(மா.காளிதாஸின் “மை ” தொகுப்பை முன்வைத்து)
நுழைவாயில்:
பல்வேறு சொல்லாடல்களால் ஆனது பிரதி. அச்சொல்லாடல்களின் வலைப்பின்னலாக விளங்குகின்றன இலக்கியங்கள் என்பார் சா. தேவதாஸ். அதே சா.தேவதாஸ் கல்குதிரை 34ல் எஸ். சண்முகத்தின் மனந்திறந்து உரையாடல் எனும் வாச்சியம் பக்கத்தில் “எழுதப்பட்டிருக்கும் கவிதைப் பிரதிக்கும் எழுதப்படாதிருக்கும் கவிதைப் பிரதிக்கும் இடையில்தான் கவித்துவம் என்பது கண்டடையப்படுகிறது” என்பார். அப்படியாகத்தான் மா.காளிதாஸ் முன்பு எழுதிய ஆறு தொகுப்புகளுக்கும் இப்போது எழுதி முடித்துள்ள ஏழாவது தொகுப்பான “மை” தொகுப்புக்கும் இடையில் அவரது மொழியின் செறிவும் கவிதையின் சாரமும், கவித்துவமும் அவரது சொற்கள் நிகழ்த்துகின்ற அதிர்வுகளும், அச்சொற்கள் நிகழ்த்தும் சொற்கூத்து இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம்.
சொற்களை ஊட்டும் மனங்கொத்தி:
“மை” இருண்மையின் தாள லயமாக சொற்களின் அகம், புறம் என்பவற்றின் மைய நீரோட்டத்தில் கூழாங்கற்கள் சொற்களாய் நகர்கின்றன. நீர்ப்பரப்பின் மேலே விட்டெறியப்படும் வட்டக்கல் எத்தனைமுறை எம்பியெம்பிச் செல்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மனக்கிலேஷம் கொள்ளுமாப்போல் அத்தனை அதிர்வுகளை உருவாக்கவும் தவறவில்லை.
........
அத்தனை உதறி உதறி
சிதறிக் கிடக்கும் மைப்புள்ளியில் உறைந்திருக்கிற
பைசாவுக்குப் பிரயோசனமில்லாத வார்த்தைதான்
இக்கவிதைக்கான தலைப்பே.
.......
சொற்களை ஊட்டும் மனங்கொத்தியின் அலகு
மிகக் கூர்மையானது.
மேலே உள்ள கவிதை சொற்களை ஊட்டும் மனங்கொத்தி (பக்:58) என்ற தலைப்பிட்ட கவிதையில் இந்தத் தொகுப்பின் பெயர் எப்படி வந்திருக்கும் என்பதை ஊகிக்கும் அதேவேளை அச்சொல் எத்தகையதொரு கூரான சொல்லாகிறது என்பதைப் பார்த்தீர்களா. ஆட்காட்டி விரலில் வைக்கப்படும் “மை’யும் அதிகாரத்தை தீர்மானிக்கும் சொல்தான்.
பெருமகிழ்வின் துணுக்கு:
பக்:67 ல் பெருமகிழ்வின் துணுக்கு என்றொரு கவிதை. மசக்கைக்காரியின் அத்தனை செயற்பாடுகளையும் சொல்லிவந்து பெரும்மகிழ்வை உறையவைக்கும் நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டில் அத்தனையும் உருகி விடுகிறது. இதேபோல் பக்:59ல் காலத்திற்குத் தகுந்த கதவு எனும் கவிதையில்
எல்லா மகிழ்வையும் பூட்டி நாமே கண்டுபிடிக்க முடியாத ரகசிய இடத்தில் சாவியை வைத்து விடுகிறோம். ஒரு சொல்தான் பூட்டு ஒரு சொல்தான் சாவி பூட்டியது பூட்டிய படி அப்படியே கிடக்கிறது மகிழ்வு. ......... ....
நாம் உதிர்க்கும் ஒரு சொல்தான் மகிழ்வைத் தருவதும் துன்பத்தைத் தருவதுமாகிறது. அந்தப் பூட்டுக்கான சாவி அச்சொற்களுக்குள்ளேயே இருக்கிறது.
புல்லாங்குழல் ஆகுதல் எனும் கவிதை (பக்:33) தொடரும் லாக்கப் மரணங்களை கேள்விக்குட்படுத்துகிறது. ஒரு புல்லாங்குழல் செய்வதற்கு உபயோகமாகும் மூங்கில்தான் லத்தி செய்யவும் பயன்படுகிறது. அந்த லத்திகள் எல்லாமே புல்லாங்குழல் ஆகிவிடாதா எனும் கவிஞரின் ஏக்கம் இன்னும் தீர்ந்தபாடாக இல்லை என்பதே உண்”மை”.
ரெளத்திரம் பழகும் பெண்கள்:
கல்குதிரை இதழ் 34 பக்கம் 76ல் றாம் சந்தோஷின் இரண்டாம் பருவம் தொகுப்பைக் குறித்து சொற்களின் பெருந்தனக்காரர் கோணங்கி “சன்னதம் கவிதையின் பேய்முறைப்பாடு என்கிறார்”. அப்படியாகத்தான் மா.காளிதாஸின் கவிதைகளுக்குள் சொற்கள் பேய்முறைப்பாடாகின்றன. மை தீண்டிய சொற்கள் தீண்டாத சொற்கள் இவற்றிற்கு இடையில் அலைவுறும் சொற்கள் என தொகுப்பெங்கும் சொற்களின் சன்னதம்.
“பிடி இரவைக் கையிலேந்தி
வெளியின் பெரும்பரப்பை
ரெளத்திரமுற்று பழகுகிறாள் சுகாறா” – றாம் சந்தோஷ் (இரண்டாம் பருவம்)
இங்கும் பெயரிடப்படாத மீன்காரி ஒருத்தி ரெளத்திரமுற்றுப் பழகுகிறாள். கூடையில் நிறையும் மீன்களின் பிம்பம் (பக்:60) எனும் கீழ் உள்ள கவிதையைப் பாருங்கள்.
"மகள் வரைந்த மீன் தொட்டியில்
வண்ணமீனாக மிதக்க ஆசைப்படுபவள்
மேலும் ஒரு குவளைத் தண்ணீரை
உச்சந்தலையில் ஊற்றுகிறாள்".
பெண்கள் தம் மனமென்னும் பெருவெளியில் தினசரி மோதித்தான் இந்த வாழ்வெனும் சொல்லைக் கடக்கிறார்கள். இங்கு இரண்டாம் பருவம் என் வாசிப்பின் பார்வையில் சுகறாக்களும் பெயர் தெரியாத பெண்களும் தம் மோகத்தின் “மை” யிழையை அறுத்துவிடும் ஓர்மைமையை தெரியப்படுத்தும் ஒரு ஒப்பீட்டுக்காவே. மற்றபடி குறைகூறும் பொருட்டல்ல என்பதை ஏற்றுக்கொள்ளக.
கவிதை அரசியல்:
கவிதை என்பது ஒரு அரசியல் செயல்பாடு என்பார் ஜுன் ஜோர்தான். அரசியல் பேசாத கவிதைகளை நான் எப்போதும் விரும்புவதில்லை. அவைகள் விதையற்ற கனிக்கு இணையானவை. அல்லது சுயமைதுனம் எனும் சிற்றின்ப சுகத்திற்கு இணையானது. “மை” தொகுப்பு விவசாயம், பெருமழை, கடன், தீநுண்மி தொற்று, அரசுகளின் கையாலாகத்தனம், மாசச்சம்பளக் காரனின் மாசக்கடைசி, திருவிழாவின் பெயரால் நிகழும் பெருங்கூத்தில் எரிந்து போன உயிர்கள், இப்படி பல்வேறு வகையான அரசியல் பேசும் கவிதைகள் நிறைந்திருந்ததால் என் மனதுக்கு மிக அணுக்கமாகிவிட்டது. சைக்கிள்கள் டயர் ஓட்டிச் செல்லும் சிறுவனாக இத்தொகுப்புக்குள் நான் நுழைந்து சொற்களெனும் நதியில் மிதந்து கொண்டிருக்கிறேன்.
ஈற்றாக:
பசுமை, வெண்மை, செம்மை என்ற புரட்சிகளிலெல்லாம் ஈற்றுப் புணர்ச்சியாகி நிற்கும் “மை” இங்கு ஒரு சுட்டு பெயராகி நிற்கிறது. “மை” ஈற்றுப் பண்புப் புணர்ச்சியில் “மை” ஈறு வரும் சொல்லோடு ஒன்று கலந்தும் திரிந்தும் புதிய பண்பாய்ப் புணரும் என்பர் இலக்கண அறிஞர்கள். “மை” தொகுப்பு இலக்கண இலக்கிய விதியமைந்து சொல்லாடல்களால் கவித்துவமடைந்துள்ளது என்றால் மிகையில்லை.
மா.காளிதாஸ்(49) மதுரை மாவட்டம், பரவை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை வணிகவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இதுவரை வெளிவந்துள்ள இவரது பிற கவிதை நூல்கள்:
1. சந்திப்பின் கடைசி நொடியில் (1998)
2. அட்சதை (2000)
3. பிம்பங்களின் மீது ஒரு கல் (2003)
4. திருடனின் வீடு (2015)
5. பெருஞ்சொல்லின் குடல் (2020)
6. ரகசியங்களின் புகைப்படம்(2021)
1.செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு (தமுஎகச) - 1999
2.கவிச்சுடர் விருது (படைப்பு குழுமம்) - 2019. போன்றவற்றோடு
கவிஓவியா மாத இதழ் வழங்கும் கவிச்சுடர் கார்முகிலோன் விருதினை "மை" தொகுப்பு பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
கவிதை எழுதுதல், நூல் விமர்சனம் செய்தல் (கதை, கவிதை, நாவல்), போன்றவற்றோடு முகநூலில் எழுதிவரும் ஹைக்கூ குறித்த தொடர் பலரின் கவனத்தினைப் பெற்றுள்ளது.
காலச்சுவடு, கணையாழி, உயிர்மை, உயிரெழுத்து, புதிய பார்வை, புரவி, பேசும் புதிய சக்தி, ஆவநாழி, இலக்கியவெளி(கனடா), செம்மலர், மணல்வீடு, தாமரை, கனவு, தினமணிக் கதிர், ஆனந்தவிகடன், குங்குமம், குமுதம், சுதேசமித்திரன் போன்ற இதழ்களிலும், கொலுசு, தகவு, கல்வெட்டு, காற்றுவெளி, நுட்பம் போன்ற இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
நூல் : மை
ஆசிரியர் : மா.காளிதாஸ்
வெளியீடு : வாசகசாலை
ஆண்டு : டிசம்பர் 2021.
விலை : ₹130
தொடர்புக்கு : 9942633833 / 9790443979
அட்டை வடிவமைப்பு : லார்க் பாஸ்கரன்.
கவிஞர் சுகன்யா ஞானசூரி. இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசிக்கிறார், தனியார் ஆய்வகத்தில் நுண்ணுயிரியல் துறையில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிபவர். இவரின் அலைகளின் மீதலைதல் மற்றும் நாடிலி கவிதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன.