ஆசிரியர் தமிழ்நதி அவர்களின் இயற்பெயர் கலைவாணி. ஈழத்தில் திருகோணமலையில் பிறந்து, போர்ச்சூழல் காரணமாகக் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் எனும் பல தளங்களில் இயங்குபவர்.
“கனிந்து செறிந்த மனமுதிர்விலிருந்து, வழியிடையே கவித்துவம் பளீரிடும் அனாயாச சொற்தொடுப்புகளில் வந்தடைந்திருக்கின்றன, இக்கதைகள்” என்று முன்னுரையில் பாராட்டியிருக்கின்றார், யூமாவாசுகி.
இத்தொகுப்பில் பத்துக் கதைகள் உள்ளன. முதல் கதையான ‘தாழம்பூ’ இப்படித் துவங்குகின்றது:-
“இடத்தை மாற்றிக் கொண்டால், துக்கமும் ஆறக்கூடும் என்ற நப்பாசையே மது தன்னுடைய ஊருக்கு வரும்படி, என்னை அழைத்த போது, அவளது வேண்டுகோளை ஏற்கச் செய்தது”
பிறந்து வளர்ந்த தாய் மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து, வாழ வழி தேடி அந்நிய மண்ணில் அகதிகளாய்ப் தஞ்சம் புகுந்த, ஈழத்தமிழரின் நெஞ்சங்களில் ஆறாத ரணமாகக் கனன்று கொண்டிருக்கும் துன்பம், பல கதைகளில் வெளிப்பட்டு, வாசிப்பவர் நெஞ்சிலும் சோகத்தையும், வேதனையையும் கடத்துகின்றது.
“நித்திலாவின் புத்தகங்கள்,” என்ற கதை, என்னை மிகவும் பாதித்தது. வாசிப்பின் உன்னதம் அறியாத, தமிழ்ச் சமூகத்தில் பிறந்த ஒரு சாமான்ய பெண்ணுக்குப் புத்தக வாசிப்பில் அளவு கடந்த ஈர்ப்பிருந்தால், என்ன நடக்கும் என்பதற்கு, இக்கதை ஓர் எடுத்துக்காட்டு.
“அவள் மழைக்காலத்திற்கென எறும்புகள் தானியங்களைச் சேமிப்பதைப் போல, விவசாயி விதை நெல்லைச் சேமிப்பதைப் போல, குழந்தைகள் பிரியமான தின்பண்டங்களைப் பொதிந்து வைத்திருப்பதைப் போலப் புத்தகங்களைச் சேகரித்தாள்”. முதலிரவில் “உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று கணவனானவன் கேட்ட போது, ஒரு நொடியும் தாமதிக்காமல், “புத்தகங்கள்” என்றாள்.
“இந்தச் சனியனைக் கொண்டு போய் விட்டுத் தொலை” என்று மாமியார் சொல்ல, கணவன் கொண்டு போய், அம்மா வீட்டில் விட்டுவிட்டு வந்தான். “நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவள் புத்தகங்களோடு படுத்துறங்கினாள். ஆழ்கடலின் பேரமைதி, தன்னுள் இறங்கியிருக்கக் கண்டாள்”
“ஊருலகத்திலை உன்னைப் போல, ஒரு பொம்பிளைப் பிள்ளை இருக்காது” என்றும், “இந்தச் சனியன்களை விட்டொழிச்சாத் தான், நீ உருப்படுவாய்” என்றும் அம்மாவிடம் அடிக்கடி திட்டு வாங்குகின்றாள். பெண்ணின் சுய விருப்பத்துக்கும், தெரிவுக்கும், மகிழ்ச்சிக்கும் எதிரான தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதி அம்மா!
