அபுனைவுநூல் விமர்சனம்

பொலம்படைக் கலிமா – ஒரு பார்வை


பொலம்படைக் கலிமா” தலைப்பிலேயே தலை தூக்கிப் பார்க்கிறது தமிழ். தமிழ் என்றால் தவம் என்றும் பொருள். கண்கூடு இப்புத்தகம்.

சங்கத்தமிழின் நிறம் பிடித்து வர்ணம் தீட்டி ஆதி வானம் பூசி இருக்கும் இந்த நூலில் கிட்டத்தட்ட பத்து கட்டுரைகள். பத்தும் தமிழ் கட்டளைகள்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தாலும் கட்டி இழுத்து வந்து கவனம் சேர்த்திருப்பது சாதாரண வேலை அல்ல. அதற்கு தனிப்பெரும் தமிழ்த் திறன் தேவையாய் இருக்கிறது. அது ஆசிரியருக்கு வாய்த்திருப்பது ஆகச்சிறந்த அற்புதம்.

சரி, தலைப்புக்கு என்ன அர்த்தம் என்று பார்க்கையில், அதற்கும் ஒரு கட்டுரை தான் பதில்.

பொலம்படைக் கலிமா என்றால் தங்க ஆபரணம் பூட்டிய பெருமைமிக்க குதிரை என்று பொருள். அட்டைப் படத்தில் அப்படித்தான் எகிறிக் கொண்டு நிற்கிறது பெருமை மிகு குதிரை. கட்டுரைகளில் வரும் ஒவ்வொரு தலைப்பிற்கு பின்னால் இருக்கும் அடுக்குத் தொடரின் நீட்சியென அதன் போல் அதன் பொருள்…….. அதன் அதன் பொருளென……… அதன் பொருள் என்று தமிழ் கொண்டிருக்கும் ஆழத்தில் அப்பப்பா சங்கத் தமிழ் தொன்மை பூண்ட கரிசனத்தோடு நம்மை வியக்க வைப்பது அறிவார்ந்த, செறிவான அற்புத பொக்கிஷம். அறிவுத்தேடல் உள்ளோர்க்கு அகப்பை நிறைய அள்ளிக் கொடுக்கும் அமுதகரம் இப்புத்தகம்.

அச்சுவம், அசுவம், அத்திரி, அரி, இலடு, இல்லாடு, இவுளி, .உத்தரி, கண்ணுகம், கவனம், கந்துகம், கற்கி, குண்டு, குரை, குந்தம், காட்டம், காண்டம், கொக்கு, கோடகம், கோடை, கோரம், கோடரம், கோணம், சடிலம், தாவளை, துரகம், துரகதம், துரங்கம், தூசி, தூளி, தெற்சி, தேகை, பதி, பத்திரி, பரி, பாடலம், பாய்மா, புரவி, பெட்டை, மட்டம், மண்டலம், மா, வாமா என 40க்கும் மேற்பட்ட பெயர்கள் குதிரைக்கு உண்டு என்கிறார்.

நிஜமாக, குதிரையில் ஏறி மூச்சு விடாமல் காற்றில் பறக்கத்தான் செய்கிறது தமிழ்.

கள்ளினும் போதை கொண்ட தமிழை சங்க இலக்கியங்களில் இருந்து மேற்கோள் கொடுத்து பக்கத்துக்கு பக்கம் தமிழ் வெடி வெடித்திருக்கிறார் இந்த பொலம்படைக் கலிமர்.

5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் குதிரையை பழக்கி கட்டுப்பாட்டில் வைக்க ஆரம்பித்து விட்டான் என்கிறார். குதிரைக்கு 205 எலும்புகள் உண்டு என்பது கூடுதல் தகவல். குதிரையின் கணைப்பில் எலும்புண்டு தீர்க்கும் பின்னல் மொழி கவனிக்க.

மூங்கில், புல் இனம் என்று ஒரு கட்டுரையில் கூறுகையில் மூங்கிலை புல்லாங்குழல் தாண்டி யோச்சிக்காத நவீன சமுகத்துக்கு காற்று வாக்கில் இசையூட்டுகிறார். உலக அளவில் சுமார் 1500 வகைகள் உண்டென்பது மூங்கில் காடுகள் பற்றிய ஜுவாலையை நமக்குள் எரிய விடுகிறது

கம்பு, காம்பு, சானகி, கீசகம், திகிரி, தூம்பு, பாண்டில், பாசு, முளை, முடங்கல், முண்டகம், அமை, வெதிர், தட்டை, ஞெலி, மால்பு, வேரல், மூங்கில், தட்டை, கழை, உந்தூழ், பனை, முந்தூழ் என்று இத்தனை பெயரும் மூங்கிலுக்கு உண்டு என்கையில் புல்லாங்குழலுக்கு பின் இருக்கும் சரிகம பதி அற்புதத்திலும் அற்புதம் என்கிறது மூத்த தமிழ்.

