சை மனிதனின் ஆன்மாவைத் தொட்டு எழுப்பும்போது அது அந்த நிலத்தின் அடையாளமாகவும் இருப்பதை சஞ்சாரம் என்ற நாவல் வழி அறியத் தருகிறார் எஸ்.ரா அவர்கள்.

தஞ்சை மண்டல  நாதஸ்வர கலைஞர்கள் கொண்டாடப்படுகிற  அளவிற்கு, கரிசல் வட்டார  நாதஸ்வர கலைஞர்கள் கொண்டாடப் படவில்லை என்ற  ஏக்கம்தான் இந்த நாவலுக்கான உந்து சக்தியாக செயல்பட்டிருக்கிறது.

கரிசல் நிலத்தின் ஆன்மாவாக  நாதஸ்வர இசையை இந்த நாவல் வழி அறியும்போது பல்வேறு கிளைக் கதைகளும் நாவலாக விரிந்து கொண்டே போகிறது.

பக்கிரி என்ற மனிதனின் கதை மூதூர் தொடங்கி  அரட்டானம், கரிசக்குளம், உறங்காப்பட்டி, ஒதியூர், மருதூர், அருப்புக்கோட்டை, சித்தேரி, கொடுமுடி, பனங்குளம், சென்னை, லண்டன், சோலையூர், காரியாப்பட்டி, பொம்மாக்காபுரம், நாரைக்குளம், திருச்சுழி, நடுக்கோட்டை, கோயமுத்தூர், வேப்பங்காடு, புதுக்குடி, தாம்பரம், தொடுமாக்கல் மீண்டும் கொடுமுடி என நாவல் தனது நாதஸ்வரக் கலைஞர்கள் வழியே களமாடியிருக்கிறது,

இதில்  கரிசல் வட்டார நாதஸ்வரக் கலைஞர்களோடு கரம் கோர்த்து பயணித்த  நாவலாசிரியரின் அனுபவங்களோடு நாமும் பயணித்து அந்த நிலத்தின் மண்ணோடும் மக்களோடும்,கலைஞர்களோடும்  நாமும்  ஒன்றி விடுவதாகவே நாவலின் உரையாடல்கள் அமைந்துள்ளன.

மண்ணு வேணுமா, பொன்னு வேணுமா என்று கேட்கிற ஊரோடிகளின் இசையை புறக்கணித்த கரிசல்வாசிகள் அதை உணர்வதும், நாதஸ்வர இசையில் ஊரோடிப் பறவைகளின் ரெக்கையடிப்பு இருப்பதை கரிசல்வாசிகள் உணர்வதும் ஊரோடியின் ஒரு சொட்டு கண்ணீரில் வேம்பு துளிர்த்த கதையும் , வேம்புவால் காப்பாற்றப்பட்ட ஊரும் கரிசல் நிலத்தில் அழியாத சாட்சியாக நாதஸ்வரமும் இருப்பதாக நாவலாசிரியர் சொல்லிச் செல்லும்போது நாம் கதையின் ஆர்வத்தில் இருக்கும் அதே வேளையில்  கரிசல் மண்ணின் அசலான தன்மையையும் புரிந்து கொள்ளலாம்.

சாதிய கட்டுப்பாடுகள் கரிசல் மண்ணில் வேரோடிக் கிடப்பதை நாவலின்  பல இடங்களில் கரிசலின் வெக்கையை விட கொடுமையாக இருப்பதை உணரமுடிகிறது.

கரிசலின் ஊடே  சுற்றி நாதஸ்வரத்தை இசைக்கும் வாலன், நாதஸ்வரம் என்பது வெறும் வாத்தியக் கருவியில்லை, அது கரிசலின் ஆன்மாவை விழிப்படையச் செய்யும் ஒரு வாத்தியம் என்று கண்டு கொள்கிறான்.

ஒதியூரில் ஒரு வீட்டில் ஒரு திருடன் பாத்திரங்களை திருடும்போது பிடிபட்டு விடுகிறான். ஊர் ஆட்கள் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என பேசிக் கொண்டிருக்கும் போது,நூறு வயதைக்கடந்த கொண்டம்மாள் என்ற கிழவி,அவனுக்கு ஏழு வீட்டுச் சோறு போட்டு அனுப்பி வைக்கலாம் என்று சொல்கிறாள். அதன் பிறகு நடக்கும் அனுபவங்கள் நமக்கு சுவாரஸ்யமாகவும் அதற்கும்மேல் நமது தண்டனைகள் இதுபோல் இருந்தால் ஒரு மனிதனின் தவறை எப்படி அவன் உணர்ந்து திருந்துவதற்கு ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்பதையும் உணர முடிகிறது.

இவையெல்லாம் நாவலை அலுப்பில்லாமல் வாசிக்க கிடைக்கும் கிளைகதைகள்தான்.

