” தனிமை உடலைநோய்மைப் படுத்துவதினும்மனித மனதைநோய்மைப் படுத்துகிறது “
கொரானா என்ற கொடிய வைரஸால் மனித குலத்துக்கு ஏற்பட்டிருக்கும் சொல்லொணாத துயரங்கள்…. இடர்ப்பாடுகள்…. இன்னல்கள்…. பசி…. வறுமை…. வேலை இழந்தோர்… கல்வி, மருத்துவம் மற்றும் இன்ன பிற தொழில்களில் இதுவரை உலகம் கண்டிராத வகையில் ஏற்பட்ட நெருக்கடிகள். இவையாவற்றையும் தீ நுண்மி காலத்தில் கண்டு அதனால் விளையும் அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து “இனி ஒரு போதும் கடவுளிடம் பேச மாட்டோம் “
என்ற தலைப்பில் கொரானா காலத்துக் கவிதைகளை உலக வரலாற்றின் மறக்கவியலாத பகுதிக்கு தனது ஆற்றல் மிக்க சொற்களால் உணர்வுப் பிழிவுடன், வாசிப்பவருக்கு பெரும் உந்து சக்தியாக தனது கவிதைகளை படைத்தளித்துள்ளார் உடுமலை பேட்டையைச் சேர்ந்த கவிஞரும் முனைவருமாகிய ஜே. மஞ்சுளா தேவி.
“வெறும்பதினாறு வயதுப் பையனுக்கு இறப்புச் சான்றிதழ் தட்டச்சு செய்தேன்…..என்ற குரலை நேற்று கேட்கும் வரைகண்ணீர் என்பதுகண்களில் மட்டுமே வழியும் என்றுதவறாக நினைத்திருந்தேன் “
கண்ணீருக்கான ஒரு சொல்லை நம் இதயம் நோக்கித் திருப்பும் இந்த வரிகளை வெறும் வரிகளாக கடந்து போக முடியாமல் நம் இதயமும் அந்த க் கணங்களில் அந்தக் கண்ணீருக்கான மொத்த சுமையையும் சொல்லாக சுமக்க முடியாமல் கனக்கிறது.
“பிடித்த ஐம்பது நபர்களைவட்டமிடும்படிகருணையேயின்றிகேள்வித்தாளை நீட்டுகிறதுஇக் கொரனாக் காலம்விழி பிதுங்கி நிற்கிறார்கள்விசேச அழைப்பிதழ் அச்சடித்தவர்கள்ஐம்பத்தியோராவது ஆளாகநான் வரட்டுமாஎன்று வாசலில் கட்டப்பட்டவாழைமரத்தின் அருகேஆவலோடுகைககட்டி நிற்கிறது கொரானா “
தமிழ் கலாச்சாரத்தில் திருமண விழாவுக்கு நாம் மிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மாமன், மச்சான், அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, பங்காளிகள், கூட்டாளிகள், நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டு மனிதர்கள் என அத்தனை பேருக்கும் அழைப்புக் கொடுத்து ஒரு திருமண வைபவத்தை ஊரே கூடி சிறப்பாக நடத்துவதுதான் வழக்கம். அப்படி சீரும், சிறப்புமாய் நடத்தினால் தான் பார்ப்பதற்கு நன்றாகவும், சமூக அந்தஸ்தாகவும், பெருமையாகவும் இருக்கும் என்பது நம் வழக்கமாகவும் நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. ஆனால் இந்த கொரானா என்ற கொடிய வைரசால் மனிதன் பாதிக்கப் படும்போது எப்படி கூட்டம் போட்டு விழா நடத்த முடியும்?
நம் உறவுகளில் வெறும் ஐம்பது பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கடினம்? யாரை சேர்ப்பது? யாரை விடுவது? என்று ஒரே குழப்பம்…
இதில் ஐம்பத்தியோராவது ஆளாக நான் வரட்டுமா? என்று வாசலில் கட்டப்பட்ட வாழை மரத்தின் அருகில் ஆவலோடு கொரானா கைகட்டி நிற்பதை சொல்லும்போது நிறைய அச்சத்தையும், கொஞ்சம் நகைச்சுவையையும் குழைத்து கொரானா பற்றிய ஒரு விழிப்புணர்வுக்கு இக் கவிதை முகாமிட்டுருப்பது போல் தோன்றுகிறது.
நோய்மைக் காலத்து கவிதைகளோடு மறைந்த கோவை ஞானி அவர்களின் நினைவுகளை அசைபோட்டபடி கவிதை வழியாகவே அவரின் நினைவுச் சித்திரங்களை மீட்டெடுக்கிறார் ஜே. மஞ்சுளா தேவி.
“ஞானி….உங்கள் கைகளைப்பிடித்து நடக்கும் போது மட்டும்தான்என் தந்தையின் கைகளையும்என் மகனின் கைகளையும்ஒரே நேரத்தில் பற்றி நடப்பதாகஉணர்ந்தேன்உங்கள் கைச்சூட்டைஎன்னிடமிருந்துபறிக்கும்வல்லமைஇக் கொடுங்காலத்திற்கில்லை “
அன்பின் மிகுதியால் கடத்தப்படும் உணர்வுச் சூடுகள் மனித மனங்களை எப்போதும் வெது வெதுப்பாய் வைக்கக் கூடியவை. மரணங்கள் வெறும் உடலுக்கானவை என்றாலும் கூட வாழ்வை உடல் வழியாகவே கடந்து வருகிறோம் என்பதை இந்த உணர்வுச் சூடு உணர்த்துகிறது.
“வைரஸ் புதிய பெயரில் வந்திருப்பதாகமருத்துவர்கள் அலறும் காலம் இது……………………………………………. .மீன்காரரிடம் எச்சில் தெறிக்கப்பேரம் பேசுபவரின் முகக் கவசம்அவரின் கழுத்து கத்தியாய்தொங்குகிறது………………………………………………..காய்க்காரருக்கும், மளிகைக் காரருக்கும் அடிக்கிறது லக்கி பிரைஸ்யாரோ ஒருவரின் வன்மக் குரல்உரத்து நாறுகிறது நடுரோட்டில்இப்படியாக….எல்லா நட்சத்திரங்களும்கைவிட்ட கரும் வானத்தில்தூரத்தில் மினுங்குகிறதுஓர் ஒற்றை நட்சத்திரம்ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர்தன் வண்டிக் கண்ணாடி பார்த்துமுகச் சவரம் செய்து கொண்டிருக்கிறார் மயான வாசலில் “
மனிதனின் உயிருக்கும், வாழ்க்கைக்கும் இடையே உள்ள போராட்ட களத்தில் புகுந்து கொண்டிருக்கும் இந்தகொரானா வைரஸ் என்ற நுண் கிருமி மனிதனின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. மனித வாழ்வு எத்துனை இன்னல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளான போதும், தூரத்தில் மினுங்கும் ஓர் ஒற்றை நட்சத்திரமாய் நம் நம்பிக்கையை நிறுத்துவது கவனிக்கத்தக்கது. அதே வேளையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் தன் வண்டிக் கண்ணாடி பார்த்து முகச் சவரம் செய்வது நோய்மைக் காலத்தின் காட்சிகளின் முன்னே நம்மை அழைத்துச் செல்வதாக உள்ளது.
“வைரசுக்கு மருந்தில்லை எனும்உச்சாடனம் உரக்கிறதுமருந்தில்லை….ஆனால்…மருத்துவம் உண்டு….நோயாளியின் பசிக்குஒரு தேக்கரண்டிகஞ்சி புகட்டுவோர்க்குவாய்க்கிறதுதன்வந்திரியின் சாயல் “
இந்த நோய்மைக் காலத்தில் நோய் பற்றியும், நோயாளிகள் பற்றியும் நாம் எடுக்கும் அவதாரங்களை கவிதைக் கூர் வாளால் வெட்டி, அதன் துண்டங்களை பிரித்தெடுக்கும் போது….
“ஒரு போதும் மறக்கலாகாதுசாப்ளினின் மீசை ஹிட்லருடையது “
எனும்போது நமது புலன்கள் கொஞ்சம் புலனாய்வு செய்தும் கொஞ்சம் சிரித்தும் ஓய்வு பெறுகின்றன.
மஞ்சள் பேருந்துக் குழந்தைகளுக்குஆன்லைனையும்…சத்துணவு குழந்தைகளுக்குஆஃப் லைனையும்….கையளித்திருக்கிறதுஇக் கொரானாக் காலம்.
கவிஞர் ஒரு ஆசிரியராகவும் இருப்பதால் இது போன்ற வரிகள் கிடைத்திருப்பதில் ஆச்சரியமில்லை.
நோய்மைக் காலம் கூட குழந்தைகளின் கல்வியில் சமூக அந்தஸ்துகளாகவும், வர்க்கங்களாகவும் பிரிந்து கிடப்பதை சுட்டிக் காட்டும்போது, ஒரு நோய்மை இன்னொரு சமூக நோய்மையை இன்னும் அதிகமாகவே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
உப்பும் உறைப்புமானபாட்டி சுட்ட வடைகள்வழமை போலவே களவு போகின்றனஅவர்களின் கதையாடல்களில்காக்கைகள் கைப்பற்றிய வடைகள்அசட்டு இனிப்பு டோனட்டுகளாகஉருமாறுகின்றன.
காலம் உருமாறும்போது நம் கதைகளும் உருமாறுவதை தெளிவாக சுட்டிக் காட்டுகிறது வரிகள். வடை இனிப்பு டோனட்டுகளாக மாறுவது நம் காலத்தின் கலாச்சாரம் கதைகளையும் எப்படி எல்லாம் உருமாற்றி விடுகிறது என்பது தெளிவாகவும் நுட்பமாகவும் வாசிக்க கிடைக்கிறது.
வாசிப்பு என்பதை நாம் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைக் கூட இந்த கொரானா காலமும் இதன் மீதான ஒரு வரலாற்றுப் பதிவும் நமது வாசிப்பின் திசைகளை அறியச் செய்வதாக இருக்கிறது. புத்தக வாசிப்பு என்பதை விட நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்ற தனிமைக் கால உணர்வுகளின் வழியாக சமூகத்தின் சகல பரிமாணங்களையும் புரிந்து கொண்டு அதிலிருந்த துயர்களையும், எதிர் கொள்ள வேண்டிய இடர்ப்பாடுகளையும், காரிய நுணுக்கங்களையும், எதிர்ப்புகளையும், எதிர்பார்ப்புகளையும், நாம் நினைப்பது போல் அல்லாமல் கொரானா என்ற தீ நுண்மி நம் வீட்டு வாசலில் நின்று கொண்டே நம்மை அச்சுறுத்தி, நம் விழுமியங்களையும், மனித மாண்புகளையும் சுருக்கி நம்மை இக்கட்டான சூழலில் தள்ளிவிட்டு நம்மை தொலைக்காட்சி வழியாக வேடிக்கை மட்டுமே பார்க்கும் ஒரு சின்னஞ் சிறு புள்ளியில் நமது உலகம் உறைந்து போனதும் என நமது மனோ பாவங்கள் அத்தனையும் கவிஞரின் விரல் வழியே கசிந்து மனிதர்களின் தார்மீக உணர்வுகளை கவிதைகளாக வெளிப்படுத்திய விதம் அலாதியானது.
ஒரு கவிதையிலிருந்து இன்னொரு கவிதைக்கு என்னால் அவ்வளவு எளிதில் கடந்து விட முடியவில்லை.
இந்த தொகுப்பில் ஒவ்வொரு கவிதையும் அதனளவில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. இவரின் கை விரல்கள் வழியே கொரானா காலம் முழுவதும் நகர்ந்து கொண்டிருக்கிறதோ எனும் படியான வியப்பையும் என்னுள் ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.
கவிதை உலகம் இந்த நூலை வாசித்து இவரது எழுத்தின் பரிமாணங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
– மஞ்சுளா
நூலிலிருந்து :
கொரோனா என்னும் ஆட்கொல்லிக் கிருமியின் பிடியிலிருந்து மனித குலம் மீள வேண்டும். இந்த அபூர்வமான கவிதைத் தொகுப்பின் விழைவும் அதுதான். ஜே.மஞ்சுளாதேவி என்னும் ஆசிரியத் தாய் இவற்றை யாத்துள்ளார்.
தாய் மனம் இப்படித்தான் சிந்திக்கும், இயல்பு வாழ்வின் சமன் குலையும்போது இது போன்ற அறிவார்ந்தோர் சொல்பேச்சுக் கேட்கத்தான் வேண்டும். பார்வைக்குப் புலப்படாத மீச்சிறு உயிரொன்று. உலகின் நாளாந்த நடப்புகளைக் கைப்பற்றி ஆட்டுவிக்கும் நேரத்துப் பிறந்த கவிதைகள் என்ற சிறப்போடு இவை கவனம் பெறுகின்றன.
- கவிஞர் அவை நாயகன்
ஆசிரியர் குறிப்பு:
கவிஞர் ஜே.மஞ்சுளாதேவி உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர். "வானம்பாடி கவிதை இயக்கம்” பற்றி தனது முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தவர். 'பாப்பாவின் நட்சத்திரம்', 'சுற்றிலும் மனிதர்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள்', 'நிலாத் தெரியாத அடர்வனம்' ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் உட்பட மொத்தம் பனிரெண்டு நூல்களை எழுதியுள்ளார். மனிதர்களின் நம்பிக்கை தரும் முகத்தை, அன்பால் கனிந்த பக்கத்தைத் தனது கவிதைகளில் தொடர்ந்து பதிவு செய்து வருபவர். கவிஞர் சிற்பிக்கும் கோவை ஞானிக்கும் மாணவி என்றே இவரைச் சொல்லலாம். திருப்பூர் அரிமா சங்கத்தின் 'சக்தி' விருது (2016), 'நெருஞ்சி' இலக்கிய விருது (2017) உள்ளிட்ட விருதுகளை தனது கவிதைகளுக்காகப் பெற்றுள்ளார். இது இவரது நான்காவது கவிதைத் தொகுப்பு.
நூல் : |
இனி ஒரு போதும் கடவுளிடம் பேச மாட்டோம் (கொரோனா கவிதைகள்) |
பிரிவு : | கவிதைகள் |
ஆசிரியர்: | |
வெளியீடு: | வாசகசாலை பதிப்பகம் |
வெளியான ஆண்டு : | டிசம்பர் 2020 |
பக்கங்கள் : | 128 |
விலை : | ₹ 130 |
கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.
“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி)
வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.