இன்றைய “பாட்னா” என்ற பாடலிபுத்திரம் பற்றிய செய்திகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. குறுந்தொகைக்குள் குத்த வைத்து அமர்ந்திருக்கும் இந்த பாடலி புத்திரம் 5ம் நூற்றாண்டில் பேரரசர்களின் தலைநகரம் என்றால் அது சரி நிகர் தான். “சோணை” நதி பாட்னாவின் மேற்கில் தான் கங்கையில் கலக்கிறது என்ற செய்தி தமிழூற்றும் இனிப்பு. இந்தியா முழுக்க தமிழன் பரவி இருந்தான் என்பதற்கும் இப்பாடலி புத்திரம் தொடர்பான சங்கதிகள், குறுந்தொகையில் காணக் கிடைக்கிறது என்பது தான்… தமிழின் ஆயிரம் கைகளும் தவம் பூண்டு இந்தியாவைக் கவ்விக் கொண்டிருக்கிறது என்று அறிவதற்கு வழி கோலுகிறது.

மைசூர் பகுதிக்கு “எருமை நாடு” என்று பெயர் என்பதெல்லாம் இந்தநூல் மூலமாகவே இந்த தலைமுறைக்கு தெரிகிறது.

அகநானூறு புறநானூறு கலித்தொகை குறுந்தொகை என்று சங்க இலக்கியங்களில் தமிழ் மரபின் வாழ்வு சார்ந்து, கலாச்சாரம் சார்ந்து, பண்பாடு சார்ந்து எல்லா நிகழ்வுக்கும் பாடல் இருக்கிறது என்பதை பத்து கட்டுரைகளிலும் நூறு படிகள் எடுத்துரைக்கிறார்.

ஒரு கட்டுக்கோப்பான பண்பாடான நாகரீக வளர்ச்சியடைந்த வாழ்வை 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் மேற்கொண்டான் என்பதை இவர் நூல் முழுக்க எடுத்தியம்பியிருப்பது அற்புதத்தின் நேர் கொண்ட பார்வையில் அப்படியாக மயிர்கூச்செரியும் மனோநிலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய கீழடி ஆய்வுகள் மீண்டும் அதை உறுதிப் படுத்தி இருப்பதை உலகின் மூத்த குடியாக பொறுப்புணர்வோடு உள்வாங்குகையில் மிக நுட்பமாக இன்னூல் மூளைக்குள் 2000 ஆண்டுகால தமிழைக் கபடி ஆட செய்கிறது.

“வலன் ஏற்பு” என்ற கட்டுரையில் மேகத்தின் வளைவுகள்.. மேகத்தின் போக்கு…. என்று மேகத்தின் வகைமைகளைப் பற்றி அறிகையில் அனிச்சையாக வான் நோக்கி காண நேரிட்டது. இயற்கையின் இன்முகத்தில் இந்த “வலன் ஏற்பு” நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதை சங்க காலம் தொடர்ந்து நவீனம் வரை வந்து கொண்டே இருப்பதை “மேகமே மேகமே பால் நிலா தேயுதே, மேகம் கருக்குது  மழை வர பாக்குது;  வீசி அடிக்குது காத்து, மேகங்கருக்கையில புள்ள தேகம் குளுருதடி…” போன்ற பாடல்கள் மூலமாக, மானுட வாழ்வோடு இணைந்திருப்பதை ஒவ்வொரு கால கட்டத்திலும் வேறு வேறு மேகங்களிடையே நின்று உறுதிப்படுத்திக் கொள்கிறோம். “மேகம் கொட்டட்டும்… ஆட்டம் உண்டு….” என்பதெல்லாம் இன்னபிற.

பூழியன், உதியன்,  கொங்கன், பொறையன், வானவன்,  குட்டுவன், வான வரம்பன்,  வில்லவன், குடநாடன், வஞ்சி வேந்தன், கொல்லிச் சிலம்பன், கோதை கேரளன், போந்தின் கண்ணியன்,  பொருநைத் துறைவன், சேர்லன் மலையமான்,  இத்தனை பெயர்கள் உண்டு சேரனுக்கு. எட்டுத்தொகையில் ஒன்றான நற்றிணையில் சேரன் பற்றிய பாடல்கள் மலையாளக் கரையோர காவியமாக விரிகிறது. சேரர்களின் தலை நகரம் வஞ்சி என்றும் கரூர் என்று சொன்னாலும்… திருச்சி பக்கம் இருக்கும் கரூராக இருக்க வாய்ப்பு அதிகம் என்றும் கூறுகிறது நூல் கொண்ட பழமை..

சிலம்பு கழிக்கும் நோன்பு பற்றி “சிலம்பு கழிஇ” என்று ஒரு கட்டுரை வருகிறது. அறிவியலையும் அறத்தையும் இணைத்து அற்புதமும் அழகியலும் தமிழில் இணைந்திருப்பதைக் காணுகையில் மிக நீண்ட மானுடப் பயணத்தில் நாம் இப்போது மிக துல்லியமான ஒரு மொழியை கைக் கொண்டிருக்கிறோம் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.

சில கட்டுரைகளுக்கு சம காலத்து திரைப் பட பாடல்களையும் மிக நுட்பமாக கையாண்டிருக்கிறார். சங்கத்தமிழ் மட்டும் தான் அற்புதம் என்ற தொனி ஆசிரியரிடம் இல்லை. பேச்சுத்தமிழும் எதிர் வீட்டுத்தமிழும் கூட அற்புதம்தான். நடைமுறையில் சிக்கல் இல்லை என்று நம்பலாம். தமிழ் எப்படி மாறினாலும் காலத்துக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும். ஆதி வேரை ஒருபோதும் விட்டு விடாது என்ற நம்பிக்கையை ஆசிரியர் தெளிந்த நீரோடையில் தமிழ் அமுது ஊற்றெடுக்க வைத்து கூறுகிறார்.

பனங்கள், தென்னங்கள் தாண்டி மூங்கில் கள் என்று ஒன்று உண்டென்பதை சொல்லும் கட்டுரையில் போதை தலைக்கேறி காலச்சுழலில் சிக்கி நான் சங்க காலத்துக்கே சென்றது போன்ற பிரமிப்பு. கற்றது கையளவு; கல்லாதது உலகளவு என்று தெரியாமலா சொன்னார்கள் நம் முன்னோர்கள். அத்தனை இருக்கிறது அறிந்து கொள்ள. அத்தனையும் தெரிந்து கொள்ள இப்பிறவி போதாது என்ற ஞானம் புத்தகத்தை முடிக்கையில் தொடங்குகிறது. இன்னும் இன்னும் தேட அமுதமும் ஆர்ப்பரிப்பும் கொண்ட தமிழ் இன்னமும் குதிரை ஏறி வந்து கொண்டே இருக்கிறது.

எல்லா கால கட்டத்திலும் தலைவனும் தலைவியும் பொருள் பாற்பட்டு பிரிந்திருப்பதும் அங்கே ஒரு தோழி இடையில் காதலுக்கு தூதுக்கோ, காதலின் பிரிவுக்கு ஆறுதலுக்கோ இருந்திருக்கிறாள். தோழிகள் இல்லாமல் தலைவிகள் ஒருபோதும் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறது புத்தகம். காதல், தமிழ் மரபின் இரண்டறக் கலந்த உரிமையாகவே இருந்திருக்கிறது. பிறகேன் நாங்கள் தமிழர்கள் என்று மார் தட்டுவோர் சாதிக்கும் சாமிக்கும் காதலைப் பிரிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஆசிரியர் இது போன்ற கலிமாக்களை தொடர்ந்து படைக்க வேண்டும்…. என்பது ஆசை தாண்டிய அவசியமாகவும் இருக்கிறது.

பக்கத்துக்குப் பக்கம் சங்க கால செய்திகளை சங்கத் தமிழ் பாட்டுகள் மூலமாகவே வாரி வழங்கி இருக்கும் ஆசிரியர்.. குறுந்தாடிக்குள் மெல்ல சிரிப்பது போல இருக்கிறது. அத்தனை பந்துகளையும் சிக்சருக்கு அடித்து விட்டு குறும்பு பார்வை பார்க்கும் கண்ணாடிக்குள் கால கண்கள் சங்கம் பூசி சிமிட்டுகிறது. பெரும் மேதாவிகளையும் அறிவாளிகளையும் ஆளுமைகளையும் கொண்டது தமிழ். சங்கம் கொட்டும் தங்கத் தமிழை சுரங்கம் வெட்டி மெல்லத் தழுவுவோம்.

80 பக்க நூலுக்கு 80 நூல்களை ஆய்வு செய்திருக்கிறார் என்றால் ஆசிரியரின் மிச்ச உழைப்பை படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

“பொலம்படைக் கலிமா” இந்த தலைப்பிலேயே கம்பீரமாக வீற்றிருக்கும் தமிழைக் கொண்டாடி களி தீர்ப்போம்.

“எழுத்து” இணைய தளத்தில் இருந்தே பொலம்படைக் கலிமாவின் ஆசிரியர் “தா. ஜோசப் ஜுலியஸ்” அவர்கள் எனக்கு பழக்கம். அற்புதம் அவர் புன்னகையில் இருக்கும். ஆழம் அவர் தமிழில் இருக்கும்.

அறிவார்த்த மொழி ஒரு போதும் கை விடாது. நம்புங்கள்…. ! ஜுலியஸ் சார் நம்புகிறார்… ! நாமும் நம்புவோம்…!

கவிஜி

நூல் தகவல்:
நூல் : பொலம்படைக் கலிமா
பிரிவு : கட்டுரைகள்
ஆசிரியர் தா. ஜோசப் ஜுலியஸ்
வெளியீடு: காலம் வெளியீடு
வெளியான ஆண்டு : 2019
பக்கங்கள்
விலை : ₹ 70

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *