கவிதைகள் பேசும் மொழி, சாதாரண புழங்கு மொழியிலிருந்து முற்றிலும் வேறானது. அதன் எல்லைகள் படிப்பவர்களின் எண்ணங்களில் மூழ்கி எழுந்து, வாசகர்களின் இதயங்களில் எளிதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்வதற்கு கவிதைகளின் தனித்துவமான பேசு மொழிதான் காரணம். அத்தகைய கவிதை மொழி மஞ்சுளாவுக்கு இயல்பாகவும், சிறப்பாகவும் அமைந்து விடுவதைக் காண முடிகிறது.
இவரது ஏனைய மூன்று தொகுதிகளாகிய இது தேனீர் காலம், தீமிதி, மொழியின் கதவு பேசுகிற கவிதை மொழி நடையிலேயே இந்த நான்காவது தொகுப்பும் பேசினாலும், இத் தொகுப்பில் உள்ள பல கவிதைகள் ‘உணர்வுகளின் ஊடாக உரக்கப் பேசுவதாகவே அமைந்திருப்பதை உணர முடிகிறது.
தேவையான அளவுக்கு கவிதைகளில் பூடகத் தன்மையும், மயக்கும் மொழி நடையும் அமைய எழுதுவது இவரது தனித்தன்மை என்றே நான் கருதுகிறேன்.
அதே சமயம் இவரது ஏனைய தொகுப்புகளில் இருந்து, இத் தொகுப்பில் சில அதிசயமான மாற்றங்களையும் காண முடிகிறது. முதலாவதாக இவர் தீவிரமான பெண்ணியக் கவிஞராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டதே, தன்னுடைய நளினமான அகமன வெளிப்பாட்டுக் கவிதைகள் மூலமாகத் தான். ஆனால், இத் தொகுப்பில் தீராப்பொருள், இன்னுமொரு மழை, தீமொழி, பருவச்சாரல், போன்ற கவிதைகளில் வெளிப்படையான காதல் உணர்வுகளை இவர் வேறுபடப் பதிவு செய்து அதிசயப் படுத்துகிறார்.
“பருவச் சாரல் ” கவிதையில் கொண்டும், கொடுத்தும் மயங்கிடும் காதலின் மன நிலையை பின் வருமாறு அழகிய பதிவாகத் தருகிறார்.
“இரவெல்லாம் கசப்பை அகற்றி
எனக்கு என்னை நினைவூட்டும்
அவனை நான் அறிவேன்
என் நினைவின் அந்தரங்க அடுக்குகளில்
உஷ்ணப் புயலை விசிறி அடித்தபடி
தன் தூரப் பிரதேசங்களைக் கடந்து
என்னருகே நிழலாக நின்று
தன் நிஜத்தின் அழகை
என்னுள் புகுத்துவான் “
என்பதாகப் பதிவிடுகிறார்.
இரண்டாவதாக, மயக்கும் நடையிலான நவீனத்துவ கவிதை நடையிலிருந்து மாறுபட்ட, திறந்த மொழி நடையைக் கொண்ட ஒரு சில கவிதைகளையும் இத் தொகுப்பில் காண முடிகிறது. ‘எங்கெங்கு காணினும்…. “, “நான் எப்போது நதியாவேன்? ” போன்ற கவிதைகள் அவ்வாறானவையே.
இசையாய் காதலியும், இசைப்பவனாய் அவள் மனம் கவர்ந்த காதலனும் மாறிப் போகும் போது, வெளியே பொழியும் மழைப் பொழிவை விஞ்சும் அளவுக்கு உள்ளே மற்றுமொரு மழைப் பொழிவு அவளுக்கு. ஒப்பீட்டளவில் புறத்தேயும் மழை, அகத்தேயும் மழை, ‘இன்னுமொரு மழை’, கவிதை நேர்த்தியான பதிவினை வழங்குகிறது.
“களைத்து இமை மூடிச் சற்றே சரிய
ஏதுமறியாத காற்று
புல்லாங்குழலுக்குள் நுழைய…
இசை வடிவமாய்
நான் எழுந்த போது
இசைப்பவனாய் நீ இருக்க
சம்மதித்து….
இன்னுமொரு மழை பொழிகிறது
என் நினைவுகளில் “
களவு கொள்ள ஆளில்லாத தனிமை மனம், சிறகடிக்க ஆசைப்பட்டு தனிமை அறையில் முட்டி மோதுவதை ‘யாருமில்லாத அறை ‘ கவிதையில் இப்படிப் பதிவிடுகிறார்.
“கூடைப் பழங்களாய் கிடக்கின்றன
என் மொத்த யௌவனமும்
என்னை சுமந்து செல்லும்
பணியாளனாய் ஒருவனும் இல்லை.. “
மேலும் கவிதையை முடிக்கையில்
“சொக்கும் கண்களுக்குள்
என் சாவை புறக்கணித்து விட்டு
ஓய்வு கொள்ளத் துணிகிறேன்
உயிருள்ள நிலம்
என்னை அணைக்கத் துடிக்கிறது
ஒரு புனைவில்
அரூபமாகிறது என் உடல் “
அரூபமாகிப் போன பெண்ணின் உடல் கவிதை வாசிப்பில் அதிர்ச்சியை தருகிறது. காதலின் ஒற்றைச் சொல் ஒன்று மனதுக்குள் இசையாய் இறங்க, மனதோடு உடலும் தீயாய் பற்றிக் கொண்டதை “தீ மொழி ” என்ற கவிதையில் நளினமாய் பதிவு செய்கிறார் இவர்.
“ஒரு வார்த்தையை மெல்ல
என் காதில் கிசுகிசுத்தாய்
வார்த்தை கவிதையானது
மொழியின் சுகம் இதுவென்பதை
மொழியின்றியே தீண்டினாய்
தீண்டிய மொழியால்
தீ மொழி கொண்டது
என் உடலும் “
ஆண், பெண் பாலின வேறுபாடு இந்திய சமுதாயத்தில் கடக்க முடியாத தடையாக நீள்வதை, மதங்கள் பெண்ணின் உடல் மொழியை புறக்கணிக்கும் போதனைகளை ஒரு பெண்ணியவாதியாக “அடையாளம் ” என்ற கவிதையில் ஆழமாக பதிவிடுகிறார்.
“பெண்ணின் உடலை புறக்கணித்தே வாழும்
மதப் புனிதங்கள்
சொல்லி வைத்தபடி
தங்கள் பாவங்களை
தீர்த்தங்களில் கழுவி வாழ்கின்றன
துவைத்து எடுத்தாலும்
நீக்க முடியாத கறையாய்
படிந்தே கிடக்கும்
அடி மனதின் கசடுகளை
நீக்க முடியாமல்
பாலின வேறுபாடுகளால்
பசி கொண்டு அலையும்
மிருக வேட்டையில்
கசந்தே கிடக்கிறது
எனது மொத்த பயணமும் “
சொல் பிறப்பெடுக்கும் சூட்சுமத்தால், அதன் பிறப்பிடங்களின் வேறுபாட்டால், எவ்வாறெல்லாம் வகைப்படுத்தப் படுகிறது என்பதை
சுவை பட விவரிக்கிறார் இடம், பொருள், ஏவல் என்ற கவிதையில்
“சொற்கள் மிருதுவானவை
எனினும்
வன்மையானவை
குழந்தைகளுக்கான சொற்கள்
எச்சில் தொட்டு அழிப்பினும் மிருதுவானவை “
இக் கவிதையில் இவர் காட்டும் பட்டியல்கள் நீளமானவை. ஆனாலும் சுவையானவை.
“கனவுகளற்ற மனிதர்கள்” கவிதையில் இன்றைய நவீன யுகத்தில் காட்டு மரங்களும், இயற்கையும், பாடிப் பறந்த பூச்சியி னங்களும் அர்த்தமற்றுப் போக, மடிக்கணினிகளிலும், செல்லிடப் பேசிகளிலும் குழந்தைகள் மூழ்கிப் போவதை மிகவும் நயமாகச் சித்தரிக்கிறார்.
கனவுகளற்ற வாழ்க்கை பொருளற்றது. இயற்கையை நேசிக்காத மனமோ இருள் நிறைந்தது. குழந்தைகளுக்கு வரமாக வேண்டிய இயற்கை காட்சிகள் இடத்தை நவீன தொழில் நுட்ப கருவிகள் சாபமாக மாற்றி வைத்திருப்பதைச் சமூகப் பொறுப்புடன் சாடுகிறார்.
” பெரும் மழையாய் பெய்யத் தொடங்கிய
இரவொன்றில் கத்தத் துவங்கிய
தவளைகளின் சப்தம்
மடிக்கணினியில்
பதிவிறக்கம் செய்யப்பட்டது
செல்லிடைப் பேசிகளுடன்
குழந்தைகள் சிரித்துக் கொண்டிருந்தன
எதுவுமில்லாமல் வானம் அமைதியாயிருந்தது “
காதலை, அதனை அடையாளப் படுத்தும் உள்ளுணர்வுகளை எல்லை மீறாமல் அகத்தாய்வு பாணியில் பேசி வந்த இவரது கவிதைகள், இத் தொகுப்பில் எல்லை மீறும் வேலைகளையும் செய்கின்றன.
புலப்பாட்டு முறையில் உடல் தீண்டுதலையும், முத்தமிடுதலையும் உரக்கவே பேசுகிறது ” உயிர் வேட்கை ” என்ற கவிதை.
ஆனாலும், அதற்காக இவர் கையாளும் மொழி நடை முற்றுப் பெற்றதாயும், முழுமை மிக்கதாகவும் எழுந்து நிற்கிறது.
மழைச் சாரல்களை
தீண்டி மகிழும் உன் கரங்களில்
முதன் முதலாக முத்த மழையைப்
பரிசளிக்கிறேன்
நீ எதன் பொருட்டு
என் முத்தங்களை காவல் காக்கிறாய்?
விட்டு வைத்து விடாத
ஒவ்வொரு இரவிலும்
காதலால் மிதக்கும் உன் கண்கள்
என் உடலைத் தீண்டி
களைத்துப் போகும்
அல்லது
ஏதேனும் ஒரு சொல்லால்
என்னை இம்சித்துக் கொண்டிருக்கும்…
என்பதாக நீள்கிறது இக் கவிதை.
இவரது பதிவுகளில் நிலா, வண்ணத்துப் பூச்சி, இரவு, சொல் போன்ற வார்த்தைகளால் நிறைந்து கிடக்கிறது இத் தொகுப்பு.
ஆனாலும் கூட, அவை எதுவும் அலுப்பைத் தராத வெவ்வேறு சிந்தனைப் போக்குடன் தொடர்பு படுத்தப் பட்டு கவிதையாக்கப் பட்டுள்ளதால், துருத்தி நிற்கும் சொல்லாட்சி ஏதுமில்லை என்பது பாராட்டத்தக்கதாகும்.
நிலமில்லாதவள், எங்கெங்கு காணினும், தூரிகை வரையாத ஓவியம், ஒரே ஒரு தவறு, யாருமில்லாத அறை போன்ற கவிதைகள் வெளிப்பாட்டு முறையால் பெரிதும் கவர்கின்றன.
சொல்ல வந்ததை, முழுமையும் சொல்லி முடிக்காத சோகம் உள்ளுறையும் கவிதைகளும் இதில் உண்டு.
“நான் எப்போது நதியாவேன்? ” என்ற தலைப்பில் ஒரு கவிதை உள்ளடக்கத்தால் ஓங்கி ஒலிக்கிறது.
ஆனால் மொழி நடையால் மிகவும் திறந்த நிலையில் ஒரு நதியின் இயலாமையை படம் பிடிக்கிறது. வார்த்தை சிக்கன உளியால் இது செதுக்கப் பட்டிருக்க வேண்டும். புலப்பாட்டு முறையில் கை தேர்ந்த இவரது கவிதை நடை கை விட்டுப் போகாதிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இனிய எழுச்சி மிக்க கவிதை தொகுதி இது. வாசக உலகம் கவனத்தில் நிறுத்த வேண்டிய புனைவுகளில் வழிப்பட்ட உள்ளுணர்வுகளால் ஆகிய கவிதைகளின் சேர்க்கை. தமிழ் கவிதை வளர்ச்சிக்கு உரமூட்டும் செயல் பாட்டுச் சிந்தனையுடன் தொடர்ந்து பயணப் படுபவர் எவரும் வெற்றியாளரே. அந்த வகையில் இந்த தொகுப்பு தனது வெற்றியை உறுதி செய்கிறது.
நூலாசிரியர் குறித்து :
கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.
"மொழியின் கதவு " நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி) வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த சில நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.
நூல் : | இன்னுமொரு மழை |
பிரிவு : | கவிதைகள் |
ஆசிரியர் | மஞ்சுளா |
வெளியீடு: | படி வெளியீடு (Discovery book palace ) |
வெளியான ஆண்டு : | முதற் பதிப்பு - ஆகஸ்ட் 2018 |
பக்கங்கள் | |
விலை : | ₹ 80 |