புனைவு

கோதமலை குறிப்புகள் குறித்து சுகன்யா ஞானசூரி-யின் குறிப்புகள்


“நான் இரண்டு விசயங்களை இணைக்க விரும்பினேன். கலையையும் வாழ்வையும்; கலையையும் இருப்பையும்” – அர்வோ பேர்ட். 

இருப்பு என்பது கலையை கொண்டியங்குவோரின் வாழ்வை அவர்களின் இருத்தல் சாத்தியமற்றுப் போகும் தறுவாயில் கலையின் இருத்தல் இப்படி ஒன்றுக்கொன்று மேவிச் செல்கையில் மனித இருத்தலியல் என்பது மரணத்திற்கு முன்பாக செய்துமுடிக்கப்பட்ட ஒரு கலையின் வெளிப்பாட்டால் சாத்தியமாகிறது. அப்படியாகவே ஒவ்வொரு படைப்பாளரும் ஏதோவொரு வகைமையிலான படைப்பின் வழி தங்களின் இருத்தலியலை விட்டுச் செல்கிறார்கள்.

கோதமலைக் குறிப்புகள் தொகுப்பில் மன்னாரின் இருத்தல் என்பது அவன் மனைவியும், நிலமும், மக்களும், என நன்றாகச் சென்ற வாழ்வில் மனைவியோ போதையில் வேறொரு பெரிய மனிதனோடு படுத்தெழுந்து தள்ளாடி வருவது கண்டு பித்துப் பிடித்து இறந்து போகிறான். கண்ணன் அதைக் கவிதையாக்கியதில் கோதமலை அடிவாரத்தில் இப்படியொரு மனிதரின் இருப்பு நமக்குத் தெரிய வருகிறது. இப்படி பல கவிதைகளுக்குள் தீரா நதி குடித்து பிணவறையில் கிடக்கும் தாயின் இருப்பை, சின்ன அத்தையின் இருப்பை, பொன்னம்மாப் பாட்டியின் இருப்பை, தியாகி செங்கோடனின் இருப்பை, அப்பாவின் தம்பி, பெருமாள் தாத்தா, பூனை புராணத்தில் வரும் பூனைகள்  என அவர்கள் இல்லாது போன பிறகும் ஒரு நிழற்காட்சியினை நம் நெஞ்சில் கீறிவிடுகிறார்.

“முயற்சிக்காதே” வலிந்து எழுத முயற்சிக்காதே என்பார் சார்ள்ஸ் புக்கோவ்ஸ்கி. கவிதை தன்னியல்பில் வரும்வரை காத்திரு என்கிறார். எவ்வளவுதான் நாம் வலிந்து எழுத முயன்றாலும் அது ஒரு கவிதைக்கான குணாம்சங்களைக் கொண்டிராது. காடியில் மூடிவைத்த திராட்சை ரசம் மதுவாக நொதித்தெழும் செயற்பாட்டுக்கு இணையானது ஒரு நல்ல கவிதையை உருவாக்குவது. அப்படி நொதித்த கவிதைகள் எதைப் பேசுகின்றன? யாரைக் குறித்து உரையாடுகிறது? மொழியின் வெளிப்பாடு, சமூகம் குறித்த சிந்தனை, உடல், உற்பத்தி, பொருளாதாரம், அரசியல் இப்படி இப்படி பலவற்றையும் ஒருங்கே கொண்டு வெளிப்படுகின்றனவா என்பதையெல்லாம் கவிதை நம் கவனத்தை ஈர்ப்பதிலிருந்தே நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

குழந்தைகள் பற்றிய கவிதைகள் :

மோப்பம் (பக்:43), தீராப்பள்ளம் (பக்:45), புட்டு சுற்றுதல் (பக்:87) கவிதைகள் குழந்தைகளின் உலகத்தில் விலங்குகளின் வாழ்வும், அவற்றின் இழப்புகளை இட்டு நிரப்பமுடியாத சோகங்கள் நிறைந்தவை. அந்த அன்பு பெரியவர்களுக்கும் தக்க பாடத்தைப் புகட்டவும் தயங்கவில்லை. தன் மகள் இன்னும் குழந்தையாகவே இருந்திருக்கலாமே என்ற ஏக்கமும், அங்கலாய்ப்பும் புட்டு சுற்றுதல் சடங்கின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். புட்டு சுற்றாவிட்டாலும் பெண்கள் பெரியவர்களாகிவிடுகிறார்கள். கல்விச் சாலைக்கு அனுப்புவதில்தான் இன்னும் கூடுதல் அச்சம் எழச் செய்கிறது.

வறுமையை ஒழிப்பது எப்படி (பக்:58) என்ற கவிதை தீநுண்மி என்னும் பெருந்தொற்றுக் காலத்தில் மெய்நிகர் சந்திப்பு வழியே குழந்தைகள் இலவச உணவு குறித்தும், இலவச கல்வி குறித்தும் ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். கோதமலை அடியில் பண்ணையத்திலிருக்கும் ஆறுமுகம் குழந்தைகளுக்குத் தெரியுமா இதற்கான விடை என கவிஞர் அங்கலாய்ப்பதில் இச்சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை படம்பிடித்துக் காட்டுகிறார்.

அங்கதம் வெளிப்படும் கவிதைகள் : 

மடி (பக்:57) கவிதையில் மடியான குருக்கள் வரார் வழிவிடுங்கோ என அவரின் உதவியாளரின் வர்ணனையில் மூலவரே ஒருகணம் நகர்ந்த விதம் ஏதோவொரு படத்தில் வரும் நகைச்சுவையை நினைவுபடுத்தத் தவறவில்லை. இதேபோல் நவீன வாழ்க்கையில் எல்லோரும் போந்தாக் கோழிகளாகிவிட்டதை (போந்தாக்கோழி பக்:95) நல்ல பகடியாக சொல்லியுள்ளார். அங்கதம் நன்றாகவே கைகூடி வந்துள்ளது.

கீச்சிப் பாப்பா (பக்:77-78) கவிதை ஒரு கச்சிதமான கவிதையாக அமைந்திருக்கும் பக் 77 ல் நிறைவடைந்திருந்தால். அது 78ம் பக்கம் வரை நீண்டதால் கவிதையின் போக்கில் தொய்வும், நிறைவற்ற தன்மையும் தொக்கி நிற்கிறது. 78ம் பக்கத்தில் உள்ளதை இன்னுமொரு கவிதையாக செய்திருக்கலாம். இதுவொன்றும் பெருந்தவறு அல்ல. சிறு குறிப்புணர்த்துதல். உயர்மட்ட சந்திப்பு (பக்:40) தன் நிலத்தின் செடி, கொடிகளோடு நீர்பாய்ச்சி உரையாடும் உணர்வுப்பூர்வமான கடைசி விவசாயியை நினைவுபடுத்துகிறது.

“வாழை இலை விரித்து

பட்சணங்களுடன் 

பரிமாறிய அம்மா 

என்ன ஜாதி தம்பி

என்றாள்.”

மன்னிப்பு (பக்:31)  கவிதையில் சாதியத்தின் போக்கு தெளிவாக்குகிறது. ஆனால் கவிஞர் திரும்பத் திரும்ப நான் கேட்ட மன்னிப்பு இன்னும் துரத்தும் என்கிறார். காலவெள்ளம் இந்த ஒன்றையாவது அடித்துச் செல்லும் எனப் பார்த்தால் அது மீண்டும் மீண்டும் தன் இரட்டை நாக்கில் விசம்கொண்டு அலைகிறது.

வீடு பேசும் அரசியல் : 

மூன்று அறைகள் கொண்ட வீடு (பக:11) கவிதையில் வீடு குறித்த சித்திரங்களை வரைந்து வைத்திருந்தவன் நெஞ்சில் இடியாய் இறங்கியது நண்பன் சொன்ன ‘குடுச வூடு’ என்ற வார்த்தை. எவ்வளவு ஏளனமான பார்வையை அவனுக்குள் செலுத்தியிருக்கும்? மூன்று அறைகள் கொண்ட பெரிய வீடு என நினைத்திருந்த சித்திரம் நொறுங்கிப் போகிறது.

ஒரு அறை கொண்ட வீடு (பக்:99) கவிதையில் பக்கத்து வீட்டு பால் காய்ச்சுதல் நிகழ்வுக்குச் செல்லும் அந்த மனிதனுக்குத்தான் எத்தகைய விசாலமான மனசு. எல்லாமே அந்த ஒற்றை அறைக்குள்தான் என்பதைக் கேட்டவர் இப்படியாகச் சொல்கிறார். இதுவே இங்கிதமும் பெரநாதன்மையும் ஆகும்.

“நமக்குத்தான் பிரச்சினை

சிட்டுக்குருவிக்கென்ன 

இருக்கவே இருக்கிறது

பெருங்காடும் 

விரிவானமும்.”

எது நம் வீடு (பக்:101) கவிதையில் சேலத்தில் அப்பா வீடு, பெங்களூரில் அம்மா வீடு (அம்மா பெயரில் அப்பா தவணை கட்டுவதால் இருக்கலாம்) என இரு வீடுகள் இருந்தாலும் எது நம் வீடு என்ற கேள்வியில் தன் சொந்தக் காலில் நிற்க முயலுபவனின் இயலாமைகளின் மீது, ஒரு லட்சியத்தின் குறிக்கோளை அடைய நினைக்கும் நடுத்தர வர்க்க இளைஞனின் கேள்வியாக நிற்கிறது. சிட்டுக் குருவிக்குப் போல் இந்த விரிவானம் முழுவதுமே கண்ணனுக்கு வீடுதான்.

“கவிதைகள் அதிக வெளிப்பாட்டைக் கோருகிற போது அவை பேச்சு மொழியைத் தனது சாதனமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. பேச்சு மொழியை ஒரு கவிதை தேர்ந்தெடுக்கிற போது அது ஒரு திகம்பர நிலையை அடைகிறது.ஒளிவு மறைவு அற்றவையாக இருக்க நேரிடுகிறது.” என்பார் கலை விமர்சகர் இந்திரன். கோதமலைக் குறிப்புகள் அந்த வட்டாரத்தின் பேச்சு மொழியைக் கைக்கொள்வதால் கவிதைகள் எளிதாகவும், உணர்வுப்பூர்வமாகவும் வாசிப்பவர்களை அசைத்துப் பார்க்கிறது. இது படைப்பாளனின்  இருப்பைக் கட்டியம் கூறுகின்றன. கோதமலை குறிப்புகள் தொகுப்பில் தன் வட்டாரத்தின் மொழியை, அம்மக்களின் வாழ்வியலை, இழந்து போன காலங்களை, பண்பாட்டுக் கூறுகளைப் பேசுகின்றன. கோதமலை அடிவாரத்திற்கு இப்போது காற்று வாங்கச் செல்லமுடியுமா என என்னைக் கேட்டால் கன்னக் கதுப்புகளில் உலர்ந்து போன உப்புநீர் சாட்சியாகும்.


நூலாசிரியர் குறித்து
கண்ணன் : இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் வசித்து வருகிறார். பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இது இவரது முதல் தொகுப்பு. பல்வேறு சிறுபத்திரிக்கைகள் மற்றும் இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். இசை கேட்டல், கிரிக்கெட் பார்த்தல், ஓவியங்களை ரசித்தல் மற்றும் பயணம் செய்தல் போன்றவை இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
நூல் தகவல்:
நூல்: கோதமலை குறிப்புகள்

ஆசிரியர்: கண்ணன்

வெளியீடு: பறவை பதிப்பகம்

விலை: ₹120

பக்கம்: 128

அட்டை வடிவமைப்பு: லார்க் பாஸ்கரன்

தொடர்புக்கு: 99520 89604/81978 44454

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *