திருமதி ரத்னா வெங்கட் – அவர் யார் என்று தெரியும் முன்னே அவர் எழுதிய கவிதைகளை ரசித்ததுண்டு. ரத்னாவின் முதல் கவிதைப் புத்தகம் இப்போது வெளி வந்து விட்டது.
அவரின் நட்பு வட்டத்துக்குள் வந்த பின், சங்க இலக்கிய ரசனை அவரின் மகள் திருமண விழா வரைக்கும் அழைத்துச் சென்றது.
என் கவிதை ரசனை சங்க இலக்கியம், பாசுரங்கள், பாரதியாரோடு நின்று போய் விட்டது. புதுக் கவிதைகள் எனக்குப் புரிவதில்லை.
இப்போது வரும் கவிதைகளில் – காதல் அல்லது கலகம் (கழகம்?) இவைதான் நிரம்பி வழிகின்றன. ஒன்று மழை, குடை, ராஜ வேர்வை, முத்தம் அல்லது வாள், வேல், பொது உடமை, பெண் ஆதிக்கம், ஆண் ஆதிக்கம் – இரண்டு திணை, பத்து துறைகளுக்குள் அடக்கி விடலாம்.
ரத்னா இதில் வேறு பட்டவர். சங்க இலக்கிய ரசனை உள்ளவர். அவர் நாச்சியார் திருமொழியை எளிமைப்படுத்தி எழுதிய கவிதைகள் அற்புதமானவை.
கடலே கடலே என்று ஒரு பாசுரம்.. அதை அவர் எழுதியதை முக நூல் சுவரில் தேடிப் படித்து விடுங்கள்.
இந்தப் புத்தகத்தில் வரும் கவிதைகள் பெரும்பாலானவை அகக் கவிதைகள்.
“நீர் நிரம்பிய குடுவையை” என்ற கவிதையைப் போராளிகள் பொது உடமை உணர்வாகப் பார்க்கிறார்கள். எனக்கென்னவோ ரத்னா – மென்மையா உறவில் தேவையில்லாத “என்னுடைமை” (possessiveness) பற்றிப் பாடுவதாகத் தோன்றியது.
இந்த தொகுப்பில் எனக்குப் பிடித்தது – படித்துறை. நாம் ஐம்பது வயதை தாண்டி செல்கையில், நம்மை விட்டு மறையும் நெருங்கிய உறவுகளை வழி அனுப்ப நேரும் துயரம் தாண்டி செல்ல வைக்கும் வரிகள்.
அவரின் அடுத்த தொகுப்பு சங்க இலக்கியம் மற்றும் பாசுரங்களை அவர் பாணியில் எழுதிய கவிதைகளாக மலர பெருமாள் அருள் புரியட்டும்.
– கணேஷ் லக்ஷ்மிநாராயணன்
நூல் : காலாதீதத்தின் சுழல் பிரிவு: கவிதைத் தொகுப்பு ஆசிரியர் : ரத்னா வெங்கட் வெளியீடு : படைப்பு பதிப்பகம் வெளியான ஆண்டு : 2020 விலை: ₹ 100