பெண்ணென்றால் வீட்டைச் சுத்தமாகப் பராமரிக்கத் தெரிந்தவளாக, தோசையை வட்டமாக ஊற்றத் தெரிந்தவளாக, வீட்டுக்கு வந்தவர்களை அனுசரணையாக உபசரிக்கத் தெரிந்தவளாக, ஆண் எப்போது கூப்பிட்டாலும் படுக்கையில் மகிழ்ச்சியூட்டக் கூடியவளாக இருக்க வேண்டும் என்று, நம் சமூகம் சிறந்த பெண்ணின் குணங்களாகக் காலங்காலமாக ஏற்படுத்தி வைத்திருக்கும் பொதுப்புத்தியின் காரணமாக “பிள்ளை என்று இருந்தால், சுமதியைப் போல இருக்க வேணும்” என்கிறாள் புத்தக வாசனையறியாத அப்பாவி அம்மா.
‘மாயக்குதிரை’ சூதாட்ட விடுதிக்குச் செல்லும் பெண்ணைப் பற்றிய கதை. இதுவரை நான் படித்திராத புதிய கரு. எத்தனை முறை பணம் இழந்தாலும், அடுத்த முறை வெற்றி பெறுவோம் என்று எண்ணத்துடன் மீண்டும், மீண்டும் சூதாட்டத்தில் ஈடுபடும் மனித மனத்தின் பலவீனத்தை அற்புதமாகச் சித்தரித்திருக்கின்றார் ஆசிரியர்.
“காத்திருப்பு” மனதைப் பாரமாக்கிய கதை. பள்ளியிலிருந்து அப்போது தான் திரும்பி வந்து, சாப்பிட அமர்ந்த பதினேழு வயது மகனை அம்மாவிடமிருந்து பிரித்து, ஜீப்பினுள் தூக்கியெறிந்து கூட்டிப் போகிறது இராணுவம்.
“அதற்குப் பிறகு ஞானம்மா உறங்கியதேயில்லை,” என்று வாசித்தபோது, கண்களில் ஈரம் கசிந்தது. இந்த ஞானம்மா போல், தம் பிள்ளைகளை ராணுவத்திடம் பறிகொடுத்துவிட்டு, அவர்கள் உயிரோடு திரும்பி வருவார்களா, இல்லை காணாமல் போன பட்டியலில் இடம் பெறுவார்களா என்று பரிதவிப்போடு காத்திருந்த ஆயிரமாயிரம் அம்மாக்களின் வேதனை கலந்த முகம் நினைவுக்கு வந்து, மனதைக் கலங்கடித்தது.
“கோகுலனின் குரலை, அவர்களால் சிறை பிடித்துக் கொண்டு போக முடியவில்லை. அது வீடெங்கும், வளவெங்கும் நிறைந்து நின்று அம்மாவைக் கூப்பிட்டது. குரல் ஒலிக்கும் திசைகளில், தலை திரும்பும். கால்கள் குரலுக்குரியவனைத் தழுவுதற்காய் எழுந்தோடும்”.
“அவனை விட்டிடுவாங்கள். நீ உன்ரை மனசை விட்டிடாதையப்பா!” மன்றாடிக் கேட்பார் அவன் அப்பா. கண்கள் நிறைந்து பெருக, “உண்மையாகவா?” என்பதாக ஞானம்மா பார்ப்பார். அப்படிப் பார்க்கும்போது, ஒரு தாயின் கண்கள், குழந்தையினுடையதாக மாறியிருக்கும்.”
‘கடன்’ கந்து வட்டிக்காரனிடம் கடன் வாங்கிவிட்டு, அதிலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பவனின் கதை. ஆசிரியரின் துல்லிய விவரிப்பு, கதாநாயகன் தற்கொலை செய்து கொண்டு விடுவானோ என்ற பதற்றத்தை வாசிக்கும் போது ஏற்படுத்தியது, உண்மை..
கதாசிரியர் தமிழ்நதிக்கு, என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
நூல் : மாயக்குதிரை பிரிவு: சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் : தமிழ்நதி வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் வெளியான ஆண்டு : 2018 விலை: ₹ 150 Kindle Edition: