2010க்கு  பிறகு ஈழத்திலிருந்து வரும் இலக்கிய படைப்புகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாகவே நினைக்கிறேன். புனைவும் அபுனைவும் என்று ஈழத்தின் பல்வேறு பரிணாமங்களையும் போருக்கு முன்பும் பின்புமாயிருந்த நிலம் மக்களின் வாழ்வும் ஈழ அரசியல் என்று பல திறப்புகளை படைப்புகளின் வழியாக உலகுக்கு ஈழ எழுத்தாளர்கள் தந்துகொண்டே இருக்கிறார்கள்.

எல்லா படைப்புகளையும் எல்லோரும் ஏற்பதில்லை. அவரவர்களின் அரசியல் நிலைபாடுகளிலிருந்து மட்டுமே அணுகினாலும் ஈழத்தில் தமிழர்களின் மீது இனரீதியான ஓடுக்குமுறையை சிங்கள பேரினாவாதம் நடத்தியது என்று கருத்தில்  மட்டும் எல்லோரும் ஒரு புள்ளியில் இணைந்து விடுகிறார்கள்.

விடுதலை புலிகள் சிங்கள ராணுவத்திடம் நடத்திய கடைசி யுத்தத்திற்கு  பிறகு நடந்த படுகொலைகளையும் எளிய மக்கள் மீது நடத்தப்பட்ட மனித தன்மையற்ற தாக்குதல்களும் யாராலும் கடந்து போக முடியாதவாறு வடுவாய் பதிந்துள்ளது.

கடைசி யுத்ததுக்கு பின்பு சில ஆண்டுகள் கழித்து இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் ஒரு குழந்தையோடு பயணம் செய்யும் ஒரு பெண்ணின் வழியே முன் பின்னான தமிழ் மக்களின் வாழ்வை கொச்சிக்கட vs கும்மிடிப்பூண்டி நாவல் வழியே பதிவு செய்கிறார் ஈழ வாணி.

தொடர்ச்சியாக  இயங்கி கொண்டிருக்கும் ஈழவாணியின் முதல் நாவல்.

2019 இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் அந்தோணியார் ஆலயத்தில் நடந்த குண்டு வெடிப்பிலிருந்து நாவல் துவங்குகிறது. தனது கொள்ளு பேத்தியை அவளின் மகளிடம் ஒப்படைக்க நாயகி கானவியின் துணையோடு வந்த ஆச்சி குண்டுவெடிப்பில் சிக்கி கொள்கிறாள். எந்த துணையும் உறவும் இல்லாத கானவி அந்த குழந்தையை அவளின் பாட்டியிடம் ஒப்படைக்க செல்லும் பயணத்தின் வழியாக ஈழ நிலத்தின் பல்வேறு துயரங்களை ஈழவாணி பேசுகிறார்.

சிங்கள தமிழ் சமூகத்திற்கு இடையே ஒரு நட்புறவை உருவாக்கும் ரீதியாக வருடம் ஒருமுறை நடக்கும் இளைஞர் திருவிழாவும் அதை முன்னின்று நடத்தும் அமைப்பின் உண்மையான நோக்கமும் இனகலப்பு செய்யும் முயற்சியும் அதன் நுட்பமான அரசியலையும் நாவலில் பேசுகிறார். குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்களாக எல்லா இடங்களிலும் சகஜமாக உளவ முடியாத உளவியலை நாவல் முழுக்க அற்புதமாக ஈழவாணி பதிவு செய்கிறார்.

அதேநேரம் ஒரு சிங்களவனை பிடித்துவிட்டால் அவனை காதலிக்க வேண்டும் என்று மனதில் தோன்றினாலும் அதன் பின்னான யுவதிகளுக்கு  இருக்கும் பலவிதமான உளவியல் சமூக நெருக்கடிகள் மிக நேர்த்தியாக இந்நாவல் பதிவு செய்கிறது. கருசிதைவுக்கு உண்டான நாயகி கானவி ஒரு குழந்தைக்காக ஏங்கும் வலியை நாவலின் ஓட்டத்தில் வாசகர்களுக்கு சரியாக கடத்தியுள்ளார்.

அந்தோணியார் கோவில் குண்டு வெடிப்புக்கு பிறகு இலங்கையில் இஸ்லாமியர்களை கையாளும் முறையை முதல் முதலாக ஒரு படைப்பின் வழியே ஈழ வாணிதான் பதிவு செய்துள்ளார் என்று நினைக்கிறேன். குண்டு வெடிப்புக்கு பின்னரான  முஸ்லீம் பெண்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை பேசுகிறார்.

“பொது இடங்களில் பாதுகாப்புச் சோதனையில் ஈடுபடும் பரிசோதகர்கள் முன்னிலையில் முஸ்லிம் பெண்கள் தங்களது ஸ்கர்ப் ஹாபாயா பர்தா போன்றவற்றினை கழற்றி தங்களை அடையாளப்படுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர்.”

” பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடையான புர்கா  என்ற ஆடையை அணிவது கட்டாயக் கடமை என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பத்வா வழங்கிய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையானது இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது. இப்பொழுது பெண்களின் ஆடைகள் பற்றி அலறிக்கொண்டு தெரியும் முஸ்லிம் ஆண்கள் பொத்திக் கொண்டு இருந்தார்கள்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் இலங்கை நேரப்படி 28 .4. 2019 இரவு 12 மணி முதல் புர்கா அணிவது தடை செய்யப்படுகிறது என அந்த அறிக்கை சொல்கிறது ” என்று தற்போதைய இலங்கை சூழலை சொல்லும் ஈழவாணி தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இருந்த நெருக்கம் உடைந்த இடத்தையும் சொல்லி இருக்க வேண்டும். குறிப்பாக “முஸ்லீங்களின் வடக்கு வெளியேற்றம் ” குறித்து ஒரு வரியோடு கடந்து போவது எழுத்தாளருக்கு உள்ள நெருக்கடிகள் குறித்து பல கேள்விகளை எழுப்பும்.

” பலர் முகத்துக்கு நேராகவே கிண்டல் அடித்தார்கள்(சிங்களத்தினர்) கொழும்பை பொறுத்தமட்டில் தமிழ் முஸ்லிம்களிடையே பெரும் ஒற்றுமை இருப்பதைப் போல காட்டிக்கொண்டாலும் தங்களுடைய தயவு இல்லாமல் காரியங்களை தமிழர்களால் செய்ய இயலாது என்பதில் அவர்களுக்கு பெரும் நம்பிக்கை இருந்ததால் மனசுக்குள் ஒரு வன்மத்தையும் எண்ணத்தையும் வைத்துக்கொண்டே சிலர் பழகிக் கொள்வார்கள் தமிழர் புலி புலி என கூறி அவர்களுடைய பயகிலியை ஏற்படுத்த வேண்டுமென்று என்று நினைத்தார்கள்”   என்ற பகுதி முக்கியமானது. சிங்களவர்கள் இஸ்லாமியர்களை கையாளும் முறை குறித்து முக்கியமான பதிவு. தமிழர்களையும் புலிகளின் பெயரையும் சொல்லியே இஸ்லாமியர்களை இப்போது வரை சிங்கள பேரினாவாதம் ஓடுக்கி வருவதை எழுத்தாளர் நுட்பமாக கவனப்படுத்துகிறார்.

சமகால ஈழத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வும் உளவியல் சிக்கலையும் குறிப்பாக பெண்களின் நெருக்கடிகளையும் ஒரு பயணத்தின் வழியே ஈழ வாணி கச்சிதமாக பதிவு செய்கிறார். வாழ்த்துக்கள் ஈழ வாணி.

 

நூல் தகவல்:

நூல் : கொச்சிக்கட vs கும்மிடிபூண்டி

பிரிவு:  நாவல்

ஆசிரியர் : ஈழவாணி

வெளியீடு : பூவரசி வெளியீடு

வெளியான ஆண்டு :   2020

விலை: ₹ 250