ந்த நாவல் ஆவணப்படுத்தப்படாத அல்லது கண்டுகொள்ளப்படாத புலம்பெயர்ந்த மக்களின் இருட்டு சரித்திரத்தைச் சொல்கிற வரலாறு.

அடித்தட்டு தோட்ட மக்கள் வீடுகளில் இந்த மரண ரயில் சடக்கு கதைகள் பேசப்படுள்ளதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் பலர். விசாரித்துப் பார்த்தோமென்றால் சுற்றியிருக்கிற ஒவ்வொருவரும் தத்தம் அனுபவங்களைத் தங்களின் மூதாதையர்கள் சொல்லிச் சென்றதாகப் பகிர்ந்து கொள்வார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சியில் வாடகை அற்ற எஸ்டேட் வீடு, தொழிலுக்கு காடு, பால் மரம் சீவுதல், களிப்பிற்கு தோட்டத்திருவிழா, ஒன்றுகூடல், பயிரிடுதல், கோழி ஆடு மாடு வளர்ப்புகள் என ஏழ்மையிலும் மகிழ்வாக வாழ்ந்த பாட்டாளிகளின் வாழ்வில் இடையில் நுழைந்து ஆட்சியைப் பிடித்த ஜப்பான்காரன், கொஞ்ச காலமே ஆட்சியில் இருந்தான் என்ற போதிலும், இந்த மக்களின் வாழ்வில் என்ன மாதிரியான திருப்பங்களைக் கொண்டு வந்தான் என்பதுதான் கதை.

எஸ்டேட் பெயர்கள் மற்றும் முகாம்களின் பெயர்களை தலைப்பாக வைத்து கதை நகர்த்தப்படுகிறது. பதினெட்டாம் கட்டையில் கதை தொடங்குகிறது.

மலேசிய புனைவுகள் பல ஆரம்பிக்கின்ற போதே சூழல் வர்ணனையில் தான் ஆரம்பிக்கப்படும். அதுபோலவே புண்ணியவானின் முதல் அத்தியாயமே இயற்கைச் சூழலை விளக்கி சொல்கிற வர்ணனையாகத் தான் தொடங்குகிறது. இரண்டாம், மூன்றாம் நான்காம் பாகமும் அதே பாணியில் பறவைகளின் ஒலி, நிலவின் ஒளி, கடற்கரை காற்று, கடல் அலைகளின் வீச்சில் சலவை செய்யப்பட்ட மணலின் நிலை, இருளின் சூழல், சருகுகளின் சத்தம், குருவியின் பாடல், வண்டுகளின் ரீங்காரம் என வர்ணனைகளை மிகத் துல்லியமாக பிரித்துப் பிரித்து சொல்லியிருப்பார். இது கதைக்குள் என்னை நுழையவிடாமல் சோர்வாக்கியது. நுழைந்தவுடன் கதை வரவேண்டும். கதை ஏதாவதொரு கோணத்தில் என்னை நாவலுக்குள் இழுத்துக் கொள்ள வேண்டும் என்கிற பேராசை பிடித்த சோம்பேறி வாசகி நான்.

தொடர் வாசிப்பில் நாவல் என்னை வெகுவாக உள்ளே இழுத்துக்கொண்டது. கதாசிரியர் சொல்வதுபோல, காய்ந்து இறுகிய நிலத்தில் ஊற்றிய நீர்போல் நாவல் என்னை வெகு விரைவாக உள்ளே இழுத்துக்கொண்டது. அதன்பின் நானே முயற்சித்தாலும் அது என்னை விடுவதாக இல்லை. காரணம் கதை நம்முடைய வரலாறு.

எனது வயது, இதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் வாய்வழி சொன்ன விவரங்களைக் கேட்டு வளர்ந்த வயது. ஆகவே, நாவலின் ஏடுகளுக்குள் புகுந்துகொண்டு அங்குள்ள மக்கள் படுகிற துன்பத்தில் துயரத்தில் என்னை அறியாமலேயே எனது தலை வலது இடது புறமாக அசைந்து கொண்டே நாவலை வாசித்தது.

நாடுவிட்டு நாடு பிழைக்க வந்த அப்பாவி ஏழைகளை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற நிலை மலாயா விடுதலைக்கு முன் இருந்த அவலம். வரமாட்டோம் என்கிற தோட்டப்பாட்டாளிகளை அடித்து இழுத்துக் கொண்டு போகிறார்கள் சாயாமில் இருந்து பர்மா மற்றும் இந்தியாவிற்கு ரயில் தண்டவாளம் போடுவதற்கு. அப்படி அடித்து இழுத்துச் செல்லப்படும் ஆண்களின்  குடும்பங்கள், குடும்பத் தலைவனற்ற  நிலையில் ஆதரவற்றுத் தவிக்கிறது. அன்றாட வாழ்வின் செலவினங்களுக்கு குடும்பத்தலைவனின் வருமானமே பிரதானம். அந்த வருமானம் மற்றும் ஆண்களற்ற குடும்பங்கள் பாதுகாப்பற்ற சூழலில் என்ன மாதிரியான சிக்கல்களை எதிர்கொண்ட என்பனவற்றை கதை செல்கிறது.

ஆண் துணையில்லாத குடும்பங்களில் வேட்டை நாய்கள் போல் மோப்பம் பிடித்து  அலைகிற அந்நியர்கள். குழந்தைகள் பஞ்சம் பசிதீர வேறொரு ஆடவரின் இச்சைக்கு இணங்கும் தாய். கணவன் இறந்துவிட்டதாகப் பொய் கூறி தம்பி மனைவியை தனது ஆசைக்கு வலுக்கட்டாயமாக அடிபணிய வைக்கும் மூத்தார். வயதுக்கு வந்த சிறுமியை முப்பது வயதான ஆடவருக்கு இரண்டாம் தாரமாக மணமுடித்து வைப்பது போன்ற அபத்தங்கள் அந்தக் காலகட்ட  குடும்பங்கள், குடும்பத்தின் பாதுகாப்புக் கவசமாக போற்றப்படும் ஆண்களின் இருப்பின் அவசியத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்கிறது.

அதேவேளையில் சயாம் ரயில் தண்டவாளம் போட அழைத்துச்சென்ற குடும்பத்தலைவர்கள், ஆண்கள் படும் அவஸ்தைகள், இந்தப் பக்கம் பெண்கள் குழந்தைகள் படும் வேதனைகளை விட பன்மடங்கு அதிகமாக உணரப்படுகிறது. இரண்டு பக்கமும் வலிகள் நிறைந்தவைதான். இருப்பினும் ரயில் தண்டவாளம் போட அழைத்துச் சென்ற ஆண்களின் நிலையினை சொல்லுகையில் கண்கள் குளமாகிறது.

தப்பிக்க வழியின்றி காடுகள் சூழ, எங்கு விடப்பட்டுள்ளோம் என்பதைக் கூட அறிந்திராத நிலையில், மிகக் கடுமையாக நடந்து கொள்கிற சர்வாதிகார கும்பலின் பிடியில் சிக்கி,  பிரிவின் துயரம் ஒரு பக்கம். பீதி, நோய், விஷ ஜந்துக்களின் தீண்டல், கொடிய விலங்குகளின் உறுமல் ஒரு பக்கம். தனிமை, பசி, ஆரோக்கியமற்ற உணவு, கரடுமுரடான வழித்தடங்கள், கன கொடூரமான வேலைச் சூழல் ஒரு பக்கம். அடி உதைக்கு பயந்த அடிமை வாழ்வு என சாவிற்கும் வாழ்விற்கு நடக்கின்ற போராட்டமாக பல இன்னல்களைச் சந்திக்கிறார்கள். செய்வதறியாது திக்கற்று தவிக்கின்ற நிலையில் கொலைப் பாதக காரியத்திற்கும் துணை நிற்க வேண்டிய நிர்பந்தத்தில் பாத்திரப்படைப்புகள் படும் வேதனை, விடும் கண்ணீர் நம் மனதும் ரணமாகிறது.

“சுபாஷ் சந்திரபோஸ் வந்தார். அவர் கூட நம் துயரத்தை கண்டுகொள்ளவில்லை. நாம் படுகிற வேதனை அவருக்குத் தெரியாமலா இருக்கும்.! தெரிந்தாலும் அவர் செய்ய மாட்டார் காரணம் அவர் ஜப்பான் காரனுகளுடன் கூட்டுச்சேர்ந்து இந்தியாவில் வெள்ளையர்களைத் துரத்தப்போகிறாராம்.’’ என்று வெள்ளந்தியாய் அவர்களுக்குள் உரையாடுகிற இடம் மனதைப்பிழிகிறது. யாராவது வந்து நமக்கு விடுதலை கொடுப்பார்களா.! இவ்வளவு பெரிய ஆள் வந்து கூட நமது நிலை மாறவில்லை என்ற தவிப்பு கையறு அர்த்தம் புரிந்துகொள்ளப்பட்டது.

பொன்னம்மா மற்றும் சாலம்மா இருவரும் ஆதரவற்ற குடும்பங்களுக்குத் தருகிற ஆறுதல் வார்த்தைகள் கதையை உள்வாங்கிப் பயணிக்கின்ற நமக்கும் ஆறுதலாக அமைகிறது. நாவலில் என் மனதிற்கு நெருக்கமான பெண்கள் இவர்கள் இருவரும். அவர்களின் அன்பின் யதார்த்தம் நம்மையும் ஆசுவாசப்படுத்துகிறது

கன்னியப்பன், சிவதாஸைப் பிடித்து காட்டுக்குள் இழுத்துச்செல்லுவது,, காளி பதுங்கியிருந்து காமஜந்துவான ஜப்பான்காரனை அடித்துக் கட்டிப்போடுவது போன்ற இடங்கள் இறுக்கத்தில் இருந்த மனம் இலகுவானது.

இறுதியில் ஹிரோஷிமா நாகாசாகி குண்டுவெடிப்பில் பல உயிர்கள் பலி என்கிற செய்தியில் நாவல் முடிவு பெறுகிறது. , எனக்குள் இருந்த மிருகம் எட்டிப்பார்த்து, `சாவுங்கடா’ என்று கொஞ்சமும் இரக்கமற்ற தொனியில் கிசுகிசுத்துவிட்டு பெருமூச்சு விட்டது. அப்போதுதான் நாவல் என்னுள் எவ்வளவு நெருக்கமாக  பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. இச்சம்பவத்திற்கு முன்பு நாவலில் நடந்த மிகப்பெரிய அராஜகமே இந்த இரக்கமற்ற உள் உணர்விற்குக் காரணம். இருப்பினும் புத்தகத்தில் இருந்து வெளிவந்த பிறகு அந்த  ஈவு இரக்கமற்ற போர் குண்டுவெடிப்பு கொடுமையை நினைத்து மனம் பதறவே செய்தது.

மயில்வாகனம் தன் மகளின் நிலைமை புரியாமல் அவள் திருமணத்திற்கு சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் வாழைமர நோட்டு  செல்லாப்பணமாக மாறப்போவது அறியாமல் சுருட்டி வைத்திருக்கும் பணத்தை தொட்டுப்பார்த்து கொண்டிருக்கின்ற இடமும் கண்களில் நீர் கசிய வைத்தது.

நிலம் சார்ந்த மக்களின் கதை அவர்களின் பேச்சு வழக்கிலேயே எழுதியிருப்பது நாவலுக்கு சிறப்பு சேர்க்கிறது. மிக எளிமையான எழுத்து நடையில் மண் மணம் சொல்லும் மலேசிய நாவல்.

ஆரம்பத்தில் வர்ணனைகளைப் புறக்கணிக்க நினைத்த நான் பின்பு கையறு நாவலில் வர்ணனைகளே உயிர்நாடி என்பதை உள்வாங்கிக்கொண்டேன்.

ஒவ்வொரு வர்ணனைகள் பின்னால் மறைந்திருக்கும் குறியீடுகள், நிகழ்கின்ற சம்பவங்களை மொழிபெயர்க்கும் மற்றொரு துணை மொழியாக மிளிர்வதைக் காணலாம். அதன்பின் மீண்டும்  அச்சம்பவங்களை வாசித்து பிறகு அங்கு வருகிற இயற்கை வர்ணனைகளுக்குள் புகுந்து, யோசித்து இரண்டையும் இணைத்து வாசிக்கின்ற போது கிடைக்கின்ற இலக்கியப் புரிதல் அனுபவம் பரவசம்.

கதாசிரியர் அற்புத இயற்கை நேசி. அவர் சொல்கிற  அனைத்தும் இயற்கையின் அற்புதத்தை நம்முன் படமாகக் காட்சிப்படுத்தி நகர்கிறது.  புழுக்களை கோழி கொத்திச்செல்வது. குருவி தன் சிறகுகளை அடித்து விடுதலையை அறிவித்து நகர்வது. வாழை மரம் ஏடுகளாய் கிழிந்து தொங்குவது. மழைநீர் உடலில் தெறிக்கின்ற விதம். சூரியக்கதிர்களின் வர்ண ஜாலங்கள். ஒரு மனிதனின் நிழல் இன்னொரு மனிதன் மீது  விழுவது. மரங்களின் வேர்கள் செத்த முதலைகள் போல் முட்டி நிற்பது. பாறைகள் உருண்டு வருவது போல் யானைகள் நடமாட்டம். நிலம் பிளந்ததைப்போன்ற நேர் கோடு, ஈக்கள் ராக்காச்சுகள் மொய்க்கின்ற சத்தம், நிலத்தை முட்டி வெளிப்படும் விதை, நீரில் கொப்புளங்கள். கான்கிரீட் பாலம் கட்டும்போது காட்சிப்படுத்தியிருக்கும் சூழலில் என் கால்களுக்குள் சுர்ரென்று வலியினை கொடுத்த இடம். இப்படி அனைத்து வர்ணனைகள் பின்புலம் பத்திரப்படைப்புகளின் நிலையினை விளக்குகிற சூட்சமமாக கதையினை மெருகேற்றுகிறது.

நிலம் சார்ந்த மக்களின் கதையினை சொல்லுகிற நவீனின் பேய்ச்சி நாவலை வாசிக்கும்போது கதையினை உள்வாங்கிக்கொண்டு கதையில் சொல்லப்படாத மர்மங்களை மனம் ஆராய்ந்து கொண்டே இருந்தது. இயற்கை சூழல் குறியீடுகளாக அல்லாமல் தகவல் பெட்டகமாகத் திகழ்ந்தது. இமையம் அவர்களின் செல்லாத பணம் நாவல், மனித அவலங்களை இதுதான் அவலம் என்று சொல்லாமல் வாசிப்பு அனுபவத்தில் நாம் அதைக் கண்டடைவதைப்போல் கதையினைக் காட்டியிருந்தார். சாருவின் காமரூபகதைகளில், `நான் தான் அனைத்தையும் செய்கிறேன்’ என்பதைப்போல் கதையை குழப்பி எழுதியிருப்பார். அது ஒருவித உணர்வினைத்தந்து குதூகலிக்க வைத்து பின் அக இருளை அகற்றும் மற்றொரு வாசிப்பு அனுபவம்.

வரலாற்று நாவல்கள் இலக்கிய வாசிப்பு அனுபவத்தில் கொஞ்சம் வேறுபட்டே நிற்கிறது.

இது கையறு நாவலுக்குப் பொருந்துகிறது. புண்ணியவான் இதுதான் கதை என்று கதையை தெளிவாகக் காட்டுகிறார். கதை நன்கு புரிகிறது. தனது இயற்கை வர்ணனை குறியீட்டின் வழி சூழல்களை விரிவுபடுத்துகிறார். வர்ணனைக் குறியீடுகள் புண்ணியவான் கதையில் உயிர்நாடி. அதுதான் அவரின் பாணியும் தனித்துவமும் கூட..

கையறு மலேசிய மண்ணில் உதித்த சிறப்பான வரலாற்று நாவல்.

  – ஸ்ரீவிஜி மலேசியா  

.

நூல் தகவல்:

நூல் : கையறு

பிரிவு :  நாவல்

ஆசிரியர்: கோ.புண்ணியவான்

பதிப்பகம் : யாவரும் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2021

விலை :  ₹ 400

நூலை வாங்க :  Be4Books.com

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *