நூல் விமர்சனம்புனைவு

படைவீடு – விமர்சனம்


ந்த உலகமே பெருந்தொற்றில் முடங்கிக் கிடந்த போது மன்னர் வீரசம்புவர் மகன்  வென்று மண்கொண்டான் எனப் புகழப்படும் இளவரசர் ஏகாம்பரநாதர் தனது குதிரையில் ஒரு பெரும் பயணத்திற்கு நம்மையும் உடன் அழைத்துக் கொண்டு புறப்படுகிறார்.

ஆம்… இந்த கொரானா பெருந்தொற்று காலத்தில் பல தடைகளுக்கிடையே வெளி வந்த மிகப் பெரும் வரலாற்று நாவலான படை வீடு பற்றி தான் பேசப் போகிறோம்.

மையிருட்டில் மறைத்து வைத்திருந்த 100 ஆண்டுகால வரலாற்று தடங்களைப் பற்றி நமது கல்வி முறையில் கூட காண முடியவில்லை.

திட்டமிட்டு அழிக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களையும் மிஞ்சி இருக்கிற தரவுகளை மட்டும் வைத்து இப்படியொரு துணிவான நாவல் எழுத பெரும் முயற்சியும் மெனக்கிடலும் தேவை இந்த அரிய செயலை செய்து முடித்த எழுத்தாளர் தமிழ்மகன் அவர்களுக்கு எனது உள்ளார்ந்த பாராட்டுகள்.

சம்பவராயர்கள் பற்றிய  புதினங்கள் சொல்லிக் கொள்ளும்படியாக இதுவரை எதுவும் வந்ததாக தெரியவில்லை.

வரலாறு நூல்கள் எழுதுவதை விடக் கடினமானது வரலாற்று புதினங்கள் எழுதுவது . அதை விட வாசகர்கள் ஏற்றுக்கொள்ள மிதமிஞ்சாத வகையில் புனைவில் மிதமிஞ்சிய உண்மைகளை தேவையான இடத்தில்  சேர்ப்பது. இந்த வேலையை அழகாக செய்துள்ளார்.

நிறைய பேர் வரலாற்று புதினம் என்றாலே இளவரசியின் கச்சையை அவிழ்த்து பார்ப்பதையும், பெண்களின் உடல் வர்ணிப்புகள், காமக் களியாட்டங்கள் என அளவுக்கு மீறி விரசப்படுத்தி விடுகிறார்கள். இவ்வகைகள் காலம் கடந்து நிற்பதில்லை.

படைவீடு நாவல் அந்த விதத்திலிருந்து தப்பித்தது. விஜயநகர பேரரசினை விவரிக்கையில் குமார கம்பனுக்கும் கங்காதேவிக்கும் நடக்கும் முதலிரவு காட்சி சற்று விரிவாக்கப்படுகிறது. ஆனால் இந்த விரிவாக்கம் கங்காதேவி கவிதாயினியின் மதுராவிஜயம் எனும் காவிய நூல் உருவாக்திற்கான  முன்னோட்டமாகவே பார்க்கிறேன்.

நாவலின் முதல் முந்நூறு பக்கங்கள் சம்புவ ராஜங்கம் முழுவதையும்   சுற்றி காட்டி அதன் நட்பு அரசுகளை அறிமுகப்படுத்தி வைப்பதாக அமைகிறது.

அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்கபூரின் மதுரை மீதான பெரும் கொள்ளையின் போது இந்தப் பயணம் நிகழ்கிறது.

வருங்காலங்களில் நிகழவிருக்கும் சுல்தான்களின் படையெடுப்பிற்கு தயாராக இருக்க படைவீடு பெரும் முயற்சி எடுக்கிறது. கூடவே  ஆடி மாத சோதி நாள் திருவிழாவிற்கான அழைப்பாகவும் இந்த பயணம் அமைகிறது. அந்த திருவிழாவின் மீதான பேரார்வத்தினை  வாசகனாலும் தவிர்க்க முடியவில்லை.

போளூரிலிருந்து இளவரசர் ஏகாம்பரநாதரின் பயணம் துவங்குகிறது… நம்மையும் அழைத்துக் கொண்டு.

திருவண்ணாமலை, ஆதிதிருவரங்கம், ஆறகழூர், பெரும்புலியூர், கொள்ளிடம், திருவனைக்கா , திருமழப்பாடி, திருமானூர், பழுவூர், அரியலூர், மீன்சுருட்டி, காட்டுமண்ணார்கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தீவுக்கோட்டை, பிச்சாவரம், தில்லை, பாதிரிப்புலியூர், வாகூர் ( பாகூர்), எயிற்பட்டினம் (மரக்காணம்), மாமல்லை, நீலாங்கரை, மயிலை, திருவொற்றியூர், பழவேற்காடு, திருக்காளத்தி , திருவல்லம், பிரம்மதேசம்

(பாலாற்றங்கரையோரம்), என பல இடங்களுக்கு பயணப்பட்டு இறுதியாக விரிஞ்சிபுரம் வந்தடைகிறது.

பயணத்தின் போது மாலிக்கபூர் தனது கொள்ளையடித்த  பெரும் செல்வங்களை டெல்லி சுல்தானுக்கு கொண்டு போகும் வழியில் அதிலிருந்து ஒரு பகுதியை மீட்கும் காட்சிகள் அருமை.

மீட்டகப்பட்ட செல்வங்கள் திருவனைக்கா கோவிலில்  மறைத்து வைக்கப்படுகின்றன. பயணம் முழுவதும் ஈசன் வாளின் புதிர்களும் தேடலும் நம்மை வெகுவாக ஆட்கொள்கின்றன.

இது ஒரு ராஜாங்க மற்றும் ஆடிசோதி நாளுக்கான அழைப்பு பயணமாக மட்டுமல்லாது போகும் வழிகளில்  மக்களின் நிலை, மக்களின் பிரச்சனைகள், குடிமக்களுடனான சந்திப்பு, புலவர்களின் நட்பு, அரசாங்க பிரச்சனைகள்  அதன் தீர்வுகள், உள்ளூர் மற்றும் கடல் கடந்த வணிக முறைமைகள் என படை வீட்டின் வரலாற்றுக்கு அடிப்படையான அனைத்து தரவுகளும் கிடைக்கிறது.

மாமன்னர் ராஜராஜ சோழன் காலத்திலிருந்தே வலங்கை இடங்கை சண்டைகள் தொடர் சங்கிலியாக அதன் சிற்றரசான சம்புவராயர்கள் ஆட்சியிலும் அழுத்தம் கொடுக்கிறது.

தனக்கென ஒரு தலைநகர் , நாணயச்சாலை, காளை உருவம் கொண்ட கொடி, பெரும்படை அமைப்புகள் என கம்பீரமாக ஆட்சி செய்த சம்புவரய மன்னர்கள்  தங்கள் படைக்கு தேவையான போர்த்தளவாட உற்பத்தியிலும் நுணுக்கம் கொண்டிருந்தனர்.

விரிஞ்சிபுரத்திற்கும் படைவீட்டிற்கும் இடையில் இருந்த இரும்பாலையூர் ஆயுதச் சாலையில் தயாரிக்கப்பட்ட  புதிய போர்க் கருவிகளின் பட்டியலை எழுத்தாளர் தமிழ்மகன் எப்படித் தான் கண்டறிந்தாரோ… மலைக்க வைக்கும் நீண்டதொரு பட்டியல் அது.

இயற்கையாகவே பாதுகாப்பு அரண் கொண்ட படை வீடு கோட்டைக்குள் நுழைவது அவ்வளவு எளிதல்ல. அவர்களின் போர்த் திறனும் அறிவார்ந்தது. வீண் சண்டை போடுவதில்லை. வந்த சண்டைகளை விடுவதில்லை என்பதே படைவீடு மன்னர்களின் நிலையாக இருந்தது.

13 மற்றும் 14-ம் நூற்றாண்டுகளிகளில் பழம் பெருமை வாய்ந்த வரலாற்றில்  மக்களின் வாழ்வு முறை என்பது இடைவிடாத போர்கள், நிலையற்ற ஆட்சி குழப்பங்கள் , பெரும் கலவரங்கள் என தொடர் துயரில் தவித்துக் கொண்டே  தான் வாழ்ந்தனர்.

போர் எனும் பேரிடிகளில் முதலில் குழந்தைகள் ,குடியானவர்கள் பெண்களே பலத்த அடிகளை அதிகம் வாங்கினர். துன்பபட்ட மக்கள் பெருமளவு இடம் பெயர்ந்து சம்புவராய ஆட்சியில் அடைக்கலம் நாடினர்.

அங்கு இருந்த அஞ்சினான் புகலிடங்கள் என்ற பெயரில் வாழ்வு மையங்கள் ஆரம்பத்தில் சமணர்களால்  பராமரிக்கப்பட்டு பின்பு அரசே நேரேடியாக நிர்வகித்தது.

படை வீடு ஆட்சியில் இது ஒரு சிறப்பான வரலாற்று செயல் .ஈகை திறனுக்கான சான்று, இவை வெறும் தஞ்சமளிக்கும் புகலிடமாக மட்டுமல்லாது அவர்களின் புணர்வாழ்விற்குகான வணிகஅங்காடி முறைகளையும் ஏற்படுத்தி தந்தது. நாவலாசிரியார் இதைப்பற்றி அதிகம் விவரித்து எழுதாதது ஒரு ஏமாற்றம் தான்.

இந்த அஞ்சினான் புகலிடங்கள் ஒரே இடத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பரவலாக காணப்பட்டது தான் சிறப்பு.

மக்கள் நலன் சார்ந்த படை வீடு அரசு தொடர் போர்களால்  பொருளாதாரம்  பாதிப்படையாமல் இருக்க  அஞ்சினான் புகலிடங்களை  ஒரு வணிக தொலைநோக்கோடும் அமைத்தது குறிப்பித்தக்கது.

காலத்திற்கு ஏற்ற வகையில் பாகம் பிரித்து எழுதியது நாவலின் பாதையில் வாசகர்களின்  பிசகாத பயணத்திற்கு துணை செய்கிறது.

நாவல் முழுவதும் தமிழ் மணமும் பக்தி மணமும் கமழ்கிறது. படை வீடு அரசு ஆன்மீகம் நிறைந்தது. சைவம், வைணவம்,சமணம் என சுதந்திரம் கொண்டது. நடு நாட்டில் கூட படை வீட்டம்மன் என்ற பெயரில் இன்றும் தெய்வ வழிபாடு முறைமை தொடர்கிறது.

நாவலில் நிறைய விவாதங்கள்.., உரையாடல்கள் வரலாற்றின் சூழல் கட்டமைப்புக்கான முயற்சியா..? ஆசிரியரின் உள் கருத்துகளா..? என்ற கேள்விகள் எழுவதை வாசிப்பின் போது தவிர்க்க முடியவில்லை.

பெரும் புகழ் கொண்ட ஒரு அரசான படை வீடு,பல்லவர்களின் வழித்தோன்றல்கள். சோழர் சாம்ராஜ்யத்தின் எல்லை காவல் சிற்றரசாக இருந்த சம்புராயர்கள் தங்களின் தனித்தன்மையான குணம், பண்பு, வீரம், வாழ்வியல், கலாச்சாரத்தைக் கொண்டு பேரரசாக உயர்ந்து மட்டுமல்லாது எதிரிகளுக்கு முன் ஒரு மாமலை போல் வழி மறித்து நின்றனர்.

விஜய நகரப் பேரரசின் கதையாடல்கள் படை வீடு முடிவை முன் கூட்டியே அறிவிக்கிறது.

ஒரு நாட்டின் படைக்கு வித்தான இளைஞர்களை சீரழிக்க இரண்டு விஷயங்கள் அது போதையும், போதையை விட அதிக போதையேற்றும் தாசிகளும்.

விஜய நகரப் பேரரசில் தாசிகள் அதிகம். அங்கு ஒன்பது வகை தாசிகள் உண்டாம் கும்பதாசி, அழகுதாசி, கணிகை, சேடி, விபசாரி, பிரகாஷ பினஷ்டை, குலதா, சில்பகாரிகை, நடி என பிரித்து வைத்துள்ளார்கள். இதற்கான விளக்கங்களும் நாவலில் உள்ளது.

போர்க்கள காட்சிகள் வெகுவாக ரசிக்கும் படியாகவும் விறுவிறுப்பாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை  ஆசிரியர் தமிழ்மகனின் தனி சிறப்பாக பார்க்கிறேன். சம்புவராயர்களின் நாக பாம்பு போர் யுக்திகள், ஏறிக்கவன்கள் யுக்திகள் சிறப்பு. அவர்கள் வீரமும் பெரும் வியப்பு.

தற்போதைய ஆறுகள், ஊர்களின் பெயர்கள் அக்காலத்தில் தமிழ் பெயர்களாக இருந்ததையும் அதனை அப்பெயர் கொண்டே பயன்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

தமிழனால் தோற்றுவிக்கப்பட்டு, தமிழ் குடிக்காக  அறம் சார்ந்த முறையில் அரசாட்சி செய்த படை வீடு வரலாற்றின்   இறுதியில் ஆண்ட கடைசி தமிழ் மரபு அரசு.

துவக்கம் முதல் முடிவு வரை ஒரு நீண்ட கால வெளிக்குள் அழைத்துச் செல்லும் தமிழ் மகனின் இந்நூல் அனைவரும் படித்தறிய வேண்டிய  ஒரு சிறப்பான வரலாற்று ஆவணம்.

மஞ்சுநாத்

நூல் தகவல்:

நூல் : படைவீடு

பிரிவு :  நாவல்

ஆசிரியர்: தமிழ்மகன்

பதிப்பகம் :  தழல் வெளியீடு

வெளியான ஆண்டு :  2020

விலை :  ₹ 500

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *