நீண்டகாலம் உறங்கு நிலையில் இருந்த ஜீவமுரளி இப்போது ஒரு நாவலைத் தந்திருக்கிறார் என்கிற விஷயம் பேருவகையைத் தருகிறது. படைப்பின் தரம் எப்படியோ ஒரு நாவல் பெர்ளினிலிருந்து வெளிவந்திருக்கிறது என்பதில் அவ்வுவகை இரட்டிப்பாகின்றது. ஜீவமுரளியின் லெனின் சின்னத்தம்பியும் ஏமாற்றவில்லை, புதியதொரு களத்தினின்றும் சுகமானதொரு வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. புலம்பெயர்ந்து வருபவர்கள் எப்படி முதலாளித்துவ சிந்தனைகளில் நிறமேலாண்மையில் ஊறிப்போனவர்களால் மாதனமுத்தாக்களாகக் கணிக்கப்படுகிறார்கள், பிழிந்து எடுக்கப்பட்டு தங்களின் நலன்களுக்கும், வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை புதினம் அழகாகச் சித்தரிக்கிறது. நாமொன்றும் இலக்கியங்களை முனைந்து படைப்பதில்லை. ஆனால் நாம் வரித்துக்கொண்டிருக்கும் இந்த வாழ்வுதான் எம்மைக்கொண்டு தன்னை எழுதுவித்துக் கொள்கிறது என்றால் அது மிகையல்ல
பல்வகையான உணவுகளைத் தயாரித்து விருந்துகளுக்கும், தனியார்/ குழுமங்களின் கொண்டாட்டங்களுக்கும் விநியோகம் செய்கின்ற உணவு தயாரிப்பு நிறுவனத்தில் லெனின் சின்னத்தம்பி அங்கே சமைத்த பாத்திரங்களைக் தேய்த்துக் கழுவிச்சுத்தம் பண்ணிக்கொடுக்கும் பணியாளராகவும் சிலகாலம் உணவு தயாரிப்பில் உதவியாளராகவும் பணிபுரிகின்றார். புதினம் முழுவதும் அங்குள்ள சக தொழிலாளர்களுக்கும் அவருக்குமான ஊடாட்டங்களையும் நடப்புகளையும் சொல்லி விரிகிறது,
அதுபோன்ற ஒரு நிறுவனம் மூலப்பொருளை உணவாகத் தயாரிக்கலாமேயன்றி, எந்த உணவையும் உற்பத்தி செய்துவிட முடியாது, அது விவசாயிகளாலும் விலங்குப் பண்ணைகளாலுமே முடிகிற காரியம், எனினும் அந்நிறுவனமும் அதன் எசமானனும் ‘உணவு உற்பத்தி’ என்கின்ற பதத்தையே பாவித்து அதன் முக்கியத்துவத்தையிட்டுப் பெருமை கொள்வதில் லெனினுக்கு உடன்பாடின்மை இருந்தாலும் அப்பதத்தையே புதினத்திலும் பயன்படுத்துகின்றார். அவரது 14 வருஷத்தைய பணிக்காலத்தில் தினமும் அங்கே நடைபெறும் முதலாளியின் கண்டிப்பை / சுரண்டலை/ தந்திரங்களை / சக ஊழியர்களின் ஒத்தூதுதல் / ஜால்ராபோடுதல் / பந்தம்பிடித்தல் / வசைபாடுதல்/ கீழ்நிலை ஊழியர்களை தாட்சண்யமற்றுப் பிழிவதை / மனோபாவங்களை / அவரது தினக்குறிப்பைப்போல விபரித்துப்பதிவு செய்கின்றார். நானும் இது போன்றதொரு ஹொட்டலில் நான்கைந்து வருடங்கள் மட்டையடித்தவனாதலால் ஜீவமுரளி சித்தரிக்கும் வேலைத்தலத்தின் பகைப்புலத்துடன் ஒன்றவும், அங்குள ஆகிய நடப்புகளை உணரவும், அப்பாத்திரங்களைப் புரியவும் முடிகிறது.
பொதுவாக சகதொழிலாளியாகவோ, மேலாளனாகவோ இருக்கும் ஜெர்மன்காரர்களின் மற்றவனை மட்டமாக / மாதனமுத்தாக்களாக நோக்கும் மனோபாவம் முரளியின் நுணுக்கமான பார்வையில், அனுபவத்திலும் வார்த்தைகளிலும் சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. சதா முதலாளிக்கு யாரைப் பற்றியாவது போட்டுக்கொடுத்துக்கொண்டும், இதர பணியாளர்களை ஏவி வேலை வாங்கிக்கொண்டும் இருக்கும் அக்ஸல் குறுப்ப எனும் தடியன், சள்புள்ளென்று மற்றவர்களைக் கடிந்தாலும் தன்பணியை தொழில் விசுவாசத்துடன் தன் உடல்வலியை, நேரத்தைக் கவனியாது செய்து முடிக்கும் சண்டைக்காரன், தனக்கே அனைத்து விஷயங்களும் தெரியும், யாரும் தனக்கு பரிந்துரைகள் பண்ணவேண்டியதில்லை என்கிற அகம்பாவங்கொண்ட ஸ்ரெபான், கொஞ்சம் நட்புடன் பழகத்தெரிந்த ஊவ என அவர் விபரிக்கும் ஒவ்வொரு பாத்திரமும் தத்தம் உடல் மொழிகளாலும் செயற்பாடுகளாலும் மனோபாவங்களாலும் புதினத்தை வாசித்து முடித்த பின்னாலும் வாசக மனதில் வாழ்கின்றார்கள். ரஞ்சக நாவல்ககளைப் போன்று சுவாரஸியத்துக்காக ஒரு நெடுங்கதையைப் புனைந்து புதினத்துக்குள் கோர்த்துப்புனையவோ, திருப்பங்களை வலிந்து புகுத்தவோ ஆசிரியன் முனையவில்லை.
புதினம் நடக்கும் ஒரு புள்ளியில் முன் எப்போதையும்விட முதலாளி கடுமையான சிக்கன நடவடிக்கையிலீடுபட ஆரம்பிக்கின்றான். நான்கு தளங்களில் இயங்கிய நிறுவனம் தன்னை ஒடுக்கிக்கொண்டு இரண்டே தளங்களில் இயங்கத்தொடங்குகின்றது.
மூலப்பொருட்களை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்யாமல் விடுகின்றான். வேலைத்தலத்தில் எரியும் மின்சார விளக்குகளின் எண்ணிக்கையைக்கூடக் குறைக்கத் தொடங்குகின்றான், பணியாட்களைக் கண்டபடி வேலை நீக்கம் செய்கின்றான், உணவு விநியோகத்துக்கு உதவிய சாரதிகளையும் நிறுத்திவிட்டு தானே விநியாகங்களைச் செய்கின்றான், அவனது சிக்கன நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ந்தாலும் முன்னர் இருந்த அதேயளவு உற்பத்தி குறையாமல் இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பில் அங்குள்ள பணியாளர்கள்மேல் அதிக பணிச்சுமையை ஏற்றுகின்றான்.
சதா நின்றபடியே பணிபுரிய நேர்பவர்களுக்கு, மூட்டுக்களில் தேய்தல், அதனால் அவைவலி காணுதல் விரைவில் ஏற்பட்டுவிடும். நாற்பது வருஷங்களாக அந்நிறுவனத்துக்காக நின்றபடியே உழைத்து மாய்ந்து அதனால் இடுப்பெலும்பும் மணிக்கட்டெலும்பும் தேய்ந்துபோகும் ஒரு தலைமைச் சமையல்காரர் (சண்டைக்காரன்) பணியைவிட்டு நீண்டநாள் மருத்துவவிடுப்பில் செல்ல நேரும்போதோ, ‘புளோறி’ எனும் தொழிலாளி சமையல்கூடத்தில் வழுக்கி விழுந்து மணிக்கட்டை உடைத்துக்கொண்டுவிடுவதால் அவளைப் பணியைவிட்டு நீக்கநேரும்போதோ அம் முதலாளி சப்கோஸ்கி கிஞ்சித்தும் வருத்தம் கொள்வதில்லை.
பேராசைக்காரனான சப்கோஸ்கியின் காரியாலயத்தில் கணக்குபதிவுகளில் உதவியாளராகப் பணிபுரியும் ஏர்போட் என்பவனால் ‘சப்கோஸ்கி அந்நிறுவனம் நஷ்டமேற்பட்டதாகக் காட்டி அது திவாலாகிவிட்டதாக அறிவிக்கவுள்ளான்’ என்கிற விஷயம் கசிந்து சகலதொழிலாளர்களுக்கும் தெரியவருகின்றது. நிறுவனம் திவாலானதை உறுதிசெய்தால் வாடகைப்பாக்கிகள், மூலப்பொருள் கொள்வனவுப்பாக்கிகளென அவன் செலுத்தவேண்டிய பெருந்தொகையைத் செலுத்தாமல் தப்பிக்கலாம்.
தினமும் எட்டுமணிநேரம் நின்றபடியே செய்யவேண்டிய பணிச்சுமை, பயணக்களைப்பு, நித்திரை முழிக்கவேண்டிய அவலவாழ்வு, சின்னத்தம்பியை விரட்டும் பனியும் குளிரும், குழந்தைகளைக்கூடச் சரியானபடிகொஞ்சவோ அவர்களுடன் சேர்ந்துகொண்டு அடிக்கடி வெளியேபோகவோமுடியாதபடி முதாளித்துவ சக்திகளால் உறிஞ்சப்படும் சின்னத்தம்பிகளின் கனதியான வாழ்வின் வெட்டுமுகம் ஜீவமுரளியின் நடைமுறையிலுள்ள இயல்பான மொழியால் அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வார்த்தைகளுக்காக அலையவோ, அவைகொண்டு பதிவை நளினமாக்கும் எத்தனங்களோ ஜீவமுரளியிடம் இல்லை. அவரது மகள் அன்னம் 4 வயதில் தன் பிஞ்சுவிரல்களால் வரைந்த ஓவியமே அட்டைப்படத்தில் இடம் பெறுகிறது.
இந்த உறிஞ்சல் / முதலாளித்துவ சுரண்டல்களோடு உடன்படமுடியாமல் அவற்றைத் தனது கொள்கையில் எதிர்ப்பவர் ’லெனின்’ சின்னத்தம்பி என்ற குறியீட்டுத் தலைப்பே புதினத்துக்கு தரப்பட்டிருந்தாலும், தான் அகப்பட்டுக்கொண்ட முதலாளித்துவ சமுதாயக்கூட்டுக்குள் சிறைப்பட்டு வாழ்ந்துகொண்டு தனது குழந்தைகளின் வாழ்வு, குடும்பத்தின் எதிர்காலத்தையும் கருதி கலகஞ்செய்ய முடியாதவராகவும், தன் கையறுநிலையில் நடைமுறையோடு சேர்ந்தோடும் மௌனியாகவே ‘லெனின்’ வாழமுடிகிறது. வெளித்தோற்றாத அந்த வாழ்வின் அவலமும் அவர் இழப்பவையும் வாசகனை ஆத்திரமூட்டவும் . தீராத தொந்தரவும் செய்கின்றன.
இன்னும் என் பார்வையில் இப்படி இப்படி மாற்றியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்குமோவென எண்ணவைத்த சிலவிஷயங்களையும் இங்கே சொல்லிவிடுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றேன்.
ஆரம்பம் முதல் முடிவுவரை புதினம் ஒரு திறந்த குழாயிலிருந்து நீர்கொட்டுவதைப்போல இடைநிறுத்தாது சொல்லப்படுவது ஒரு புதுமையாக இருந்தாலும் அது காலத்தைப் பிரிக்கும் வகையில் அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தால் புதினம் நடக்கும் காலங்களை வாசகன் மனதில் கொள்ள ஏர்வையாக அமைந்திருக்கும் .
அநேகமான எழுத்தாளர்கள் கவனிக்காமல் விடுவதுதான் ஒருமை பன்மை வினைமுற்றுக்கள் பலவிடங்களில் செம்மை நோக்கலிலும் திருத்தப்படாமலிருக்கின்றன.
’முடிவிலியற்ற’ சிந்தனையோ ஏதொவொன்று என்று ஓரிடத்தில் சொல்வார். (Two Negatives => Positive) அது முடிவுள்ள சிந்தனை என்ற பொருளையே கொடுக்கும்.
பிரட்டி, புரட்டி/ மற்றும் வரட்சி , வறட்சியன்ன லகர றகர மயக்கங்கள் ஆங்காங்கே இருந்தன, ஆனாலும் அவை வாசிப்பில் தடுப்புக்களை இடவில்லை. தற்கால நூல்களுடன் ஒப்பிடுகையில் இன்னும் அச்சுப்பிழைகள் குறைவாக அமைந்திருந்ததும் பிரதியின் சிறப்பு.
இன்னும் ‘ஊபாண்’, ‘புரோற்சன்’ போன்றவற்றைப் ஜெர்மனியில் வாழாதவர்களுக்கு புரிதலில் சிரமம் இல்லாமல் இருக்க அவற்றின் ஆங்கில/தமிழ் வார்த்தைகளையும் (சுரங்கத்தொடருந்து/பண்ஸ்) கூடவே தந்திருக்கலாம்.
வேலைத்தலம் என்பதுதானே சரியான பிரயோகம். சின்னத்தம்பிக்கு மேலும் கீழுமாக தளங்களில் மாறி மாறி ஏறியிறங்கவேண்டியிருந்ததால் வேளைத்தளமாக்கியிருந்தாரோ தெரியவில்லை.
பல விஷயங்களை (Superlative degree யில்) மிகையாகச் சொல்லிச்செல்கிறார். எடுத்துக்காட்டாக குளிர் எல்லாவிடங்களிலும் (இலையுதிர்காலத்தில்கூட) ’கொடுங்குளிராக’ இருக்கிறது, நீண்ட அறை, அகலமான மேசை, பெரீய வாகனம் இப்படிச் சில.
இன்னும் ஒரு எண்ணம்: வியாபார ஸ்தலம் திவாலாகியதும் எல்லோரும் கலைந்துவிடப் போகிறார்கள் என்பதை வாசகனால் அனுமானிக்கமுடிகிறது. அதற்கும் அப்பால் ’அங்கே வெதுப்பிய வாத்தொன்றைப் பிளந்தபோது அதற்குள் வைரம் பதித்த தங்கமோதிரம் ஒன்று இருந்தது’ என்றுதான் எழுதியிருந்தாலும் வாசகனுக்கு சுவாரசியம் ஏற்படாது. அதன் மேலும் திவால் சமாச்சாரங்களுக்கான அரச உத்தியோகத்தர் திருவாளர். சாட வின் பிரசன்னம், அவன் பிரசங்கங்களில், திவாலாகியபின் அந்நிறுவனத்தின் இதர சாங்கியங்களை ஜீவமுரளி விபரித்துச் செல்கையில் அவற்றில் வாசகனாய் அத்தனை ஈர்ப்பு ஏற்படவில்லை. புதினம் அவ்விடத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தால் படைப்பு இன்னும் Crispy யாக / நச்சென்றும் அமைந்திருக்கும்.
வாழ்த்துக்கள். தொடருங்கள் தோழர் ஜீவமுரளி ………………. இன்னும் இன்னும் இன்னும்.
– பொ.கருணாகரமூர்த்தி
நூல் :லெனின் சின்னத்தம்பி
பிரிவு: நாவல்
ஆசிரியர் : ஜீவமுரளி
வெளியீடு : கருப்புப் பிரதிகள்
வெளியான ஆண்டு : 2014
விலை: ₹ 200