இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களும் நீதி குறித்தே பேசுகின்றன. நீதி கேட்பது, நீதிக்காக காத்திருப்பது, நீதி கிடைக்காத போது யுத்தம் செய்வது என்பதையே இரண்டும் முதன்மைப்படுத்துகின்றன என்று இந்த நூலின் முன்னுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடுவது போல் வரலாறு நெடுகிலும் நீதியின் குரல் நெறிக்கப்பட்டு வந்திருப்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இடக்கை நாவல் முழுக்க நீதி மறுக்கப்பட்ட மனிதனின் துயரக் குரலை அழுத்தமாக பதிவு செய்கிறார் எஸ்.ரா.
ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்குகிறது நாவல். ஔரங்கசீப் ஒருமுறை தனக்கு அடங்க மறுத்த ஒரு வீரனின் குதிரையை மிகக் குரூரமான வகையில் கொன்றுவிடுகிறார். நீதியும் இப்படிப்பட்டதுதான். அதை அடக்கி ஆள முடியாத போது அதை பலி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. தன்னால் அடக்க முடியாதவற்றை கொன்றுவிடுவதே தீர்வு என்ற ஆழமான பாடம் அவர் மனதில் வேரூன்றி விடுகிறது.
அந்திமக் காலத்தில் தனது முடிவு பற்றி ஐயமும்,நோயும்,உறக்கமில்லாத இரவுகளும் அவரை தீவிரமாக சிந்திக்க வைக்கின்றன. ஞானி முகைதீனிடம் தனது விதியை பற்றி தெரிந்து கொள்ள முயல்கிறார் .இந்த இடத்தில ஞானிக்கும் ஔரங்கசீப்புக்கும் இடையே நடக்கும்
உரையாடல்கள் ரத்தக்கறை படிந்த எல்லாக் கைகளுக்கும் சொல்லப்பட்ட கருத்துக் கருவூலங்களாகவே உள்ளது.
சட்டங்கள், நீதிகள் என்பவை எல்லாம் ஆள்பவர்களுக்கு வளைந்து கொடுக்காத போது புதிய சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன.ஒருவன் மீது குற்றம் சுமத்த ஒரு காரணமும் தேவையில்லை. நிரூபணம் செய்யத்தான் சாட்சிகள் வேண்டும்.
அரசிற்கு எது நன்மை பயக்கிறதோ அதுவே நீதி.இந்த நீதியின் படியே ஆள்பவன் ஆள்கிறான், சாமானியன் தனது விதியை நொந்து கொண்டு வாழ்வை நகர்த்துகிறான் .
இந்த நாவல் தொடக்கம் முதல் முடிவு வரை இந்த நியதியில் தனது கதை மாந்தர்களின் வாழ்வை நகர்த்துகிறது.
ஔரங்கசீப் இறப்புக்கு பின்பு ஆட்டுத்தோல் பதப்படுத்தும் சாமர் இனத்தைச் சேர்ந்த தூமகேது என்பவனும் ,ஔரங்கஷீப்பின் அந்தப்புரப் பணியாளரும் அரவாணியுமான அஜ்யாபேகமும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் படுகின்றனர்.
தூமகேது தான் ஆட்டுத் தோல் திருடியதாக பொய்க் குற்றம் சாட்டப்பட்டு காலா சிறையில் வருந்தும்போது பல அவமானங்களை சந்திக்கிறான்.சிறையிலும் அவனுக்கு காலாப் பகுதியை துப்புறவு செய்யும் வேலையே தரப்படுகிறது. ஆரம்பத்தில் தூமகேது மீது சுமத்தப்பட்ட வழக்கு பின்னர் அடுக்கடுக்காக வளருகிறது.மிகவும் துரதிர்ஷ்டமான அவனது நிலையைக் கண்டு அவனது குடும்பமும், உறவினர்களும் வருந்துவதைத் தவிர அவர்களால் வேறொன்றும் செய்ய இயலவில்லை.
சாமர் என்று அழைக்கபடுகின்ற அவனது முன்னோர் இடக்கை பழக்கம் உடையவர்கள். உண்மையில் அவர்கள் வலக்கையை பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அன்றைய விதியாக இருந்தது.அதற்கான ஒரு கதையும் அவர்களிடம் இருந்தது. வலக்கையை அவர்கள் பயன்படுத்தினால் கடவுள் அவர்களை தண்டித்துவிடுவார் என்ற பயமும் அவர்களின் மனதில் எப்படியோ பதிந்திருந்தது. சாதித் தீட்டின் காரணமாக பல நெருக்கடிகளுக்கும் ,இன்னல்களுக்கும் இடையே வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதை மீறி அவன் வாழ்ந்து காட்டினால் தன் குடும்பத்தை சித்திரவதை செய்து தண்டிப்பார்கள் என்ற பயம் அவனை அதுகுறித்து யோசிக்க விடாமல் தடுத்தே வைத்திருந்தது.
இன்னொரு பக்கம் அஜ்யா சிறையில் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள். மிகக் கொடுமையான சித்திரவதைகளை அனுபவித்துவிட்டு பின் தூக்குமேடைக்குப் போகிறாள். கடைசியாக தன்னை நேசித்தவர்களை நினைத்துக் கொள்கிறாள்.தன்னை சகோதரியாக நினைத்த பாதுஷா ஔரங்கசீப்பை நினைத்துக் கொண்டாள். எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு தானாகவே நடந்து போய் தூக்கு கயிறை மாட்டிக் கொள்கிறாள். பின்பு அவளது உடல் பொட்டலம் கட்டி ஆற்றில் வீசப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம், வைர வைடூரியங்கள் போன்ற பொக்கிஷங்களை ஔரங்கசீப் வேறு எங்கேயோ புதைத்துவிட்டு அதை பதுக்கி வைத்திருக்கும் இடத்தை ஆட்டுத் தோலில் வரைந்து அவளிடம் ஒப்படைத்துவிட்டு இறந்ததுதான் என்று முகம்மது ஆசம் நம்பியதுதான்.
அரச பதவி என்பது ஒரு மரண சிம்மாசனம், அதில் ஏறி அமர்ந்தவன் மெல்ல தனது மனிதத் தன்மைகளை இழந்துபோவான். அவனை சிம்மாசனம் ஆட்சி செய்யத் தொடங்கிவிடும். அரியணையில் அமர்ந்துகொண்டு எளியவர்களை அதிகாரம் செய்யும் போதையில் மயக்கம் கொண்ட பிஷாடானின் கதை வரும்போது ,அதிகார வெறியும், முட்டாள்தனமும் கொண்ட அவனது ஆட்சியை அயல் வணிகன் ரெமியஸ் எவ்வாறு படிப்படியாக கைப்பற்றி ஆள முயல்கிறான் என்பதோடு, இறுதியில் பிஷாடன் மக்களை அதிகமாக துன்புறுத்தி டெல்லிக்கு தன் நாட்டு மக்களையும் வலுக்கட்டாயமாக செலுத்திக்கொண்டு போகும் வழியில் பகைவரகளால் கை கால்கள் வெட்டப்பட்டு ,கண்கள் குருடாக்கப்பட்டு பசியும் தாகமும் வருத்த யாரும் கண்டுகொள்ள முடியாத நிலையிலேயே இறக்கிறான்.
நாவலில் பல இடங்களில் கிளைக் கதைகளும் முளைக்கின்றன. அனைத்து கதைகளும் நீதி குறித்தே பேசுவதாக உள்ளது.நீதியைப் பற்றியும் குற்றங்கள் பற்றியும் பல கதாபாத்திரங்கள் தங்கள் கதை வழியே பேசிக் கொள்கின்றனர். பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை எவ்வித விசாரணைமின்றி அவர்கள் யாவரும் ஒருவரே போல் சிறையில் அடைப்பட்டுக் கிடக்கின்றனர். குற்றத்தின் நிழலில் வாழும்போது சிரிப்பது ஒன்றுதான் அவர்களுக்கு ஆறுதலாக உள்ளது.
நீதியை மையமாகக் கொண்டு ஏதோ சில கதைகள் வழியே சிறையில் இருந்து தப்பிக்கும் தூமகேது தன் குடும்பத்தை தேடி அலைகிறான். அவனுக்கு பல்வேறுபட்ட அனுபவங்கள் கிடைத்த போதும் அவனின் கதைகள் வாசிக்கும் நமக்கு பல உண்மைகளையும் உணர்த்தும்படி அமைகிறது.
தூமகேது என்ற கதாபாத்திரம் எப்போதும் நீதிக்காக ஏங்குகிறது. அவனது பத்து வயதில், இடிந்தகோட்டையை ஒட்டிய ஆலமரக் கோயிலில் நடந்த ஒரு விழாவில் பலி கொடுக்கப்பட்ட எருமை மீது அணியப் பட்ட சாமந்தி மாலைகள் தரையில் சிதறிக் கிடக்கின்றன.. அந்த மாலையை அன்றுதான் முதன்முதலாக எடுத்து தன் கழுத்தில் அணிந்துகொள்கிறான். இவனது இன மக்களுக்கு பூக்களைக் கூட தொட உரிமை கிடையாது. ஆனால் யாரும் அறிந்து விடாமல் ஆசையாக அணிந்து கொண்டு மகிழ்கிறான். அப்போது யாரோ அவனை நில்லுடா நாயே என்று சொல்லி அவன் இனத்தை சொல்லி இழிவு படுத்துகிறான். அவனை அடித்து உதைத்ததுமில்லாமல் ,இன்னொரு பிராமணன் அவனது உள்ளங் கையில் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடும் போட்டு’விடுகிறான். போதாதற்கு நான்கு பெண்கள் சேர்ந்து சாணத்தைக் கரைத்து அவனது தலையிலும் வாயிலும் ஊற்றுகிறார்கள். கழுத்தில் பிய்ந்து போன இரண்டு செருப்புகளை மாலை போல அணிவித்து அடித்து துரத்தி விட்டார்கள். அன்றுதான் பிறப்பில் தாழ்ந்தவன் என்பதை தூமகேது உணர்கிறான். இதற்காக தன்னை யார் வேண்டுமானாலும் அவமதிக்கலாமா? வாழ்நாள் முழுவதும் இப்படி அடி உதைபட்டுத்தான் வாழவேண்டுமா? என்று ஏங்குகிறான் . எஸ். ரா அவர்கள் தான் சொல்ல விரும்பிய கருத்தை வாசகன் மனதில் ஆழமாக பதியவைப்பதில் கை தேர்ந்தவர் என்பதை இறுதி அத்தியாயத்தில் புரிந்து கொள்ளலாம். தூமகேது வயதால தளர்ந்து ஒரு நடைபிணம் போல் ஒரு புளியமரத்தடியில் அமர்ந்திருக்கிறான். அவன் இப்போது யாருமற்ற அநாதை. தெருவில் ஒரு ஊர்வலம் போகிறது. அந்த ஊர்வலத்தில் ஔரங்கசீப்பின் கையால் தைக்கப்பட்ட குல்லாவை ஒரு பிச்சைக்காரன் தூமகேதுவுக்கு கொடுத்துவிட்டு போகிறான். அதை தலையில் தூமகேது அணிந்து கொள்கிறான். முன்பு அவன் ஏங்கிய சாமந்தி மாலையை யாரோ ஒரு யாத்திரீகன் ஊர்வலம் செல்லும்போது தூக்கி வீசுகிறான். அது தூமகேதுவின் மடியில் விழுகிறது. அதை எடுத்து தன் கழுத்தில் அணிந்து கொள்கிறான்.அவனை அறியாமல் நளா,நளா நான் எப்படி இருக்கிறேன் என்று தான் காணவே முடியாத மனைவியை எண்ணிக் கொண்டு கேட்கிறான். தூரத்தில் அடிக்கும் மேளச்சத்தம் அவன் காதுகளில் கேட்கிறது. துக்கத்தையும், வேதனையையும் மீறி அவனறியாமல் அவனது இடக்கை தாளமிட்டுக் கொண்டிருகிறது.
இறுதி வரிகளில் நமது மனமும் கண்களும் கலங்குவதை தவிர்க்கவே முடியாது.
நம் உடலில் இடக்கை வலக்கை என்று இருந்தபோதிலும் இரண்டு கைகளையும் நாம் சமமாக மதிப்பதில்லை. வலக்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இடக்கைக்கு கொடுப்பதில்லைதானே…. இதை நாம் எப்படி உணர்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் இடக்கையை அருவருப்பு என்றும் அவமானம் என்றும்,இடக்கையின் புழக்கத்தை அதன் காரணமாகவே நாம் குறைத்தும் மதிப்பிட்டும் வந்திருக்கிறோம். மனித உடலில் இத்தகைய பாகுபாடுகளை கற்பித்திருக்கும் நாம் மனிதர்களிடையேயும் கற்பித்து வந்திருக்கிறோம். பணம் உள்ளவன் வலக்கை ஆகிறான். பணம் இல்லாதவன் இடக்கை ஆகிறான் . சாதியில் உயர்ந்தவன் வலக்கை ஆகவும், தாழ்ந்தவன் இடக்கை ஆகவும் மாறிவிடுகிறான்…. உண்மையில் மாற்றிவிடுகிறது ஆதிக்க மனோபாவம்.
மன்னர் காலம் தொடங்கி மக்கள் ஆட்சி வரை இதன் இடம் அப்படியேதான் இருக்கிறது. இடக்கை என்ற நாவலில் வரும் பல சம்பவங்களைப் போலவே இன்றும் நமது இந்தியாவின் பல கிராமங்களில் சில பட்டியலின சாதி மக்களை இடைநிலைச் சாதிகள் ஒதுக்கியே வைத்துள்ளனர். தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டுவிட்டது, அதைக் கடைப்பிடிப்பது தடை செய்யப்படுகிறது என்ற அரசியல் பிரிவு , குடியுரிமை பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம்போன்ற சட்டங்கள் யாவும் பட்டியலின மக்களுக்கு உரிமைகள் வழங்கினாலும் அந்த உரிமைகள் நடைமுறையில் மறுக்கப்படுவது இன்றும் ஒரு தொடர்கதை போல் நீடித்து வருகிறது. ”இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் மேல்பூச்சாகவே இருக்கிறது,அடிப்படையில் அது ஜனநாயகமற்றது” என்ற அம்பேத்கர் குறிப்பிட்டதையும் நினைவுபடுத்திக் கொள்வது இங்கு பொருத்தமாக இருக்கும்.
நாவலை வாசித்து முடிக்கையில், இடக்கை என்பது எப்போதும் இடக்கைதானா? அதன் இழிவை நாம் மாற்றவே முடியாதா?
சாதி இழிவுகளை இந்தியா போன்ற நாடுகளில் துடைத்து அகற்றவே முடியாதா? போன்ற கேள்விகளை நம்முள் எழுப்பிக் கொண்டேயிருக்கிறது.
நூல் : இடக்கை
வகை : நாவல்
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம்
ISBN: 9789387484023
வெளியான ஆண்டு: மூன்றாம் பதிப்பு - பிப்ரவரி -2019
பக்கங்கள் : 336
விலை: ₹ 375
கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.
“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி)
வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.
இடக்கை என்பது எப்போதும் இடக்கைதானா? அதன் இழிவை நாம் மாற்றவே முடியாதா? அருமை.
நாவலை வாசிக்கத் தூண்டும் நல்ல பதிவு