“கோபல்லபுரத்து மக்கள் “என்ற இந்த புதினம் கோபல்ல கிராமம் என்ற புதினத்தின் பின் தொடர்ச்சி.. முதல் பாகத்தை வாசித்தப் பின்பு இதை வாசிப்பதே கூடுதல் சுவை.
கி.ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் மகாராஜா.! அதனாலே அவர் பின் மிக நீண்டதொரு சிற்றரசர்கள் கூட்டம் அதாவது வட்டார வழக்கு எழுத்தாளர்கள் உருவாகினர்.
” கோபல்ல புரத்து மக்கள் ” 1992-ல் இலக்கியத்தின் உயரிய விருதாகக் கருதப்படும் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றது.
கோபல்ல கிராமம் என்கிற முதல் பகுதியில் தெலுங்கு தேசத்திலிருந்து வரும் மக்கள் தங்களுக்கான ஊரை தாங்களே நிர்மாணம் செய்வதில் தொடங்கி, படிப்படியாக வளர்ச்சி பெற்று வரும்போது கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் கிராமம் அல்லல் படுவதையும் தனக்கே உரிய மக்களின் மனவோட்டத்தின் பிரகாரம் வெகு சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றிருப்பார்.
அதை விடக் கூடுதல் சுவாரஸ்யமானது இந்த நாவல்..!
ஒரு எழுத்தாளன் எப்போதும் தானே தன் எழுத்தினை மிஞ்சிவிடுவதும்.., தன் எழுத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதும் அலாதியானது.
கிராமங்கள் மனித மனங்களின் வளர்ச்சிக்கான களமாகவே விஸ்தரிக்கப்படுகிறது. அதில் நித்தம் நித்தம் அறுவடையாகும் ஆனந்தத்தில் நமது மனமும் குதியாட்டம் போடுகிறது.
கிட்டப்பன் -அச்சிந்த்தலுவின் அந்தரங்க ஆத்ம நேயம் நம்மையும் கொஞ்சம் உரசித்தான் பார்க்கிறது.
புத்தகத்தில் ஒரு சிலிர்ப்பூட்டும் ஒரு வரி வருகிறது. அது என்னைப் பிரமிக்க வைத்து யோசிக்கவும் வைத்து விட்டது. உலகின் ஆதர்ச எழுத்தாளர்களில் கி.ராவும் ஒரு ஜாம்பவான் தான் என்பதை அறுதியிட்டுக் கூற இந்த ஒரு வரி போதும்.
இதோ அந்த வரி….
” அந்த அத்தராத்திரியின் உரத்த மெளனமும் ஒலி விழாத செவிப்பறையின் இரைச்சலும் என்னவோ செய்தது …”
திரும்ப ஒரு முறை படித்துப் பாருங்களேன். தனக்குள் தேடித் தேடிச் செல்பவர்களாலேயே இந்த சிலிர்ப்பை உணர முடியும்.
பாரதத்தில் நுழைந்து பாவங்கள் பல செய்த பரங்கியர்கள் கம்பெனியின் மூலம் முதலில் மூலத்தைச் சுரண்டினர். பின் ஆட்சி மேலாதிக்கத்தின் மூலம் மூலப்பொருட்களைச் சுரண்டி உற்பத்தி பொருட்களாக நம்மிடமே திருப்பிவிட்டனர்.
அதற்கு வசதியாகப் போட்டது தான் ரயில் தண்டவாளங்கள். ஆனால் கிராமத்தினுள் வரவிருந்த லைனை கறவை மாட்டுக் கூட்டத்தினைக் கூட்டிப் போராடி, அதைக் கொஞ்சம் ஊருக்கு வெளியே நகர்த்தியது அசாத்தியமானது தான்.. இக்காலத்தை ஒப்பிடும் போது..!
“ரெயிலையே பாக்கத சனங்க அது எப்பிடி இருக்கும்னுட்டும் தெரியா லெ”
”..என்னம்மா வந்ததுங்கா..”
” வந்தது..பாரூ.. கைகள் ரண்டையும் ஒசத்தி ” தேவலோகத்திலிருந்து யானைக் கூட்டம் ஏறங்கி வரீசயா வந்த மாதிரி..,” உடம்பைக் கொஞ்சம் பின்வாங்கிச் சாய்ந்து காட்டி ஒடும் கிராமவாச மனிதரோடு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகுண்னு ..,
நாமும் ஓடி விடுகிறோம்..
… இப்படி முதல்ல வந்த ட்ரெயினிலிருந்து வர்ற சத்தமும் பொசல்க்காத்து எறைஞ்சி வார மாதிரி நெருப்பும் புகையும் கக்கிக்கிட்டு வர்த பாத்துட்டு என்ன செய்றதுன்னு தெரியால.. விழுந்தாம் பாரு…
இப்படி குதூகலிக்கும் கிராமம் பெண்களின் ரகசிய செவ்வாய்க்கிழமை விரதத்தை ஆராய்வதிலும் ஆனந்தப்படுகிறது.
பையன்களின் படிப்பு சமாச்சார முன்னேற்றத்தோடு மிகச் சிறிய பேனாக்கத்தி, பவுண்டன் பேனா, டார்ச் லைட் எனப் பொருட்களின் வரவோடு கிராமத்தின் சாயலில் சற்று சாயமேறுவதையும் அழகாய் பதிவு செய்கிறார்.
கொஞ்சக் கொஞ்சமாய் சுதந்திரப் போராட்டம் எனும் தேசிய நீரோட்டத்தில் கிராமம் கலந்து கொள்கிறது.
இறுதி சில அத்தியாயங்களில் கப்பல் மாலுமிகளின் போராட்ட எழுச்சி நம்மை ஒரு ஹாலிவுட் போர் படத்தினைப் பார்க்கும் திகைப்பிற்கு கொண்டு செல்கிறது.
இது போதாததா. கி.ரா.. அப்பவே
அண்ரெண்ட பட்சி என்பதற்கு…!
– மஞ்சுநாத்
நூல் : கோபல்லபுரத்து மக்கள்
பிரிவு : நாவல்
ஆசிரியர் : கி.ராஜநாராயணன்
வெளியீடு : அன்னம் வெளியீடு
வெளியான ஆண்டு : முதற்பதிப்பு 1990
பக்கங்கள்: 272
விலை : ₹ 200
Buy on Amazon
புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட மஞ்சுநாத்[1983] . தற்போது புதுச்சேரி பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குதிரைக்காரனின் புத்தகம் [சிறுகதைத் தொகுப்பு], டால்ஸ்டாயின் மூன்று கண்கள் [கட்டுரை தொகுப்பு] – அகநாழிகை பதிப்பகம் புத்தகமாக வெளியீட்டுள்ளது.