நிறைவான கதைகள், நிறைவான அனுபவம்

சமீப காலமாக குழந்தைகளுக்கான கதைகளை தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர்களில் ஒருவர் விட்டில் என்கிற அறிவழகன். அவருடைய பெரும்பாலான கதைகள் கற்பனையால் நிறைந்திருக்கின்றன. சில வேடிக்கைக்கதைகளும் உள்ளன.

குழந்தைகள் எல்லோருக்கும் ஒரே விதமான ஈடுபாடு இருப்பதில்லை. சில குழந்தைகள் பறவைகளை விரும்பும். சில குழந்தைகள் விலங்குகளை விரும்பும். சில குழந்தைகளுக்கோ செடிகொடிமரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தம் விருப்பத்துக்குரிய அவற்றை தமக்குச் சொல்லப்படும் கதைகளில் அல்லது தாமே படித்துத் தெரிந்துகொள்ளும் கதைகளில் பாத்திரங்களாக இருப்பதை அவர்கள் விரும்புகிறார்கள். சிற்சில சமயங்களில் அப்பாத்திரங்கள் செய்யும் சாகசங்களை தாமே செய்யும் சாகசங்களாக நினைத்து மகிழ்ச்சிகொள்கிறார்கள். பறவையை விரும்பும் குழந்தை, அந்தப் பறவைக்கு மனிதர்களையும் விலங்குகளையும் வெற்றிகொள்ளும் திறமை இருப்பதை உள்ளூர ரசிக்கிறது. செடிகொடிமரங்களை விரும்பும் குழந்தைகள், ஒரு பூவுக்கும் காய்க்கும் கனிக்கும் உள்ள சாகச சக்தியைக் கேட்டு மகிழ்ச்சி கொள்கிறது. விலங்குகளை விரும்பும் குழந்தை மானுடரின் தந்திரங்களை தக்க நேரத்தில் பொருத்தமான எதிர்தந்திரங்களால் சமாளித்து வெற்றி பெறுவதை அறிந்து ஆனந்தமுறுகிறது.

இது குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட கதைகள் அடங்கிய தொகுதி என்றபோதும் எல்லா விதமான குழந்தைகளுக்கும் பிடிக்கக்கூடிய கதைகளைக் கொண்டிருப்பதால், இத்தொகுதியை குழந்தைகள் விரும்பிப் படிப்பார்கள் என்பது என் நம்பிக்கை. குழந்தைகளின் கண்ணால் உலகத்தைப் பார்த்து, குழந்தைகளைப்போலவே சிந்தித்து, குழந்தைகளைப்போலவே கற்பனையில் மிதந்தலையும் சொற்களைப் பயன்படுத்தி, கற்பனைவானில் சிறகடித்து பறந்து திரியும் அனுபவத்தை அடையும் விதத்தில்  இக்கதைகளை எழுதியிருக்கிறார் விட்டில். இதுவே இத்தொகுதியின் முக்கியமான முதல் தகுதி.

ரோஸ் பாப்பாவும் சிலும்பன் யானைக்குட்டியும் கதையின் கற்பனைவீச்சு நெஞ்சைத் தொடும் தன்மை கொண்டது. காணாமல் போன அம்மா யானையைத் தேடிச் செல்கிறது குட்டியானை. குட்டியானைக்கு உதவியாக கூடவே செல்கிறாள் ரோஸ். ரோஸுக்கு யானையின் மொழி புரிகிறது. யானைக்கும் ரோஸின் மொழியில் தன் துயரத்தைச் சொல்லி பகிர்ந்துகொள்ளத் தெரிகிறது. இருவருக்கும் ஒரு காளான் வழிகாட்டுகிறது. எப்படியோ பாடுபட்டு தேடியலைந்து ஒரு குகையை இரண்டும் அடைகின்றன. அங்கிருந்த கரடிகள் அவர்களை குகைக்குள் செல்வதைத் தடுத்து விரட்டியடிக்கின்றன. எப்படியோ கரடிகளுக்கு போக்குக் காட்டிவிட்டு ரகசியக்குகைக்குள் இருவரும் புகுந்து சென்று அம்மா யானையைத் தேடுகின்றார்கள். அங்கே அம்மா யானைகளைப்போல பல யானைகள் கொன்று குவிக்கப்பட்டிருப்பதையும் அவற்றின் தந்தங்கள் வெட்டப்பட்டு மற்றொரு குவியலாக குகையின் ஓரத்தில் குவிக்கப்பட்டிருப்பதையும் பார்த்து நடுங்குகின்றார்கள். துயரத்தால் அவர்களின் உடல்கள் நடுங்குகின்றன. அப்போது அவர்களுடைய மனக்குமுறலைப்போல குகைக்கு வெளியே வானம் குமுறி மின்னல் மின்னி குகையைச் சுற்றி இடிகள் இறங்குகின்றன. கரடிகள் அனைத்தும் மடிந்துபோகின்றன. தந்தங்களை இழந்து உயிரிழந்து விழுந்து கிடக்கும் யானைக்குவியலின் காட்சியை வாசிக்கும்போது வனப்பாதுகாப்புக்காக நாடெங்கும் எழும் குரல் அடங்கிய தொனியில் ஒலிப்பதை உணரமுடிகிறது. ஒரே நேரத்தில் இக்கதை பெரியவர்களுக்கான கதையாகவும் குழந்தைகளுக்கான கதையாகவும் அமைந்துவிட்டது.

இத்தொகுப்பில் உள்ள நட்சத்திரப்புலி மிகமுக்கியமான கதை. குழந்தைக்கதைகளில் இது ஒரு செவ்வியல் படைப்பாக எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும் என்பது என் நம்பிக்கை. மேலோட்டமாக பார்ப்பதற்கு எளிமையான ஒரு கற்பனைக்கதை போலத் தோன்றினாலும் அதன் இறுதிமுடிவாக வெளிப்படும் மாயத்தன்மை அந்தக் கதைக்கு அழகு சேர்க்கிறது.

கதையின் தொடக்கத்திலேயே மான்குட்டிகளோடு குதித்து விளையாடும் புலியின் பாத்திரம்  நம் நெஞ்சில் இடம்பிடித்து விடுகிறது. தேன்சிட்டுகளோடும் பட்டாம்பூச்சிகளோடும் புலி விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு அற்புதமான கற்பனை. புலியின் திடீர் மறைவால் அந்த ஆனந்தமான காடு துயரத்தில் மூழ்கிவிடுகிறது. மற்ற விலங்குகளின் அட்டகாசத்தால் காடே தலைகீழாக மாறி அக்கிராமங்களின் கூடாரமாக மாறிவிடுகிறது.

மறைந்துவிட்ட புலி திரும்பவேண்டும் என மனமுருக வேண்டுகின்றன சிறுவிலங்குகள். இலைகளின் மீதும் கொடிகளின் மீதும் படர்ந்திருக்கும் ஒளித்துணுக்கு அந்த உருக்கமான பிரார்த்தனைக் குரலை வானத்தில் நட்சத்திரமாகிவிட்ட புலியிடம் தெரிவிக்கிறது. அன்பு விலங்குகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற புலி மீண்டும் விண்ணிலிருந்து மண்ணுக்கு வருகிறது. அக்கிரமங்களை அடக்கி அழித்து, அன்பால் நிறைந்த உலகத்தை மீண்டும் நிலைநிறுத்துகிறது. கதையின் முடிவில் ஒரு பழைய நாடோடிக்கதையின் சுருக்கத்தைப் படித்த நிறைவும் அனுபவமும் கிடைக்கின்றன. எல்லாவகையிலும் நட்சத்திரப்புலி இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதை.

சிறுவர்களுக்காக கதைகளை இன்று எழுதிக்கொண்டிருப்போர் அணியில் நண்பர் விட்டிலுக்கு முக்கியமான இடமுண்டு. இத்தொகுதி அதற்கு நல்லதொரு சாட்சி. அவருக்கு என் வாழ்த்துகள்

அன்புடன்

  • பாவண்ணன்
நூல் தகவல்:

நூல் : டைனோசர் உலகத்தில் மகி

பிரிவு :   சிறார் கதைகள்

ஆசிரியர்: விட்டில்

பதிப்பு : மின்னூல் – அமெசான் கிண்டில்

வெளியான ஆண்டு :  2021

நூலைப் பெற:

 

 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *