எல்லாரும் கோபி சேகுவேரா. எனக்கு டியர்.
சொல்லொணா அன்பின் டியர். நேர்மைக்கு சொல் சேர்த்தினால் இவன் பெயரும் சேரும். சேகுவேரா இவன் வாங்கிய பட்டமா என்றால்…. ஆம்…பட்டம் தான். எங்கெல்லாம் அநியாயம் தலை விரித்தாடுகிறதோ அங்கெல்லாம் சேகுவேரா என்கிற பட்டம் பறக்கும். கோபி இளம் கவிஞர்களில் கவனிக்கப்பட வேண்டியவன். ஒவ்வொரு கவிதையிலும் மாற்றத்தை முன்னெடுப்பவன்.
சமகால அரசியல் குளறுபடிகளை பகடி செய்யும் பக்குவம் வரிகளில் இருக்கிறது. பதபதைக்கும் தனிமனித ஒழுக்கம் அடிக்கோடிட்டுக் கொண்டே செல்கிறது.கோபியின் எழுத்துக்களில்…. அரசியல் அதிகம். அநியாயம் கண்டு எதிர்க்கும் ரௌத்திரம் அதிகம். எல்லாவற்றுக்கும் அடிப்படையான காதலும் அதிகம். அதிகத்தின் ஆதிக்கம் தான்.. இந்த கவிதை நூல். “என் தேசம் எங்க போகுது…..என் தேசம் எங்க போகுது”ங்கிற பரிதவிப்பு இவன் எழுத்துக்களில் ஏராளம். சாதிக்கு எதிரான ஒவ்வொரு கவிதையிலும் நிதர்சனத்தை கொட்டும் கோபி சேகுவேராவுக்கு இது முதல் நூல். கடந்த 5 ஆண்டுகளாக எழுதி எழுதி தன் கருத்துக்களை பட்டை தீட்டிக் கொண்ட பிறகு தான்… இந்த நூல் தலைப்புக்கான தகுதியோடு வெளி வருகிறது.
முதல் கவிதையிலேயே இறங்கி காண்பிடென்ட் ஷாட் அடித்திருக்கிறான் பாருங்கள்.
“எவ்வளவுக்கெவ்வளவு
பக்கோடோக்களை விரும்புகிறோமோ
அவ்வளவுக்கு கவலையில்லாமல் இருக்கலாம்
ஹமாரா தேஷ் ஹே
ஆனியன் பக்கோடோ ஹே”
“ஹமாரா தேஷ் ஹே” என்று முதல் கவிதை இப்படி முடிகிறது. முதல் கவிதையிலேயே ஆட்சியின் குடுமியைப் பற்றி பகடி செய்யும் இந்த தைரியத்தை பாராட்ட வேண்டும். நிஜங்களில் இருந்து தான் தைரியம் பிறக்கும். அது ஆன்ம சுத்திகரிப்புக்கு உள்ளானது. பிறகு சமுதாய சுத்திகரிப்புக்கு ஆட்பட்டது.
காலத்துக்கும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் கடவுளை தெருவில் இழுத்து வந்து நையாண்டி செய்து இன்றைய இயலாமையை கவிதையாக்கி பொதுவில் வைக்கும் கோபியை வேறு வழியே இல்லை. நீங்கள் சந்தித்துதான் ஆக வேண்டும். ஒரு மனசாட்சியின் உருவத்தோடு உருளும் இவன் வரிகளில்.. சம காலத்து சஞ்சலங்கள் அரசியல் பேசுகின்றன. அற்புதம் தேடுகின்றன. அறியாமையை போக்கும் மருந்தென கோபி சொல்லிக் கொண்டே செல்கிறான்.
இரண்டாவது கவிதையில் ஒரு வரி.
“ஊரடங்கிய 144 தடையிலும்
சாதிக்கு எந்த தளர்வுமில்லை”
கொரோனா காலத்தில் கடவுளின் நிலையையும் சாதியின் நிலைப்பாட்டையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து குவிக்கிறான். குவிதலில் சீரழிந்த சமுதாய நெடி. அதன் வடிவத்தை இறுதி வரியில்
“ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
சாதியை எப்படி கையாண்டோமோ
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
கடவுளை எப்படி சலித்துக்கொண்டோமா அப்படியே” – இப்படி முடிக்கிறான்.
ஏழை வட இந்தியர்களை நாம் பார்ப்பதற்கும் பணக்கார கிரிக்கெட் வட இந்தியர்களை நாம் பார்ப்பதற்கும்.. எத்தனை வித்தியாசம் இருக்கிறது. வந்தேறிகள் என்று வாய் கிழிய பேசி சுய சாதி பெருமை பேசி திரியும் பச்சோந்திகளை தோலுரித்துக் காட்டும் ஒரு கவிதையில்… ஒரு வரி இப்படி இருக்கிறது…
“எல்லையில் இராணுவ வீரர்கள் இறந்தால் நாட்டிற்காக உயிரை விட்டாரெனவும்மலக்குழி மரணங்கள் எந்த நாட்டிற்கென தெரியாதவர்கள்”
சமுயாத ஏற்ற தாழ்வுகள் மீது கடும் சினம் கொண்ட வரிகளை கிண்டலும் கேலியுமாக போட்டு தாக்குகிறான். சாமிக்கு சாகும் கூட்டத்தை பார்த்து கண்ணாபின்னாவென கேள்வி கேட்கிறான். கேள்விகள் அத்தனையும் அவசியமானவை. நாகரிகம் என்பதை பெரிய பெரிய கட்டடங்கள் மட்டும் கொண்டு வந்து விடுமா என்ற மயிர் பிளக்கும் கேள்விக்கு பெரியார்களே பதில் சொல்லுங்கள்.
“யார் தமிழன்னு” ஒரு கவிதை.
முழு கவிதையும் தீ தான் என்றாலும் நடுவுல ஒரு பத்தி பத்திகிட்டு எரியுது. படிக்க படிக்க படிச்ச மனசு பதறிக்கிட்டு எரியுது.
“மாடறுத்து… மலமள்ளி
மயானங்காத்து மோளமடிச்சு பொழைக்க வக்கத்து
சீவனுமில்லா தவிச்சதுண்டா
தெனம் தெனம் பாவத்தை செஞ்சுபுட்டு
சாமிக்கு மணியடிக்கற மாதிரிருக்கு
எல்லாரும் தமிழன்னு சொல்லும் போது”
கவிதை முடியும் போது யார் தான் தமிழன்னு கேள்வி வருவதை தடுக்க முடியவில்லை. “வசை சொல்லா எங்கள் பேரினம்” என்று மாடு பற்றிய கவிதையை முடிக்கிறான். வால் முறுக்கிக் கொண்டு கவிதையின் நீட்சி ஓட ஆரம்பிக்கிறது. கோபியின் வரிகளில் கேள்விகள். கேள்விகள். கேள்விகள். கேட்டு கேட்டு சலித்த பின்னும் அவன் கேள்விகள் ஒரு போதும் கூனி குறுகவில்லை. மாறாக அறிவுத் தேடலின் ரூபம் உரிமையைக் கோருகிறது.
சாதி ரீதியில் ஒதுக்கி வைக்கும் கேடுகெட்டதனங்களுக்கு எதிராக சாட்டை சொடுக்கும் கவிதைகளை சிவப்பு மையில் எழுதி இருக்கிறான். சமூக விடுதலை வேண்டிய யாகம் ஒவ்வொரு கவிதையிலும் வேர் பிடிக்கிறது. “இளைய ரத்தம் என்ன போலியா……எழுத வேண்டும் புதிய இந்தியா” என்றொரு சினிமா பாடல் வரி இருக்கிறது. அந்த வரியின் உருவம் இந்த இளைஞனிடம் இருக்கிறது.
ஒரு கவிதையில் ஒரு பத்தி.
“விறகு அடுப்பிலிருந்து
சிலிண்டருக்கு மாற்றிய அரசு
விறகு தான் பெரும் சுமையென
இன்னும் வடை சுட்டுக் கொண்டிருக்கிறது”
இதில் இருக்கும் எள்ளல்,,, நையாண்டி தொனி மிக லாவகமாக ஒரு பெரும் அரசியல் குளறுபடியை நமக்கு கடத்தி விடுகிறது. இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே மாதிரி மாற்றி ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த அதிகார வர்க்கங்கள். பூனை காதை மூடிக் கொண்டால் எலியின் சேட்டையைக் கடந்து விடலாம் என்பது போல… விறகு சுமையை இறக்கிய அரசுக்கு…. அதுவே போதுமானதாக இருக்கிறது போல. சுமை என்னும் சுதந்திரம் பற்றி என்ன கவலை அதற்கு. இருக்கவே இருக்கிறது…வாய். வடை சுட்டுக் கொண்டே இருக்கலாம்.
பெரும்பாலைய கவிதைகளுக்கு தலைப்பு இல்லை. தவிப்பு இருக்கிறது. அரச பங்கரவாதம் அடக்கு முறை ஏதேச்சதிகாரம் என்று எவ்வழியில் எல்லாம் எம்மக்களை போட்டு இந்த அரசும் அதிராகமும் போட்டு மூடுகிறதோ அவ்வழியிலெல்லாம் குறுக்கே பேனாவோடு நிற்கும் கோபியோடு சேகுவேராவும் நிற்கிறார். மாட்டுக்கறி அரசியலை எல்லாம் கிழித்து தொங்க விடுகிறான். சேகுவேரா கை தட்டி ஆர்ப்பரிக்கிறார்.
ராஜலட்சுமிகளின் குரல்…..ரோகித்துகளின் குரல்…..கோகுல்ராஜ்களின் குரல்…..அனிதாக்களின் குரல்……. நந்தியினிகளின் குரல்…கருப்பையாக்களின் குரல்… சங்கர்களின்……பிரானய்களின் குரல்… என்று எல்லார் குரலும் இப்போது கோபியின் குரலில் வெடிக்கிறது. புரட்சியின் குரல் கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டு தான் இருக்கும். சித்தாந்தம் மாற்ற வேண்டுமெனில் பேனாமுனையில் வெடி வெடிக்கத்தான் வேண்டும்.
பெண் உறுப்பு சொல்லி திட்டும்….காலம் காலமாக இருக்கு வக்கிர போக்குக்கு என்ன தான் தீர்வு என்று கேட்கிறான். பெண்கள் தினத்தில் மட்டும் தேவதை சாமி.. வெங்காயம்னு வாழ்த்தி விட்டு மற்ற நாட்களில்… போடி தேவிடியா என்று சொல்லி போகலாம் என்ற கவிதையை நான் உடல் நடுங்க பார்க்கிறேன். கவிதையும் உயிர் நடுங்க என்னைப் பார்க்கிறது.
ஒரு கவிதையில்… “கடவுள் ஆன்லைனில் இருப்பாரென்று நம்புவோம்” என்று போகிற போக்கில் அறைந்து விட்டு போகிறான். சிரித்துக் கொண்டேன் யூஸ்லெஸ் கடவுளாக. சாப்பிடுவது போல… இயற்கை உபாதைகள் போலத் தான் காம கழிதலும். அதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் தருகிறீர்கள் என்று போட்டு தாக்குகிறான். பொசுக்கென கால காலமாக கட்டி வைத்திருக்கும் போலி கட்டமைப்புகள் உடைந்து சுக்கு நூறாகின்றன.
“இது எவன் மசுருக்கான சார்க்காருஹே” என்று எதிரொலிக்கும் தாத்தாவின் சமாதி ஒரு சோற்று பதம். மொத்த நூலுக்கும்… கத்தும் குரலோசைதான் வதம்.
“பீஃப் சில்லிக்கு
பெப்பர் தூவுகிறது போல
இவ்வாழ்வு ஆசீர்வதிக்கப்படவில்லை”
இப்படி சமகாலத்து அதிகார வர்க்கத்துக்கு எதிராக சொற்கள் சுழற்றும் இந்த நூலில் முதல் பாகம் இப்படி “ஹமாரா தேஷ்ஹே” என்று முடிகிறது.
அடுத்த பகுதி கார்முகி என்று காதல் பேசுகிறது.
காதலும் காதலின் பொருட்டு “கார்முகி”யும் வானம் வாங்கி பறக்கிறார்கள். பார்க்கும் கண்களிலெல்லாம் சிறகுகள் முளைப்பதை காற்று வாக்கில் செய்தி ஆக்கலாம். அத்தனை ரூபம் தருகிறான் கார்முகிக்கு.
ஒரு கவிதையில்…….
“நீ என்னோடு இருத்தல் என்பது
அவிழ்ந்து விட்ட ஷூ லேஸ்களோடு நடை பழகுவது” என்றொரு வரி.
எண்ணி பார்க்க வியத்தலின் வழி நின்று வேகம் குறைக்காமல் மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.
நவீனம் எத்தனை துறுதுறுவென இருக்கிறது. இதழோரம் அரும்பும் புன்னகையை இசை பட செய்து பார்க்கும் வரிகள்… நவீன கவிதையின் கதவுகளை மெல்லினமாய் திறந்து விடுகிறது.
தானேகொடுத்து விட்டு தானே வாங்கிக் கொள்ளும் முத்தங்கள் வழியே காதலின் தனிமையை நுட்பமாக உணர்கிறான். அவளின் சாயலோடுதான் அவன் அலைந்து கொண்டிருக்கிறான். காதலுக்கு பொதுவான அவர்கள் சாயல் என்பதுதான் காதலற்ற பொழுதும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது.
“எதையாவது செய்து கொண்டே இரு கார்முகி” என்று சொல்லும் கோபிக்கு காலத்தின் முடிச்சுகளை கார்முகி போட்டுக் கொண்டே இருக்கிறாள். அப்படி அவள் போடும் முடிச்சுகளில் இருந்து மெல்ல மேலெழும் பெருமூச்சு கோபிக்கு போதுமானதாக இருக்கிறது.
“கான்கிரீட் முத்தங்களென
நான் எழுதத் தொடங்கிய போதுதான் விடை தாள் முத்தங்களென
உன் சிவப்பு பால்பாயிண்ட் எழுதத் தொடங்கியிருந்தது”
என்றொரு பத்தி.
அடிப்படையில் கோபி ஒரு பொறியாளன் என்பதால்.. கட்டடக்கலையில் காதல் கலையை மிக லாவகமாக கலவை செய்து விடுகிறான். கட்டடத்தை பூக்களின் சாந்து குழைவுகளால் ஆலிங்கனம் செய்து விடுகிறது கோபியின் கட்டட பயிற்சி. அதில் அற்புதம் நிகழ்த்துகிறது காதலின் குளிர்ச்சி. ஒரு பொறியாளன் வேலை முடிந்து வீடு செல்லும் வழியில் என்னவெல்லாம் காண்கிறானோ… ஒரு பொறியாளனுக்கு வீடு கட்ட என்னெல்லாம் வேண்டுமோ அது தான் கோபியின் கவிதைகளின் கலவை.
வழக்கம் போல வரி கொண்டு நிகழ்த்துவதில்லை இவன். வாழ்வு கொண்டு நிகழ்த்துகிறான் கவிதைகளை.
வாழ்வின் வளைவுகளில் வகை வகையாக வண்ண கலவைகளைக் கண்டு பிடித்துக் கொண்டே நகர்கிறான். கட்டடமோ காதலோ கவிதை கொண்டு கட்டி விடுகிறான். கடல் கடந்து வரும் பறவை இளைப்பாறுகிறது. கடல் கடக்கப் போகும் பறவை வரிக்காகிறது.
“யாருடையதோ இந்த இரவு பாடல்
அடுத்த வரி என்னிடம் இருக்கிறது” என்கிறான் ஒரு கவிதையில்.
ஓராயிரம் கவிதையை உள்ளடக்கி இருக்கிறது வரி. எத்தனை நுட்பத்தோடு இரவையும் பாடலையும் அணுகுகிறான். அங்கே அந்த யாரோவாகவே ஒரு யாரோ அடுத்த வரியில் தேவைப்படுவது தான்….இரவின் இம்சை. இசை பட கண்டிருக்கிறான் போல.
“எப்படி ஒரே பாடலில் இளையராஜாவைக் கொண்டிருக்க முடியாதோ அதே போல ஒரே நிகழ்வில் உன்னைக் கொண்டிருக்க முடியாது” என்கிறான். இளையராஜா பக்தன்.. வெறியன். ரசிகன்.. என பல அவதாரங்கள் கொண்டிருக்கும் கோபியின் மனதில் எப்போதும் இளையராஜாவின் விரல் பிடித்து யுவனின் தோள் சாய்ந்து தான் கவிதை தவழ்கிறது.
சொற்களின் குவியல் செந்தூர பூக்களின் வழியாக வந்து வந்து விழுந்து கொண்டே இருப்பது கோபியின் கார்முகி காற்றலை.அலைபேசியின் அஸ்ஸசிரீஸ் கொண்டே கவிதை எழுதி விடுகிறான். எமோஜிகளும்.. லைக்குகளும்….பகிர்தல்களும் பக்க வாத்தியம் வாசிக்க.. மிக நுட்பமான ஓர் அழைப்பை கார்முகிக்கு விடுத்து விடுகிறான்.
“எவ்வளவு காலத்துக்குத்தான் என் குரலில் பேசுவது… இனி உன் குரலில் பேசுகிறேன்” என்ற வரிகளில் காதலின் சித்தம்…. மிக அருகாமை சித்தாந்தமாக இருக்கிறது.
“இசையில் தொடங்குதம்மா” என்று தான் மூன்றாம் பகுதிக்கு தலைப்பே.
பியானோ கட்டைகளின் கருப்பு வெள்ளை நுட்பம் ஒவ்வொரு வரியிலும். வயலினின் வெண்புறா சிறகடிப்பு வாக்கிய இடைவெளியில். இசையும் இசைத்தலுமாகவே இந்த மூன்றாம் பகுதி. கவிதைகள். ஒவ்வொன்றிலும்…. ஒவ்வொரு ராகம். மென் சோகத்தில் மெகா வாத்தியம். நீலவானத்தில் நிரவல் சேர்ப்பது இவன் வரி சேர்ந்த இசையின் இசை கோர்ப்பின் இலகு. யுவனுக்கு சாவும் அற்புதத்தை கண்களில் கொண்டு சிரிக்கிறான்.
“எல்லாம் இளையராஜாவாய் இருந்து விட்டால் அத்தனை நலம்” என்று ஒரு கவிதையை முடிக்கிறான். காலத்தின் குரல்.. மெல்ல ஹார்மோனியம் வாசிக்கிறது. மிகப்பெரிய அளவளாவலை ஒரு கவிதையில் கண்டெடுத்து விடுகிறான். அதை சுற்றி இளையராஜா பாட்டையோ யுவனின் பாட்டையோ ஆரஞ்சு முட்டாய் கவரியில் சுற்றித் தருகிறான். பிரிக்கையில் மடமடக்கும் சப்தத்தில்… வாழ்வின் குரல் இனிக்க ஆரம்பிக்கிறது.
ஒரு கிக்கான கவிதையில் “இன்னொரு முட்டை பொடி மாஸ் சொல்லவும்” என்று முடிக்கிறான். இவ்வாழ்வின் பெருந்துயர்களையெல்லாம் பொடிமாஸ் கவிதைக்குள் தூவி விட்டதை ஆச்சரியத்தோடு தின்று பார்க்கிறேன். சுவை கூட்டும் அரூப சந்திப்புகளை கோப்பைக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் கோபி சேகுவேராவோடு கண்டடைவது கடைசி வரிக்கு முன் அவன் கொண்டிருக்கும் ஆசுவாசம். சிந்திக்க தெரிந்தவர் பறக்கலாம்.
“சலித்து போன இரவைக் கொண்டு” என்று ஆரம்பிக்கும் ஒரு கவிதை…. எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை. நாற்பதைக் கடந்த அனுபவத்தின் கூட்டு எப்படி இவன் வரிகளில் கை என்று கூடியது என்று ஆச்சரியப் படுகிறேன். “கை விடப்பட்ட பாதிப் புணர்வில் எதைக் கொண்டு உன்னை கொண்டிருப்பது” என்று முடிக்கிறான். நான் திகைக்கிறேன். ஞானத்தின் வழி நின்று முக்தி பெற காமத்துக்கும் கவிதை தான் தூது. கார்முகிக்கு இக்கவிஞனே படலம்.
எல்லா கவிதைகளிலும் கோபியின் ஆன்மா நீக்கமற நிறைந்திருக்கிறது. எல்லா இடைவெளிகளிலும்… ஒரு இளம் கவிஞனின் பயணம் மிக நேர்த்தியாக வடிவமைந்திருக்கிறது. வாழ்த்துவோம். இன்னும் பல நூல்கள் படைக்க. வாழ்த்துவோம்…. இன்னும் பல திறவுகள் கிடைக்க.
மிக எளிமையான சொற்களால் எளிய வாழ்வை மிக மெல்லிசாக எழுதி விடும் கோபி… ஒரு வரியில் கேட்கிறான்.
“இந்த நீண்ட காத்திருப்பில்
உன்னை மட்டுமே நினைத்திருப்பதைத் தவிர
வேறென்ன நினைவிருக்கிறது…”
ஒப்புக்கொடுத்தலின் மகத்தான இதயத்தை இவ்வரிகளின் வெற்றிடத்தில் காண்கிறேன். ஆராதிப்பது என்பது காதலின் மொழி. ஆராதிப்பது என்பது தான் காதலின் வழி.
ப்ரியமுடன் டியர்
கவிஜி
நூல் : கார்முகி
பிரிவு: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : கோபி சேகுவேரா
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
வெளியான ஆண்டு : பிப்ரவரி 2020
விலை: ₹ 100
கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.