இதே போல் அரட்டானம் என்ற பகுதியில் வரும் கதை வாசிகக் வாசிக்க இது உண்மைச் சம்பவமா? அல்லது புனைவா என்று யோசிக்காமல் இருப்பதற்கு கதையை நகர்த்திச் செல்லும் வேகம்  அலாதியானது.சரக்கூடு லட்சையாவையும், மாலிக்காபூர் மன்னனையும் , கல் யானையின் காதுகள் அசைவதையும்  நம் கண்முன்னே நிறுத்தி ஒருமுறை நாம் திரையில் கண்டு பரவசப்படும் காட்சிகள் போல் உருவாக்கப்பட்டுள்ளது.  சபாஷ் !

டேவிட்  ஹாக்கின்ஸ் என்ற வெள்ளைக்காரன் மருதூர் கோயிலுக்கு வந்த பின் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான. அதேபோல் அவன் நாதஸ்வரம் கற்றுக் கொள்ளும் போது பக்கிரியும் அவனும் நண்பர்களாக மாறிவிடுகிறார்கள்.அந்த ஊரும் பெண்களும் அவனுக்கு பிடித்துப் போகிறது. அவன் அந்த ஊர் பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறான். அதன்பிறகு பக்கிரியின் வாழ்வில் வேறு திருப்பம் வருகிறது. கதைக்குள் கதையாக நாதஸ்வரக் கலைஞர்களின் மேதமைகளுடன் பல்வேறு கிராமியக் கலைகளும் இணைந்து கொள்கின்றன.

கிளைக் கதைகளையே  அதிகம் இந்த நாவல் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு ஊரையும் அந்த மண்ணையும் ,அந்த மக்கள் பேசும் மொழியையும் அப்படியே நமக்கு அந்த உணர்வாகவே கடத்தும் போதுதான் அந்த மக்களின் மன உணர்வுகளையும், வலியையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ரத்தினம் சொன்னார்.  “நாமளும்தான் நாதஸ்வரம் வாசிக்கிறோம்.ஆனா இந்த கொடுப்பினை நமக்கு இல்லையே”

“வாத்தியக்காரங்களுக்கு இருந்த மரியாதையெல்லாம் போச்சுண்ணே இப்போ நாம ஊறுகாய் மட்டை மாதிரி.ஒரு நக்கு நக்கிட்டு தூக்கி எறிஞ்சிருவாங்க”

“இது எத்தனை நாளைக்கோ. அடுத்த தலைமுறையில் இதை வாசிக்கவும் ஆள் இருக்காது”

“அப்படி போயிராதுண்ணே. யாராவது வரத்தான் செய்வாங்க”என்றான் பக்கிரி.

நம்பிக்கை இல்லாதவரைப் போல மறுத்துத் தலையாட்டினார் ரத்தினம்.

தன்யாசி என்ற இசைக் கலைஞரின் சமாதியருகே இருவரும் பேசிக் கொள்ளும் உரையாடலிலிருந்து கரிசல் கலைஞர்களின்  துயரம் மிக்க வாழ்க்கையை ஒரு கோடிட்டு காட்டுவது போல் விளக்கியுள்ளார்.

இதுபோல் பல  துயரக் கோடுகள் நாவலில் வரும் போது நாவலின் கனமும் அடர்த்தியும் கூடி நாவலிலிருந்து மனம் விலகாமல் செல்வதை அவதானிக்க முடிகிறது.

இந்த நாவல் முழுக்க கரிசல் பூமியில் வாழும் இசைக் கலைஞர்களின் வாழ்க்கையும் அவர்களின் துயரமுமே பேசப் பட்டிருக்கிறது.

நாம் ஒரு ஊரின் வாழ்க்கையை இசையின் பின்புலத்தோடு அறியும் போது அதை உணர முடியாத சாதிய அமைப்புகளுக்கும், இசையின் வழியாக அறியப்படும் தமிழ் அடையாளத்திற்கும் உள்ள  கண்ணிகளை இணைத்து சஞ்சாரம் என்ற நாவலை தமிழ் சமூகத்திற்கு அளித்திருக்கிறார் எஸ்.ரா அவர்கள்.

நாவலை வாசித்து முடித்த பின்பும் எதோ ஒரு நாதஸ்வரம் எங்கிருந்தோ அதன் இசையை காற்றின் வழியே செவியை நிரப்புவது போலவே இருக்கிறது.


 

நூல் தகவல்:

நூல் :  சஞ்சாரம்

ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்

வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்

ஆண்டு : 2017

பக்கங்கள் :  360

விலை : ₹ 340

நூலைப் பெற  :

எழுதியவர்:

1 thought on “எஸ்.ரா-வின் “சஞ்சாரம்” நாவல் விமர்சனம்

  1. எஸ்.ரா-வின் “சஞ்சாரம்” நாவல் விமர்சனம் – அற்புதமான மதிப்புரை. இந்த புத்தகம் வாங்க வேண்டும்; படிக்க வேண்டும். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் இனிய நண்பர் மஞ்சுளா கோபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *