூறப்பட்டுள்ளன. இதில் அந்த குழந்தைகள் மறந்து போன மரப்பாச்சி பொம்மை தற்போது நவநாகரீக உலகத்திற்குள் நுழைந்து விட்டாலும் இழந்த அந்த காலங்கள் மற்றும் மறந்த விளையாட்டுக்கள் குழந்தைகளின் கை விரல்களுக்கான  மென்திறன் பயிற்சிகளை வழங்கக்கூடிய  ‘கீச்சு கீச்சு தாம்பாளம்’ மணலில் விரல்களை   நெகிழ்த்தியாக வைத்து விளையாடக்கூடிய அந்த மென்திறன்களை வளர்க்கக்கூடிய  அந்த விளையாட்டு, அதைப்போல  கொக்கோ , முக்கியமான சில நடனங்கள், இதைப் பற்றிய கருத்துக்கள் எல்லாம் ஆங்காங்கே செய்திகளாக வழங்கப்பட்டுள்ளன.

அதைப்போல பார்வைக் குறைபாடு எப்படி ஏற்படுகிறது அதை எவ்வாறு கண்டுகொள்வது போன்ற விளக்கங்களும் குழந்தைகளுக்கு தகுந்தாற்போல் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தகவல்கள் வாசிப்பிற்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

சிறார் புதினங்கள் எனும்பொழுது அதீத கற்பனையான சில கதைகள் நாம் கண்டிருக்கலாம். ஆனால் எதார்த்தமான கதைகளும் சமூக கதைகளும் மிக சொற்பமான அளவிலே  நம்மைச் சுற்றி காணப்படுகின்றன. இவ்வாறு சிறார் பிரச்சனையை சார்ந்த கதையினை புதினம் தாங்கி வந்திருக்கிறது. உலக அளவில் பாலியல் தீண்டல்களுக்கு உள்ளான குழந்தைகள்  துவக்கப்பள்ளி படிக்கக்கூடிய மற்றும் வளர் இளம் பெண்கள் ,குழந்தைகளை கருத்தில் கொண்டே good touch bad touch பிரச்சாரங்கள் அதிகம் புழங்குவதை பார்த்திருக்கிறோம். அதாவது ஒரு குழந்தையை எந்த கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள் தொடுகிறார்கள் என்பதை  அந்த குழந்தையே அறிந்து கொள்வதற்கான ஒரு விழிப்புணர்வு. இருந்தாலும் நம் சூழலில்  இதற்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. தனிமனித அளவிலும் குடும்பங்களிலும் மற்றும் பள்ளி அளவிலேயே கூட இந்த விழிப்புணர்வுக்கான தீவிரத்தன்மை  அதிகரிக்கப்பட வேண்டும்.  அல்லது அப்படிப்பட்ட தீவிரத்தன்மை அடையாமலேயே இருக்கிறது என்பது நிதர்சன உண்மை. இப்படியான முக்கிய பிரச்சனையைத் தாங்கி பேசியுள்ள சிறார் நாவலே ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’.

நுட்பமான சில  கருத்துக்கள் என்றால் ஷாலினி  சுற்றுலா செல்கையில் அங்கு இருக்கக்கூடிய பயணக் கொண்டாட்டம், மற்றும் வேலூர் மாவட்டம் ஏலகிரிக்கு செல்கையில் காவனூர் என்கின்ற வான் ஆய்வகம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி  கொண்ட ஒரு ஆய்வகம் பற்றிய கருத்துக்கள் மற்றும் ஏலகிரியில் கொண்டை ஊசி வளைவுகளுக்கு கம்பர், பாரதி, பாரதிதாசன் என்று தமிழ்ப் புலவர்களின் பெயர்களை குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு முக்கியமான கருத்துக்களை செய்திகளை  உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு செய்திகளும், கதாப்பாத்திரங்களும் முக்கியமான கருத்தாக்கத்தை நமக்கு கூறுகின்றன. இதில் சூரியா எனும் சிறுவன் இறுதியில் ஷாலினி  paragliding ல் செல்லும் போது மரப்பாச்சி பொம்மையை கீழே தவறவிடுவதால்  தேற்றுவதாகவும் மன வருத்தத்திலிருந்து மீள்வதாகவும் பாலபாரதி   புதினத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் ஷாலினியின் மரப்பாச்சி பொம்மையைத் தேடி அவளது அப்பாவும் சித்தப்பாவும் செல்கிறார்கள். அந்த மரப்பாச்சி பொம்மை கிடைத்ததா இல்லை அதனுடைய அடுத்த பயணம் என்னவாக இருக்கிறது அந்த சாகச பயணத்தில் அவளுக்கு என்ன நன்மை கிடைத்தது என்பதெல்லாம் புதுவித உற்சாகத்துடனே பாலபாரதி  கூறியிருக்கிறார். இந்த க் காலகட்டத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள்கள் கீ கொடுத்தால் ஓடக்கூடிய பொம்மை, கண் சிமிட்டும் பொம்மைகளையே வைத்து விளையாடக்கூடிய காலகட்டத்தில் அந்த மரப்பாச்சி பொம்மையானது ஷாலினிக்கும் பூஜாவுக்கும் எவ்வாறு அவர்களுக்கான குழந்தைப்பருவங்களை கடத்துவதற்கும், அவர்களுக்கான பிரச்சனைகளை அணுகுவதற்கும் எவ்வாறு உதவியது என சிறப்பாகவும் சமூக கண்ணோட்டத்துடனும் பால பாரதி எழுதியிருக்கிறார். மேலுமொரு முக்கிய கருத்தாக்கம் good touch bad touch என நம் பார்வையை மிக நேர்த்தியாக பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் என மிக ஆரோக்கியமான வார்த்தை முறையில் கூறியுள்ளார்.

நிச்சயம் குழந்தைகள் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் போது தைரியமாக தங்கள் பெற்றோர்களிடம் அல்லது பெரியோர்களிடம் தெரிவிப்பதற்கான விழிப்புணர்வை தைரியத்தை இந்த நாவல் வழங்கும். நாமும் அப்படிப்பட்ட தைரியத்தை வழங்கவேண்டும்.

நிச்சயம் இவ்வாறான சூழ்நிலையிலிருந்து குழந்தைகளை காக்க வேண்டும். அப்படிபட்ட கடமை சிறார் இலக்கியத்திற்கு இருந்ததாலேயே  மரப்பாச்சி சொன்ன ரகசியத்தின் மூலம் சிறார்களின் பாதுகாப்பு பற்றிய கதவைத் திறந்திருக்கிறார்.

இன்னும் இது தொடர்பான பல்வேறு படைப்புகள் நமக்கு வரவேண்டிய தேவை இருக்கிறது, கட்டாயம் சூழல் இருக்கிறது என்பதற்கான ஆதாரமாகவே இந்த மரப்பாச்சி குழந்தைகள் வழியாக மாபெரும் இரகசியத்தை உடைக்கிறார். குழந்தைகள் மீது காலம் கடந்து நாம் கொள்ளவேண்டிய அக்கறை மிக முக்கியமானது என்பதை இந் நாவல் நமக்கு  முன் வைக்கிறது. இந்த சிறார் புதினத்தை மற்ற சிறார் புதினத்தை ப் போல கடந்துவிட முடியாது . கடந்து செல்வதற்கு இயற்கை பற்றியோ  அல்லது மாயாஜால கதைப்பற்றியோ இல்லாமல் சமூக விழிப்புணர்வு தரக்கூடிய ஒரு நிலையில் எழுதியிருக்கிறார் ,பாலபாரதியின் “ஆமைகள்” சுற்றுச்சூழல் பற்றிய நாவல் சமூக விழிப்புணர்வை வளர்ப்பதாகவே குழந்தைகள் இயற்கையை காக்க வேண்டும் என்ற அற்புதமான மனப்பான்மையை முன்வைக்கிறார். மற்றவருக்கு உதவும் மனப்பக்குவம்  மரப்பாச்சி வாயிலாக மற்றவர்களுக்கு கடத்தப்படும். அந்த செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட பொம்மை இளவரசி பூஜாவுக்கு எவ்வாறு உதவினாள் , சுற்றுச்சூழல் பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறாள் என்பதும் பாதுகாப்பான தொடுதல் பாதுகாப்பற்ற தொடுதல் பயன்படுத்தியதும் மிகவும் சிறப்பானது. பூஜா பெற்றோர்களிடமே சொல்லத் தயங்கி இருக்ககூடிய சூழலில் எவ்வளவு எளிதாக இயல்பாய் பெண் குழந்தைகளிடம் எவ்வாறு அந்த மரப்பாச்சி ஒட்டிக்கொள்கிறது எவ்வளவு சாகசங்கள் செய்கிறது, பூஜாவுக்கு உதவும் சூழ்நிலையில் ஷாலினி மரப்பாச்சியை பள்ளிக்கு எடுத்துச் செல்கையில் பள்ளியில் மரப்பாச்சி செய்யக்கூடிய சேட்டைகள் மற்றும் மரப்பாச்சி எவர் கைக்கு செல்கிறதோ  யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள்  உண்மை மட்டுமே பேசுவார்கள் என்பதையும் குழந்தைகளுக்கு ஏற்றார் போல் மிக சுவாரஸ்யமாக கூறி, பாலபாரதி  குழந்தைகளுக்கு ஏற்ற  ஒரு சிறார் இலக்கியத்தை வடிவமைத்து வழங்கியிருக்கிறார்.

காலத்திற்கு ஏற்ற மிகுந்த விழிப்புணர்வு தரக்கூடிய ஒரு அற்புதமான இரகசியத்தோடு இந்த நாவல் பிணைப்பட்டுள்ளது. மரப்பாச்சி குழந்தைகள் வாயில் வைத்து கடித்தால் கூட ஒன்றும் நேராது. இக்காலத்து குழந்தைகள் இது பற்றி அறிய வாய்ப்பு குறைவு. நிறைய விளையாட்டு பற்றியும் முக்கியமாக உணர்வு ரீதியான சிலவற்றைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் பற்றியும் இருப்பது இந்நாவலின் சிறப்பு.

ஒரு அற்புதமான சிறுவர் நூல். கதை வடிவில் எழுதப்பட்ட இந்நாவல்  பதின் பருவ சிறுவர் சிறுமியர்  கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல். சிறார்களுக்காகவும் சிறார்களின் பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து மரப்பாச்சியின் வழியாக சுவாரஸ்யமாக எழுதப்பட்டது . கண்டிப்பாக அனைவரும் தம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும். ஒரு புத்தகத்தின் வழியாக அதைச் செய்ய முடியும். ஒரு புத்தகம் அப்படிப்பட்ட பணியினை சிறப்பாக செய்யும். ஒரு எழுத்து எப்படிப்பட்ட தைரியத்தையும் வழங்கும்.ஒரு பிரச்சனையை எவ்வாறு அணுகலாம் என்று சொல்லும்.எழுத்தின் வழியாக அப்பணியினை சிறப்பாக செய்ய இயலும். குழந்தைகளின் தலையாய ஒரு பிரச்சினையை இவ்வாறுதான் அந்த மரப்பாச்சி உடைத்தெறிகிறாள்.

இவ்வாறு அந்த மரப்பாச்சி இளவரசி குழந்தைகளுக்கு உதவுவதின் வழியாகவும் சாகசங்கள் செய்வதின் வழியாகவும் பல்வேறு விழிப்புணர்வு தருவதன் வழியாகவும் விளையாட்டுக்களின் வழியாகவும் பூஜாவின் மௌனத்தைக் கலைத்து இரகசியத்தை உடைக்கிறாள் மரப்பாச்சி இளவரசி.

“குழந்தைகளின் அறியாமையும் வெகுளித்தனமும் நம்மை பித்துக்கொள்ள செய்யும் அளவிற்கு தூய்மையானவைதான். ஆனால் தெய்வீகமான அந்த அறியாமையை கலைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இன்றைய பெற்றோர் இருக்கிறோம். வேறெப்போதை விடவும் இன்று நம் சமூகத்தில் குழந்தைகளின் மீதான வன்முறை என்பது கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பரவிக்கிடக்கிறது. இன்றைக்கு குழந்தைகள் பற்றியும் அவர்களின் உடல் பற்றியும் அதன் மீதான உரிமைப்பற்றியும் சொல்லித்தருவது நம் கடமையாகிறது”.

“குழந்தைகளுக்கு தன் உடல் தன் உரிமை என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதிலும் அவர்களிடம் யாரேனும் அத்து மீற முயற்சித்தால் மறுப்பை அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்க கற்றுத்தருவதும் அத்துமீறுபவர்களை பற்றி பெற்றோர்களிடம் வெளிப்படையாகப் பேச தைரியம் அளிப்பதுமே அவர்களை காக்கும் வழியாகும்”. என்று பாலபாரதி குறிப்பிட்டுள்ளார். இப்புனைவின் மூலம் அதற்கான முதல் அடியை எடுத்து கொடுத்துள்ளார்.

தமிழ் தெரியவில்லை அல்லது வாசிக்க தெரியவில்லை என்றால் கட்டாயம் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாசித்து காட்ட வேண்டும். அவ்வாறு வாசித்து காட்டுவதால் குழந்தைகளுக்கான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அவர்கள் பெறமுடியும். மேலும் எத்தனையோ குழந்தைகள் இந்த பிரச்சனைகளை பேசாது காலத்தின் வெள்ள ஒட்டத்தில் கடந்து போகிறார்கள். அவ்வாறு பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல கண்ணோட்த்தில் இந்நாவலை படைத்துள்ளார் யெஸ்.பாலபாரதி. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.


அ.ரோஸ்லின்

நூல் தகவல்:
நூல்: மரப்பாச்சி சொன்ன இரகசியம்
பிரிவு : சிறார் நாவல்
ஆசிரியர்: யெஸ்.பாலபாரதி
வெளியீடு: வானம் பதிப்பகம்
வெளியான ஆண்டு  2018
பக்கங்கள்: 88
விலை:  ₹ 60
சங்க இலக்கிய ஆய்வு நடுவம், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி - தமிழ் உயர் ஆய்வு மையம்- குற்றாலம், பிரித்தானிய இந்திய தமிழ் வானொலி - இங்கிலாந்து ஆகியவை இணைந்து நடத்திய பன்னாட்டு அளவிலான குழந்தைகள் இலக்கியம் குறித்தான கருத்தரங்கில்  கவிஞர் அ.ரோஸ்லின் உரையாற்றிய காணொலியின் எழுத்து வடிவம்.

கவிஞர் ரோஸ்லின் அவர்களிடம் உரிய அனுமதிப் பெற்று விமர்சனம் இணையதளத்திற்காக தட்டச்சு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டது.

காணொலி இணைப்பு :

தட்டச்சு உதவி : ராகினி முருகேசன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *