ண்மையில், “செல்போன் பூதம்” எனும் தலைப்பிலான சிறுவர் கதைகள் கொண்ட நூலைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. புத்தகத்தைக் கையில் கிடைக்கப்பெற்ற தருணத்திலேயே உடனே நூலைப் புரட்டியாக வேண்டும் என்ற ஆவலை எனக்குள் தூண்டியது, இந்நூலின் முகப்பு அட்டை. கரடி பொம்மையைப் பிடிக்காத சிறுவர்கள்தாம் உண்டோ? அவ்வகையில்,  சிறுவர்களுக்குப் பிடிக்கும் கரடி பொம்மைகளோடு அமைந்த வண்ணப் படங்கள்தாம் இதற்கு காரணம்.அழகாகவும், சிறுவர்கள் மனதைச் சுண்டி இழுக்கும் வகையிலும் அட்டை தயாரிக்கப்பட்டிருந்தது மிகவும் சிறப்பு.

ஒவ்வொரு கதைகளாக வாசிக்கத் தொடங்கினேன். வாசித்தேன் என்பதைவிட உள்வாங்கிப் படித்தேன் என்பதே பொருத்தமாக அமையும்.முதல் கதை ‘விட்டுக்கொடு’ எனும் தலைப்பில் தொடங்கியது.இக்கதையில் முயலும் குரங்கும் முக்கியக் கதாப்பாத்திரம். கதையின் முடிவில், ‘தோற்றத்தை வைத்து எடை போடக் கூடாது’ எனும் நன்னெறிப் பண்பை எடுத்துரைப்பதாக அமைந்தது.

இரண்டாவதாக, ‘குர்க்குரே’ எனும் தலைப்பிலான கதை. தலைப்பினைக் கண்ட எனக்கு முதலில் சிந்தனைக்கு எதுவும் புலப்படவில்லை.எனக்குள் ஒரு கேள்வியோடவே கதையைப் படிக்க தொடங்கினேன்.பிறகே உணர்ந்தேன். அது சிறுவர்கள் விரும்பி உண்ணும் தின்பண்டம் என்று.இக்கதையில். நாயும் குரங்கும் கதாப்பாத்திரமாக நடித்திருந்தது. இக்கதையின் வழி தற்கால சூழலுக்குத் தேவையான மிக அவசியமான  நற்செய்தி கூறப்பட்டிருந்தது மிகவும் அருமை. நெகிழிப் பைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகளைச் சிறுவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அழகாக எடுத்துரைக்கப்பட்டிருந்தது மிகவும் சிறப்பு.

இப்படியே, தொடர்ந்து படித்த ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நல்ல பண்பினையும், வாழ்க்கைக்குத் தேவையான தகவல்களையும்  எடுதுரைப்பவனாக அமைந்தது. மேலும் கதையைப் படிக்கும்போதே, நினைவில் அக்காட்சிகள் திரையிட்டுக் காட்டுவது போல் ஓர் உணர்வு.அதற்கு காரணம், கதையின் நடை மற்றும் சொல்லாட்சி.

இதைத்தவிர, எழுத்தாளர் தனது பத்து கதைகளிலுமே சிறுவர்களுக்கு அதிகம் பிடித்த பிராணிகளையே  கதாப்பாத்திரமாகப் பயன்படுத்தியிருப்பது கூடுதல் சிறப்பு.இது, சிறுவர்கள் மேலும் மேலும் இக்கதைகளைப் படிக்க ஆவலை ஏற்படுத்தும்.

தனது ஒன்பதாவது கதையில், நடப்பு வாழ்க்கையில் பெற்றோர்களுக்குத் தேவையான ஒரு செய்தியையும் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார். பிள்ளைகளை அவரவர் திறமைக்கு ஏற்ப விட்டுவிட வேண்டும் மாறாக பெற்றோரின் ஆசைகளைப் பிள்ளைகளிடம் திணிக்கக் கூடாது எனும் அற்புத கருத்தைச் சுவைபட, ‘அவனா.. நீ’ எனும் கதையின் வழி எடுத்துரைத்திருப்பது மிக அற்புதம்.

ஒட்டுமொத்தமாக எனது பார்வையில், ‘செல்போன் பூதம்’ எனும் கதைப் புத்தகம் மிகவும் திட்டமிடப்பட்டு பல கோணங்களில் சீர்தூக்கி கவனிக்கப்பட்டு சிறுவர்களுக்காக எழுதப்பட்ட விழிப்புணர்வு படைப்பு ஆகும். இதனைப் படிக்கும் ஒவ்வொரு சிறுவர்களும் நிச்சயமாக கதை கூறும் பண்பு நெறிகளை வாழ்வில் பின்பற்றி நடந்து பயன்பெறுவார்கள் என பெரிதும் நம்புகிறேன்.

தமது முதல் நூலே சமுதாயத்தின் தளிர்களான சிறுவர்களுக்கு நற்செய்திகளை ஊட்டும் நூலாக அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. எழுத்தாளர் ஹரிங்டன் ஹரிஹரன் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.


  • நிர்மலாதேவி பன்னீர்செல்வம் மலேசியா
நூல் தகவல்:

  நூல் : செல்போன் பூதம் | ( சிறுவர் விழிப்புணர்வு கதைகள் )

  பிரிவு: சிறார் கதைகள்

  ஆசிரியர் : ஹாரிங்டன் ஹரிஹரன்

  வெளியீடு : பாவைமதி வெளியீடு | எண். 55, வ.உ.சி. நகர், மார்கெட் தெரு,தண்டையார்ப்பேட்டை, சென்னை – 600 081.

  வெளியான ஆண்டு :   2021

  பக்கங்கள் : 88

  விலை: ₹  80

  தொடர்புக்கு : 94441 74272 / 9500114229