கோதானம் – “மிகச் சிறந்த பத்து இந்திய நாவல்களில் முதன்மையான நாவல்”

நூலில் இடம்பெற்ற மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத்  முன்னுரை.


ந்திய மொழியின் தலைசிறந்த எழுத்தாளர் பிரேம்சந்தின் மகத்தான படைப்பான “கோதானம்” நாவலைத் தமிழில் தருவதற்கு எனக்களிக்கப்பட்டிருக்கும் இவ்வாய்ப்பை எனது எழுத்துலக வாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே நான் கருதுகிறேன். சிறுவயதிலேயே அவரது எழுத்துக்களைப் படிக்கும் வாய்ப்பை பெற்ற நான் அவரது படைப்புகள் தமிழில் வர வேண்டும் என்று பெரிதும் ஆசைப் பட்டேன். “சேவாசதனம்” எனும் நாவலே இந்தியில் வெளிவந்து பாராட்டுதல்களைப் பெற்ற முதல் நாவல் (1919) எனலாம்.  “கோதானம்” அவரது கடைசி நாவல் 1936ல் வெளிவந்தது. (மங்கள சூத்திர – என்ற நாவல் முற்றுப் பெறவில்லை). ‘கபன்’ என்ற நாவலும் ரா.வீழிநாதன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. பிரேமாசிரம்,  ரங்க பூமி,  காயகல்பம்,  நிர்மலா போன்ற நாவல்களும் குறிப்பிடத்தக்கன. இவரது சிறுகதைகள் தமிழ்ப் பத்திரிகைகளில் நிறைய வெளியாகியுள்ளன.

1932ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் பிரேம்சந்த் தனது கிராமமான வம்ஹக்குத் திரும்பி வந்தார். கிராமத்தின் சூழலில் குடியானவர்களுடன் நெருங்கிப் பழகி,  அவர்களது இன்ப துன்பங்களை நேரில் கண்டறிய அவருக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. “கோதானம்” இங்கு தான் உருவாகியது.

பிரேம்சந்தின் எழுத்துக்களில் பிரச்னைகளின் ஆழமும் யதார்த்த வாழ்வின் கசப்பான உண்மைகளும், அடித்தளத்து உழைக்கும் வர்க்கத்தினர், மற்றும் குடியானவர்களின் துன்பமும் துயரமும், அவர்களிடையே மண்டிக் கிடக்கும் அறியாமையும், இருளிடையே ஒளிரும் மின்னல் போன்ற அவர்களின் மனித நேயமும் அதிகமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பிரேம்சந்த் தனது சமகாலத்து எழுத்தாளர்களை விட,  தேசீய விழிப்புணர்வும், நாட்டுப்பற்றும் அடிப்படையிலேயே மாற்றம் காணவேண்டுமென விழைவும் கொண்டிருந்தார். யதார்த்தவாதத்தில் காலுன்றி நின்ற லட்சியவாதி அவர் எனலாம்.

1932ல் அவர் இந்நாவலை எழுதத் தொடங்கினார். உடல்நலமின்மையால் 1934ல் தான் முடிக்க முடிந்தது. 1936ல்  பிரேம்சந்த் காலமாவதற்கு நான்கு நாட்கள் முன்னர்தான் இது வெளிவந்தது. விமர்சனகார்கள் இந்நாவலை “இந்தியக் குடியானவர்களின் வாழ்க்கை எனும் மகா காவியம்” என்று கூறினர். இதற்கு முன் இவர் படைத்திருந்த நாவல்களிலிருந்த லட்சிய வேகமும்,  ராம ராஜ்யத்தைப் பற்றிய கற்பனையும்,  நம்பிக்கையும் இந்நாவலில் காணப்படுவதில்லை. ஜமீன்தாரி முறையை எதிர்த்த அவர். இந்நாவலில் கதாநாயகநான ஹோரியை உயிர்த் துடிப்புள்ள பாத்திரமாகச் சித்தரித்துள்ளார். மண்ணை நம்பி வாழும் இக்குடியானவன்,  பரம்பரைப் பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளுக்கும் அடிமைப்பட்டுப் போனவன். சுரண்டலுக்குப் பலியாகி கடன்னில் மூழ்கி உயிர் துறக்கிறான். தன் வீட்டின் வாசலில் ஒரு பசு கட்டி இருக்க வேண்டும் என்று ஆசையும்,  மண்ணின்பாலுள்ள பாசமும் அளவிட முடியாதவை. வீட்டில் ஒரு பசு இருப்பதுதான் வளமான வாழ்வைத்தரும்,  நிறைவைத் தரும் என நினைத்து அதற்காகவே பல்வேறு துன்பங்களை எதிர்கொள்கிறான். தனது இக்கனவை நினைவாக்கித், தன் பேரனுக்கு பால்தர பசு வாங்க வேண்டும் என்று கூலி வேலை செய்து, கல் சுமந்து பாடுபடும் அவன்,  முடிவில் அக்கனவு நனவாகாமலேயே உயிர் துறக்கிறான். ஹோரியின் மனைவி தனியா மிகச் சிறப்பான அழுத்தமான பாத்திரம். அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கும் துணிவு கொண்டவள். நாவலின் முடிவு நம் கண்ணில் நீரை வரவழைக்கிறது.

இந்நாவலில் மேட்டுக் குடியினரின் நகர்ப்புறவாழ்வும் சித்தரிக்கப்படுகிறது. மேஹ்த்தாவின் மூலம் பிரேம்சந்த் பல இடங்களில் தனது இலட்சிய வாதத்தை வெளியிடுகிறார் எனலாம்.

பிரேம்சந்தின் எழுத்துக்கள் மிக சக்தி வாய்ந்தவை. மொழி பெயர்ப்பில் அச்சுவை குன்றாமல் தர முயன்றுள்ளேன். காலத்தை கடந்து நிற்கும் இவரது எழுத்துக்கள் என்றும் நிலைத்து இருக்கும்.

நூலிலிருந்து ..

பதிப்புரை

"பல நெருக்கடிகளுக்கிடையில் நீண்ட தாமதத்துக்குப் பிறகு அகரம் இந்த நாவலை ஒரு கடமையுணர்ச்சியுடன் வெளியிடுகிறது. நீண்ட கால உழைப்பில் தீவிர ஈடுபாட்டுடன் மொழிபெயர்த்த திருமதி சரஸ்வதி ராம்நாத் இன்று இல்லை. தமிழில் இந்த நாவல் வரவேண்டும் எனக் கனவு கண்டு அரும்பாடுபட்ட கவிஞர் மீராவும் இன்று இல்லை. இருவரின் நினைவை தாங்கி "அகரம்" இருக்கிறது.இன்னும் இன்னும் மொழிபெயர்ப்புத் தமிழுக்கு எவ்வளவோ செய்யவேண்டும் என்பதற்காக "அகரம்" இருக்கிறது; நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் மிக்க வாசகர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடும் "அகரம்" இருக்கிறது" -இரா.கதிர்

 

நூல் தகவல்:

நூல் : கோதானம்

ஆசிரியர் : பிரேம்சந்த்

தமிழில் : சரஸ்வதி ராம்நாத்

வெளியீடு : அன்னம் - அகரம்

ஆண்டு :  2009

பக்கங்கள்:  528

விலை : ₹ 400

நூலைப் பெற: B.M.காம்ப்ளக்ஸ்,  16, தோமையம்மாள் நகர்,  தஞ்சாவூர் - 613005.

தொடர்புக்கு :  04362-23989   7598306030, 8825693438,  9943059371

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *